தொடர்கள்

தாயின் வாக்கு

செவக்காட்டு சொல்கதைகள் 2

கழனியூரன்

ஒரு ஊர்ல ஏழு அண்ணன் தம்பிகள் இருந்தார்கள், ஆறு பேர் ஆரோக்கியமாக இருந்தார்கள். கடைசி தம்பி மட்டும் நடக்க முடியாதவனா இருந்தான்.

கடைசிப் பிள்ளையை தாய்க்காரி செல்லப்பிள்ளையாக வளர்த்தாள், ’இவன் சீதேவி’ இவன் இருக்கும் இடத்தில் செல்வம் கொழிக்கும் என்று மற்ற ஆறு பிள்ளைகளிடமும் அடிக்கடி தாய்க்காரி சொல்லிக் கொண்டே இருப்பாள். தாய் சொல்வதின் அர்த்தம் அவர்களுக்கு விளங்கவே இல்லை.

ஆறு பேருக்கும் கல்யாணம் ஆயிட்டு. ஆறு மதினி மார்களும் கடைக்குட்டி கொழுந்தனைக் கரிச்சிக் கொட்டிக் கொண்டே இருந்தார்கள், ஆனால் அவன் தாய் , மருமக்கமார்கள் தனக்குத் தின்பதற்கு கொடுக்கும் பண்ட பலகாரங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் கடைக்குட்டிப் பிள்ளைக்குக் கொடுத்து அவனை கண் கலங்காமல் காப்பாற்றி வந்தாள் .

தாய்க்காரிக்கு வயதானதால் தளர்ந்தாள். நடமாட்டம் குறைந்தது. நம் கண்ணுக்குப் பிறகு இந்த கடைக்குட்டிப் பையனுக்கு யார் அன்போடு சோறு போடுவார்கள் ? எனவே அவனுக்கும் ஒரு கால்கட்டைப் போட்டு விட வேண்டும் “ என்று எண்ணினாள்.

தன் எண்ணத்தை, மற்ற பிள்ளைகளிடம் கூறினாள் , நடக்க முடியாத தம்பிக்கு யார் பெண் கொடுப்பார்கள்? என்று அண்ணன்மார்கள் ஆறு பேரும் தாயிடம் கேட்டார்கள்.

தாய்க்காரி அவர்களை விட வில்லை, கடைக்குட்டிக்கு கல்யாணமாகனும் , அதை நான் கண்ணால பார்க்கனும், அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும், என்னை நீங்கள் செத்த பின் புதைத்தாலும் என் கட்டையை (உடம்பை) மண் திங்கும் என்று உணர்ச்சி பூர்வமாக கூறினாள்.

தாயின் சொல்லைத் தட்ட கூடாது என்று நினைத்து அண்ணன் மார்கள் ஆறு பேரும் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து கடைசியில் பக்கத்து ஊரில் அக்கு, தொக்கு ‘ இல்லாமல் அனாதையாக இருந்த ஒரு பார்வையற்ற பிள்ளையைப் பேசி முடித்து கடைக்குட்டி தம்பிக்கு கட்டி வைத்தார்கள் .

தாய்க்காரி தன் கடைக்குட்டி மகனுக்கும் கல்யாணம் ஆயிட்டு என்ற சந்தோசத்தோடு கண்களை மூடினாள். சாகும் போது மறக்காமல் “ சின்ன மகன் என் செல்ல மகன் அவன் இருக்கும் இடத்தில் சீதேவி இருப்பாள் , எனவே அவனை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் என்று சாவு வாக்கு சொல்லிவிட்டுத் தான் தன் உயிரை விட்டாள்.

அண்ணன்மார்கள் ஆறு பேருக்கும் வாய்த்த மருமக்கமார்கள் அத்தையின் சாவு வாக்கை உதாசினப்படுத்தினார்கள் , தன் புருசன்மார்கள் , புஞ்சைக் காட்டுக்கு வேலை பார்க்கப் போன பிறகு கடைக்குட்டி கொழுந்தனையும் , அவன் பொண்டாட்டியையும் சாடை , மாடையாக ஏசினார்கள்.

இத்தனை நாளும் கொழுந்தன் ஒருத்தனுக்குத் தான் ஆக்கிப்போட்டோம் , இப்ப அவன் தாலி கட்டிக் கூட்டிகிட்டு வந்திருக்கிற குருடிக்கும் சேர்த்துல்ல சோறாக்கிப் போட வேண்டியதிருக்கு என்று அவர்கள் காதுபடவே பேசினார்கள் .

கடைக்குட்டி தம்பி தன் மனைவியை அழைத்து, இனியும் நாம இவர்களுக்கு பாரமாக இருக்க கூடாது . இன்று இரவோடு இரவாக , இந்த வீட்டை விட்டு போய்விடுவோம் . நான் உன் கையைப்பிடித்துக் கூட்டிக் கொண்டு போகிறேன். நீ என் பின்னால் வா, வேறு எங்காவது ஒரு ஊருக்கு , இவர்கள் கண் காணாத இடத்திற்குச் சென்று ஏதாவது வேலை செய்ய முடிகிறதா . என்று பார்ப்போம் . இல்லை என்றால் பிச்சை எடுத்தாவது சாப்பிடுவோம் , அதுவும் முடியாது என்றால் எங்காவது ஆறு குளங்களில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்றான்.

 கணவன் சொல்வதும் சரிதான் என்று நினைத்த மனைவியும் ‘சரி’ என்றாள் . அன்று இரவே, திட்டமிட்டபடி , கடைக்குட்டி செல்லதம்பியும் , அவன் பொண்டாட்டியும் , நொண்டி , நொண்டி நடந்து , அந்த ஊரை விட்டுப் போய்விட்டார்கள்.

அண்ணன்மார்கள் ஆறு பேரும் அழுதார்கள் , ஆனால் அவர்கள் பொண்டாட்டிமார்கள், சனியன்கள் பூமிக்கு பாரமாக இருந்ததுகள், எங்காவது போய்த் தொலையட்டும், விட்டுவிடுங்கள், புத்தி வந்து திரும்பி வந்தால் , ஏற்றுக்கொள்வோம்  என்றார்கள், கண்வர்களால், மனைவிமார்களின் சொல்லை மீறி எதுவும் செய்யமுடியவில்லை.

விடிந்ததும் , கடைக்குட்டி தம்பியும் அவன் மனைவியும் ஒரு ஆற்றங்கரையை அடைந்தார்கள் அங்கு கை கால் முகம் கழுவினார்கள் , அப்போது கண் தெரியாத அந்தப் பெண்ணின் கையில் வழ வழப்பான ஒரு கல் கிடைத்தது . அந்த கல்லின் வடிவமே வித்தியாசமாக இருந்ததால் , அப்பெண் , அக்கல்லைத் தன் கணவனின் கையில் கொடுத்து “ இது என்ன கல் என்று பாருங்கள் , வித்தியாசமாக இருக்கிறதே என்றாள் . அவனும் அக்கல்லை வாங்கிப் பார்த்தான் , அவனுக்கும் அக்கல் வித்தியாசமாகவே பட்டது. எனவே அவ்வூரில் உள்ள பொற்கொல்லரின் வீட்டை விசாரித்து அங்கு சென்று பொற்கொல்லரிடம் கொடுத்து இது என்ன கல் என்று பார்த்து சொல்லுங்கள் என்றார்கள்.

பொற்கொல்லர் அக்கல்லை நன்கு சோதனை செய்து பார்த்துவிட்டு இது விலை உயர்ந்த நவரத்ன கல் , இதை விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அவரே வைர வியாபாரியின் வீட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று நல்ல விலைக்கு விற்றும் கொடுத்தார். அவர்கள் பொற்கொல்லருக்கும் நிறைய பணம் கொடுத்தார்கள், ஒரே நாளில் அவர்கள் பெரிய பணக்காரர்களாகிவிட்டார்கள். அப்போதுதான் கடைக்குட்டி தம்பிக்கு தன் தாய் அடிக்கடி சொல்லும் இவன் செல்லபிள்ளை, இவன் இருக்கும் இடத்தில் சீதேவி குடியிருப்பாள் என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.

ஊரில் ஆறு அண்ணன் மார்களுக்கும் தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்தது, விவசாயத்தில் விளைச்சல் குறைந்தது , கடன் தொல்லை அதிகமானது , ஒரே வருசத்தில் அவர்களின் நிலம், நீச்சி , வீடு , மனை என்று அனைத்தையும் விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது.

ஆறு அண்ணன்மார்களும் அவர்கள் மனைவி மக்களும் அன்னாடம் கூலி வேளைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலை வந்துவிட்டது, உழைத்து உழைத்து வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலமை வந்துவிட்டது. கடைசியில் காட்டிற்குச்சென்று விறகு வெட்டி , விறகு கட்டுகளை ஊர் , ஊராக விற்கும் நிலமை வந்து விட்டது.

ஒரு நாள் , ஆறு அண்ணன்மார்களும் அவர்கள் மனைவியார்களும் , விறகுக் கட்டைகளைச் சுமந்து கொண்டு , கடைக்குட்டி தம்பி , மாளிகை கட்டி வாழும் தெருவில் விறகு வேணுமோ.. விறகு ! என்று கூவிக்கொண்டு சென்றார்கள்.

கடைக்குட்டித் தம்பி அண்ணன்மார்களின் குரலை அடையாளம் கண்டு தன் மனைவியை விட்டு வெளியே வந்து பார்த்தான். அண்ணன்மார்களை முதலில் அவனுக்கு அடையாளமே தெரியவில்லை , வறுமையில் மெலிந்து தாடி வளர்ந்து , அழுக்கான உடையில் இருந்தார்கள். என்றாலும் தம்பி உரிமையோடு , அண்ணன்மார்களைப் பார்த்து “அண்ணன்மார்களே …நான் யார் என்று தெரிகிறதா.நான் தான் உங்கள் செல்லமான கடைக்குட்டித்தம்பி என்றான்.

அண்ணன்மார்களுக்கு தம்பியின் செல்வச் செழிப்பான நிலமையை நம்பவே முடியவில்லை, எப்படி அவனுக்கு இவ்வளவு செல்வம் வந்தது, நம்மிடம் இருந்த செல்வம் எல்லாம் ஏன் காணாமல் போய்விட்டது. என்று யோசிக்கும் போதுதான் தாயாரின் சாவு வாக்கு நினைவுக்கு வந்தது.

அண்ணன்மார்களில் மூத்தவன் கடக்குட்டித் தம்பியின் கைகளைப் பிடித்து கொண்டு , தம்பி எங்களை மன்னிச்சிரப்பா. நீ வீட்டை விட்டு சென்றபோதும் நாங்கள் உன்னைத் தேடிக் கண்டுபிடிக்காதது எங்கள் தப்புதான் . என்று கண்ணீர் சிந்தினான்.

தம்பி மூத்த அண்ணனின் கண்ணீரைத்துடைத்து விட்டு உங்களுக்கு ஏன் அண்ணா இந்த நிலை வந்தது என்று கேட்டான்.

அதற்கு மூத்த அண்ணன் , தம்பி நாங்கள் ஆறு பேரும், நம் தாய் கூறிய சாவு வாக்கை “ மறந்து உன்னை பிரிந்து விட்டோம். நீ இல்லாததால் , நம்வீட்டுச் சீதேவி எங்கோ சென்று விட்டது. என்று வருத்ததுடன் கூறினார்.

மதினிமார்கள் ஆறுபேரும் தங்கள் கடைக்குட்டி தம்பியிடம் மன்னிப்பு கேட்டார்கள், இனி உன்னை விட்டு பிரிய மாட்டோம் என்று சொன்னார்கள்.

கடைக்குட்டி தம்பி, இனி ஆறு அண்ணன்மார்களும் குடும்பத்தோடு என் வீட்டிற்கே வந்து விடுங்கள் , நான் பெற்ற செல்வம் நம் தாயின் வாக்கால் வந்தது, அது எனக்கு மட்டும் சொந்தமில்லை , நம் அனைவருக்கும் சொந்தம்தான். என்றான்.

அதன் பின் அண்ணன் தம்பிகள் ஏழு பேரும் ஒன்று சேர்ந்து ஒருத்தரை ஒருத்தர் மதித்து வாழ்ந்தார்கள், என்று கதையை கூறி முடித்தார் சுப்புத்தாத்தா.

(இன்னும் சொல்வார் )