தொடர்கள்

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் - 23

பி.ஜி.எஸ்.மணியன்

"இசை பொய் சொல்வதில்லை.  இந்த உலகத்தில் எதையாவது மாற்றவேண்டும் என்றால் அது இசையால் மட்டுமே சாத்தியமாகும்."  - ஜிமி ஹென்ரிக்ஸ். 

அடுத்து வந்த 1963ஆம் வருடத்தில் மொத்தம் வெளிவந்த 45 தமிழ்ப் படங்களில் கே.வி. மகாதேவனின் இசையில் மட்டுமே இருபத்து மூன்று படங்கள் வெளிவந்தன.

அவற்றில் பெரும்பாலான பாடல்கள் பெரு வெற்றி பெற்ற பாடல்கள்.

தமிழ் - தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரானது ஒரு புராணப் படம்.

என்.டி.ராமராவ் - அஞ்சலிதேவி இருவரும் கதாநாயகன் -நாயகியாக நடிக்க ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, மனோரமா, கே.விஜயன்  கண்ணாம்பா, சந்தியா, வி. நாகையா ஆகியோரும் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தனர். படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு இசை அமைத்தவர் கண்டசாலா.  தமிழ்ப் பதிப்பிற்கு பாடல்களுக்கு கே.வி. மகாதேவனும், பின்னணி இசையை கண்டசாலாவும் அமைத்தனர்.  மருதகாசியின் மகத்தான பாடல்களை கண்டசாலாவுடன், பி. லீலா, பி. சுசீலா, எஸ். ஜானகி, ஏ.பி. கோமளா, பொன்னுசாமி ஆகியோர் பாடி இருந்தனர்.

அந்தப் படம் தான் "லவ குசா"

கே.வி.மகாதேவனின் மெட்டுக்களில் பாடல்கள் அத்தனையுமே செந்தேனாக இனித்தன.

இருபத்து நாகாயிரம் சுலோகங்களில் வால்மீகி எழுதிய ராம காவியத்தை ஐம்பத்திரண்டே வரிகளில் எளிமையாக மிக எளிமையாக மக்களிடம் - அதுவும் பண்டிதர் முதல் பாமரர் வரை சென்றடையும்படி எழுதுவது என்பது மகத்தான ஒரு சாதனை.  அந்தச் சாதனையை அனாயாசமாகச் சாதித்துக் காட்டியிருந்தார் கவிஞர் மருதகாசி.  அந்தப் பாடல் தான் இன்றளவும் "லவகுசா" என்ற பெயர் சொன்ன மாத்திரத்திலேயே உதடுகளில் வந்து ஒட்டிக்கொள்ளும் பாடலான "ஜெகம் புகழும் புண்யகதை ராமனின் கதையே"  பாடல்.

பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம்!.  ஹிந்தோளம், சிந்துபைரவி, சிவரஞ்சனி, காபி ஆகிய ராககளை அருமையாக கோர்த்து ஒரு ராக மாலையே தொடுத்து ராமபிரானுக்கு சூட்டி இருக்கிறார் கே.வி. மகாதேவன்.

பி. சுசீலாவும் - பி.லீலாவும் வெகு அற்புதமாக பாவத்துடன் பாடி இருக்கும் இந்தப் பாடல் புட்டபர்த்தி ஸ்ரீ சத்யசாயிபாபாவின் மனத்துக்கு மிகவும் விருப்பமான பாடல்.  இந்தப் பாடல் வெளிவந்த பிறகு பி.சுசீலாவையும், பி. லீலாவையும் எப்போது பார்த்தாலும் "லவ குசா" என்று தான் இருவரையும் அழைப்பாராம் அவர்.

சீதாதேவியைக் காட்டுக்கு லக்ஷ்மணன் கொண்டுவிடும்போது பின்னணியில் அசரீரியாக டி.எம். சௌந்தரராஜனின் குரலில் ஒரு அருமையான பாடல் ஒலிக்கும்.

"இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை

இங்கும் அங்கும் விதியை வென்றோர் எவருமே இல்லை. "  -  விதியின் வலிமையைப் பறைசாற்றும் இந்த மருதகாசியின் பாடலில் வரிகள் ஒவ்வொன்றும் காட்சியைப் பார்க்காமலே கதையை விளங்க வைத்துவிடும்.  அருமையான முறையில் இசை அமைத்து மனதில் அழுத்தமாகப் பதியவைத்துவிட்டார் கே.வி. மகாதேவன்.

எனக்கு நினைவு தெரிந்து லவகுசா படம் பார்த்தபோது இந்தப் பாடல் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது.  ஆனால் பிறகு வந்த பிரதிகளில் நீளம் கருதியோ என்னமோ இந்த அருமையான பாடல் முழுவதுமாக நீக்கப்பட்ட பிரதிகளே புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் லவகுசா பாடல்கள் அடங்கிய ஒலிநாடாக்களில் இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கிறது.  கண்டிப்பாக தவற விடக்கூடாத பாடல் இது.

"திருவளர் நாயகன் ஸ்ரீராமனே".- கண்டசாலா, பி.லீலா, பி. சுசீலாவின் குரல்களில் கம்பீர நாட்டையில் ஒரு விறுவிறுப்பான இனிமையான பாடல்.   ராம நாமத்தைப்  போலவே இனிக்கும் பாடல்.

"மாரிபோல கண்ணீரும் சிந்தக் காரணம் ஏனம்மா"  -  பி. சுசீலா, பி. லீலாவின் இணைந்த குரல்களில் ஒலிக்கும் பாடல். 

"சந்தேகமும் ஏனம்மா"  - கண்டசாலாவின் குரலில் ஒலிக்கும் பாடல்.  சஞ்சலப்படும் சீதாதேவியின் மனதை மட்டும் வால்மீகி தேற்றவில்லை.  கேட்பவர் மனங்களையுமே சாந்தப்படுத்துகிறார்.

"ஸ்ரீ ராம சுகுணா சீலா"  -  பி.சுசீலா - பி. லீலா -  பாடலில் வெளிப்படும் சுசீலாவின் விசும்பல் சோகச் சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

"ஈடு இணை நமக்கு ஏது"  - மோகனத்தில் ஒரு கம்பீரமான பாடல்.

"ஸ்ரீ ராம பரந்தாமா"  - பி.சுசீலா, பி.லீலா, ஏ.பி. கோமளாவின் குரல்களில் ஒலிக்கும் பாடல்.  

இந்தப் படத்தைப் பொருத்தவரையில் இணைப்பாடல்களில் பி.சுசீலா, பி.லீலா இருவரின் குரல்களுமே இனம் பிரித்துக் காண முடியாதபடி ஒன்றிப்போய் கணீரென ஒலிக்கும் வண்ணம் பாடவைத்த சிறப்பு கே.வி. மகாதேவனைச் சாரும்.

இப்படித் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் செயல் படத் துவங்கிய காலகட்டத்தில் சிறப்பான பாடல்களை இவரால் எப்படிக் கொடுக்க முடிகிறது என்று வியக்கும் அளவுக்கு மகாதேவனின் பாடல்கள் அமைந்தன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - சிவாஜி கணேசன் ஆகிய இருவரின் படங்களையும் விட்டுக்கொடுக்காமல் இருவரையும் சரிசமமாக பாலன்ஸ் செய்து 1963-இல் இருவருக்குமே பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்தார் அவர்.

எம்.ஜி.ஆர். படங்களை எடுத்துக்கொண்டால் சின்னப்பா தேவரின் தொடர் வெற்றிப் படங்களான "நீதிக்குப் பின் பாசம்", "தர்மம் தலை காக்கும்", டி.ஆர். ராமண்ணாவின் "கொடுத்து வைத்தவள்", ஜூபிடரின் "கலை அரசி",  கலைஞர் கருணாநிதியின் சொந்தத் தயாரிப்பான "காஞ்சித் தலைவன்", டி. யோகானந்தின் "பரிசு" ஆகிய படங்கள் கே.வி.மகாதேவனின் மகத்தான இசையில் வெளிவந்தன.

"நீதிக்குப் பின் பாசம்"   -  எம்.ஜி.ஆருடன், சரோஜாதேவி, எஸ்.வி.ரங்கராவ், கண்ணாம்பா, எஸ்.ஏ.அசோகன், எம்.ஆர்.ராதா, எம்.என். நம்பியார் ஆகிய திறமைசாலிகளின் களமாக அமைந்த படம் இது.

கண்ணதாசனின் பாடல்களுக்கு டி.எம்.எஸ். - பி. சுசீலாவை அருமையான முறையில் பாடவைத்து பாடல்களை எல்லாம் வெற்றிப் பாடல்களாக்கினார் கே.வி. மகாதேவன்.

"அக்கம் பக்கம் பார்க்காதே"

"மானல்லவோ கண்கள் தந்தது" 

“வாங்க வாங்க கோபாலய்யா"  பி. சுசீலா தனித்துப் பாடும் இந்தப் பாடலில் சரணத்தின் கடைசி வரியை வாத்தியங்கள் இல்லாமல் குரலை மட்டும் ஒலிக்கவைக்கும் தனது தனிப் பாணியைக் கையாண்டு பாடலுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

"இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு"  -  ஆகிய பாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்ற பாடல்களாக அமைந்தன.

நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆர் - சரோஜாதேவியை வைத்து தயாரித்த சொந்தப் படம் "தாலிபாக்கியம்" .  கண்ணாம்பாவின் கணவர் நாக பூஷணம் படத்தை இயக்கி இருந்தார்.  மூத்த தாரத்து மகன் மீது மையல் கொள்ளும் சிற்றன்னை தனது ஆசைக்கு இணங்காத அவன் மீது பழி சுமத்தி தந்தையை விட்டே மகனைப் பிரிக்கும் "அசோக்குமார்" காலத்து கதை.  எம்.ஜி.ஆர். சரோஜாதேவியுடன், எஸ்.வி. சுப்பையா, எம்.என்.ராஜம், கண்ணாம்பா ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

படம் தயாரிப்பில் இருந்தபோது கண்ணாம்பா புற்றுநோயால் பாதிக்கப் பட்ட காரணத்தால் தயாரிப்பில் ஏற்பட்ட காலதாமதம் படத்தின் வெற்றியைப் பெருமளவு பாதித்து விட்டது.  படமும் ரசிகர்களால் நிராகரிக்கப் பட்டது.  மகாதேவனின் இசையில் பாடல்கள் ஒன்று கூட எடுபடாமல் போனது - அதுவும் எம்.ஜி.ஆர். படத்தில் - என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் "தாலிபாக்கியத்"தில் தவறவிட்ட வெற்றிக்கொடியைத் "தர்மம் தலை காக்கும்" படத்தில் எம்.ஜி.ஆர். மீட்டுக்கொண்டார் என்றால் அதற்கு உறுதுணையாக இருந்தது கே.வி. மகாதேவனின் இசையும் இருந்தது.

கண்ணதாசனின் காவிய வரிகள் மகாதேவனின் இசையால் மங்காப் புகழை எம்.ஜி.ஆருக்கு கொண்டுவந்து சேர்த்தன.

"தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்" - என்ற  கருத்தாழமிக்க பாடல் சங்கராபரண ராகத்தின் அடிப்படை ஸ்வரங்களை வைத்துக்கொண்டு தேர்ந்த மெல்லிசையாக கொடுத்தார் கே.வி.மகாதேவன்.

"தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்"  - உற்சாகமான ஒரு டூயட்.

"மூடுபனி குளிரெடுத்து"  - அருமையான ஒரு மெலடி.

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா- ஒரு தத்துவப் பாடல்.

என்று படத்தில் இடம்பெற்ற பாடல்களை எல்லாம் வெற்றிப்பாடல்களாகக் கொடுத்து படத்தின் வெற்றிக்கு உதவினார் கே.வி.மகாதேவன்.

எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான குரல் டி.எம்.எஸ். தான் என்ற நிலை உருவாக மகாதேவனின் பாடல்கள் காரணமாக அமைந்தன.

ஆனால் அந்தச் சூழலிலும் சீர்காழி கோவிந்தராஜனை தைரியமாக எம்.ஜி.ஆருக்காகப் பாடவைத்து அந்தப் பாடலையும் வெற்றிப்பாடலாக்கியது மகாதேவனின் சாதனை.

ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆருக்கு பாடியவர் தான் சீர்காழி கோவிந்தராஜன்.  ஆனால் அறுபதுகளில் டி.எம்.எஸ்.ஸின் வெற்றிக்கொடி பரவியபோது அசரீரிப் பாடல்களைப் பாடும் வாய்ப்புகளே சீர்காழி கோவிந்தராஜனை அதிகம் தேடிவந்தன.

அந்தச் சூழலில் டி. ஆர். ராமண்ணாவின் "கொடுத்துவைத்தவள்" படத்தில் ஒரு டூயட் பாடலை எம்.ஜி.ஆருக்காக சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்தார் கே.வி. மகாதேவன்.  உடன் பாடியவர் ஜமுனா ராணி.

"பாலாற்றில் சேலாடுது"  என்ற அந்தப் பாடல் அருமையான முறையில் அமைந்தது.  இன்றளவும் நிலைத்த பாடலாகவும் இருக்கிறது.

படத்தின் ஆரம்பக் காட்சியே இந்தப் பாடல் காட்சியுடன் தான் துவங்குகிறது.  இந்தக்  காட்சியில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருந்தார் எல். விஜயலட்சுமி.

ஈ.வி. சரோஜா - எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த படம் இது.

"நீயும் நானும் ஒன்று" - படத்தில் இரண்டு முறை வரும் பி.சுசீலாவின் இந்தப் பாடல் மென்மையாக மனதை வருடும் பாடல்.

"என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு - உற்சாகமான டூயட் பாடல் .  டி.எம்.எஸ். - பி.சுசீலாவின் குரல்களில் சிறப்பாக அமைத்திருந்தார் கே.வி.மகாதேவன்.

"காஞ்சித் தலைவன்" - படத்திலே பி. பானுமதி சொந்தக் குரலில் பாடும் "மயங்காத மனமின்று மயங்கும்- கே.வி.மகாதேவனின் இசையில் இந்தப் பாடல் பானுமதியின் ஹிட் பாடல்கள் வரிசையில் சேர்ந்துவிட்ட பாடல்.

டி.எம்.எஸ்.- சுசீலாவின் குரல்களில் "வானத்தில் இருப்பது ஒரு நிலவு" என்ற டூயட் பாடலை எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரிக்காக டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களிலும்,  அதே குரல்களில்

"ஒருகொடியில் இருமலர்கள் பிறந்ததம்மா" - சோகப்பாடலை  எம்.ஜி.ஆர். - விஜயகுமாரிக்காகவும் சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்தார் கே.வி. மகாதேவன்.

இப்படி அந்த ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆரின் படங்களில் எல்லாம் தனது வெற்றி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் கே.வி.மகாதேவன்.

எழுத்தாளர் அகிலனின் "வாழ்வு எங்கே" என்ற புகழ் பெற்ற நாவல் ஏ.பி.நாகராஜனின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சரோஜாதேவி - தேவிகா நடிக்க "குலமகள் ராதை" படமாக வெளிவந்தது.

கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி, கண்ணதாசன் இருவரின் பாடல்கள் அனைத்துமே இன்றளவும் மறையாத பாடல்கள்.

"உலகம் இதிலே அடங்குது" - டி.எம்.எஸ். பாடும் இந்த விறுவிறுப்பான பாடலுடன்தான் படமே தொடங்குகிறது.

"ராதே உனக்கு கோபம் ஆகாதடி"  -  எம்.கே. தியாகராஜா பாகவதர் பாடிப் பிரபலமான ஒரு பாடல்.  அதே மெட்டில் டி.எம். சௌந்தரராஜனின் கம்பீரக்குரலில் அப்படியே வார்த்தெடுத்திருந்தார் கே.வி. மகாதேவன்.

"சந்திரனைக் காணாமல் அல்லிமுகம் மலருமா"  - டி.எம்.எஸ் - பி.சுசீலா பாடும் இந்தப் பாடலில் முதல் சரணம் முடிந்ததும் நடைபேதம் செய்து அடுத்த சரணத்தை அமைத்து கடைசியில் மீண்டும் பல்லவிக்கேற்ற நடைக்குத் திரும்பிவந்து ..  என்று நகாசு வேலை காட்டி இருக்கிறார் கே.வி.மகாதேவன்.

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை"  -  படத்திலேயே டி.எம்.எஸ். குரலில் மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மகாதேவன் அமைத்திருக்கும் விதம் - வித்யாசமான மெட்டு மனதை வருடுகிறது.

"பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்" - பி.சுசீலாவின் குரலில் ஒரு சோகப் பாடல்.

"கள்ளமலர்ச் சிரிப்பிலே" - பி.சுசீலாவின் குரலில் செந்தேனாக இனிக்கும் பாடல்.

டி.எம்.எஸ். அவர்களுக்கு என்று பிரபலமான பாடலைக் கொடுத்த மகாதேவன் படத்தின் பெயர் சொன்னாலே நினைவில் நிற்கும் அளவுக்கு பி.சுசீலாவின் குரலில் கொடுத்த பாடல் "இரவுக்கு ஆயிரம் கண்கள்". 

பாடல் வரிகளும், இணைப்பிசையும், பாடலை அமைத்த விதமும் படத்திலேயே முதல் இடம் பெற்ற பாடலாக இந்தப் பாடலை நிற்க வைத்துவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சொந்தமாக "சிவாஜி பிலிம்ஸ்" பானரில் தயாரித்த முதல் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி.மகாதேவனுக்கே கிடைத்தது.  படம் "அன்னை இல்லம்".  பி. மாதவன் இயக்கிய முதல் சிவாஜி படம் இது.

இந்தப் படத்தில் மகாதேவனின் இசையில் பாடல்கள் வெற்றிபெற்று படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தன.

"நடையா இது நடையா"  -  டி.எம்.எஸ். - குரலில் ஒரு ஈவ் டீசிங் பாடல்.

"மடிமீது தலைவைத்து" - இன்றளவும் அனைத்து தொலைக்காட்சிச் சானல்களாலும் தவறாமல் ஒளிபரப்பப் படும் பாடல்.  டி.எம்.எஸ். - சுசீலாவின் குரல்களில் அருமையான ஒரு மெலடி.

"எண்ணிரண்டு பதினாறு வயது" - டி.எம்.எஸ்ஸுடன் "ஹம்மிங்கில்" எல்.ஆர். ஈஸ்வரி இணையும் பாடல்.

"பாசமலர்" தயாரித்த மோகன் தனது "ராஜாமணி பிக்சர்ஸ்" பானரில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாரித்த "குங்குமம்" படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

சிவாஜிக்கு ஜோடியாக விஜயகுமாரி நடித்த முதல் படம் இது.  இவர்களுடன் எஸ்.எஸ். ஆர்., சாரதா, எஸ்.வி. ரங்கராவ், எம்.வி.ராஜம்மா, நாகேஷ், மனோரமா - ஆகியோரும் நடித்திருந்தனர்.

பாடல்களில் ஒரு இசைச் சாம்ராஜ்யமே நடத்தி இருந்தார் கே.வி.மகாதேவன்.

"குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம்"  -  சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, பி.சுசீலா இணைந்து பாடும் இந்தப் பாடலை முழுக்க முழுக்க கர்நாடக ராகமான "ஆபேரி"யில் அற்புதமாக அமைத்திருந்தார் அவர்.

"பூந்தோட்டக் காவல்காரா"  - பி.சுசீலாவில் குரலில் துள்ளலாகவும் டி.எம்.எஸ். குரலில் விருத்தமாகவும் ஒலிக்கும் பாடல் இது.

.

"இசைச் சக்ரவர்த்தி" ஜி.ராமநாதன் பிரபலப்படுத்திய ராகம் சாருகேசி.

இந்த ராகத்தில் ஒரு அருமையான ஜோடிப்பாடலை வெகு சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

"தூங்காத கண்ணின்று ஒன்று"  -  டி.எம். எஸ். - சுசீலா பாடும் இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமா?

இதே போல "தர்பாரி கானடாவில்" டி.எம்.எஸ். - எஸ். ஜானகியின் குரல்களில் ஒலிக்கும்  -  பிரபலமான "சின்னஞ்சிறிய வண்ணப் பறவை"   இசை இன்றளவும் இசை  வானில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறதே. 

ஆனால் இந்தப் பாடல் பதிவின் போது ஒரு சிக்கலான பிரச்சினையை கே.வி. மகாதேவன் சந்திக்க நேர்ந்தது.

(இசைப் பயணம் தொடரும்..)

செப்டம்பர்   22 , 2014