தொடர்கள்

தாகம் தீர்த்தார்!- போதியின் நிழல் 11

பிரம்மதத்தன்

பலநகரங்களையும் வறண்ட பூமிகளையும் கடந்து பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. எல்லா இடங்களிலும் யுவான் சுவாங் நல்ல வரவேற்பைப் பெற்றார். மன்னர்களும் அரச அவையினரும் புத்த பிக்குகளும் அவருக்கு வரவேற்பளித்தனர். சில நாட்கள் கழித்து யுவானின் குழுவினர் ஒகினி என்ற ராஜ்யத்தை அடைந்தனர். அதற்குள் நுழைந்தவுடன் ஒரு குன்று மீதிருந்து வழிந்த நீரூற்றைக் கண்டனர். அதன் அருகிலேயே சிரமபரிகாரம் செய்துகொண்டனர்.

தன்னுடன் உதவியாக வந்திருந்த காய்சாங் நாட்டு வீரனை அழைத்தார் யுவான்.
‘‘இந்த குன்றும் இதில் இருந்து வழியும் சுவையான நீரும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. யார் இதை வெட்டுவித்தார்கள்? ஏதேனும் விவரங்கள் உனக்குத் தெரியுமா?’’

அவன் விழித்தான்.

‘‘பெருமை மிகுந்த பிக்குவே, அந்த விவரம் எனக்குத் தெரியாது. இருப்பினும் விசாரித்து வந்து உடனே தங்களுக்குத் தெரிவிக்கிறேன்’’ என்றவாறு உடனே அவன் கிளம்பிப்போனான். குளிர்ந்த காற்றில் யுவான் கண்ணயர்ந்தார்.
பயணமே வாழ்வு முறையாக அவருக்குப் போய்விட்டிருந்த படியால் வாய்ப்பு கிடைத்த இடத்தில், நேரத்தில் எதையும் செய்துகொள்ள அவர் பழகி இருந்தார். யாத்திரிகனாகவே இனி பதினாறு ஆண்டுகளை ஓட்டப்போகிறார் அல்லவா? ஒரு புதிதாக முளைத்த காட்டாறுபோல அவர் பாய்ந்து செல்கிறார். ஒரு வித்தியாசம். ஆறுகள் கடலில் கலக்கும். ஆனால் இவர் வழியெங்கும் சேகரித்த சொத்துகளுடன் பிறந்த இடத்துக்கே திரும்பப்போகிறார். இன்று பயண இலக்கியங்கள் எழுதுபவர்கள், தங்களுக்கெல்லாம் முன்னோடி ஏழாம் நூற்றாண்டு சீனப்பயணியான யுவான் சுவாங் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவருக்கு முன்பே பாஹியானும் சங் யுன்னும் வந்துபோய் இருக்கிறார்கள். வர்த்தகர்கள் பாரத தேசம் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் யுவான் சுவாங் மிகப்பெரும் பௌத்த தர்ம நூல்களுக்காக இங்குவந்தார். அவற்றைத் திரட்டிச் சென்று சீன தேசத்தில் புத்தரின் தர்மத்துக்கு வலு சேர்த்தார். அங்கிருந்த நூல்களின் குறைகளை தாம் கொண்டு சென்றவற்றுடன் ஒப்பிட்டுக் குறைகளைக் களைந்தார்.

மாலை மயங்கிக்கொண்டிருந்தது. ரத்தத்தைத் தோய்த்ததுபோல் அடிவான மேகங்கள் சிவந்தன. யுவான் அமர்ந்து இருந்த இடத்தைச் சுற்றிலும் மேலே குடைபோல மேகங்கள் வளைந்து சூழ்ந்திருந்தன. அதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தார். சூரியனின் அஸ்தமனம் அவர் பார்த்துக்கொண்டிருக்கையில் பிரித்தறிய முடியாத ஒருகணத்தில் நிகழ்ந்தது. சூரிய உதயமும் சரி, அஸ்தமனமும் சரி நிகழும் சரியான தருணத்தை, நேரத்தின் துளியை எப்போதும் பிரித்தறிய முடியாததாகவே அவர் கண்டு வந்திருக்கிறார்.


இருள்சூழும் நேரத்தில் நெய்யூற்றிய பந்தங்களை அவருடன் வந்திருந்த ஆட்களும் வர்த்தகர்களும் கொளுத்தினார்கள். கோரைப்பாயை விரித்து சற்று சரிந்துகொண்டார். வானம் இருளில் மெல்ல மூழ்கிக்கொண்டிருந்தது. இன்னும் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு இருளவில்லை. அவசரமாக பறவைகள் கூடு தேடிப் பறந்துகொண்டிருந்தன. ஒரு பறவை தீனமாய் கதறிக்கொண்டு குன்றைத் தாண்டிப் பறந்துபோனது. இருட்டி வெகுநாழிகை கழித்துத்தான் யுவானின் ஆள் வந்து சேர்ந்தான். அவனை அமரச்சொல்லி கேட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வழியாக பலநூறுபேர் கொண்ட பெரிய வர்த்தகர் கூட்டம் ஒன்று பயணம் செய்தது. அவர்களுடன் ஒரு புத்த பிக்குவும் பயணம் மேற்கொண்டார். அவர் கையில் எதுவுமே எடுத்துவர வில்லை. பசித்தால் உடன்வந்த வர்த்தகர்களிடமோ வழியில் வரும் ஊர்களிலோ அவர்களால் தர இயன்றதை வாங்கிச் சாப்பிடுவார். அதைத்தவிர அவருக்கு எதுவும் தேவையானாதாக இருக்கவில்லை. எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார். அவர் முகம் கவலை கொண்டே வர்த்தகர்கள் யாரும் பார்த்ததில்லை.

பலநாட்கள் பயணமாக வந்த அக்கூட்டம் இந்த இடத்தை அடைந்தபோது அவர்களிடம் இருந்த கடைசி சொட்டு நீரும் காலியாய்ப் போயிருந்தது. தண்ணீர் இல்லாமல் மேற்கொண்டு எப்படிப் பயணத்தைத் தொடர்வது என்று தெரியாமல் தவித்தார்கள். அருகில் எந்தவிதத்திலும் நீருக்கான அறிகுறியே இல்லை.

அவர்கள் கும்பல்கும்பலாய்க் கூடிப் பேசிக்கொண்டிருக்கையில் அந்த பிக்கு மட்டும் புன்னகை தொற்றிய முகத்துடன் இந்த குன்றின் அடிவாரத்தில் அமைதியாக ஆரவாரம் இன்றி உட்கார்ந்திருந்தார். வர்த்தகர்கள் கோபமுற்றனர்.
‘‘பிக்குவே, எம்முடன் நீர் பயணம் மேற்கொண்டு வந்தீர். வழியில் எம்மிடம் இருந்தவற்றை வாங்கி உண்டீர். எம் நீரைப் பருகினீர். ஆனால் இப்போது எம்மிடம் தண்ணீர் காலியாகி விட்ட நிலையில் எம் கவலையில் பங்கெடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருக்கிறீரே.. உமக்கும் தண்ணீர் கிடையாது தெரியுமா?’’

தலைமை வர்த்தகன் பிக்குவை நோக்கி எள்ளும் கொள்ளும் வெடிக்கப் பேசினான். மற்றவர்களும் பிக்குவின் மீது வெறுப்பு தோய்ந்த பார்வையை ஓட்டினர்.

அவரது முகத்தில் இருந்த சிரிப்பு முதல்முறையாக மறைந்தது. ஒரு வழவழப்பான பளிங்குக் கல்போல் அவரது முகம் மாறிற்று. கண்கள் தீக்கங்குகளாக ஜொலித்தன. எழுந்து அருகே இருந்த உயரமான பாறைக்குச் சென்றார்.


‘‘வர்த்தகர்களே... நீவிர் அனைவரும் தண்ணீர் இல்லாததால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியுள்ளீர்கள். உங்கள் மனம் அச்சத்தால் நிரம்பி உள்ளது. தாகத்தால் உங்கள் நாவுகள் வறண்டுபோயிருக்கின்றன. இதுதான் உங்கள் இதயங்களை பௌத்த தர்மத்தால் நிரப்ப சரியான நேரம் என்று நான் கருதுகிறேன். புத்தரின் வழிகளை ஏற்று இத்தர்மத்தின் நியதிகளை நீங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளுங்கள். அவ்விதம் செய்வீர்களேயானால் இதோ இந்த குன்றின் உச்சியில் இருந்து நீர் பெருகி ஓடச்செய்கிறேன்’’
பிக்கு பெருங்குரலெடுத்து இதை உரைத்தார்.

வர்த்தகர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. பௌத்தத்தை அங்கே அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பிக்கு குன்றின் மீது ஏறினார்.

‘‘ நான் உச்சிக்குப் போனதும் நீங்கள் அனைவரும் தண்ணீரை பெருகச்செய்யுமாறு இங்கிருந்து பித்தபிரானைக் கோருங்கள். நீர் பெருகிவரக் காண்பீர்கள்’’என்று கூறியபிறகு அவர் மேலே ஏறினார்.
உச்சியில் நின்று அவரது கரங்கள் அசைந்தன. வர்த்தகர்கள் அனைவரும் பெருங்குரலில் புத்தபிரானை வேண்டினார்கள்.

நீர் உச்சியில் இருந்து ஊற்றெடுத்து கீழ்நோக்கிப் பாய்ந்ததை முதலில் ஒரு இளம் வர்த்தகன்தான் கண்டு உரத்தகுரலில் ஆர்ப்பரித்தான். வர்த்தகர் கூட்டம் தாகம் தீர்த்தது.

தண்ணீர் பாத்திரங்கள் நிரம்பி நீண்ட நேரம் கழிந்தபிறகும் மேலே போன பிக்கு இன்னும் கீழே வராதத்தை உணர்ந்து சிலர் குன்றின் மேலே ஏறினர். நீரூற்று கிளம்பிய இடத்துக்கு அருகே கிடந்தது பிக்குவின் உயிரற்ற உடல். முகத்தில் மட்டும் புன்னகை.

வர்த்தகர்கள் அனைவருமே இதனால் பெரும் துயரத்துக்குள்ளாகி கண்ணீர் சிந்தினர். பின்னர் அவரது உடலை எரித்து இறுதி அஞ்சலி செய்து, எரித்த இடத்தில் சிறிய கோபுரம் ஒன்றையும் அமைத்தனர்.

அன்றிலிருந்து இன்று வரை இந்த நீர் ஊற்று இவ்வழியாகச் செல்வோரின் தாகம் தீர்த்துவருகிறது. ஆட்கள் வந்தால் மட்டுமே இந்த ஊற்று சுரக்கிறது. யாரும் வராதபோது சுரப்பு நின்றுவிடும்.

இந்த சம்பவத்தைக் கேட்டு யுவான் சுவாங் மட்டுமல்ல. அவருடன் வந்த எல்லோருமே மெய்சிலிர்த்தார்கள்.

மறுநாள் காலையில் எல்லோரும் கிளம்பி பயணத்தைத் தொடக்கினார்கள். யுவான் சுவாங்கின் குழுவில் சில வர்த்தகர்களும் சேர்ந்துகொண்டிருந்தனர். அவர்கள் நோக்கம் விரைவாகச் செல்லவேண்டும் என்பதே. ஆனால் யுவானின் குழு மெதுவாகவே சென்றது.

வெள்ளித் தாது வெட்டியெடுக்கப்படும் ஒரு மலையை அவர்கள் கடந்ததும் பெரிய கொள்ளைக் கும்பல் ஒன்று அவர்களைச் சூழ்ந்தது. இருக்கும் எல்லாவற்றையும் பிடுங்கும் கும்பல் அல்ல அது. அவர்களிடம் இருந்தவற்றில் தங்களுக்குப் பிடிததமானவற்றை எடுத்துக்கொண்டு விட்டுவிட்டார்கள்.
யுவானுடன் வந்தவர்கள் பிழைத்ததே பெரிது என்று சொல்லிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தனர். ஏனெனில் அக்காலத்தில் கொள்ளையர்கள் பயணியரைக் கண்டால் ஒருவர் விடாமல் கொன்று பொருட்களை அபகரிப்பதே வழக்கமாக இருந்தது.

அன்றிரவு ஓரிடத்தில் அனைவரும் கூடாரம் அமைத்து தங்கினர். இன்னும் ஒரு பகல் பயணம் மேற்கொண்டால் நகரம் ஒன்று வரும் என்பது தெரிந்திருந்தபடியால் யாருக்கும் நிலைகொள்ளவில்லை. எப்போது வசதிகள் நிறைந்த நகருக்குள் செல்வோம்; தங்கள் பொருட்களை விற்போம் என்று வர்த்தகர்கள் கணக்குப் போட்டார்கள். அதில் ஒரு குழுவினர் மட்டும் அனைவரும் உறங்கிய பிறகு நள்ளிரவில் புறப்பட்டுவிட்டனர். முன்கூட்டியே சென்றால் போட்டியின்றி பொருட்களை விற்கலாம் என்பது அவர்களின் கணக்கு.

காலையில் யுவான் தம் குழுவினருடனும் எஞ்சி இருந்த வர்த்தகர்களுடனும் புறப்பட்டார். சுமார் இரண்டு நாழிகை நடந்தபிறகு வழியில் ஓரிடத்தில் அவர்கள் கண்ட காட்சி இதயத்தைப் பிசைவதாக இருந்தது. -
முன்கூட்டியே புறப்பட்டிருந்த வர்த்தகர் குழுவில் ஒருவர் மீதமில்லாமல் எல்லோருமே ஒரு கொள்ளைக் கூட்டத்தால் கொல்லப்பட்டு கிடந்தார்கள்.

-பிரம்மதத்தன்

(பயணம் தொடரும்)

வெள்ளி தோறும் இரவு - பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' அந்திமழையில் வெளிவரும்....

பிரம்மதத்தனின்'போதியின் நிழல்' பற்றிய உங்கள் கருத்துக்களை
content(at)andhimazhai.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
போதியின் நிழல் 1