"இந்த உலகத்தில் இசையைவிடச் சிறந்த பிரார்த்தனை வேறு எதுவும் இல்லை." - வில்லியம் மெரில்.
தேவர் தனது படங்களின் பாடல்களுக்கான மெட்டுக்களை தேர்ந்தெடுக்கும் விதமே தனி.
தன் அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவரையும் வந்து உட்காரச் செய்வார். இசை அமைப்பாளரின் மெட்டுக்களை பாடச் செய்து அதனை அனைவரையும் கேட்கவைப்பார். கேட்பவரின் முகபாவங்களைத் துல்லியமாகக் கவனிப்பார். அதில் திருப்தியும் மலர்ச்சியும் தெரிந்தால் அந்த டியூன் ஓகே. இல்லாவிட்டால் அவ்வளவுதான் - எப்பேர்ப்பட்ட ஒசத்தியான டியூனாக இருந்தாலும் நிராகரித்துவிடுவார்.
தேவரின் இந்த சுபாவம் கே.வி. மகாதேவனுக்கு அத்துப்படி. அதனால் அதற்கேற்பவே டியூன்கள் போடுவார். அநேகமாக முதல் டியூனே ஏற்கப்பட்டு விடும். ஒருவேளை அது நிராகரிக்கப் பட்டாலும் அதனால் எந்த ஒரு சின்ன மனவருத்தமோ, ஏமாற்றமோ இல்லாமல் லேசான புன்னகையோடு அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த டியூனை தயார் செய்வதில் ஈடுபடுவார்.
அந்த வகையில் தேவரின் படத்துக்கான பாடல்கள் மெஜஸ்டிக் ஸ்டூடியோவின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்டன.
மகாதேவனின் இசையமைப்பில் பாடல்கள் அனைவருக்கும் பிடித்தமானதாக அமைந்த சந்தோஷமும், திருப்தியும் சின்னப்பாதேவருக்கு.
“பாட்டெல்லாம் ரொம்ப அருமையா வந்திருக்கு முருகா." - வெளிப்படையாக பாராட்டினார் அந்த வெள்ளை மனம் கொண்ட நல்லவர். அது மட்டுமா ?
"எழுதி வச்சுக்குங்க. இனிமே சௌந்தர ராஜனும், சுசீலாவும் தான் கொடிகட்டிப் பறக்கப் போறாங்க." - என்று கணிக்கவும் செய்தார் அவர்.
சரி. இனிமேல் ஆர்டிஸ்ட் தேர்வு செய்தாக வேண்டும்.
யாரை ஹீரோவாகப் போடலாம்?
ஹீரோயினுக்கு அவர் யோசிக்கவே இல்லை. வாழ வைத்த தெய்வம் படத்தில் நடித்த சரோஜாதேவிதான் என்று ஏற்கெனவே அவர் முடிவு செய்துவிட்டார்.
ஆனால் கதாநாயகன் தேர்வு தான் அவருக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது.
ஒருவழியாக கல்யாணப் பரிசு படத்தின் வெற்றி ஜோடியான ஜெமினி - சரோஜா தேவி என்று அவர் தீர்மானித்தாலும், ஜெமினி கணேசனை அவர் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.
யாராவது ஒரு புதுமுகத்தை அறிமுகப் படுத்தி விடலாமா என்று யோசித்த நேரத்தில் அவர் மனதில் சட்டென்று ஒரு மின்னல் போல ஒரு உருவம் தோன்றி மறைந்தது.
"அவரைப் போடலாமா?"
"என்னது அவரையா? ஏன்? ஏற்கெனவே பட்டதெல்லாம் போதாதா?"
"ஆனால் இந்தப் படத்துக்கு அவர்தானே ரொம்பப் பொருத்தமா தோணுது?"
"படத்தை ஒழுங்கா முடிக்கணும்னு உனக்கு ஆசையே இல்லையா?"
மனதைப் பலவிதமான கேள்விகள் கொக்கி போட்டு இழுக்க சிந்தனையுடன் அவர் நின்று கொண்டிருந்த நேரத்தில் "அண்ணே" என்ற படி அவர் தோளை யாரோ இறுக்கமாகப் பின்னால் நின்றபடி பற்றினார்கள்.
யாரென்று திரும்பினால்..அந்த "அவர்" தான்.
"முருகா! நீங்களா?" என்று ஒருகணம் உணர்ச்சிவசப்பட்டுப் போனார் தேவர்.
அந்த "அவர்" வேறு யாருமல்ல! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.
வேறு ஏதோ ஒரு பட சம்பந்தமாக மெஜெஸ்டிக் ஸ்டூடியோவுக்கு வந்திருந்தவர் தேவரைப் பார்த்துவிட்டார்.
இடைக்காலத்தில் பிரிந்திருந்தாலும் எத்தனை ஆண்டுகாலப் பழக்கம்?
இருவரும் துணை நடிகர்களாக இருந்த காலம் தொட்டே ஆரம்பமான நட்பல்லவா அது?
துணை நடிகராக தான் இருந்த நேரங்களில் சந்தித்த அவமானங்களில் போதெல்லாம் ஆறுதலும் தைரியமும் சொல்லி தனக்கு தன்னம்பிக்கையை ஊட்டி மனவருதத்தைப் போக்கியவர் தேவரல்லவா? அப்படிப்பட்ட நட்பில் இடைக்காலத்தில் ஒரு விரிசல்.
என்னதான் பிரிந்திருந்தாலும் உண்மையான நட்பு மனதில் நிறைந்திருந்தால் எத்தனை நாள் கழித்து அந்த நண்பர்கள் சந்திக்கும்போது மனதில் தொடரும் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் போதுமே. அவர்களை மறுபடியும் ஒன்று சேர்த்துவிடுமே !
"யாருதுண்ணே ரெக்கார்டிங்? " என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
"என்னோட புதுப்படம் முருகா. படத்தோட பேரு “தாய் சொல்லைத் தட்டாதே". மாமா தான் மியூசிக். கண்ணதாசன் பாட்டு. டி.எம்.எஸ்.ஸும், சுசீலாவும் பிரமாதமாப் பாடியிருக்காங்க முருகா" -ஒரே மூச்சில் பொரிந்து தள்ளினார் தேவர்.
"நான் கேக்கலாமா அண்ணே." என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
"உங்களுக்கில்லாததா? வாங்க முருகா" என்று சொல்லியபடி நண்பனை மறுபடி ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று ஒளிப்பதிவாளர் ரங்கசாமியிடம் பாட்டை மறுபடி போடுமாறு பணித்தார் தேவர்.
"சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்.
கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்."
டி.எம். எஸ். அருமையாக ஆரம்பிக்க அந்த கம்பீரத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் அருமையாக இணைந்தார் பி.சுசீலா.
கே.வி. மகாதேவனின் அருமையான இசையில் அற்புதமான பின்னணி இசையுடன் வெளிவந்த பாடலின் முகப்பிசையிலும், இணைப்பிசையிலும் தான் எத்தனை விதங்கள். சரணத்துக்கு சரணம் மாறுபட்ட கவர்ச்சிகரமான இணைப்பிசைகள். எம்.ஜி.ஆர். அசந்து போனார்.
"பட்டுச் சேலை காற்றாட பருவ மேனி கூத்தாட கட்டுக்கூந்தல்
முடித்தவளே என்னைக் காதல் வலையில் பிடித்தவளே"
"அரும்புமீசை அள்ளிவர அழகுப் புன்னகை துள்ளிவர குறும்புப் பார்வை
பார்த்தவரே என்னைக் கூட்டுக் குயிலாய் அடைத்தவரே . "
தனக்கென்றே எழுதப் பட்ட வரிகளாக தோன்றியது எம்.ஜி.ஆருக்கு.
"யாருண்ணே ஹீரோ?" - என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
"இன்னும் முடிவாகலே. யாராச்சும் ஒரு புதுமுகத்தைப் போடலாமுன்னு இருக்கேன்." -
"என்னன்னே இது? இவ்வளவு அருமையான பாட்டுக்கு புதுமுகமா?'- என்றார் எம்.ஜி.ஆர்.
"வேற யாரு இருக்காங்க முருகா. நம்ம நினைப்புக்கும் வேகத்துக்கும் ஈடுகொடுக்க?" என்று கேட்டார் தேவர்.
பட்டென்று வார்த்தைகள் வெளிவந்தன எம்.ஜி.ஆரிடமிருந்து.
"ஏன் நான் இல்லையா? என்னை மறந்துட்டீங்களா?"
தேவரா மறப்பார்? ஆனால் கடந்த காலச் சம்பவங்கள் அவரை எம்.ஜி.ஆரிடமிருந்து சற்று விலகச் செய்துவிட்டன.
"தாய்க்குப் பின் தாரம்" படத்தில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டு காட்சிக்கு சரியான ஒத்துழைப்புக் கொடுக்காமல் இழுத்தடித்தது. படம் வெளிவந்த பிறகு அதன் ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த வாகினி அதிபர் நாகிரெட்டி அதை தெலுங்கில் டப் செய்து வெளியிட "என் அனுமதி இல்லாமல் எனக்கு எப்படி டப்பிங் குரல் கொடுத்து தெலுங்கில் வெளியிடலாம்? என்று தேவருக்கு எம்.ஜி.ஆர். லீகல் நோட்டிஸ் அனுப்பியது..போன்றவை எல்லாம் தானே இருவரையும் விலகச் செய்திருந்தன.
அந்த எம்.ஜி.ஆரே தன்னிடம் வந்து "என்னை மறந்துட்டீங்களா?' என்று கேட்டபோது கதிரவன் முன் பனித்துளி போல தேவரின் சஞ்சலம் எல்லாம் மறைந்தே போனது.
"நாடோடி மன்னன்" படத்தின் மகத்தான வெற்றிக்கு திருஷ்டி பரிகாரம் போல எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட கால் முறிவு அவரது தொழில் எதிரிகளுக்கு கொண்டாட்டமாகப் போய்விட்டன.
இனிமே அவராலே முன்னை மாதிரி வேகமா சண்டை காட்சிகள்ளே நடிக்க முடியாது என்று திரை உலகம் முழுக்க பரப்பப் பட்டிருந்த வதந்திகள்.
அதற்கேற்ற மாதிரி அதற்குப் நடித்த படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்கிற அளவுக்கு அமையவில்லை.
தவிர "எம்.ஜி.ஆர். பாண்ட் சர்ட் அணிந்து நடித்தால் அந்தப் படம் ஓடாது" என்ற செண்டிமெண்ட் வேறு பரவி இருந்தது.
இவற்றை எல்லாம் தகர்க்க தனக்கு ஒரு வெற்றி வேண்டும். அவசியம் வேண்டும். அதை இந்த தேவரின் படம் கண்டிப்பாகத் தரும். இந்தப் பாடல்கள் கட்டாயம் தனக்கு மறுவாழ்வைத் தரும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது.
ஆகவே தேவரைத் தன்னுடனேயே தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்றவர் மதிய உணவு முடிந்ததும் நேராக தன் அன்னையின் படத்தின் முன் நிறுத்தி வைத்து "அண்ணே. நடந்ததை எல்லாம் மறந்திடுங்க. என் தாய் மீது ஆணையாச் சொல்லறேன். இனிமே நீங்க என்ன கேட்டாலும் செய்து தருவேன். உங்களுக்கு பூரண ஒத்துழைப்புக் கொடுப்பேன்." என்று சத்தியம் செய்து கொடுத்தார்.
அதோடு நிற்கவில்லை. தேவரிடமும் " அண்ணே. நீங்களும் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரணும். நான் இல்லேன்னா தம்பி சிவாஜி என்று எல்லாரும் போகிற மாதிரி நீங்க போகக்கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேவர் பிலிம்ஸ் படங்களிலே சிவாஜி கணேசனை நடிக்க வைக்கக் கூடாது." என்று தானும் ஒரு சத்தியம் வாங்கிக்கொண்டார்.
ஒருவருக்கொருவர் செய்துகொண்ட அந்த ஒப்பந்தத்தை இருவருமே கடைசி வரை மீறவே இல்லை.
ஆம். கடைசி வரை தேவர் பிலிம்சின் படங்கள் எதிலும் சிவாஜி கணேசன் நடிக்கவே இல்லை.
எம்.ஜி.ஆரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். தேவர் எப்போது கேட்டாலும் ஒட்டுமொத்தமாக தேதிகளை தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்த மாதிரி வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆர். கொடுத்ததே இல்லை.
"தாய் சொல்லைத் தட்டாதே" படம் எம்.ஜி.ஆர். ஹீரோவாக நடிக்க ஒரே மாதத்தில் படத்தை முடித்து 1961 தீபாவளிக்கு வெளியிட்டுவிட்டார் தேவர்.
அதே நாளில் வெளிவந்த சிவாஜி கணேசனின் "கப்பலோட்டிய தமிழன்" படம் படுதோல்வி கண்டது தனிக்கதை.
இப்படி எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் இடையில் நடுவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்து இனி காற்றுகூட இருவரையும் பிரிக்கமுடியாது என்னும் அளவுக்கு அவர்களது நட்பை முன்பை விட அழுத்தமாக்க உதவியதே கே.வி. மகாதேவனின் இசையில் அமைந்த பாடல்கள் தான்.
கதாநாயகியின் அறிமுகக் காட்சிக்கான பாடல் "காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் தூவிச் சிங்காரிக்கும் புதுவிழா" - பி.சுசீலாவின் குரலில் முதல் பாடலே இனிமை பொங்கும் பாடல்.
பாடலின் இணைப்பிசையில் வயலின், செல்லோ ஆகிய இசைக் கருவிகளை மகாதேவன் பயன்படுத்தி இருக்கும் விதம் மனதை கொள்ளை கொள்கிறது.
மகாதேவனின் பாணியின் தனித் தன்மையாக இன்னொன்றும் அவர் பாடல்களைக் கேட்கும்போது தெளிவாகிறது.
சரணங்களுக்கு இடையேயான இணைப்பிசையில் பெரும்பாலும் தாள வாத்தியக்கருவிகளே இருக்காது.
இணைப்பிசையின் முடிவில் சரணம் தொடங்கும் போதுதான் தபேலாவின் தாளக்கட்டு தொடங்கும். எல்லாப் பாடல்களிலும் இப்படி என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பாணியை அதிகம் பின்பற்றியவர் கே.வி.மகாதேவன் என்று சொல்லலாம்.
அந்த வகையில் அமைந்த இந்தப் பாடலில் இனிமை கொஞ்சுகிறது.
அடுத்து எம்.ஜி.ஆரின் இதயத்தைச் சிறை பிடித்த "சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்." பாடலில் சரணங்களுக்கு இடையேயான இணைப்பிசையை மாறுபடுத்தி மகாதேவன் அமைத்திருக்கும் விதம் அலாதியாக காதுகளை வருடுகிறது.
"போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே" - டி.எம்.எஸ். சின் குரலில் ஒரு தத்துவப் பாடல்.
"பூ உறங்குது பொழுதும் உறங்குது.." - பி. சுசீலாவின் குரலில் ஒரு சோகச் சூழலுக்கான பாடல்.
ஒரே ஒரு பாட்டு" - மறுபடி டி.எம்.எஸ். - சுசீலா.
"ஒருத்தி மகனைப் பிறந்தவனாம்" - பி. சுசீலாவின் குரலில் ஒலிக்கும் ஒரு உற்சாகப் பாட்டு.. என்று அத்தனை பாடல்களுமே சொல்லி வைத்தாற்போல ஹிட் ஆக படமும் மாபெரும் வெற்றி பெற்று.. சம்பந்தப் பட்ட அனைவரையும் உச்சத்தில் கொண்டு வைத்தது.
விளைவு..
கே.வி. மகாதேவன் தேவர் பிலிம்சின் ஆஸ்தான இசை அமைப்பாளரானார்.
(இசைப் பயணம் தொடரும்..)
(பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)
ஆகஸ்ட் 18 , 2014