குப்புசாமி சின்னஞ்சிறு பையனாக இருந்தபோதே பரமசிவக் கவுண்டர் காலமானார். தந்தையை இழந்த சிறுவன் சிலமாதங்களிலேயே தாயையும் இழந்தான். அதன் பிறகு தாய்வழிப்பாட்டி மாணிக்க அம்மாளின் ஆதரவில் சிறுவன் குப்புசாமி வளர்ந்து வந்தான்.
தனக்கு வயதாகி வந்ததாலும் தனக்கு பின்னால் குடும்பத்தில் உள்ளவர்கள் பேரனை சரிவரக் கவனிக்காமல் போய்விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவும் மாணிக்க அம்மாள் சிறுவன் குப்புசாமியை நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்த்து விட்டுவிட்டார்.
சிறிது காலத்தில் சிறுவன் குப்புசாமி தான் சேர்ந்திருந்த நாடகக் கம்பெனியிலிருந்து விலகி அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டான். அங்கு ஏற்கெனவே நிறைய குப்புசாமிக்கள் இருந்ததால் பெயர்க்குழப்பத்தினைத் தவிர்க்கும் பொருட்டு டி.கே. சண்முகம் சிறுவன் குப்புசாமிக்கு நாகராஜன் என்று பெயர் மாற்றம் செய்தார்.
ஆக அக்கம்மாபேட்டை பரமசிவம் குப்புசாமி - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்ற ஏ.பி. நாகராஜனாக மாறிய கதை இதுதான்.
டி.கே. சண்முகம் அவர்களின் நாடக் கம்பெனிதான் ஏ.பி. நாகராஜனை புடம்போட்ட தங்கமாக மாற்றியது. சண்முகம் அவர்களின் பிரபலமான நாடகமான "குமாஸ்தாவின் பெண்" நாடகத்தில் முக்கியவேடமேற்று நடித்தார் ஏ.பி.நாகராஜன். சண்முகம் அண்ணாச்சியின் நாடகக் கம்பெனியில் நாகராஜன் ஏற்று நடித்த வேடங்கள் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன.
பிறகு அங்கிருந்து விலகி மதுரை ஜெயராம சங்கீத பாய்ஸ் கம்பெனியிலும், பிறகு சக்தி நாடக சபாவிலும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் நாகராஜன். சக்தி நாடகசபாவில் அவர் இருந்த போது அவருடன் கூட இருந்தவர்கள் நடிகர் "காக்கா" ராதாகிருஷ்ணனும், சிவாஜி கணேசன் அவர்களும்.
அதன் பிறகு பழனி கதிரவன் நாடக சபா என்ற நாடகக் கம்பெனியை தனியாகத் தொடங்கி தானே கதைகள் எழுதி நடித்து வந்தார் ஏ.பி. நாகராஜன்.
அவற்றில் "நால்வர்" என்ற நாடகம் வெற்றிகரமாக ஓடியது. அதனை சங்கீதா பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகவும் தயாரித்தது. வி. கிருஷ்ணன் அவர்கள் இயக்கிய இந்தப் படத்துக்கு கதை வசனம் எழுதியதோடு அல்லாமல் கதாநாயகனாகவும் நடித்தார் ஏ.பி. நாகராஜன். கதாநாயகனாக ஏ.பி. நாகராஜனும், கதாநாயகியாக குமாரி தங்கம் என்ற நடிகையும் (மலையாளத் திரை உலகில் அப்போது பிரபலமாக இருந்தவர்) நடித்தார்..
இந்தப் படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். கே.வி. மகாதேவனும், ஏ.பி. நாகராஜனும் சேர்ந்து படத்தில் ஒரு பாடலையும் பாடி இருந்தார்கள். "வான வீதியில் பறந்திடுவோம்" என்று துவங்கும் பாடலை எம்.எல். வசந்தகுமாரியும், திருச்சி லோகநாதனும் கே.வி. மகாதேவனின் இசையில் பாடி இருந்தார்கள். கே.வி. மகாதேவனின் இசையில் எம்.எல். வசந்தகுமாரி பாடிய ஒரே பாடல் இதுதான்.
"நால்வர்" படம் பெரிதாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நன்றாகவே ஓடியது. படத்தின் பிரதி எதுவும் கிடைக்காததால் பாடல்களின் தரம் பற்றி ஏதும் அறியமுடியவில்லை.
எது எப்படியோ இந்தப் படத்தின் மூலம் ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கும் கே.வி. மகாதேவன் அவர்களுக்கும் இடையில் நல்ல புரிதலும் நட்பும் வளர்ந்தது.
அந்த நட்பானது நாகராஜன் அடுத்து நடித்த "மாங்கல்யம்" படத்துக்கும் மகாதேவனையே இசை அமைக்க வைத்தது.
கே. சோமு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "மாங்கல்யம்" படத்தில் ஏ.பி. நாகராஜன் கதாநாயகனாகவும், கதாநாயகியாக பி.எஸ். சரோஜாவும் நடித்தனர். கதாநாயகனின் தங்கையாக ராஜசுலோச்சனா, அவருக்கு ஜோடியாக இரண்டாவது கதாநாயகனாக எம்.என்.நம்பியார்.
இந்தப்படத்தில் கே.வி.மகாதேவனின் இசை செவிக்கு இனியதாகவும், நெஞ்சை அள்ளும் வண்ணமும் அமைந்திருந்தது. படத்தின் இடையில் வந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வர இசை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
தெளிவான குழப்பமில்லாத வகையில் ஏ. பி. நாகராஜனின் திரைக்கதையும், வசனங்களும் அமைந்திருந்த போதும், இனிமையான இசை அமைப்பு கூடுதல் பலமாக இருந்தும் மாங்கல்யம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை.
"மாங்கல்யம்" படம் வெளிவந்த அதே 1954ஆம் ஆண்டு எம்.கே. ராதா, பண்டரிபாய் நடிப்பில் "நல்ல காலம்" வெளிவந்தது. தொடர்ச்சியாக வெளிவந்த படங்களில் மகாதேவனின் இசை தனித்துவத்தோடு இருந்துவந்தது. அவருக்கு நல்ல பெயரையும் வாங்கித்தந்தது.
அடுத்து மகாதேவனின் இசையில் வெளிவந்த படம் "கூண்டுக்கிளி". டி.ஆர். ராமண்ணா தயாரித்து இயக்கிய படம். எம். ஜி. ஆர். - சிவாஜி கணேசன் என்ற பின்னாளைய இரு உச்ச நட்சத்திரங்களும் சேர்ந்து நடித்த படம். விந்தனின் கதை வசனத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் கே.வி. மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அவரது மேலும் புகழைச் சேர்த்தன. பாடல்களை பி. ஏ. பெரியநாயகி, டி.எம். சௌந்தரராஜன், வி. என். சுந்தரம், ராதா - ஜெயலக்ஷ்மி, டி.வி. ரத்னம், ராணி ஆகியோர் பாடினார்கள்.
"கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாய் நினைத்து
காலமெல்லாம் சுற்றியது சரியா தப்பா.
நெஞ்சைப் பறிகொடுத்து விட்டு நினைவு தடுமாறி நின்று
தஞ்சம் நீ என்றதெல்லாம் சரியா தப்பா" -
டி.எம். சௌந்தரராஜன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பாடிய முதல் பாடல் இது. அந்த வகையில் சிவாஜிக்கு டி.எம்.எஸ். அவர்களை முதல் முதலாகப் பாடவைத்த பெருமை கே.வி. மகாதேவனுக்கே கிடைத்தது. இந்தப் பாடலை சிந்துபைரவி ராகத்தில் இனிமையாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன். பாடல் வரிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும் மெட்டு. இறுதியில் "சரியா தப்பா" என்று டி.எம்.எஸ்.ஸின் குரல் உச்சத்தைத் தொட்டு முடியும் போது சிந்துபைரவி ராகமும் கே.வி.எம். அவர்களின் மெட்டும் பாடலைச் சிகரத்துக்கே கொண்டு செல்கின்றன. https://www.youtube.com/watch?v=EdeYJ-ECzTo
இந்த இடத்தில் கே.வி. மகாதேவன் இசை அமைப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.
ஒரு பாட்டுக்கு இசை அமைப்பதற்கு முன்பு கதையில் அது வரும் இடம் அதாவது சிச்சுவேஷன் - அதற்கு தகுந்தாற்போல பாடலாசிரியர் எழுதி கொடுக்கும் பாட்டை அப்படியே வார்த்தைகளை மாற்றாமல் பொருத்தமாக இசை அமைப்பார் அவர்.
அவரைப் பொருத்தவரையில் "பாட்டுக்குத்தான் மெட்டு" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
அதனால் தான் கவியரசு கண்ணதாசன் அவர்கள் கே.வி. மகாதேவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, "மாமாவின் (மகாதேவன்) இசை அமைப்புக்காக நான் எழுதிய பாடல்களில் தொண்ணூறு சதவிகிதம் பாடல்கள் எழுதிய பிறகே இசை அமைக்கப்பட்டன." என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல. பாடலாசிரியர் எழுதி இருப்பதில் ஏதாவது ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் அதனை மாற்றச் சொல்லி நிர்ப்பந்திக்க மாட்டார். மாறாக அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொடுப்பார். இதனைப் பற்றி கவியரசு கண்ணதாசன் சொல்லும்போது, "சங்க காலத் தமிழ் வார்த்தைகளைப் போட்டு எழுதினால் கூட அவர் உற்சாகமாக இசை அமைத்துக்கொடுப்பார்." என்று சொல்கிறார்.
"கூண்டுக்கிளி" ஒரு நல்ல கதையம்சம் நிறைந்த ஒரு பரீட்சார்த்தமான படம். ஆனால் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பைப் பெறாமல் படுதோல்வி அடைந்தது. படத்தின் தோல்வி டி.ஆர். ராமண்ணாவை பெரிதும் பாதித்தது.
ஆகவே அவர் தனது ஆர்.ஆர். பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் படங்கள் எல்லாமே ஜனரஞ்சகமான பொழுதுபோக்குச் சித்திரங்களாக மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெறக்கூடியவைகளாக அமையவேண்டும் என்ற தீர்மானத்துடன் மிகுந்த பொருட்செலவில் எம்.ஜி.ஆர்., டி. ஆர். ராஜகுமாரி, ஜி. வரலக்ஷ்மி, ஜே.பி. சந்திரபாபு, ஈ.வி. சரோஜா ஆகியோரை பிரதான வேடங்களில் நடிக்க வைத்து தனது அடுத்த படத்தை தயாரித்தார்.
1955-இல் வெளிவந்த அந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமாகி வசூலை வாரிக்குவித்தது.
அந்தப் படம்தான் "குலேபகாவலி". இதற்கு இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி.
அது சரி. இந்தப் படத்துக்கும் கே.வி. மகாதேவனுக்கும் என்ன சம்பந்தம்?
"குலேபகாவலி" என்றதும் நம் நினைவில் வந்து நின்று வாய் தானாகவே முணுமுணுக்கும் பாடல் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ. இனிக்கும் இன்ப இரவே நீ வா வா. இன்னலைத் தீர்க்க வா." என்று ஏ.எம். ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடும் ஒரு டூயட் பாடல்தான்.
"பாகேஸ்ரீ" ராகத்தை அதி அற்புதமாகக் கையாண்டு இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அற்புதமாக இசை அமைத்துக் கொடுத்தவர் கே.வி. மகாதேவன் அவர்கள் தான். https://www.youtube.com/watch?v=g-MZUdwH9hg
உண்மையில் இந்தப் பாடல் "கூண்டுக்கிளி" படத்துக்காக கே.வி. மகாதேவன் இசை அமைத்துக் கொடுத்த பாடல். ஆனால் பாடலை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள ராமண்ணாவால் முடியவில்லை. இந்தப் படலை "குலேபகாவலி" படத்தில் உபயோகப் படுத்திக்கொள்ள அவர் விரும்பினார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனும் ராமண்ணாவும் கே.வி. மகாதேவனை அணுகி அவரது சம்மதத்தைக் கேட்டனர். பெருந்தன்மையோடும், மிகுந்த மகிழ்ச்சியோடும் பாடலைப் பயன்படுத்திக் கொள்ள சம்மதித்தார் கே.வி. மகாதேவன்.
படத்தின் டைட்டிலில் அவரது பெயர் இடம் பெறாவிட்டாலும், தனது மெல்லிசைக் கச்சேரி மேடைகள் தோறும் இந்தத் தகவலை ரசிகர்கள் முன்பாகப் பகிர்ந்துகொண்டு கே.வி. மகாதேவனைப் பெருமைப்படுத்த எம்.எஸ். விஸ்வநாதன் இன்றும் தவறுவதில்லை.
*******
“குலேபகாவலி” வெளிவந்த அதே 1955ஆம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக ஏ.பி. நாகராஜன் கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்த "பெண்ணரசி" படம் வெளிவந்தது. ஏ.பி. நாகராஜன், சூர்யகலா, எம்.என். நம்பியார், பி.எஸ். வீரப்பா, ஈ.வி. சரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படத்தை கே.சோமு இயக்கி இருந்தார்.
இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டார் கே.வி. மகாதேவன்.
சாதாரணமாக ஒரு திரைப்படப் பாடல் என்று எடுத்துக்கொண்டால் முகப்பிசை (pre-lude) என்றும் இணைப்பிசை (interlude) என்றும் இரண்டு பிரிவுகள் கண்டிப்பாக இருக்கும். பாடல் ஆரம்பமாகும் முன்பாக பல்லவிக்கு முன்னதாக வருவது முகப்பிசை. பல்லவியையும் சரணத்தையும் இணைக்கும் விதமாக வருவது இணைப்பிசை.
பொதுவாக இந்த இணைப்பிசையாக வாத்தியங்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்தப் படத்தில் இடம் பெற்ற கவிஞர் மருதகாசி எழுதிய "இன்பம் என்றும் இங்கே ஆட்சி புரியுது" என்ற திருச்சி லோகநாதன் - எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய டூயட் பாடலைப் பார்த்தோமென்றால் அதில் இணைப்பிசையே இருக்காது. பல்லவி முடிந்ததும் எம்.எஸ். ராஜேஸ்வரியின் ஹம்மிங்கோடு ஆரம்பித்து இடையில் திருச்சி லோகநாதன் இணைந்துகொள்ள சரணம் தொடங்கும். முதல் சரணம் முடிந்து அடுத்த சரணம் ஒரு விருத்தமாக தொடங்கும். இணைப்பிசையே பாடலில் இருக்காது. கே.வி. மகாதேவனின் கற்பனை வளத்துக்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. பாடலை நீங்களும் கேட்டுப்பாருங்களேன். நான் சொல்வது புரியும். https://www.youtube.com/watch?v=ABuCEIuySMg
"பெண்ணரசி" படத்துக்கு இசை அமைத்த நேரத்தில் ஒரு சம்பவம் நடந்தது. படத்துக்கான பின்னணி இசைச் சேர்க்கை மட்டுமே பாக்கி இருந்தது. அந்த நேரத்தில் கே.வி. மகாதேவனுக்கு வெளியூர் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். "என்னோட அசிஸ்டண்டா சேந்திருக்கானே இந்தப் புகழேந்தி இதைப் பண்ணுவான்." என்றார் மகாதேவன்.
எல்லாருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால் அதுவரையிலும் புகழேந்தி ஒரு ஸ்வரம் கூட சுயமாகச் சொல்லியதே இல்லை. ஆகவே தயாரிப்பாளர் வேணு தயங்கி நின்றார்.
ஆனால் மகாதேவன் விடவில்லை. "நீங்க கவலையே படவேண்டாம். என்னை விட இந்த ரிக்கார்டிங்கை புகழேந்தி ரொம்ப நன்றாகச் செய்வான். அதுக்கு நான் பொறுப்பு." என்று உத்தரவாதம் கொடுத்ததோடு இல்லாமல் படத்தின் டைட்டிலில் அவரது பெயரையும் தனது பெயருக்குக் கீழே "உதவி:புகழேந்தி" என்று போடவும் வைத்தார்.
அதுவரையில் தான் இசை அமைத்த படங்களே சரியாகப் போகாத சூழலில் தன்னை விட தனது உதவியாளர் சிறப்பாகச் செயல் படுவார் என்று ஒரு இசை அமைப்பாளர் சொல்கிறார் என்றால்..?
மகாதேவனின் தன்னம்பிக்கையும், பெருந்தன்மையும் பிரமிக்கவைக்கின்றன.
என்னதான் சிறப்பாக அவர் செயல்பட்டாலும் இசை அமைத்த படங்கள் எதுவுமே அதுவரை குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெறவில்லை. அந்த குறையைப் போக்கி வெற்றிப் பாதையில் அவரை ஏற்றிக்கொண்டு போக வந்தது "டவுன் பஸ்."
(இசைப் பயணம் தொடரும்..)
(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)
மே 26 , 2014