தொடர்கள்

பெயரில் என்ன இருக்கிறது

தங்கச்சுரங்கம் – 14

ந.இளங்கோவன்

பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்பதுண்டு. பிராண்டிங்கை பொறுத்தவரை பல வேளைகளில் பெயரைச்சார்ந்தே வெற்றி தோல்விகள் அமைகிறது.

சிவாஜிராவின் பெயரை கே.பி. ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றாமல் அறிமுகப்படுத்தியிருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பாரா என்பது சந்தேகம்தான். வேண்டுமானால் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கலாம் . ' நடிகைகள் பார்க்க அழகாக இருக்க வேண்டும். ஓரளவு நடிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் மனதில் பச்கென்று ஒட்டிக்கொள்கிற மாதிரி பெயர் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்த கோலிவுட் பி.ஆர்.ஓ. ஒருவர் அடிக்கடி கூறுவதுண்டு.

வெற்றி பெறுவதற்கு நல்ல பெயர் நடிகைகளுக்கு மட்டுமல்ல பிராண்டுகளுக்கும் அவசியம்.

பிராண்டுகளுக்கு சரியான பெயர் வைப்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான் மக்களை கவரும் விதத்தில் அமைய வேண்டுமென்பதை விட வித்தியாசப்பட்டு தனித்து நிற்க வேண்டுமென்பது அவசியம் ரஜினிகாந்தைப்போல்.

நம்மூரில் சிலர் கல்யாண வீடுகளுக்கோ அல்லது ஏதோ முக்கிய விஷயங்களுக்கோ போகும் போது தெரிந்தவர்களிடம் இரவல் நகை வாங்கி அணிந்து போவதுண்டு. இதே போன்ற வழக்கம் அமெரிக்காவிலும் உண்டு. பெரிய பெரிய பார்ட்டிகளில் சாதாரண உடையணிந்து கலந்து கொண்டால் நன்றாக இருக்காது. உயர்ரக உடைவாங்க வசதியும் போதாது. அமெரிக்காவில் இது போன்ற தேவையுள்ளவர்களுக்கு நாள் வாடகைக்கு உயர்ரக இரவல் ஆடை வழங்கும் நிறுவனத்தை ஒருவர் ஆரம்பித்தார். நிறுவனத்திற்கு அவர் இட்ட பெயர் 'One Night Stand'.

மனைவியைத்தவிர பிற பெண்களுடன் ஓரிரவு மட்டும் வைத்துக் கொள்ளும் உறவை குறிக்கும் சொற்பதம் தான் 'One Night Stand'. இந்த சொற்பதத்தில் இருக்கும் ஒரு விதமான கிளுகிளுப்பான் கவர்ச்சி உடைகளை ஓரிரவிற்கு மட்டும் வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்திற்கு பொருந்திப்போனது. நிறுவனம் திடீர் புகழோடு வியாபாரத்தில் வெற்றி பெற்றதன் காரணம் பெயர்தான்.

பெயர் ஒரு குறியீடுதான். ஆனால் மனது பெயரோடு சினேகம் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு பிராண்டின் பெயர் சில தன்மைகளோடு இருக்கவேண்டும். பெயரின் அவசியம் பற்றி பேசுவதற்கு முன் இரண்டு பிராண்டுகளின் பெயர் மாற்றம் பற்றி பேசுவோம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மொபைல் இணைப்பான HUTCH மிகவும் குறுகிய காலத்தில் புகழ்பெற்ற பிராண்ட். ' நீங்கள் போகுமிடமெல்லாம் நாங்கள் பின் தொடருவோம் ' என்பதான Tagline உடன் சிறுவனை பின் தொடரும் Pug நாய்க்குட்டியின் விளம்பரத்துடன் மிகவும் விரும்பப்பட்ட பிராண்ட் ' HUTCH '. HUTCHன் விளம்பரத்துக்கு பின் இந்தியாவில் Pug இன நாய்க்குட்டிகளின் டிமாண்டும் அதிகரித்தது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் HUTCH செல்பேசி சேவை நிறுவனத்தின் 66
சதவீதத்தை ஐரோப்பாவைச் சார்ந்த Vadafone நிறுவனம் கிட்டத்தட்ட 86ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. இந்தியர்களுக்கு Vadafone என்ற பெயர் அதிகம் அறிமுகமில்லாதது. ஆனால் உலகெங்கும் பிரபலமான Vadafone நிறுவனம் தனது சேவையை இந்தியாவிலும் அதே பெயரில் இயக்கவேண்டும் என்று நினைப்பது இயல்பானதுதான். விரைவில் பிராண்டின் பெயர் மாற்றப்படலாம் என்ற செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. கோடிகோடியாக செலவழித்து HUTCHன் பெயரை பிரபலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாகுமே என்றும் , பெயரை மாற்றுவதால் வாடிக்கையாளர்கள் HUTCH ன் சேவையை கைவிட்டு விடுவார்களா என்றும் சிலருக்கு கேள்விகள் எழலாம். இந்த கேள்விகளுக்கு சுருக்கமாக பதில் சொல்வதென்றால் இந்தியாவில் HUTCH பிராண்டை நிலை நிறுத்த செய்யப்பட்ட முயற்சிகள் யாவற்றையும் Vadafone பிராண்டிற்கும் செய்தால் Vadafoneம் பிரபலமாகும். ஏற்கனவே HUTCH க்காக செய்யப்பட்ட முயற்சிகள் வீணென்று சொல்வதற்கில்லை. ஆனால் அதன் பலனை தொடர்ச்சியாக அடைய முடியாது.

பிராண்டிங்கிற்கு பெயர் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்ற விஷயத்தை IBM ஐ விலைக்கு வாங்கிய போது LENOVA நிறுவனம் புரிந்து கொண்டது. Vadafone ற்கு ஏற்படப்போகிற அனுபவத்தை போன்ற அனுபவத்தை LENOVA நிறுவனம் எப்படி எதிர்கொண்டது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

- ந.இளங்கோவன்

(இன்னும் வரும்)

மே  03, 2007