தொடர்கள்

செத்தாலும் போகலியே சிரிப்பு

செவக்காட்டு சொல்கதைகள்-5

கழனியூரன்

தாத்தா இன்னைக்கு உங்களுக்கு ஒரு சிரிப்பாணிக் கதை சொல்லட்டுமா என்று கூடியிருந்த சத்சங்கத்தை பார்த்துக் கேட்டார். “கரும்பு தின்னக்கூலியா , சிரிப்புக்கதை கேட்க கசக்கவா செய்யும் , சொல்லுங்க, சொல்லுங்க என்ற வாலிபப் பையன்கள் உற்சாகப்படுத்த தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு ஊர்ல ஒரு பொண்டாட்டியும் புருஷனும் இருந்தாங்க , புருசக்காரன் ஒரு உம்மனா மூஞ்சி , எதற்கெடுத்தாலும் எரிஞ்சி எரிஞ்சி விழுவான் , முசுடு , முகத்தை சதா கடு கடு என்றே வைத்துக்கொண்டிருப்பான்.

சிரிப்புன்னா என்னான்னே அவனுக்குத்தெரியாது , இவரைச் சிரிக்க வைக்கிறவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு வழங்கப்படும் என்று யாராவது அறிவித்து அவரை நம்பி பந்தயம் கட்டலாம்.

அவன் பொண்டாட்டிக்காரியோ வெள்ளந்தியானவள் . எல்லோரிடமும் கள்ளங்கபடமில்லாமல் சிரித்துப் பேசுவாள். இந்த உம்மனாம் மூஞ்சியைக் கல்யாணம் முடிக்கும் முன் அவள் பக்கத்து வீட்டுப் பையன் ஒருவனுடன் பழக்கமா இருந்தாள் . அவன் கலகலப்பான பையன் . எப்பமும் சிரித்துக் கொண்டே இருப்பான் . அவன் அழுது யாரும் பார்த்திருக்கவே மாட்டார்கள் .

அவன் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும் , எதையாவது சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். அவனும் சிரிப்பான். எப்பமும் சிரித்த முகமும் , சீதேவியுமா இருக்கிற அவனை யாருக்குத்தான் பிடிக்காது.

கல்யாணம் ஆன பிறகும் அவள் பக்கத்து வீட்டுகாரனான சிரிபானிக் கூத்துக்காரனோட பழக்கமா இருந்தாள்.

அவள் புருஷன் எப்பமும் , ராவா , பகலா , வேலை , ஜோலி என்றே அலைவான் , காசு , பணம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தான். கட்டுன பொண்டாட்டியிடம் , சிரித்து நாலு வார்த்தை பேசி மகிழ்ந்தோம் என்று கிடையாது. எனவே அவன் பொண்டாட்டியும் தலைவிதியே என்று தாலி கட்டிய தோசத்திற்காக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாள், அவள் மனசில் அந்த சிரிப்பானிக் கூத்துக்காரனே இடம் பெற்றிருந்தான். சிரிப்பும் கலகலப்பும் இருவரையும் சேர்த்து வைத்தது.

காடு கரைகளில் பாதை வழிகளில் அந்தச் சிரிப்பழகனை எங்கே கண்டாலும் சற்று நேரம் நின்று அவனுடன் பேசினால் அவளுக்கு மனசு லேசானது போல் இருக்கும் , எனவே எங்கே வைத்து அவனைப்பார்த்தாலும் அவனோடு பேசாமல் இருக்க மாட்டாள்.

வெளியில் ஆரம்பித்த பழக்கம் நாளாக நாளாக வீடு வரை வந்து விட்டது , புருசக்காரன் தான் சதா வேலை , வேலை என்று ஓடித்திருந்தானே . எனவே புருசக்காரன் வீட்டில் இல்லாத நேரத்தில் சிரிப்பழகனை தன் வீட்டிற்கே வரச் சொன்னாள் அவள். எப்பவும் அவனிடம் எய்யா எனக்கு உம்ம சிரித்த முகம்தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்று அடிக்கடி சொல்வாள் , அவனும் அவள் சொல்வதைக் கேட்டுத் தன் காலரைத் தூக்கி விட்டு கொள்வான்.

அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள் அரசல் புரசலாக அவர்கள் ரெண்டு பேரையும் பற்றி காது மூக்கு வைத்து கதை பேச ஆரம்பித்தார்கள். இந்த மாதிரி செய்திதான் கால் முளைத்து வேகமாக பரவுமே . நாளாக நாளாக ஊர் முழுவதும் அவர்களைப் பற்றித் தப்பு தண்டா பேச ஆரம்பித்தது . கடைசியில் உம்மனா மூஞ்சிக்காரன் காதிலும் ஒரு நாள் இந்தச் செய்தி விழுந்தது எனவே எப்பயாவது அவர்கள் ரெண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடிக்கனும் என்று நினைத்தான்.

ஒரு நாள் தன் பொண்டாட்டியைக் கூப்பிட்டு , “நான் புஞ்சைக் காட்டுப் பக்கம் போகிறேன். எனக்கு இன்றைக்கு வயிறு நிறைய உளுந்த வடை சாப்பிடனும் போல ஆசையா இருக்கு , வீட்டுல , ஒரு குடம் எண்ணை இருக்கு , நேற்றுத்தான் செட்டியாரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வந்து வைத்திருக்கிறேன், தேவையான உளுந்தும் குதிலில் கிடக்கு , நான் காட்டு வேலைகளை முடித்து வர கருக்கலாகி விடும் , நீ என்ன செய்வியோ… ஏது  செய்வியோ எனக்குத் தெரியாது . கருக்கலில் நான் வரும் போது உளுந்த வடை தயாரா இருக்கணும் . இல்லை என்றால் எனக்கு கடுமையான கோவம் வந்து விடும் என்று சொல்லி விட்டுப் புஞ்சைக் காட்டைப் பார்த்து மம்பட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு சென்று விட்டான்.

உம்மனா மூஞ்சிக்காரனின் மனைவி புருசக்காரன் போனதும் உளுந்தவடை சுட வேண்டிய வேலைகள் செய்வதில் தீவிரமானாள். என்றாலும் சுடுகிற வடையில் முதல் சட்டி வடையை சிரிப்பழகனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இன்றைக்கு சாயங்காலம் கட்டாயம் எப்படியும் வீட்டுக்கு வரணும் என்று சிரிப்பழகனுக்கு ஒரு பெண் தூதாள் மூலம் தாக்கல் சொல்லி அனுப்பினாள் .

மாலை நாலு மணிக்கே அவள் வடை சுடும் சட்டியை அடுப்பில் ஏற்றும் போதே சிரிப்பழகன் , சிரித்தமுகமும் , சீதேவியுமாக அவள் வீட்டிற்கு வந்து விட்டான்.

எண்ணைச்சட்டி சூடாயிற்று , முதல் சட்டியில் நாலைந்து வடை மாலைத்தட்டி கொதிக்கிற எண்ணை சட்டியில் போட்டாள் . உளுந்த வடைகள் பொன்னிரமாக வெந்ததும் அவைகளை கண்ணாப்பையில் அரித்து எடுத்து ஒரு தட்டில் போட்டு சுடச்சுட சிரிப்பழகனுக்கு கொடுத்தாள்.

அவன் முதல் வடையை எடுத்து தின்று ருசிபார்த்து விட்டு , ஆகா என்ன ருசி , என்ன ருசி, உன் கைப்பக்குவமே தனிதான் என்று பாராட்டிக்கொண்டிருக்கும் போதே , உம்மனாமூஞ்சியான் வீட்டுக்கு வருவதைப் பார்த்துவிட்டான். சிரிப்பழகன் அடியே கருக்கல்ல தான் என் புருசன் வீட்டிற்கு வருவான் என்று சொன்னியே . இப்ப இதோ வந்துட்டானே என்றான்.

அவளும் அடுக்களயில் இருந்து எட்டிப்பார்த்தாள் , அதற்குள் அவள் புருசக்காரன் வீட்டிற்குப் பக்கத்தில் வந்து விட்டான். அந்த வீட்டில் புறவாசலும் கிடையாது. மச்சியும் கிடையாது , என்றாலும் கீழ்புறமாக , உள்வீட்டில் ஒரு அரங்கு வீடு (இருட்டு அறை) இருந்தது. அதில் வரிசையா குதில்கள் இருந்தன.

அவள் அவசர அவசரமாக , சிரிப்பழகனை அரங்கு வீட்டிற்குள் தள்ளி கதவைச் சாத்தினாள் , சிரிப்பழகன் அப்போதும் சிரித்த படியே அரங்கு வீட்டில் வரிசையாக நின்ற குதில்களில் காலியான ஒரு குதிலுக்குள் போய் உக்கார்ந்து கொண்டான்.

உம்மனா மூஞ்சி , கோவத்துடன் தன் பொண்டாட்டிக் காரியைப் பார்த்து “நீ வடை சுட்டது போதும் , கீழத்தெரு செட்டியார் வீட்டுக்கு போய் நான் கேட்டேன் என்று சொல்லி ஆயிரம் ரூபாய் வாங்கிட்டு வா என்றான்.”

அவள் வடை சட்டி அடுப்பில் இருக்கிறது , வடையை சுட்டு முடித்து விட்டு செட்டியார் வீட்டிற்குப் போகிறேனே என்றாள் .

புருசக்காரன் ‘வடை சட்டியை நான் பார்த்து கொள்கிறேன் , நீ நான் சொன்ன படி கீழத்தெரு செட்டியாரிடம் பணத்தை வாங்கி வா.என்றான் கோவத்துடன்.

பொண்டாட்டிக்காரிக்கு நெஞ்சை அடைத்தது . இன்றைக்கு ரசாபாசமாக ஏதோ நடக்கப்போகிறது , எது நடந்தாலும் நடக்கட்டும் , விதியை யாரால் வெல்ல முடியும் என்று மனதை தேத்திக் கொண்டு , கீழத்தெருவைப் பார்த்து நடையை கட்டினாள்.

உம்மனாமூஞ்சி அடுப்பில் இருந்த கொதிக்கும் எண்ணைச்சட்டியை , கைப்பிடி துணியால் பிடித்து தூக்கி அரங்கு வீட்டில் , சிரிப்பழகன் ஒளிந்து இருந்த குதிலில் ஊற்றி விட்டான் , சிரிப்பழகன் ஐயோ அம்மா என்று சத்தம் போட்ட படி குதிலுக்குள் இருந்த படியே செத்துட்டான்.

நடுச்சாமம் போல சிரிப்பழகன் பிணத்தை குதிலுக்குள் இருந்து வெளியே தூக்கிப்போட்டான் , உம்மனா மூஞ்சி . அப்போதும் நம்ம சிரிப்பழகன் ஈ..ஈ  என்று பல்லைக் காட்டி சிரித்தபடியே இருந்தான்.

உம்மனா மூஞ்சியின் பொண்டாட்டிக்காரி , கை விளக்கு ஒன்றை எடுத்து கொண்டுபோய் சிரிப்பழகன் பிணத்திற்கு அருகில் போய் உற்றுப்பார்த்து விட்டு வெள்ளந்தியாக “எய்யா…உமக்குச் செத்தும் போகலியே சிரிப்பு.” என்றாலாம் என்று தாத்தா சொல்லி முடிக்கும் போது கதை கேட்டு கொண்டிருந்த இளந்தாரிப் பிள்ளைகள் கொல் லென்று சிரித்து விட்டார்கள்.

(இன்னும் சொல்வார்)