"இசை என்பது உனது (மனிதனின்) அனுபவம். உனது சிந்தனை. உனது மெய்யுணர்வு" - சார்லி பார்க்கர்.
தேவர் பிலிம்ஸின் தொடர் வெற்றிப்படங்கள் எல்லாவற்றையுமே கே.வி. மகாதேவனின் இசை தான் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
"தாய் சொல்லைத் தட்டாதே" - படத்தைத் தொடர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து வரிசையாக தொடர் வெற்றிப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார் தேவர்.
"தாயைக் காத்த தனயன்" - 1962 தமிழ்ப் புத்தாண்டில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைக் கண்டது.
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, கண்ணாம்பா, எம்.ஆர். ராதா. அசோகன் உள்ளிட்ட கலைஞர்கள் தங்கள் திறமையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தனர்.
காட்சிக்குக் காட்சி உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஆரூர்தாசின் வசனங்கள் ரசிகர்களிடம் - குறிப்பாக - பெண்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன. அவர்கள்தானே ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு காரணகர்த்தாக்கள்!
மாற்றமுடியாத அழுத்தமான செண்டிமெண்டுக்கு சொந்தக்காரர் சின்னப்பா தேவர்.
"வெற்றி வெற்றி" என்று கதாநாயகன் கூவிக்கொண்டே வரும் காட்சி கண்டிப்பாக படத்தில் இருக்கும்.
அதே போல பாடகர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவருக்கு டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் கண்டிப்பாக வேண்டும். இசைக்கு மாமா தான். அதாவது கே.வி. மகாதேவன் தான்.
அந்த வகையில் தாயைக் காத்த தனயன் படத்திலும் அனைத்துப் பாடல்களையும் இந்த இருவருமே தான் பாடியிருந்தார்கள்.
"காட்டுராணிக் கோட்டையிலே கதவுகள் இல்லை" - கதாநாயகியின் அறிமுகக் காட்சிக்கான பாடல். இந்தப் பாடலின் முகப்பிசையே மனத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது. பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டோ உற்சாகத் துள்ளல் வகையைச் சார்ந்த மெட்டு.
பொதுவாக எம்.ஜி.ஆரின் படங்களில் நாயகியர் தான் அவருக்காக ஏங்குவதும், அவரை நினைத்து கனவு காண்பதும் உருகிப் பாடுவதுமாக இருப்பார்கள்.
ஆனால் "தாயைக் காத்த தனயன்" படமோ இதற்கு விதிவிலக்கு.
இதில் கதாநாயகனான எம்.ஜி.ஆர். தான் நாயகியை (சரோஜாதேவி) நினைத்து அவள் நினைவில் உருகிப் பாடுவதாக காட்சி அமைப்பு.
கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு மனதை வருடும் வண்ணம் இசை அமைத்து பாடலைப் பெருவெற்றிப் பாடலாக்கி விட்டார் கே.வி. மகாதேவன்.
''கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா - அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா."
டி.எம்.எஸ். பாடும் இந்தப் பாடல்தான் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களிலுமே முதலிடம் பிடித்த பாடல். சங்கராபரண ராகத்தின் ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டு அருமையான முறையில் ஒரு முதல் தர மெல்லிசைப் பாடலாக இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"தொட்டுத் தொட்டு சென்றன கைகள்" - என்று தொடங்கும் சரண வரிகளுக்கு அமைத்திருக்கும் மெட்டிலேயே "தங்க ரதம் போல் வருகிறாள்" என்ற சரணத்தின் கடைசி வரிகளை - காலையில் மலரும் தாமரைப்பூ" என்று தொடங்கும் வரிகளை அமைத்து - ஒரு சரணத்திலேயே முற்பகுதிக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அடுத்த பகுதியை அமைத்து... கேட்கக் கேட்கச் சுகமாக இருக்கும் வகையில் பாடலை அமைத்திருக்கிறார் மகாதேவன்.
இரண்டு டூயட் பாடல்கள்.
"மூடித் திறந்த இமை இரண்டும்" - நிதானமாகத் தொடங்கி வேகமாகப் பயணிக்கும் பாடல் என்றால் "காவேரிக் கரையிருக்கு" - பாடலோ உற்சாகத் துள்ளல் ராகம்.
நடக்காதென்பார் நடந்துவிடும்" - கண்ணதாசனின் வைரவரிகளில் இன்பமும் துன்பமும் கலந்த ஒரு சூழலைப் படம்பிடித்துக் காட்டும் காட்சிக்கான ஒரு அசரீரிப் பாடல். டி.எம்.சௌந்தரராஜன் பாடி இருக்கிறார். இந்தப் பாடலை "நட பைரவி" ராகத்தின் அடிப்படை ஸ்வரங்களைக் கையாண்டு அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
வில்லனின் சூழ்ச்சியால் கதாநாயகன் - நாயகிக்கு நடக்க இருந்த திருமணம் தடைப் பட்டுவிடுகிறது. ஆனால் இதை அறியாத கதாநாயகனோ தனது திருமணத்துக்கு நண்பர்களைச் சந்தித்து அழைப்பிதழ்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
"அறுந்துபோன உறவறியாமல் அழைப்பு விடுக்கும் மகன் இங்கே" - இந்த வரிகளிலும் அவனது சந்தோஷத்தை "நடபைரவி" பிரதிபலிக்கிறது. தபேலாவின் துள்ளல் நடை ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
அடுத்த வரிகளிலோ "ஆசைக் கயிறு அருந்ததாலே அலையும் பேதை மனமிங்கே" - திருமணம் தடைப்பட்டதால் தவிக்கும் தாயின் துன்பத்தை ஷெனாயின் மீட்டலின் மூலம் அதே "நடபைரவி" வெளிப்படுத்துகிறது.
ஒரு பாடலை இன்பமாகவும் அடுத்த பாடலை துன்பச் சூழலிலும் அமைப்பது என்பது எல்லாருமே சாதாரணமாகச் செய்யக்கூடியதுதான். ஆனால் ஒரே பாடலில் முதல் வரியில் மலர்ச்சியையும், அடுத்தவரியில் தளர்ச்சியையும் உணரவைக்கும் வண்ணம் இசை அமைப்பது என்பது கடினமான ஒன்று.
வரிக்கு வரி ராகத்தை மாற்றலாம். ஆனால் ஒரே ராகத்தில் வரிக்கு வரி முற்றிலும் வேறுபட்ட உணர்வுகளை வெளிக்கொணருவது என்பது ...
மகத்தான அந்தச் சாதனையை அனாயாசமாக இந்தப் பாடலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மகாதேவன்.
*****************
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளிவந்த படம் "வளர்பிறை". வாய்பேச முடியாத ஊமையாக நடிகர் திலகம் அசத்தி இருந்த படம். அவருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி.
"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை வைத்து புரியாமலே இருப்பான் ஒருவன். அதனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்" - கவியரசு கண்ணதாசனின் அருமையான தத்துவப் பாடல். பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தரராஜன். மகாதேவனின் சுகமான இசைக்காகவே கேட்கப்படவேண்டிய பாடல் இது.
"சலசலக்குது காத்து பளபளக்குது கீத்து" - டி.எம்.எஸ் - பி. சுசீலாவின் குரல்களில் ஒரு அருமையான தாளம் போடவைக்கும் டூயட். பாடலின் கச்சிதமான அமைப்பு மனதை கொள்ளை கொள்கிறது. அறுபதுகளின் இறுதிவரை அவ்வப்போது அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பபட்டுவந்த பாடல் இது.
ஆனால் "வளர்பிறை" படமோ சுமார் ரகத்தைச் சேர்ந்த படமாக அமைந்துவிட்டது. தற்போது அடியோடு மறக்கப்பட்ட படங்களின் வரிசையில் சேர்ந்துவிட்டது.
**********
தொடர்ந்து வெளிவந்த தேவரின் அடுத்த சாதனைப் படம் "குடும்பத் தலைவன்".
தொடர் வெற்றிகளைக் குவித்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு உதவிய - அவரது "ஹாட்ரிக்" வெற்றிப் படம் இது. அவருக்கு இப்படி உதவிய படங்கள் அனைத்துக்குமே இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - டி.எம்.எஸ். - பி. சுசீலா - இந்த வெற்றிக்கூட்டணியில் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே வெற்றிப்பாடல்கள்தான்.
"அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்" - பி.சுசீலாவின் இனிமையான குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் நயமும் தரமும் விவரிக்க இயலாத ஒன்று.
"பாடல் வரிகளைப் பார்த்தவுடனேயே ட்யூன் பிறந்துவிடும்" என்று சொன்னாரல்லவா கே.வி. மகாதேவன்? அப்படி கவிஞர் எழுதிக்கொடுத்த பாடலின் வரிகளைப் பார்த்ததுமே அருமையான மெட்டு தானாகவே வந்து விழுந்த வெற்றிப்பாடல் தான் "ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் - அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்" பாடல்.
சரணங்களின் ஒவ்வொரு வரியிலும் வரும் கடைசி வார்த்தைகளை கோர்த்துக் கொடுத்து சரணத்தை மகாதேவன் முடித்திருக்கும் நேர்த்தி புருவங்களை உயர்த்தவைக்கிறது.
அதிலும் "பெண்மை என்பது என்னை வென்றது பேச்சு நின்றது வெட்கம் வந்தது." என்ற சரணவரிகளை பி.சுசீலா பாடியதும் அதே வரிகளை டி.எம்.எஸ். பாடி முடிக்கும்போது முதல் நடைக்கு முற்றிலும் மாறுபட்ட நடையைக் கையாண்டு தபேலாவை வாசிக்க வைத்து சரணத்தை மகாதேவன் முடித்திருக்கும் விதம் இருக்கிறதே அது அவரால் மட்டுமே முடியும்.
"திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்" - டி.எம்.எஸ். குரலில் மற்றொரு ஹிட் பாடல்.
"மழை பொழிந்துகொண்டே இருக்கும்" - பி. சுசீலா தனித்துப் பாடும் பாடல்.
"மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது" - டி.எம். சௌந்தரராஜன் பாடும் எம்.ஜி.ஆரின் ஒரு கருத்துப் பாடல்.
அனைத்துமே ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மாபெரும் வெற்றிக்கு துணை புரிந்தன.
*******
இப்படி எம்.ஜி.ஆர் - சிவாஜி என்ற இரு உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கும் மட்டும் என்று அல்ல. தான் இசையமைத்த அனைத்துப் படங்களின் பாடல்களையுமே வெற்றிப்பாடல்களாக்கி - என்றும் அழியாமல் நிலைபெறச் செய்வதில் மிகுந்த அக்கறை காட்டினார் கே.வி. மகாதேவன்.
இதற்கு அருமையான ஒரு உதாரணம் "வானம்பாடி"
எஸ்.எஸ். ராஜேந்திரன், தேவிகா, டி.ஆர். ராஜகுமாரி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், முத்துராமன், ஷீலா, டி.ஆர். ராமச்சந்திரன், ஆர்.எஸ்.மனோகர் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நம் "உலக நாயகன்" கமலஹாசன் - என்று மிகப் பெரிய திறமைசாலிகளின் கூட்டமே படத்தில் இருந்தது.
கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் எழுதித் தானே சொந்தமாகத் தயாரித்த இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே அதன் பாடல்கள் தான். பாடல்களை முழுவதுமாக கவிஞர் எழுதிக் கொடுக்க அதன் பிறகே அவற்றுக்கு மெட்டுப்போட்டார் கே.வி. மகாதேவன். "பாட்டுக்குத் தான் மெட்டு" என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவரல்லவா அவர்!
இந்த அத்தியாயத்துக்காக "வானம்பாடி" படப்பாடல்களை மறுபடி கேட்டபோது என் மனசும் உடம்பும் ஒரு முறை சிலிர்த்துப் போனது நிஜம்.
"கங்கைக் கரைத் தோட்டம்" - கண்ணன் மீது கவிஞர் கொண்ட பக்தியை நாயக நாயகி பாவத்தில் வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது. முழுக்க முழுக்க சுத்தமான "பீம்ப்ளாஸ்" ராகத்திலேயே பாடலை அமைத்து அதை பி.சுசீலாவின் இனிமை நிறைந்த குளுமைக் குரலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லிவைத்தேன்" - டி.எம். சௌந்தரராஜனுடன் ஹம்மிங்கில் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.
"ஆண்கவியை வெல்லவந்த பெண்கவியே வருக" - டி.எம்.எஸ். - சுசீலா பாடும் ஒரு போட்டிப் பாடல்.
காதல் தோல்வியால் விரக்தியடைந்து மனம் தளர்ந்த நாயகனுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டும் வண்ணம் தன் பதில்களை பாடலாக நாயகி சொல்வதுபோல அமைந்த பாடல் இது.
"காதலித்தாள் மறைந்துவிட்டால் வாழ்வு என்னாகும்?" - என்று அவன் கேட்க.. அவள் வாயிலாகக் கவிஞர் சொல்லும் பதில்..
"அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்".
உடனே அவன் ஆவேசமாகக் கூறுகிறான்;
"ஒருமுறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு.
அவளும் சளைக்காமல் கூறுகிறாள்
"அந்த ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது."
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? ' என்று அவன் காட்டமாகக் கேட்க..
"தன் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது " - என்று அழுத்தமாக அவள் கூறி அவனைப் பேச்சிழக்க வைக்கிறாள்.
விருத்தமாக துவங்கி பாடலாக விரியும் பாடலின் சொல்லும் பொருளும் உணர்ந்து இசை அமைத்து இத்தனை வருடங்களுக்கு பிறகும் நினைவில் நிறுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.
"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்" - காதல் தோல்வியால் பெண் இனத்தையே வெறுத்து நாயகன் பாடும் பாடல்.
இந்தப் பல்லவியின் அடுத்த வரிகளாக முதலில் கவியரசர் "அவன் காதலித்து வேதனையில் சாகவேண்டும்" என்று எழுதி இருந்தார்.
பாடல் பதிவின் போது பாடலைப் பாட மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.
"அழுத்தமான கடவுள் நம்பிக்கை கொண்ட நான் கடவுள் சாகவேண்டும் என்று பாடமாட்டேன். வரிகளை மாற்றிக் கொடுத்தால் தான் பாடுவேன் என்று எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும் மறுத்துவிட வேறுவழி இல்லாமல் கண்ணதாசன் "அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்" என்று வரிகளை மாற்றிக் கொடுத்தார்.
இன்றளவும் "வானம்பாடி" என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் பாடலாக இந்தப் பாடல்தான் இருக்கிறது.
"ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள் - அதை
உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள் " - பி. சுசீலாவின் மதுரக் குரலில் இன்னொரு மகத்தான பாடல்.
"தூக்கணாங்குருவிக் கூடு தூங்கக் கண்டான் மரத்திலே" - இன்றளவும் இந்தப் பாடலின் இணைப்பிசை போலக் கொடுக்க இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்.
இப்படி எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையில் "வானம்பாடி" படப் பாடல்களில் என் மனதுக்கு நெருக்கமான பாடல் என்றால் அது..
எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் பாடிய "யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்" - பாடல்தான். "கவாலி" பாணியில் தபேலாவின் அருமையான தாளக்கட்டுடன் காஷ்மீரத்தில் பிறந்த ராகமான "பஹாடி"யில் அருமையாக மகாதேவன் அமைத்துக் கொடுத்திருக்கும் பாடல். ஈஸ்வரியின் குரல்களில் வெளிப்படும் பிருகாக்களும் குழைவுகளும் பிரமிக்க வைக்கின்றன.
இந்தப் பாடலை ஈஸ்வரி அம்மா பாடிய போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று தெரிந்துகொள்ளத் தோன்றியது.
அலைபேசி மூலம் எல்.ஆர். ஈஸ்வரி அவர்களைத் தொடர்பு கொண்டு "மாமாவின் இசையில் நீங்க ரொம்பக் கஷ்டப்பட்டுப் பாடின பாட்டு எது?" என்று கேட்டேன்.
பளிச்சென்று பதில் வந்தது எல்.ஆர். ஈஸ்வரி அவர்களிடமிருந்து.
"கஷ்டப்பட்டுப் பாடின பாட்டுன்னா அது "யாரடி வந்தார்" பாட்டுத்தான்"
தொடர்ந்து அவரே சொன்னார்.
"குருவி தலையிலே பனங்காயை வச்ச மாதிரி என்னைக் கூப்பிட்டு இந்தப் பாட்டைக் கொடுத்துட்டாரு அவரு. என்னைத் தட்டிக்கொடுத்து பாடவைச்சதும் அவரேதான். இந்தப் பாட்டுனாலே எனக்கு கிடைச்ச நல்ல பேரு எல்லாத்துக்கும் காரணம் அவரேதான்."
இவ்வளவு தூரம் சொன்ன எல்.ஆர். ஈஸ்வரி அவர்களிடமிருந்து கே.வி. மகாதேவனைப் பற்றிய அவரது மதிப்பீடு என்ன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் எப்படி.? கேட்டேன்.
என் கேள்விக்கு ஈஸ்வரி அம்மா சொன்ன பதில்:
"அவர் சாட்சாத் குருவாயூரப்பனேதான் சார்."
(இசைப் பயணம் தொடரும்..)
(பி.ஜி.எஸ் மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதலாம்.)
செப்டம்பர் 15 , 2014