தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 12

பி. ஜி. எஸ். மணியன்

"இசை என்பது மக்களின் வாழ்க்கைப் பயணத்தில் கையாளும் மொழிகளால் வெளிப்படுத்த இயலாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் மொழி" - ஏ.ஆர். ரஹ்மான்.

நீங்கள் ஜெயதேவரின் "அஷ்டபதி" கேட்டிருக்கிறீர்களா?

கர்நாடக இசை ரசிகர்கள் கண்டிப்பாக இதை கேட்டிருப்பீர்கள்.  

"அஷ்டபதியா?  அப்படி என்றால் என்ன சார்?” என்று கேட்பவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவில் (இன்றைய ஓடிஸா) புரியில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவரால் இயற்றப்பட்ட 24 பாடல்களின் தொகுப்பே அஷ்டபதி.

"கீதகோவிந்தம்" என்றும் இதனைச் சொல்வதுண்டு.

பக்தி இலக்கியத்தில் நாயக நாயகி பாவத்தில் புனையப்பட்ட இந்தப் பாடல் தொகுப்பு ஆன்மீக அன்பர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்லவி அதைத் தொடர்ந்து ஏழு சரணங்கள் என்று மொத்தம் எட்டு கண்ணிகளாக அமைக்கப் பட்டதால் "அஷ்டபதி" என்று பெயர்.

பொதுவாக ஒரு சரணம் முடிந்ததும் பல்லவியின் முதலடியைத் தொட்டே பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த அஷ்டபதியில் மட்டும் ஒவ்வொரு சரணம் முடிந்ததும் பல்லவியின் முதலடிக்கு பதிலாக கடைசி அடிகளைத்தான் தொடர்ந்து பாடும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த அஷ்டபதியின் அமைப்பில் தான் "முதலாளி" படத்தில் தான் இசை அமைத்திருக்கும் "ஏரிக்கரையின் மேலே" என்ற கவி. கா. மு.  ஷெரீபின் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"ஆரபி"  ராகத்தில் இந்தப் பாடலை வெகு அற்புதமாக அமைத்திருக்கிறார் அவர்.

"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே.

என் அருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே."  - என்று துவங்கும் பல்லவியின் அடுத்த வரிகளான "அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே. ஆசை தீர  நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே"  - என்ற கடைசி இரண்டு வரிகளைத்தான் அடுத்து வரும் ஒவ்வொரு சரண முடிவிலும் தொட்டுக்கொண்டு பாடல் தொடரும்: முடிவதும் இந்த கடைசி இரண்டு வரிகளோடுதான்.

புல்லாங்குழல், கிளாரினெட், தபேலா ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளை வைத்துக்கொண்டே காலத்தால் அழிக்கமுடியாத ஒரு காவியப் பாடலைக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக் குரலில் வெளிப்படும் இந்தப் பாடலில் கே.வி. மகாதேவன் வெளிப்படுத்தும் ஆரபி ராகத்தின் சஞ்சாரங்கள் கேட்பவரை வியக்க வைக்கின்றன. 

அடுத்து ஜிக்கியின் வசீகரக் குரலில் "யௌவ்வன ராணிதான். இசை பாடும் வாணிதான்"  என்ற பாடலும் குறிப்பிடப்படவேண்டிய பாடல்.

அறிமுகக் கதாநாயகி தேவிகாவுக்கு எம்.எஸ். ராஜேஸ்வரியை பின்னணி பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

"எங்கிருந்தோ வந்தார் என் இதயம் கவர்ந்தார்."  என்ற தனிப்பாடல் இனிமையாக மனதை வருடும் பாடல்.

அடுத்து ஒரு நாடோடி நடனப் பாடல்.

"சம்பளம் தான் உயர்ந்திட்டாலும் போதவில்லை.

சண்டைபோட்டு போனஸ் பெற்றும் பத்தவில்லை.

நம்மைப் போல் ஏமாளிகள் யாருமில்லை.

நமக்கு நாமே திருந்தாவிட்டால் பயனுமில்லை." என்று விருத்தமாக ஆரம்பித்து.

"சிக்கனமா வாழணும்.  சேர்த்துவைக்கப் பழகணும்." என்று ஜிக்கி-எம்.எஸ். ராஜேஸ்வரி இருவரின் குரல்களில் எளியவரிகளில் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் பாடல்.  

 கா. மு. ஷெரீபின் கருத்தாழமிக்க வரிகளை முன்வரிசை ரசிகனுக்கு கொண்டுசேர்க்கும் பணியை செம்மையாகச் செய்தார் கே.வி. மகாதேவன். 

என்றாலும்..  "ஏரிக்கரையின் மேலே"  பாடல் அளவுக்கு மற்ற எந்தப் பாடல்களுமே மக்களைச் சென்று அடையவில்லை.

"முதலாளி" படம் அடைந்த மாபெரும் வெற்றி சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.

அதே சமயம் இப்படி சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பதில் கைதேர்ந்த மலையாள திரை உலகையும் முதலாளியின் மாபெரும் வெற்றி ஈர்த்தது.

மலையாளத்திலும் பிரேம்நசீர், ஷீலா ஆகிய இருவரும் நடிக்க தயாரான மலையாள "முதலாளி" படத்துக்கு கே.வி. மகாதேவனின் உதவியாளர் டி.கே. புகழேந்தி இசை அமைத்தார்.

**********************

1957 - தீபாவளிக்கு வெளிவந்த "முதலாளி" - படத்தை அடுத்து தொடர்ந்து வந்த தைப்பொங்கலுக்கு இன்னொரு வெற்றி மகுடம் கே.வி. மகாதேவனின் சிரத்தை அலங்கரித்தது.

படம் :  தை பிறந்தால் வழி பிறக்கும்.

எஸ்.எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர், ராஜசுலோச்சனா, எம்.என். ராஜம் ஆகியவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே பெருவெற்றி பெற்றன.

படமே "தைபொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்.  தங்கச் சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம்" என்ற பாடலுடன்தான் துவங்குகிறது.

பி. லீலா - டி.எம். சௌந்தரராஜன் குழுவினருடன் பாடும் பாடல் இது. "மாண்ட் "  ராகத்தை இவ்வளவு அழகாக எளிமைப் படுத்தி ஒரு உற்சாகமிக்க பாடலை தரமுடியுமா?

தந்திருக்கிறார் கே.வி. மகாதேவன். 

பாடலின் முகப்பிசையே (Prelude) கேட்பவரை தாளம்போட வைக்கிறது.

மண்மணம் குன்றாத கிராமியப் பாடல்களைத் தருவதில் தனது நிகரில்லாத்திறமையை இந்தப் படத்தின் பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே"  - என்ற திருச்சி லோகநாதனின் பாடல் வெளிப்படுத்தும் கருத்துக்களும் உணர்வுகளும்..  விவரிக்க வார்த்தைகள் போதாது. பீம்ப்ளாஸ் ராகத்தில் அலைபோல மிதந்து வந்து கேட்பவரைத் தாலாட்டுகிறது இந்தப் பாடல். 

"மண்ணுக்கு மரம் பாரமா. மரத்துக்கு இலை பாரமா.  கொடிக்கு காய் பாரமா.  பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா"  - என்ற எம்.எஸ். ராஜேஸ்வரியின் பாடல் தாய்மையின் சிறப்பை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல். 

என்றாலும்...தைபிறந்தால் வழிபிறக்கும்" படப் பாடல்களிலேயே முதலிடம் பெறும் முத்தான பாடல் என்றால்...

அது...

உவமைக் கவிஞர் சுரதா எழுதிய "அமுதும் தேனும் எதற்கு நீ  அருகினில் இருக்கையிலே எனக்கு.." என்ற பாடல்தான்.

அழியா வரம் பெற்ற இந்தப் பாடலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்....

பொதுவாக ஒரு பாடலுக்கு மெட்டமைக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்ற கேள்விக்கு மகாதேவன் தரும் பதிலைப் பார்ப்போம்.

"பாடலாசிரியர் தரும் பாட்டில் உள்ள சந்தமும் தாளமும் ஏற்கெனவே பிரபலமான பாடலின் சாயலில் இருந்தால் அதை நினைவு படுத்தாத வகையில் மெட்டமைக்க வேண்டும்.  இந்த மாதிரி பாடல்கள் போடும்போது கொஞ்சம் நேரம் பிடிக்கும்.

ஆனால்.. பொதுவாக என்னைப் பொருத்தவரையில் சிலசமயம் உடனே மெட்டு பிறந்துவிடும். " - என்று சொல்லிவிட்டு அதற்கு உதாரணமாக சில பாடல்களை பட்டியலிடுகிறார் கே.வி. மகாதேவன்.

அந்த வரிசையில் விளைந்த பாடல் தான் இந்த "அமுதும் தேனும் எதற்கு" பாடல்.

பாடல் வரிகளைப் பார்த்தவுடனேயே வந்து விழுந்த மெட்டு.

அதே போல இன்ன ராகத்தில் தான் அமைக்கவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக்கொண்டு மகாதேவன் பாடலை அமைப்பதில்லை.

பாடல் வரிகளும், படத்தில் அது இடம்பெறும் கட்டத்துக்கான சூழ்நிலையும் கச்சிதமாக வெளிப்படும் வண்ணம் பல்லவிக்கான டியூன் முதலில் செட் ஆனபிறகு தான் அதற்கான ராகத்தை பற்றியே சிந்திப்பார் கே.வி. மகாதேவன்.

அந்த வகையில் இந்த "அமுதும் தேனும் எதற்கு"  பாடலுக்கான ராகம் அவரை அறியாமலே கச்சிதமாக வந்து விழுந்திருக்கிறது.

மோகன ராகத்தில் அமைக்க வேண்டும் என்று ஆரம்பித்து மோகன கல்யாணியாக மாறிவிட்டது என்று டி.கே. புகழேந்தி அவர்கள் ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் -  மோகன கல்யாணியின் மத்யமம் இந்தப் பாடலில் மிஸ்ஸிங்.  ஆகவே இது மோகனத்திலும் அமையவில்லை.  மோகன கல்யாணியிலும் அமையவில்லை.  ஆனால் சுத்தமான கர்நாடக ராகத்தில் அமைந்த பாடலாக இருக்கிறது.  அது என்ன ராகம்?

கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பொழுது கோவையில் இருக்கும் "இந்தியன் பப்ளிக் பள்ளியில்"  இசைத் துறையில் பணிபுரியும் எனது குடும்ப நண்பர் திரு. நாராயணசுவாமி அவர்கள் உதவிக்கு வந்தார்.  பல இசைக்கருவிகளையும் லாவகமாகக் கையாளும் நிபுணர்.  பல மெல்லிசை கச்சேரி மேடைகளிலும் வாத்தியக்கருவிகளை அனாயாசமாக வாசித்தும் வருபவர் இவர்.  அவரது உதவியால் தான் இந்தப் பாடல் சங்கராபரண ராகத்தின் ஜன்யராகமான "நிரஞ்சனி"- என்ற அபூர்வ ராகத்தில் அமைந்திருக்கிறது என்பது தெரிந்தது.  

மிகவும் அபூர்வமான இந்த ராகம் வெகு அற்புதமாக இந்தப் பாடலில் கையாளப் பட்டிருக்கிறது.   அபூர்வ ராகங்களை கையாள்வதில் கே.வி. மகாதேவனுக்கு இருக்கும் திறமையை வியப்பதா?

அல்லது  "நான் இருக்கிறேன்.  என்னை உபயோகப் படுத்திக்கொள்ளேன்." என்று தானாகவே "நிரஞ்சனி" ராக தேவதை அவர் போட்ட மெட்டில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டாள் என்று எடுத்துக்கொள்வதா?

சீர்காழியின் சாரீரம் தான் எவ்வளவு அழகாக இந்தப் பாடல் வரிகளுக்கேற்றபடி ஜாலம் புரிகிறது.  கொஞ்சுகிறது!.  அன்பு பொங்க மனம் கவர்ந்த நாயகியை வருணிக்கிறது!

சுரதா, சீர்காழி கோவிந்தராஜன், கே.வி. மகாதேவன் ஆகிய மூவரின் கூட்டணியில் அமைந்த இந்த மாபெரும் வெற்றிப்பாடலுக்கு பயன்படுத்தப் பட்ட இசைக்கருவிகளோ மூன்றே மூன்று.  சிதார், வயலின், தபேலா -  ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நிரஞ்சனி ராகத்தில் மகாதேவன் போட்ட மெட்டு காலங்களைக் கடந்து இன்றளவும் நிரந்தரமாக காற்றலைகளில் நிலைத்து விட்டிருக்கிறதே!

 திரை இசையில் இந்த "நிரஞ்சனி" ராகத்தை கே.வி. மகாதேவனைத் தவிர வேறு யாருமே பயன்படுத்தி இருக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது.

அப்படியே இருந்தாலும் இந்த "அமுதும் தேனும் எதற்கு" பாடல் பிரபலமான அளவுக்கு அந்தப் பாடல் மக்களைச் சென்று அடைந்திருக்க முடியாது. 

அந்த அளவுக்கு வெகு பொருத்தமாக - அழகாக - கச்சிதமாக - அமைந்த பாடல் இது.

*******

"தை பிறந்தால் வழி பிறக்கும்" படம் தயாரிப்பில் இருந்த அதே நேரத்தில் மகாதேவனின் நண்பரான திரு. ஏ.பி. நாகராஜன் அவர்களின் கதை வசனத்தில் கே. சோமு அவர்களின் இயக்கத்தில் இன்னொரு படம் தயாரானது. 

எம்.ஆர். ராதா, சௌகார் ஜானகி முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தின் பெயர் "நல்ல இடத்து சம்பந்தம்".

படங்களில் கோரஸ் பாடிக்கொண்டிருந்த நிர்மலா என்ற பாடகியின் மகள்தான் லூர்துமேரி ராஜேஸ்வரி.  அம்மாவுடன் ஒரு கோரஸ் பாடகியாக திரை இசைத் துறையில் கால்பதித்த லூர்துமேரி ராஜேஸ்வரியின் குரல்வளம் ஏ.பி. நாகராஜன் - கே.வி. மகாதேவன் ஆகியோரது கவனத்தை கவர்ந்ததன் விளைவு  "நல்ல இடத்து சம்பந்தம்" படத்தில் மூன்று பாடல்கள் பாடும் முத்தான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

ஏற்கெனவே எம்.எஸ். ராஜேஸ்வரி அந்தக் காலகட்டத்தில் படங்களில் பாடிப் பிரபலமாகிக் கொண்டிருந்தார்.  இவரும்  ராஜேஸ்வரி என்றால் பெயர்க்குழப்பம் ஏற்படுமே?  அதைத் தவிர்ப்பதற்காக அவரது பெயரை கொஞ்சம் சுருக்கி புதிதாக நாமகரணம் செய்தார் ஏ.பி. நாகராஜன்.

லூர்துமேரி ராஜேஸ்வரி -  எல்.ஆர். ஈஸ்வரி என்னும் இசைக்குயிலாக மாறி கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் முதல் முதலாக திரை இசைத் துறையில் "நல்ல இடத்து சம்பந்தம்" கிடைக்க அதைப் பற்றிக்கொண்டு வலது காலெடுத்து வைத்தார்.

(இசைப்பயணம் தொடரும்...)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

 ஜுன்   30 , 2014