தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்-5

பி. ஜி. எஸ். மணியன்

 "இசை என்பது... முதிர்ந்த ஞானத்தையும், தத்துவத்தையும் உயர்ந்த முறையில் வெளிப்படுத்துவது." - லுட்விக் வான் பீத்தோவன்  

எஸ்.வி. வெங்கட்ராமன் -  தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர இசை அமைப்பாளர்.

"ஸ்பெஷல் நாடகத்தில்" கே.வி. மகாதேவனின் ஹார்மோனிய வாசிப்பை நேரில் கண்டதும் “இந்த இளைஞனிடம் ஒரு திறமை இருக்கிறது.  அதை நாம் பயன்படுத்திக்கொண்டால் என்ன?” என்று தோன்றவே அந்த நினைப்பைச் செயலாக்கிக்கொள்ள முனைந்தார் அவர்.

சினிமா உலகில் நுழைய தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை சட்டென்று விடாமல் பற்றிக்கொண்டார் கே.வி. மகாதேவன்.

சொல்லப்போனால் திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களுக்கும் அதுதான் முதல் முதலாக இசை அமைக்கக் கிடைத்த வாய்ப்பு.

ஒரு நடிகராக - அதுவும் கதாநாயகராக அறிமுகமான எவருமே தொடர்ந்து அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளவே முனைவார்களே  தவிர வேறு துறையில் கால்பதிக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள்.  அதிலும் இசை அமைப்பு என்பதைப்பற்றி எந்த நடிகருமே கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.

ஏற்கெனவே கதாநாயகனாக நடித்தபோது - தவறு - பாடியபோது (ஏனென்றால் அந்தக் காலத்துப் படங்களில் பாடல் தானே பிரதானம்!) கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் படத்துக்கு இசை அமைக்க சம்மதித்தவருக்கு தனது படத்தில் ஹார்மோனியம் வாசிக்க மகாதேவன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

ஏ.வி.எம் தயாரிப்பான "நந்தகுமார்" - படம் பலருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்த படம்.

பாடகர் - நடிகர் டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான படம்.

அவருக்கு மட்டும் என்று அல்ல - நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனுக்கும் அதுதான் முதல் படம்.

எஸ்.வி. வெங்கட்ராமனுக்கும் இசை அமைக்கும் வாய்ப்பை முதல் முதலாக கொடுத்த படம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதல் முறையாக பின்னணி பாடும் முறையை அறிமுகப் படுத்திய படமும் இதுதான்.

இந்தப் படத்தில் பாடிய லலிதா வெங்கட்ராமன் என்பவர்தான் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி.

இப்படி பலருக்கு முதல் வாய்ப்புகளைக் கொடுத்த "நந்தகுமார்" படம்தான் கே.வி. மகாதேவனை எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களிடம் உதவியாளராக பணிபுரியும் முதல் வாய்ப்பை கொடுத்து  திரைப் படத்துறையில் முதல் முதலாக காலெடுத்து வைக்கச் செய்தது.

அதுவரை மேடைகளில் பாடிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்தது வேறு.  சினிமாவில் வாசிப்பது என்பது வேறு.

மேடைகளில்பாடும் போது "கல்பனா சங்கீதத்துக்கே" முதலிடம்.  பாடகர் தன்னுடைய திறமை அனைத்தையும் காட்டி பாராட்டை நேரிடையாக ரசிகர்களிடம் இருந்து வாங்கிவிடலாம்.  ஒன்ஸ் மோர் கூட பெறலாம்.

ஆனால் சினிமாவில் சங்கீதம் நேரத்துக்குள் அடங்கவேண்டும். 

காட்டாற்று வெள்ளமான கர்நாடக சங்கீதத்தை மூன்று நிமிடப் பாடலுக்குள் அடைக்க வேண்டும்.

அதிலும் எக்கச்சக்கமான பாடல்கள் இடம் பெற்ற அந்த நாளைய படங்களில் "செவிக்கினிய நாற்பத்திரண்டு பாடல்கள் நிறைந்த படம்" என்றுதான் விளம்பரப்படுத்துவார்கள்.

அவற்றில் நான்கு அல்லது ஐந்து பாடல்கள் தான் முழுமையான பாடல்கள்.

மற்றதெல்லாம் விருத்தங்கள்.  பாடல்களுக்கு டியூன் செய்வதுகூட சுலபம்.  ஆனால் இந்த விருத்த வகை இருக்கிறதே.  அவற்றுக்கு மெட்டமைப்பது என்பது கடினமான விஷயம்.

ஒன்றரை நிமிட நேரத்துக்கு இடம் பெறும் ஒரு விருத்தத்துக்குள்  ராகத்தின் முழு வடிவத்தையும் அந்த நான்கு வரிக்குள் அடக்கிக் காட்டவேண்டும்.

இதெல்லாம் நாடக மேடையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே கை வந்த கலை.

அந்தக் கலையில் கைதேர்ந்தவராக இருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.  அவருடன் இணைந்து பணியாற்றியபோது இந்த வித்தையின் ஆரம்பப் பாடத்தை நன்றாகக் கற்றுக்கொண்டார் கே.வி. மகாதேவன்.

பின்னாளில் தனித்து இசை அமைத்த போது மகாதேவன் அமைத்த விருத்தங்கள் கேட்க ரம்மியமாகவும், மீண்டும் கேட்கத் தூண்டும் வகையிலும் அமைந்தன.

"திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, துணைவன்" ஆகிய படங்களில் இடம் பெற்ற விருத்தங்கள் அவருக்கு பெரும் புகழை வாங்கிக் கொடுத்தன.

ஆனால்.   நந்தகுமார் படத்தின் தோல்வியும், அடுத்து வந்த படங்களின் தோல்விகளும் தொடர்ந்த போது ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் ஏ.வி.எம். நிறுவனத்தை விட்டு எஸ்.வி. வெங்கட்ராமன் வெளியேறினார்.

அந்த நேரத்தில் கே.வி. மகாதேவனும் வெளியேறி டி.ஓ. சுப்பாராவ் என்ற  இசை அமைப்பாளரிடம் சேர்ந்து அங்கு கொஞ்ச காலம் இருந்த பிறகு ..

டி.ஏ. கல்யாணத்திடம் வந்து சேர்ந்தார். 

டி.ஏ. கல்யாணம் - தமிழ் சினிமாவில் மறக்கப்பட்ட - மறைக்கப்பட்ட திறமைசாலிகளில் ஒருவர்.  சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் இசை அமைப்பாளராக அவர் இருந்தார்.  மிகுந்த ஞானஸ்தர். 

இந்த அளவிற்குத்தான் திரு. டி. ஏ. கல்யாணம் அவர்களைப் பற்றி அறிய முடிகிறது.  குடத்தில் இட்ட விளக்காக வாழ்ந்து மறைந்த திறமைசாலிகளில் ஒருவராகத்தான் அவரை அடையாளம் காண முடிகிறது.  அவரது காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இசை அமைப்பு என்பது ஒரு தனிப் பிரிவாக இல்லை.

பாடல்களுக்கு மட்டுமே இசை அமைப்பாளர் என்பவர் தேவைப்பட்டார்.  மற்றபடி பின்னணி இசைச் சேர்க்கைக்கு ஆர்கெஸ்ட்ரா என்று ஒன்று தனியாக இயங்கி வந்தது. 

ஆனால் படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு இசை அமைப்பாளர்களுக்கு தகுந்த முக்கியத்துவமோ விளம்பரமோ கொடுக்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு விஷயம் தான்.

அவ்வளவு ஏன்?   இசை அமைப்பாளரின் பெயர் கூட டைட்டிலில் இடம் பெறாத படங்கள் கூட உண்டு. 

மூன்று தீபாவளிகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய "ஹரிதாஸ்" படத்தின் டைட்டிலில் கூட இசை அமைப்பாளர் ஜி. ராமனாதனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதே?

அந்தவகையில் டி.ஏ. கல்யாணம் அவர்களும் மறைக்கப்பட்ட ஒரு இசை அமைப்பாளராகவே அடையாளம் காணப்படுகிறார்.

அதனால் என்ன? 

கே.வி. மகாதேவன் என்ற இருபத்து நான்கு வயது இளைஞன் பட்டைதீட்டப்பட்ட வைரமாக மின்ன ஆரம்பித்தது டி.ஏ. கல்யாணத்தின் பாசறையில் தான்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மகாதேவன் வேலைக்குச் சேர்ந்தபோது அங்கே இருந்த டி.ஆர். பாப்பாவும், டி.ஜி. லிங்கப்பாவும் அவருக்கு நெருங்கிய நண்பர்களாகினர்.

வருடம் 1942.   மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் "மனோன்மணி" படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நேரம்.

மிகுந்த பொருட்செலவில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் செலவில் - (1942 இல் இரண்டு லட்சம் என்பது தற்போதைய மதிப்பில் இருபது கோடிகளுக்கு சமம்) டி.ஆர். சுந்தரம் அவர்கள் தயாரித்த படம்.

பொதுவாக படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான் நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வார்கள்.

ஆனால் "மனோன்மணி" படத்துக்கு கதாநாயகர், கதாநாயகியைத் தேர்வு செய்தவர்களே ரசிகர்கள் தான்.

ஆம்.  பத்திரிகைகளில் டி.ஆர். சுந்தரம் அவர்கள் "சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ் இசை நாடகமான மனோன்மணீயத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கதாநாயகன், நாயகியாக யாரைத் தேர்வு செய்யலாம் என்பதை ரசிகர்கள் தெரிவிக்க வேண்டும்." என்று விளம்பரப் படுத்தி வெகு ஜன ரசிகர்களின் ஏகோபித்த கருத்தை ஏற்று கதாநாயகனாக பி. யு. சின்னப்பா அவர்களையும், கதாநாயகியாக அன்றைய கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரி அவர்களையும் ஒப்பந்தம் செய்து துவக்கப்பட்ட படம்.

படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் அவர்களின் சகோதரர் பாபநாசம் ராஜகோபால அய்யர் அவர்கள் எழுத திரைக்கதையை வேல்சாமிக் கவி அமைத்தார்.

படத்துக்கு இசை அமைத்த டி.ஏ. கல்யாணம் அவர்கள் தனது உதவியாளனாக இருந்த கே. வி. மகாதேவனுக்கு "நீயே ஒரு பாட்டுக்கு டியூன் பண்ணு." என்று ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார். 

தமிழ் சினிமாவில் நிகழக் கிடைக்காத சம்பவம் இது.  தனக்குக் கிடைத்த வாய்ப்பில் தனது உதவியாளனுக்கும் ஒரு பங்கை கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.  அதற்கு பெரிய மனதும், பெருந்தன்மையும் வேண்டும்.

அந்த மனது இசை அமைப்பாளர் டி.ஏ. கல்யாணம் அவர்களுக்கு இருந்தது.  

லட்டு போல கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் கே.வி. மகாதேவன்.

"மோகனாங்க வதனி" என்று துவங்கும் பாபநாசம் ராஜகோபால அய்யரின் பாடலை கே.வி. மகாதேவன் இசை அமைக்க, உணர்ச்சிப் பொங்கும் குரலில் பி. யு. சின்னப்பா பாடி நடிக்க....

ஒரு இசை அமைப்பாளராக கே.வி. மகாதேவனின் வெற்றிப் பயணத்துக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது அப்போதுதான்.

(பயணம் தொடரும்)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

மே   12 , 2014