' கேரளாவை கடவுளின் தேசம் என்று கூறுகிறார்களே இந்தப்பெயரை யார் வைத்தது ' என்ற கேள்வி நண்பரது . ' கேரளாவை கடவுளின் தேசம் ( God's own country ) என்று கூறிக்கொண்டது கேரள சுற்றுலாத்துறை தான் ' என்ற பதிலை கேட்டதும் நண்பர் கூறியது , ' சும்மா ஜோக்கடிக்காதே .'
யாரோ ஒரு மிக முக்கிய நபர் தான் கேரளாவை கடவுளின் தேசம் என்று கூறியிருக்க வேண்டுமென்பது நண்பரின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
இது போன்ற நம்பிக்கைகளை உருவாக்குவது தான் பிராண்டிங்கின் வெற்றி . 90 களின் ஆரம்பத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட இந்திய சுற்றுலாத்துறை ஏன் நமது
நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை என்று சுய விமர்சனம் செய்தது. தொடர்ச்சியாக இந்திய சுற்றுலாத்துறையும் மாநிலங்களின் சுற்றுலாத்துறைகளும் சுறு சுறுப்பாகலாமா என்று யோசித்தது.
இந்தியாவோடு இணைந்துதான் தங்கள் மாநிலத்தையும் விளம்பரப்படுத்த வேண்டுமா , ஏன் தனித்து நிற்கக்கூடாது என்ற சிந்தனை கேரளா சுற்றுலாத்துறைக்கு வந்தது.
இதற்கு முன்னோடியாக இந்தோனேசியவின் ' பாலி ' (Bali) தென்பட்டது. இந்தோனேசியா நாட்டின் ஒரு பகுதியான பாலி தன்னை இந்தோனேசியாவின் மற்ற பிரதேசங்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது.
பாலியை தொடரலாம் என்று கேரள சுற்றுலாத்துறை தீர்மானித்தது. அப்போது இந்திய சுற்றுலாத்துறையில் விளம்பரங்கள் தாஜ்மகால் , குதுப்மினார் , ராஜஸ்தானின் பாலைவனம் , காஷ்மீர் போன்ற இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கோவிந்தா போட்டால் தங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்காது என்று கேரள சுற்றுலாத்துறை நினைத்தது. இந்தியாவிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கும் கேரளாவின் தன்மைகளை பட்டியலிட்டு ஏன் தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாதென்ற எண்ணத்தின் தொடர்ச்சியாக கேரள சுற்றுலாத்துறை பல முயற்சிகளில் இறங்கியது. விளம்பர நிறுவனத்தின் துணையோடு தனித்தன்மைகள் அடையாளம் காணப்பட்டது. கதகளி , ஆயுர் வேத மசாஜ் , படகுப்போட்டி ,அலங்கரிக்கப்பட்ட யானைகளின் புடை சூழ நிகழும் திருவிழாக்கள் , படகு வீடுகள் என்ற
விஷயங்களை முதன்மைப்படுத்தி விளம்பர முஸ்தீபுகள் தொடர்ந்தது. கேரளாவிற்கான Tagline என்னவாக இருக்கவேண்டுமென்று பல விவாதங்கள் நிகழ்ந்தது. அப்போது விளாம்பர
நிறுவனமான முத்ரா கம்யூனிகேஷன்ஸில் வேலை பார்த்த Walter mendez (காப்பிரைட்டர்) மற்றும் D.K. ஹர்சனு (அக்கவுண்ட் டைரக்டர்) இணைந்து உருவாக்கியது தான் ' God's own country ' நாமகரணம்.
இதற்கு முன் கிட்டத்தட்ட முடிவான Tagline ' Green Gateway ' . Green Gateway என்ற பெயர் முடிவாகியிருந்தால் இவ்வளவு புகழ் பெற்றிருக்க வாய்ப்பில்லை. மற்றொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. ' God's own country ' என்ற Tagline ஐ கேரளாவில் யார் வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் அது.
கேரளாவை பிரபலப்படுத்த சுற்றுலாத்துறை தாஜ் குரூப் ஆப் ஹோட்டல்களுடன் இணைந்து பல பிராண்டிங் முயற்சிகளில் ஈடுபட்டது. 100 கோடி ரூபாய் திட்டம் அது . கேரளாவின் கலாச்சார , பாரம்பரியத்தோடு ஹோட்டல்களை தாஜ் குரூப் கட்டியது. பத்திரிக்கையாளர்கள் , பயண ஏற்பாட்டாளர்கள் , பெரிய தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் என்று பலரை தாஜ் குரூப் இலவசமாக அழைத்து வந்து கேரளாவை சுற்றிக்காட்டியது. கேரளா போன்ற மலைப்பிரதேசத்துடன் இருக்கும் பிரபல சுற்றுலாப்பகுதியான இலங்கைக்கு பயண ஏற்பாடு செய்பவர்களை கேரளாவிற்கு அறிமுகப்படுத்தியது தாஜ் குரூப்.
இது போக உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் சுற்றுலா கண்காட்சிகளில் கேரளா சுற்றூலாத்துறை பங்கு பெற்றது. ' God's own country ' என்ற வாசகத்துக்கு கேட்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம் இருந்தது. தீவிரவாதத்த்தின் தொடர்ச்சியாக காஷ்மீரின் படகு
வீடுகளுக்கு செல்ல முடியாத பயணிகளுக்கு கேரளாவின் குமாரகோம் என்ற படகு வீடுகள் மாற்றாக இருந்தது.
இலங்கையின் அபாயகரமான நிச்சயமற்ற சூழலும் கேரளாவிற்கு சாதகமாக இருந்தது.
இலங்கையைப் போன்ற நிலப்பரப்பு ஆனால் இலங்கையை விட பாதுகாப்பானது என்று பயண ஏற்பாட்டாளார்கள் கேரளாவைப் பற்றி கூறினர்.
ஆயுர் வேத மசாஜ் மற்றும் அதன் சிறப்புகள் விஸ்தாரமாக விளம்பரப்படுத்த பயணிகளின் வருகையில் ஏறுமுகம் . சரியான திட்டமிடப்பட்ட பிராண்டிங் முயற்சிகளால் ' God's own country ' கேரளாதான் என்று பயணிகளின் மனதில் பதிந்து விட்டது.
இது மாதிரியான ஒரு முன்னோடி முயற்சியை செயல்படுத்த தமிழகம் தவறிவிட்டது. பிராண்டிங்கின் பலனை கேரளா அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
- ந.இளங்கோவன்
ஜுன் 08 , 2007