"எனது வாழ்க்கையை மறுபடி ஒருமுறை வாழ்வதற்கு எனக்கு சந்தர்ப்பம் வாய்க்குமானால் அப்போது வாரம் ஒருமுறையாவது ஒரு கவிதையைப் படிக்கவேண்டும் என்றும் ஏதாவது ஒரு இசையை கேட்டே ஆகவேண்டும் என்றும் ஒரு சட்டதிட்டத்தை நானே வகுத்துக்கொள்வேன்" - சார்லஸ் டார்வின்
நாட்கள் வாரங்களாகி வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகவும் கடந்துகொண்டிருந்தன.
சென்னைக்கு மகாதேவன் வந்து ஏறக்குறைய நான்கு வருடங்களாகிவிட்டன.
மகாதேவன் நம்பிக்கை இழக்கவில்லை.
இந்த நான்கு வருடங்களில் வயிற்றுப்பிழைப்புக்காக அவன் பல வேலைகளைப் பார்த்துவிட்டான்.
ஹோட்டல் சர்வர் மட்டுமல்லாமல் சின்னதும் பெரிசுமாக நிறைய ..
ஆனைகவுனியில் இருந்து வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வால்டாக்ஸ் ரோடின் மறுமுனையில் சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருக்கும் ஒரு அலுவலகத்துக்கு சீட்டு ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்து பணத்தை வாங்கிக்கொண்டு வந்து ஆனைகவுனியில் கொடுப்பான். அதற்கு சம்பளமாக ஒரு சிறுதொகையைப் பெற்றுக்கொள்வான்.
கிட்டத்தட்ட இப்போதைய குரியர் சர்வீஸ் போல.
இதையெல்லாம் பிறகு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு பல நேர்காணல்களில் பகிர்ந்துகொள்ள அவர் வெட்கமோ கூச்சமோ பட்டதே இல்லை.
பகலெல்லாம் ஹோட்டல் வேலை பார்த்துவிட்டு வேலை நேரம் முடிந்தபிறகோ அல்லது விடுமுறை நாட்களிலோ வால்டாக்ஸ் ரோடில் இருந்த ஒற்றை வாடை தியேட்டருக்கு படை எடுப்பான் மகாதேவன். அங்கு நாள் தவறாமல் நாடகங்கள் நடக்கும். நாடகங்களில் ஏதாவது சிறு வேஷமோ அல்லது வாத்திய குழுவில் ஹார்மோனியம் வாசிக்கவோ - ஏதாவது ஒரு விதத்தில் நாடகக் குழுவில் இடம் பிடிக்கவேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் ..
அந்த இளைஞனின் முயற்சி வீண் போகவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நாடக வாய்ப்புகள் அவனுக்கு கிடைக்க ஆரம்பித்தன.
அதிலும் சம்பளம் சரியாகக் கிடைக்கவில்லை.
பெரிதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தையே பரிசாகத் தந்த நாட்கள்.
காஞ்சீபுரத்தில் நாடகம் முடிந்தபிறகு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட பிறகு கையில் இருந்த காசில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு நடந்தே வந்த நிகழ்வுகளும் அரங்கேறின.
இப்படி எல்லாம் கிடைத்த வாய்ப்புகளின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஏமாற்றங்கள்.
கலைத்துறையில் பெரிதாகச் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஏமாற்றங்கள் நிறைய முதலில் காத்திருக்கும்.
அந்த ஏமாற்றங்களின் பின்னால் மறைந்திருந்து வெற்றி கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கும்.
வெற்றியின் இந்தக் கண்ணா மூச்சி ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து தாக்குப் பிடிக்க பொறுமையும் திடச் சித்தமும் அவசியம் தேவை.
இவை இரண்டுமே மகாதேவனிடம் நிறைய இருந்தன. அதனால் அவன் மனம் தளரவில்லை.
அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு நாடகக் கம்பெனியின் மூலமாகவோ அல்லது அவனது நேரமோ என்னமோ. ஒரு திரைப்படத்தில் நடிக்க - இல்லை இல்லை - ஒரு நிமிடக் காட்சியில் வந்து போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
"திருமங்கை ஆழ்வார்" என்ற படத்தில் துவாரபாலகர்களில் ஒருவராக தோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கவேண்டும்.
தானும் ஒரு படத்தில் தலையைக் காட்டினோம் என்ற திருப்தி ஏற்பட்டதோடு சரி.
அந்தச் சமயத்தில் அவன் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்தக்கூடிய ஒரு மகத்தான வாய்ப்பு அவனைத் தேடி வந்தது.
ஆரம்பத்தில் மகாதேவன் அதனைப் பெரிதாக நினைக்கவில்லை. எப்போதும் போலக் கிடைக்கும் சாதாரண வாய்ப்பு என்றே அதை நினைத்தான். என்றாலும் எந்த வாய்ப்பையும் அவன் கைநழுவ விட்டதே இல்லை. தனது முழுத் திறமையும் அதில் வெளிக்காட்ட வேண்டும் என்றே அவன் கருதிச் செயல்படுவான்.
பாய்ஸ் கம்பெனிகள் போலவே "ஸ்பெஷல் நாடகக் கம்பெனி"களும் இயங்கி வந்தன.
அதாவது மிகப் பிரபலமான நாடக நடிகர் - நடிகையர்கள் தங்களுக்கென்று தனிக்குழுவை அமைத்துக்கொண்டு நடத்தும் நாடகங்கள்.
"ஏழிசை மன்னன்" என்று பெயர் பெற்ற எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோர் இப்படி ஸ்பெஷல் நாடகக் கம்பெனிகள் மூலம் பிரபலம் ஆனவர்கள்.
அதுபோல ஒரு "ஸ்பெஷல்" நாடகக்குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் வாய்ப்பு மகாதேவனுக்குக் கிடைத்தது.
சட்டென்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டான் மகாதேவன்.
ஊர் ஊராக சென்று நாடகங்கள் நடத்திய அந்த நாடகக் குழுவில் சேர்ந்து பல ஊர்களுக்குச் சென்றான் அவன்.
ஒருமுறை கர்நாடகாவில் இருந்த கோலார் தங்க வயலில் நாடகம் நடத்தச் சென்றார்கள்.
நாடகம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் அமர்ந்து காட்சிக்கு ஏற்றபடி பின்னணி இசையை ஹார்மோனியத்தில் வாசித்து காட்சிக்கு விறுவிறுப்பை எற்றிக்கொண்டிருந்தவன் தற்செயலாக பார்வையாளர்கள் பக்கம் பார்வையைச் செலுத்தினான்.
அந்த வரிசையில் இருந்த ஒரு நபர்.. வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்கும்.
தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தான் அவன்.
இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?
"ஞாபகம் வந்துவிட்டது. நளதமயந்தி என்ற சினிமா வந்ததே. அதில் இவர் தானே ஹீரோவாக நடித்திருக்கிறார்."
தன்னையே கவனித்துக்கொண்டிருக்கும் அவரை தானும் ஒரு கணம் ஊன்றிக் கவனித்தான் மகாதேவன்.
ஆம். அவரேதான்.
"நளதமயந்தி" படத்தில் கதாநாயகனாக நடித்த அவரேதான்.
தனது வாசிப்பையே உற்று நோக்குவது போல தெரிந்தது அவனுக்கு.
பிரமையோ?
என்னைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறாரா?
பார்வையை அவரிடமிருந்து திருப்பி ராஜபார்ட் பாடிக்கொண்டிருந்த பைரவி ராகத்தின் பிட்டை ஹார்மோனியத்தில் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தான் மகாதேவன்.
சற்று நேரம் பொறுத்து மறுபடி பார்வையாளர் பக்கம் பார்வையைத் திருப்பினால்..
முன்வரிசையில் இருந்த அதே மனிதர் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது.
ஒருவழியாக நாடகம் முடிந்தது. ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தான் மகாதேவன்.
சட்டென்று அவன் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பினான்.
அதே மனிதர்.
"அம்பி. உன்னோட வாசிப்பு ரொம்ப நன்னா இருந்துது." - எதிர்பாராமல் கிடைத்த பாராட்டு.
அதுவும் முதல் பாராட்டு.
ஒருவிதக் கூச்சத்துடன் பாராட்டுக்கு நன்றி சொன்னான் அவன்.
மேலே அவரிடம் என்னபேசுவது என்று தெரியாமல் அவன் விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்த கேள்வி அவரிடமிருந்து வந்தது.
"உன்னோட பேரு என்னப்பா?"
"மகாதேவன். கே.வி. மகாதேவன்." - என்றான் அவன்.
கணநேர மௌனத்துக்குப் பிறகு தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் விதமாக அந்த மனிதர் சொன்னதைக் கேட்டபோது மகாதேவனுக்குள் உற்சாக நீரூற்று பொங்க ஆரம்பித்தது.
"நான் எஸ்.வி. வெங்கட்ராமன். நளதமயந்தி டாக்கியிலே ஹீரோவா நடிச்சவன். இப்போ ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரோட "நந்தகுமார்" படத்துக்கு நான் தான் மியூசிக் டைரக்டர். உன் வாசிப்பு ரொம்ப நன்னா இருக்கு. நீ விருப்பப்பட்டா என்னோட அசிஸ்டண்டா சேந்து வேலை பாக்கலாமே. உனக்கு சம்மதமா?"
(பயணம் தொடரும்...)
(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)
மே 05 , 2014