தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன்- 9

பி. ஜி. எஸ். மணியன்

வாழ்க்கை ஒரு சங்கீதம்.  அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்படவேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல  - சாமுவேல் பட்லர்

கடந்த வார இடுகையில் "நால்வர்" படம் ஒன்றில் தான் திருமதி எம்.எல். வசந்தகுமாரி கே.வி.மகாதேவனின் இசையில் பாடியதாக நான் எழுதி இருந்தேன்.  ஆனால் எம்.எல்.வி. அவர்கள் இன்னும் சில படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் பாடியிருப்பதாக - குறிப்பாக "தாய்க்குப் பின் தாரம்" படத்தில் அவர் மகாதேவனின் இசையில் பாடியிருக்கும் தகவலை கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் எனது நண்பரும் வாசகருமான திரு. பி. ரவிகுமார் தெரிவித்திருக்கிறார்.   நண்பர் ரவிகுமாருக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

ரு திரைப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டுமானால் அதற்கு பல காரணிகள் தேவை.  தெளிவான கதை, தேர்ந்த நட்சத்திரங்கள், சிறப்பான இசை, ஒளிப்பதிவு, அருமையான இயக்கம்.... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.  

இவற்றில் ஏதாவது ஒன்றின் காரணமாக படம் தோல்வி அடைந்துவிட்டால் சிறப்பான அம்சங்கள் கூட எடுபடாமல் போய்விடக்கூடும்.  

எல்லாமே சிறப்பாக இருக்கும் படங்கள் கூட சமயங்களில் தோல்வி அடைந்து விடுவதும் உண்டு.

உழைப்பும், அதிர்ஷ்டமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும்.

தனது திரை உலகப் பிரவேசத்தின் ஆரம்ப காலம் முதல் பத்து வருடங்கள் தனது திறமை அனைத்தையும் காட்டி இசை அமைத்தும் படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. 

என்னதான் சிறப்பான இசையமைப்பாளராக இருந்தாலும் படங்கள் வெற்றி பெற்றால் தானே படவுலகில் நிலைத்து நிற்க முடியும்?

அதுவும் அப்போது இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதன், எஸ்.வி. வெங்கட்ராமன், சி.ஆர். சுப்பராமன் என்ற மும்மூர்த்திகள் முதல் தலைமுறை இசை அமைப்பாளர்களாக இருந்தார்கள்.

இரண்டாவது தலைமுறையில் கே.வி. மகாதேவன் வந்தபோது தொடர் வெற்றிகளால் தயாரிப்பாளர்களை தங்கள் பக்கம் பல இசை அமைப்பாளர்கள் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.  குறிப்பாக குலேபகாவலியின் வெற்றி இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. நாம் இருவர் தொடங்கி பராசக்தி வரை தொடர் வெற்றிகளின் காரணமாக ஆர். சுதர்சனம் முன்னேறி வந்துகொண்டிருந்தார்.  ஏற்கெனவே எஸ்.எம். சுப்பையா நாயுடு வேறு ஒரு பக்கம் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார்.  டி.ஜி. லிங்கப்பா, டி.ஆர். பாப்பா போன்ற புதிய தலைமுறையினர் வேறு களத்தில் இறங்கி கவனத்தை ஈர்க்க ஆரம்பித்திருந்தனர். 

இப்படிப்பட்ட சூழலில் எப்படிப்பட்டவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வது சகஜம்.  ஆனால் கே.வி. மகாதேவனோ நிதானம் இழக்காமல் இருந்தார்.  

அப்போது அவருக்கு உதவியாளராக சேர்ந்தார் டி.கே. புகழேந்தி.  புகழேந்தி வந்த நேரமோ என்னமோ வெற்றியும் அவரை வந்து சேர ஆரம்பித்தது.

எம்.ஏ.வேணு அவர்கள் தயாரித்த "டவுன் பஸ்" படம் 1955-இல் வெளிவந்தது.   கண்ணப்பா - அஞ்சலிதேவி ஜோடியாக நடித்திருந்தனர்.  கதை வசனம் எழுதியவர் ஏ.பி. நாகராஜன். கே. சோமு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதற்கான முக்கிய காரணமே படத்தின் இசை தான்.  

அனைவரின் கவனத்தையும் கவர்ந்த படமாக "டவுன் பஸ்" அமைந்தது என்றால் அதற்கு காரணம் ஏ.பி. என் அவர்களின் கதை வசனமும், கே.வி. மகாதேவனின் இசை அமைப்பும் தான்.

பெரியதான "ஸ்டார் வால்யூ" எதுவும் இல்லாத படம் குறிப்படத்தக்க அளவில் வெற்றி பெற்றது என்றால்.. அதற்கு காரணம் வேறு எதுவாக இருக்க முடியும்?

"இடைவேளைக்குப் பிறகு முன்கூட்டியே யூகிக்கக் கூடிய திருப்பங்களுடன் சென்ற படத்தைக் காப்பாற்றும் அம்சமாக அமைந்தது கே.வி. மகாதேவனின் இசையமைப்பில் இடம் பெற்ற இனிமையான பாடல்கள்தான்" என்று தனது விமர்சனத்தில் குறிப்பிடுகிறார் பிரபல திரை ஆய்வாளர் திரு. ராண்டார்கை அவர்கள். 

கா.மு. ஷெரீப் இயற்றிய பாடல் வரிகளுக்கு அற்புதமாக இசை அமைத்து கேட்பவர் காதுகளில் தேனை வார்த்தார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.

"குழந்தைப் பாடகி" என்றே பெயர் வாங்கி இருந்த எம்.எஸ். ராஜேஸ்வரியை கதாநாயகி அஞ்சலிதேவிக்காகப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.

"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா.

என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பலே." -  மழலைக் குரலில் ராஜேஸ்வரி சிட்டுக்குருவிக்குச் சொல்லும் சேதி கேட்கக் கேட்கத் திகட்டவே இல்லையே. நீங்களும்  கேட்டுப்பார்க்க  இணைப்பு : https://www.youtube.com/watch?v=bxj_l5WEcCo

படத்தில் இரண்டு முறை இடம் பெறும்  பாடல் இது.   

அடுத்து திருச்சி லோகநாதனும், எம்.எஸ். ராஜேஸ்வரி, ராதா ஜெயலக்ஷ்மி ஆகியோர் பாடிய இன்னொரு ஹிட் பாடல் "பொன்னான வாழ்வு மண்ணாகிப்போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா" - இன்று வரை கேட்பவர் நெஞ்சங்களை விட்டு நீங்காத பாடலாக அமைந்த பாடல் இது.   https://www.youtube.com/watch?v=wBq_ecZbO9M

எண்பதுகளின் மத்தியில் ஈழத் தமிழர் பிரச்சினை விருட்சமாக வளர ஆரம்பித்த நேரம்.

ஒரு கலை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றிருந்த பாடகர் டி.எல். மகராஜன் கூடியிருந்த லட்சக்கணக்கான தமிழர்களின் இடையே தனது தந்தை திருச்சி லோகநாதன் பாடிய இந்தப் பாடலை ஆரம்பித்தார்.  பல்லவியின் முதல் வரிகள் தங்கள் வாழ்விழல் சூழலோடு பொருந்துவதாக உணர்ந்த அத்தனை தமிழர்களும் கொட்டும் பனியைக்  கூடப் பொருட்படுத்தாமல் இந்தப் பாடலை வெகுவாக ரசிக்க ஆரம்பித்தார்கள். (தகவல் ஆதாரம்: சினிமா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 1999-வாமனன் கட்டுரை).

                                                            ******************

ப்படி ஏ.பி. நாகராஜனின் நட்பு மகாதேவனுக்கு கிடைத்ததோ அதே போல இன்னொரு நடிகரின் நட்பும் அவருக்குக் கிடைத்தது.

கோவையில் ஒரு சாதாரண மில் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து சினிமாக்களில் குஸ்தி போடும் ஒரு ஸ்டண்ட் நடிகராக கால் பதித்தவர் அவர்.  எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக்காட்சிகளில் கண்டிப்பாக அவருடன் இவர் மோதுவது உண்டு.  ஆரம்ப கால எம்.ஜி.ஆர் படங்களில் இவருக்கும் கட்டாயமாக ஒரு சண்டைக்காட்சி இருக்கும்.

சினிமாவின் மீது இவருக்கு இருந்த ஆர்வம், எப்படியாவது அதில் சாதிக்க வேண்டும் என்ற வெறி அந்த "ஸ்டண்ட் நடிகரை" சொந்தமாகப் படம் எடுக்கத் தூண்டியது.  அதுவும் தனது ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு படம் தயாரிக்க வேண்டும் என்று தூண்டியது.

தனது மனைவியின் நகைகளை விற்றுப் பணமாக்கி போதாத குறைக்கு அவரது மாமியார் வேறு தன் நகைகளைக் கொடுக்க அவரது சொந்த ஊரான கோவையில் இருந்த சொந்த பந்தங்கள் ஆளாளுக்கு பணம் கொடுத்து உதவ படத் தயாரிப்பில் இறங்கினார் அந்த ஸ்டண்ட் நடிகர்.

மகாதேவனின் இசையில் வெளிவந்த பாடல்கள் அவரது மனத்தைக் கவர்ந்திருந்தன.  ஆகவே தனது முதல் தயாரிப்புக்கு கே.வி. மகாதேவனையே இசை அமைக்க வைத்தார் அவர்.   

நண்பருக்கு தோள்கொடுக்க முன்வந்தார் எம்.ஜி.ஆர். 

"நால்வர்" காலம் தொட்டு ஏ.பி. நாகராஜனுடன் நல்ல நட்பு இருந்தது.

அவரது படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துக் கொடுத்ததே ஏ.பி.நாகராஜன் தான்.

"நாகராஜா.. நீயே நம்ம படத்துக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்துடு." என்று அவரை கேட்டுக்கொண்டார் அவர்.

சந்தோஷமாக சம்மதிக்கத்தான் செய்தார் நாகராஜன்.  ஆனால் அவருக்கிருந்த வேலைப் பளுவில் நண்பரின் கோரிக்கையை அவரால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை. 

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த அய்யாப்பிள்ளை கதை வசனம் எழுதினர். 

கதாநாயகியாக நடிக்க பி. பானுமதியை எம்.ஜி.ஆரே தன் நண்பனுக்காகப் பேசி ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.  அடுத்த முக்கிய  கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக  டி.எஸ். பாலையா, கண்ணாம்பா என்று அந்நாளில் மிகப் பிரபலமாக இருந்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து படத்தை தனது தம்பியையே டைரக்ட் செய்ய வைத்தார் அந்த ஸ்டண்ட் நடிகர்.  

அந்த ஸ்டண்ட் நடிகர் வேறு யாருமல்ல.    சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் தான் அந்த ஸ்டண்ட் நடிகர்.

ஏ.பி. நாகராஜன் நாமகரணம் சூட்டிய  அவரது தயாரிப்பு நிறுவனம்  "தேவர் பிலிம்ஸ்".

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின்  முதல் தயாரிப்பான அந்தப் படத்தின் பெயர்..

"தாய்க்குப் பின் தாரம்".

கே.வி. மகாதேவன் இசை அமைக்க எம்.ஜி.ஆர்.- பானுமதி இணைந்து நடிக்க 1956-இல் வெளியான "தாய்க்குப் பின் தாரம்" மகத்தான வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது.

கே.வி. மகாதேவனை தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் நிலை நிறுத்தியது.

(இசைப் பயணம் தொடரும்..)

(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஜுன்   09 , 2014