இசை இந்தப் பிரபஞ்சத்திற்கு ஆன்மாவை அளிக்கிறது. எண்ணங்களுக்கு சிறகுகளைக் கொடுக்கிறது. கற்பனைகளைச் சிறகடித்துப் பறக்கவைக்கிறது. அனைவருக்கும் வாழ்க்கையாக இருக்கிறது. - பிளாட்டோ
இந்த இடத்தில் அந்த காலத்து நாடகக் கலை பற்றி சில தகவல்கள் இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தான் கே.வி. மகாதேவன் போன்றவர்கள் சாதித்ததன் அருமை புரியும்.
அந்த நாட்களில் தெருக்கூத்து என்ற பெயரில் நாடகங்கள் நடந்தன. இரவு முழுவதும் விடிய விடிய அவை நடத்தப்பட்டு வந்தன. "மைக்" வசதி இல்லாத காரணத்தால் கடைசி வரிசையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேரும் அளவுக்கு சாரீர வசதி நாடகத்தில் நடிப்பவர்களுக்கு தேவையாக இருந்தது. ஆகவே வசனங்களை விட பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த நாடகங்களுக்கான கதைகள் நமது இதிகாச புராணங்களில் இருந்தும் கர்ணபரம்பரை கதைகளில் இருந்துமே எடுத்தாளப்பட்டு வந்தன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்படிப்பட்ட கதைகளை மையக்கருத்தாகக் கொண்ட நாடகங்களைப் பல குழுக்கள் நடத்தி வர ஆரம்பித்தன. மதுரை ஜகன்னாத அய்யர் பாய்ஸ் கம்பெனி, மதுரை பால மீனரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பாலஷண்முகானந்த சபா, கண்ணையா கம்பெனி, நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் ஸ்ரீ தேவி பாலவிநோத சபா, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. வைரம் செட்டியாரின் ஸ்ரீ ராம பால கான வினோத சபா, போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
ஹரிச்சந்திரா, பவளக்கொடி, வள்ளி திருமணம், சாரங்கதாரா, கோவலன்-கண்ணகி, நந்தனார், பாமா விஜயம் போன்ற கதைகள் நாடகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றன. இவைகள் கோவில் திருவிழாக்களிலும் பண்டிகை தினங்களிலும் விடிய விடிய நடை பெற்று வந்தன. இந்த கதைகள் மக்களிடையே பக்தி, நல்லொழுக்கம், தேசபக்தி, ராஜ விசுவாசம் போன்றவற்றை வளர்த்து வந்தன.
அரசர்கள் நாடக கலைஞர்களையும் இசை வல்லுனர்களையும் பராமரித்து வந்தனர்.
இந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு மேல் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறுவர்களே ஏற்று நடித்த காரணத்தால் பாய்ஸ் கம்பெனி (Boys Company ) என்று பெயர்.
"வசதியற்ற வறுமைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள், படிப்பு வராதவர்கள், அப்பா அடிப்பார் என்று அஞ்சி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் - இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு எல்லாம் அந்தக் கால நாடகக் கம்பெனிகள் புகலிடமாகவும், குருகுலமாகவும் விளங்கின. .........உணவு, தங்குவதற்கு இடம், ஒழுக்கம், கல்வி ஆகிய அனைத்துமே அங்கு அவர்களுக்கு கொடுக்கப் பட்டதால் அந்தக் காலத்தில் பல வசதியற்ற பெற்றோர்கள் அவர்களாகவே விரும்பி வலிய வந்து தங்கள் குழந்தைகளை நாடகக் கம்பெனிகளில் சேர்த்துவிட்டனர்." - என்று அந்தக் காலத்து நாடகக் கம்பெனிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் பிரபல கதை வசனகர்த்தா திரு. ஆரூர்தாஸ் அவர்கள்.
நடிக்க வந்த சிறுவர்கள் கடுமையான பயிற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சங்கீதம், நடிப்பு, வசனம் பேசும் முறை, நிற்பதற்கும், நடப்பதற்கும் கூட பயிற்சிகள், உடற்பயிற்சி, யோகப்பயிற்சி போன்றவை கட்டாயமாக்கப்பட்டன. கூடவே குருவுக்கு மரியாதை, ஒழுக்கம் போன்றவையும் போதிக்கப்பட்டன. நடிப்பில் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் அவர்கள் புடம் போட்டு எடுக்கப்பட்டனர்.
இப்படிப்பட்ட நாடக கம்பெனிகள் மூலமாக கிடைத்த பொக்கிஷங்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார், எம். ஆர்.ராதா, எம். என். ராஜம், பி.. எஸ். ஞானம், எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, கே. பி. சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன், காளி. என். ரத்தினம், டி.கே.எஸ். சகோதரர்கள், டி.ஆர். மகாலிங்கம், கே. பி. காமாட்சி, டி. எஸ். பாலையா, சித்தூர் நாகைய்யா, எஸ்.வி. சுப்பையா, வி.கே. ராமசாமி, ஏ.பி.நாகராஜன், எஸ். வி. சகஸ்ரநாமம், கே.ஏ. தங்கவேலு போன்றவர்கள்.
(இந்தப் பட்டியலில் சிலர் விட்டுப்போய் இருக்கலாம். ஆனால் பொதுவாக ஐம்பதுகளின் துவக்க காலம் வரை திரை உலகில் அறிமுகமான பெரும்பாலான நட்சத்திரங்கள் "பாய்ஸ்" நாடக குழுவிலிருந்து வந்தவர்கள்தான். அவ்வளவு ஏன்? நமது உலக நாயகன் கமலஹாசன் கூட டி. கே. எஸ். சகோதரர்களின் பாய்ஸ் நாடக கம்பெனியில் உருவானவர்தான்.)
இந்த நாடகங்களில் கதாநாயகன் வேடத்துக்கு "ராஜபார்ட்" என்று பெயர். பெண் வேடம் (கதாநாயகி உட்பட) "ஸ்திரீ பார்ட்" என்று குறிப்பிடப்பட்டது.
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் பெண்கள் மேடை ஏறி நடிக்கவோ, பாடவோ தயங்கிய காரணத்தால் இந்த "ஸ்திரீ பார்ட்" வேடங்களையும் ஆண்களே ஏற்று நடித்து வந்தார்கள்.
ஜெ. சுந்தரராவ், பரமேஸ்வர அய்யர், டி. பி. ராமகிருஷ்ணன், ரங்கசுவாமி அய்யங்கார், கே.எஸ். அனந்த நாராயண அய்யர், பி. எஸ். வேலு நாயர் போன்ற நடிகர்கள் பெண்வேடமிட்டு நடிப்பதில் "ஸ்திரீ பார்ட்" நடிகர்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூட "ஸ்திரீ பார்ட்" நடிகராக நடித்து புகழ் பெற்றவர்தான்.).
அந்த வகையில் நமது மகாதேவனுக்கும் ஸ்திரீ பார்ட் வேடங்கள் அவர் சேர்ந்த பால கந்தர்வ கான சபாவில் கிடைக்க ஆரம்பித்தன.
இப்படிப்பட்ட நாடக கம்பனிகளில் நடிப்பவர்களுக்கு மாத சம்பளம் நிர்ணயித்து வழங்கப்பட்டு வந்தது. நாடகங்களின் வெற்றி தோல்விகளை பொருத்து இவை தீர்மானிக்க படும். சமயங்களில் நாடகங்கள் சரியாக போகவில்லை என்றால் கம்பனிக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களில் நடிகர்களும் பங்கெடுத்துக்கொள்வது வழக்கம்.
சாதாரணமாக இந்த நாடகங்கள் மாலை ஆறு மணி அளவில் துவங்கி பத்து மணி அளவில் முடிவுறும்.
ஸ்பெஷல் நாடகங்கள் என்று இரவு ஒன்பது மணி முதல் காலை நான்கு மணி வரை நடப்பதும் உண்டு. நாடகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து சில சமயங்களில் மாலை மற்றும் இரவு என்று இரண்டு காட்சிகளாக நடத்தப் படுவதும் உண்டு.
நாடகத்துக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ கதாநாயகனும், நாயகியும் அறிமுகமாகும் காட்சியில் ஏதாவது ஒரு த்யாகராஜ கீர்த்தனையை பாடிக்கொண்டு வருவார்கள். விஸ்தாரமான ராக ஆலாபனை, ஸ்வரங்கள் என்று பாடவேண்டும். அனேகமாக அனைவருக்குமே இனிமையான குரல் வளம் இருந்ததால் ரசிகர்கள் அந்த பொருத்தம் இல்லாத காட்சி அமைப்பை பொருட்படுத்தாமல் கரகோஷம் செய்து ரசிப்பார்கள். (சமயத்தில் "ஒன்ஸ் மோர்" கேட்கவும் செய்வார்கள்!)
ஆகமொத்தத்தில் அது கதை அம்சங்களுக்கோ வசனங்களுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலகட்டமாக இருந்து வந்தது.
இசை ஞானம் நிரம்பப் பெற்ற மகாதேவனின் சாரீர வளம் அவனது திறமையை வெளிப் படுத்த உதவியது.
ஆனால்.
பாலகந்தர்வ நாடக சபா பெருத்த வரவேற்பை வெகு ஜனங்களிடம் பெறவில்லை. நாடகம் பார்க்க எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை. பலசமயங்களில் காலி நாற்காலிகளின் முன்னால் நாடகம் நடத்தவேண்டிய கொடுமை.
விளைவு .. கம்பெனியில் வேலை செய்யும் சிறுவர்களை வெகுவாகப் பாதித்தது.
மற்றவர்களை எல்லாம் விட தனியான கவனிப்பையும் வசதிகளையும் பெற்றிருந்த "ராஜபார்ட்" நடிகர்கள் நிலைமையே கீழிறங்கி விட்டிருந்தது. இந்த லட்சணத்தில் மற்றவர்களின் வசதி வாய்ப்புகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
ஏற்கெனவே அவர்களுக்கு பெரியதாக எந்த வசதி வாய்ப்பும் கொடுத்ததாகச் சொல்லமுடியாது.
தினம் தினம் சாப்பிடுவதே பெரும் பாடு என்று ஆகிவிட்ட நிலையில் வசதியாவது வாய்ப்பாவது? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
என்னவெல்லாமோ செய்து பார்த்தும் நாடகக் கம்பெனியை தூக்கி நிறுத்த முடியவில்லை.
விளைவு? கம்பெனி மூடப்பட்டு விட்டது.
மற்ற சிறுவர்கள் எப்படியோ "போன மச்சான் திரும்பி வந்த கதையாக" சொந்த ஊருக்கே போனார்கள்.
ஆனால் மகாதேவன்?
நம்பி வந்த நாடக் கம்பெனி நட்டாற்றில் விட்டபோது நடுத்தெருவில் நின்றாக வேண்டிய சூழ்நிலை.
"இதற்காகத்தானா கிருஷ்ணன் கோவிலிலிருந்து கிளம்பி வந்தோம்? பெரிசாச் சாதிக்கப்போறதா முழங்கிட்டு வந்திருக்கோமே? எந்த முகத்தோட திரும்பி அங்கே போறது?" - கேள்விகள் கொக்கி போட்டு அவனைக் குடைய ஆரம்பித்தன.
"என்ன ஆனாலும் சரி. ஜெயிக்காம ஊருக்குப் போகப் போறது இல்லை." - என்ற முடிவுக்கு வந்தான் மகாதேவன்.
சரி.. வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்யறது? முதல்லே ஏதாவது ஒரு வேளையிலே சேர்ந்து சாப்பாட்டுக்கு வழிபண்ணிக்கணும். எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லே.”
முடிவெடுத்த மகாதேவன் கடை கடையாக ஏறி இறங்கி வயிற்றுப்பாட்டுக்காகஒரு வேலையைத் தேடி சென்னை நகரத்தில் வீதி வீதியாக அலைய ஆரம்பித்தான்.
அவனது முயற்சி வீண்போகவில்லை.
வடசென்னையில் வால்டாக்ஸ் ரோடின் கடைசியில் இருந்த யானை கவுனியில் ஒரு ஹோட்டலின் வாசலில் வேலை கேட்டு நின்றான் அவன்.
அவன் நல்ல நேரமோ என்னமோ ஹோட்டல் முதலாளி அவனுக்கு வேலை கொடுக்க முன்வந்தார்.
"தம்பி. இங்கே பெரிசா வேலை ஒண்ணும் கிடையாது. சர்வர் வேலைதான் இருக்கு. சாப்பிட வரவங்களுக்கு சர்வ பண்ணனும். அவங்க சாப்பிட்டதை நியாபகம் வச்சுக்கிட்டு உரக்க சொல்லணும். இங்கேயே இருந்துக்கலாம். மூணு வேலை சாப்பிட்டுக்கலாம். சம்பளம்னு கொடுக்கறதை வாங்கிக்கணும். சம்மதமா?" என்றார் முதலாளி.
சம்மதம் என்று தலை ஆட்டினான் மகாதேவன்.
"சார் சாப்பிட்டது ரெண்டு தோசை.. ஒரு காப்பி.. ரெண்டரை அணா" - என்று ஒரு ஹோட்டலில் அறிவிக்கும் அறிவிப்பாளனாக சென்னைப் பட்டினத்தில் வாழ்க்கையைத் தொடர்ந்தான் மகாதேவன்.
(பயணம் தொடரும்.)
(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)
ஏப்ரல் 28 , 2014