தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் - 7

பி. ஜி. எஸ். மணியன்

"வாரம் இருமுறையாவது இசை மழையில் நீராடுங்கள்.  அது உங்கள் ஆன்மாவைக் குளிர்விப்பதை நீங்கள் உணருவீர்கள்"  - -ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ்

ருடம் 1952.

மௌனப் பட காலத்திலேயே திரை உலகிலே நுழைந்து பெயரும் புகழும் பெற்றிருந்த இயக்குனர் ஆர். பத்மநாபன். பிரபல இயக்குனர் கே. சுப்பிரமணியம் அவர்களின் திரை உலகப் பிரவேசத்துக்கு காரணமானவர் இவர்.

பின்னாளில் தியாகராஜ பாகவதரின் புகழ் பெற்ற "திருநீலகண்டர்" உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜாசாண்டோ அவர்களை திரை உலகுக்கு கொண்டுவந்த பெருமையும் ஆர். பத்மநாபன் அவர்களையே சேரும்.

இத்தகைய பெருமைகளைப் பெற்ற இயக்குனர் பத்மநாபன் அவர்கள் தயாரித்து இயக்கி 1952இல் வெளிவந்த படம் தான் "குமாரி".

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று.  

கதாநாயகனாக எம்.ஜி.ஆரும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீரஞ்சனியும் நடித்தனர்.

கவிஞரும், எழுத்தாளருமான திரு. கு.சா. கிருஷ்ணமூர்த்தி படத்தின் கதையையும் சில பாடல்களையும் எழுதினார்.  டி.கே. சுந்தர வாத்தியாரும்  சில பாடல்களை எழுதினார்.

இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே. வி. மகாதேவனுக்கு கிடைத்தது.

அந்த வகையில் கே.வி. மகாதேவன் இசை அமைத்த முதல் எம்.ஜி.ஆர். படம் "குமாரி"தான்.

அடையாரில் இருந்த நெப்டியூன் ஸ்டூடியோவில் (பின்னாளைய சத்யா ஸ்டூடியோ) தயாரான படம் இது.

இந்தப் படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமான ஏ.சி.டி. சந்தர் அவர்கள்தான் பின்னாளில் பிரபலமான இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர்.

இளவரசி ஒருத்தி தேரில் செல்லும்போது குதிரைகள் தறிகெட்டு ஓட விபத்தை சந்திக்க நேருகிறது.  அந்த விபத்திலிருந்து அவளை ஒரு சாதாரண வாலிபன் காப்பாற்றுகிறான்.  இருவரும் காதல் வயப்படுகின்றனர்.  ஆனால் மகாராணியோ தன் மகளை தனது உருப்படாத தம்பிக்கே மணமுடிக்க நினைக்கிறார்.  தடைகளை கடந்து காதலர்கள் கடைசியில் ஒன்று சேருகின்றனர்.

இதில் மகாராணியாக மாதுரிதேவியும் அவரது தம்பியாக டி.எஸ். துரைராஜும் நடித்தனர்.

இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசைஅவரது பெயரை படவுலகில் நிலைநிறுத்தும் வண்ணம் இருந்தது.

எச். எம்.வி. யில் இரண்டு தனிப் பாடல்களை தெலுங்கில் தானே எழுதி மெட்டமைத்துப் பாடி பிரபலமடைந்த ஒரு இருபத்து இரண்டு வயது வாலிபன் கதாநாயகன்  எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவர் தான் ஏ.எம். ராஜா.  ஆம். ஏ.எம். ராஜா முதல்முதலில் சினிமாவில் பாட ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் குமாரி.

(ஆனால் இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னால் ஜெமினி நிறுவனம் தயாரித்த "சம்சாரம்" படம் ஏ.எம்.ராஜா பாடிய முதல் பாடலை தாங்கி வந்து அவர் அறிமுகமான முதல் படம் என்ற பெருமையை தட்டிக்கொண்டு போய்விட்டது.)

ஏ.எம்.ராஜாவைப் பொருத்தவரை "குமாரி" அவர் வாழ்வில் மறக்கவே முடியாத படம் என்றும் கூறலாம்.

ஏனென்றால் முதல் முதலாக ஜிக்கியுடன் இணைந்து அவர் பாடிய "இருளிலே நிலவொளி போல் அவர் வருவார்" என்று தொடங்கும் பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது.  

இந்த இருவரைத் தவிர பி. லீலா, ஏ.பி. கோமளா, என்.எல். கானசரஸ்வதி ஆகியோரும் இந்தப் படத்தில் பாடி இருந்தனர்.

பாடல்கள் எப்படி இருந்தன?

படமும் பாடல்களும் வழக்கொழிந்து போன காரணத்தால் கே.வி.மகாதேவனின் இசை எப்படி அமைந்திருந்தது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை.

ஜிக்கி பாடிய "லாலலீ லாலி" என்ற மாதுரி தேவி பாடுவதாக அமைந்த பாடல் அந்த நாளில் பிரபலமான பாடலாக அமைந்திருந்தது என்பதை திரு.ராண்டார் கை அவர்களின் "ஹிந்து" நாளிதழ் கட்டுரை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

உண்மையில் இந்தப் பாடல் "தஸ்தான்" என்ற ஹிந்திப் படத்தில் சுரையாவும், முகமது ரபியும் பாடிய பாடலின் தழுவல் மெட்டு.  ஒரிஜினல் பாடலுக்கு இசை அமைத்தவர் நவுஷத் என்ற கூடுதல் தகவலும் நமக்கு கிடைக்கிறது.

 அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது.   

மக்களுக்கு அறிமுகமே இல்லாத புதிய மெட்டுக்களில் பாடல்களைக் கொடுத்துவிட்டு அவை மக்களைக் கவரவேண்டுமே என்று படபடப்புடன் காதுக்கொண்டிருப்பதை விட ஏற்கெனவே மக்களுக்கு பரிச்சயமான மெட்டுக்களில் பாடல்களை அமைப்பதையே அவர்கள் விரும்பினர்.

ஆகவேதான் ஆரம்ப காலப் படங்களில் இரவல் மெட்டுக்களைத் தவிர்க்க இயலாமல் போனது.

அழியா வரம் பெற்ற இசை அரசி எம்.எஸ். அம்மா அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" பாடல் கூட வங்காளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெட்டுத்தான்.

மெல்ல மெல்ல இந்தப் போக்கு குறைந்து புதிய டியூன்களில் பாடல்களை இசை அமைப்பாளர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

என்றாலும் ஆரம்ப காலத்தில் தங்களுக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கும் வரை தயாரிப்பாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இசை அமைப்பாளர்கள் வளைந்து கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

இந்த விதிக்கு கே.வி. மகாதேவனும் விலக்கல்ல.

ஆகவேதான் "குமாரி"யில் இரவல் மெட்டுக்களை அப்படியே பிரதி எடுத்து ஜிக்கியை மாதுரிதேவிக்காகப் பாடவைத்தார் அவர்.

ஆனால்..  "குமாரி"- வெளிவந்த வேகத்திலேயே தோல்வியைத் தழுவியது.  "நல்ல நடிகர்களை வீணடித்த படம்" என்றும் "விமரிசனத்துக்கே அருகதையற்ற படம்" என்றும் பத்திரிகைகள் கடுமையாகச் சாடின.

என்றாலும் பின்னாளைய சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர். அவர்களின் அழகான தோற்றத்திற்காகவும், கே.வி. மகாதேவனின் மனத்தைக் கொள்ளைகொள்ளும் சில பாடல்களுக்காகவும் நினைவில் கொள்ளவேண்டிய படம் என்று விமர்சிக்கிறார் திரு. ராண்டார் கை அவர்கள்.

ஆனால்  "குமாரி" படத்தின் இசையும் பாடல்களும் கே.வி. மகாதேவனை எம்.ஜி.ஆரின் "குட் புக்"கில் இடம் பெற வைத்தன.

அந்த வகையில் பின்னாளில் எம்.ஜி.ஆரின் பல வெற்றிப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்புக்கு ஒரு அஸ்திவாரமாக "குமாரி" படம் அமைந்தது.

அடுத்து வந்த ஐம்பத்து மூன்றாம் ஆண்டு கே.வி. மகாதேவனை படவுலகில் ஒரு இசை அமைப்பாளராக இடம் பெற வைத்த ஆண்டாக அமைந்தது.

எம்.எல். பதி அவர்களின் இயக்கத்தில் "லிபர்ட்டி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தின் தயாரிப்பான "மதன மோகினி" என்ற படத்துக்கு இசை அமைத்தார் கே.வி. மகாதேவன்.

நரசிம்மபாரதி, சி. ஆர். ராஜகுமாரி, பி.எஸ். வீரப்பா, பொள்ளாச்சி கமலா ஆகியோர் நடித்த இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் போது  நடந்த ஒரு சம்பவம் கே.வி. மகாதேவனையே பாட வைத்தது.

ஒரு டூயட் பாடலைப் பாட பி. லீலா பாடல் பதிவுக்கு வந்து விட்டார்.  ஆனால் பாடவேண்டிய ஆண் பாடகர் வரவே இல்லை.  அதனால் கே.வி. மகாதேவனே பி. லீலாவுடன் இணைந்து பாடிவிட்டார்.  இந்த ஒரு பாடல் என்று இல்லை.  படத்தில் கதாநாயகனுக்கான நான்கு பாடல்களையுமே கே.வி. மகாதேவனே பாடிவிட்டார்.

இந்த தகவலை அறிந்ததும் அவர் பாடிய அந்த நான்கு பாடல்களும் கேட்கக் கிடைக்குமா என்று இந்தத் தொடருக்காக தேடியபோது பி. லீலாவுடன் அவர் பாடிய டூயட் பாடல் கேட்கக் கிடைத்தது.

ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப் பட்ட பாடலின் எடுப்பே மனதை அள்ளுகிறது.  "கண்ணோடு கண்ணால் ரகசியம் பேசி கருத்தைக் கவர்ந்தாய் உயிரோவியமே.." என்று கே.வி. மகாதேவனின் குரல் இனிமையும் கமகமும் இழையோட நம்மைக் கவர்கிறது.  குரலில் வெளிப்படும் பிருகாக்கள் அப்படியே கேட்பவரை பிரமிக்க வைக்கின்றன.

சரணத்தில் இணையும் லீலாவின் குரலுக்கு ஈடுகொடுக்கிற விதமும், இறுதியில் இரு குரல்களும் இணையும் விதமும் பாடலை மறுபடி மறுபடி கேட்கத் தூண்டுகிறது.

(நான் கேட்டு ரசித்த கே.வி. மகாதேவனின் குரலில் அமைந்த அந்தப் பாடலை வாசக அன்பர்கள் அனைவரும் கேட்டு மகிழ்வதற்காக பாடலுக்கான இணைப்பு :   https://soundcloud.com/krishnamurthy80/kannodu-kannai )

ஆனால்.. மதனமோகினி படம் படுதோல்வி அடைந்தது.

அதே சமயம் நடிகை மாதுரிதேவி சொந்தப் படம் எடுக்கத் தயாரானார்.

புகழ்பெற்ற "வந்தே மாதரம்" பாடலை எழுதிய வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் புகழ் பெற்ற "கிருஷ்ணகாந்தன் உயில்" என்ற நாவல் வங்கமொழியில் திரைப்படமாக வெளிவந்தது.  அந்த திரைப்படத்தை தமிழில் "ரோஹிணி"  என்ற பெயரில் நடிகை மாதுரி தேவி தயாரித்தார். 

இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் இசை அமைக்க ஒப்பந்தமானவர் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன் அவர்கள் தான்.

ஆனால் அப்போது சொந்தப் படத்தயாரிப்பிலும் ஜி.ராமநாதன் ஈடுபட்டிருந்ததால் "ரோஹிணி"க்கான இசையில் அவரால் தொடர்ந்து ஈடுபடமுடியவில்லை.  ஆகவே அவர் விலகிக்கொள்ள அந்த வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்குக் கிடைத்தது.

ஆனால் படத் தயாரிப்பில் எழுந்த சிக்கல் காரணமாக "ரோஹிணி" படம் வெளிவருவதில் ஏற்பட்ட தாமதம் படத்தின் வெற்றியை கடுமையாகப் பாதித்தது.

வந்த வேகத்திலேயே படம் சுருண்டதால் இந்தப் படத்தில் மகாதேவனின் பங்களிப்பைப் பற்றி ஏதும் அறிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் அந்த தீபாவளிக்கு வெளிவந்த "நால்வர்" என்ற  படம் மகாதேவனின் திரை உலகில் ஒரு இசை அமைப்பாளராக மகாதேவனின் இருப்பை ஸ்திரப்படுத்தியது.

இத்தனைக்கும் அந்தப் படமும் வணிகரீதியாகத் தோல்வி கண்ட படம் தான்.

இருந்தாலும் அந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்த நடிகரின் நட்பு கே.வி. மகாதேவனுக்குக் கிடைத்தது.  

அந்த நடிகர் பின்னாளில் ஒரு பிரபல தயாரிப்பாளராக மாறி சொந்தப் படங்கள் எடுக்க ஆரம்பித்ததோடு நிற்காமல் அவற்றை அவரே இயக்கவும் செய்தபோது அவரது படங்களுக்கு தொடர்ந்து இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைக்கும் அளவுக்கு அந்த நட்பு இறுகியது. 

அந்தப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் இடம் பெற்ற பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்து பெரிதாகப் பேசப்பட்டன.  அவருக்கு தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு அவரை உயர்த்தி வைத்தன.

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

மே   26 , 2014