தொடர்கள்

திரை இசைத்திலகம் : கே.வி.மகாதேவன் - 1

பி. ஜி. எஸ். மணியன்

கே.வி.மகாதேவன் -  தமிழ்த் திரை இசை ரசிகர்களுக்கு இவர் ஒரு "திரை  இசைத் திலகம்"

 தெலுங்கு தேசத்து ரசிகர்களுக்கோ இவர் ஒரு"ஸ்வரப் பிரம்மா".

 திரைத் துறையில் அனைவரும் அன்போடும், பாசத்தோடும் இவரைக் கொண்டாட அழைக்கும் உறவுச் சொல்லோ "மாமா".

 இப்படி அனைத்து தரப்பினரின் அன்புக்கும் அபிமானத்தும் உரியவராக இன்றளவும் அனைவர் மனத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மகத்தான சாதனையாளராக எங்கோ தமிழ்நாட்டின் கடைக்கோடியில் பிறந்த ஒரு சாதாரண மனிதரை உயர்த்தியது எது?

 மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களுக்கும் ஒரே சமயத்தில் பாகுபாடே இல்லாத அளவுக்கு விருப்பத்துக்கும் அபிமானத்துக்கும் உரியவராக அந்த சாதாரண மனிதரை மாற்றியது எது?

கண்டிப்புக்கும், நேரத்துக்கும் பெயர்பெற்ற சின்னப்பா தேவர் முதல் அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் வரை முதலிடம் கொடுக்கும் இசை அமைப்பாளராக அந்தச் சாதாரண மனிதரை உயர்த்தியது எது?

உழைப்பு, திறமை என்று ஆயிரம் காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும்  அவற்றுக்கெல்லாம் மேலாக இருந்தது அவரது குணம் தான்.

 "கே.வி. மகாதேவன் அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் மிகப் பெரிய மேதை.  ஆனால் எத்தனை தான் பெரிய மேதையாக இருந்தாலும் தான் தான் மிகப் பெரியவன் என்று அவர் என்றுமே நினைத்தது இல்லை.  வித்வத் கர்வம் என்பது இம்மி அளவு கூட அவரிடம் இருந்ததே கிடையாது." - சொன்னவர் நடிகர் திரு. சிவகுமார் அவர்கள்.

திரு. சிவகுமார் அவர்கள் அறிமுகமான "காக்கும் கரங்கள்" படத்துக்கும் , அடுத்து அவருக்கு மிகப் பெரிய அளவில் ஒரு பெயர் பெற்றுத்தந்த "கந்தன் கருணை" படத்துக்கும் இசை திரு. கே.வி. மகாதேவன் அவர்கள் தான்.

ஐம்பதுகளின் ஆரம்ப காலம் வரை கர்நாடக சங்கீதத்தின் ஆக்கிரமிப்பு திரை இசையில் நிலவி இருந்தது.

ஐம்பதுகளின் பிற்பகுதி தொடங்கி அறுபதுகளில் மேற்கத்திய இசையின் ஆக்கிரமிப்பு வேர்விட்டு எழுபதுகளில் அசுர வளர்ச்சி பெற்று இருந்த நேரம் அது.

"காலம் மாறிவிட்டது.  இப்போதெல்லாம் பக்தி கொண்டாடுவோம் என்றெல்லாம் பாட்டு போட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" - என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் கூட கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த காலகட்டத்தில் எழுபதுகளின் இறுதியில் மீண்டும் திடீரென்று கர்நாடக இசை திரை இசையில் எழுச்சி பெற்று புதிய உத்வேகத்துடன் கிளர்ந்து எழுந்தது என்றால் அதற்கு காரணம் கே.வி. மாகாதேவன் அவர்களின் இசையில் வெளிவந்த "சங்கராபரணம்" என்ற தெலுங்குப் படம் தான். 

திரை இசையில் மகத்தான புரட்சியை ஏற்படுத்திய படம் என்று கூட அதைச் சொல்லலாம்.  

பட்டி தொட்டி எங்கும் கர்நாடக இசைமுழக்கத்தை செய்த படம்.

இல்லாவிட்டால் ஒரு "மானச சஞ்சரரே"யும் "ப்ரோசேவாரெவருரா"வும் கச்சேரி மேடைகளைத் தாண்டி பாமர மக்களாலும் ரசிக்கப் பட்டிருக்க முடியுமா?

"சங்கராபரணம்" படம் வெளிவந்த பிறகு, அதன் மாபெரும் வெற்றிக்காக திரு. கே.வி. மகாதேவன் அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது.

அந்தச் சமயத்தில் மேடை ஏறுவதற்கு முன்னால் கீழே  பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இரண்டாவது வரிசையின் கடைசியில் அமர்ந்திருந்த மனிதர் அவரது பார்வையில் பட்டுவிட்டார்.

நேராக அவரிடம் சென்று குனிந்து அவரை வணங்கி," உங்க ஆசீர்வாதம் தான் எனக்கு கிடைச்சிருக்குற பேர், புகழ், அவார்ட் எல்லாத்துக்கும் காரணம்" என்று சொல்லி அவரை வணங்கிவிட்டே மேடையேறினார் கே.வி. மகாதேவன்.

அந்த நபர் வேறு யாருமல்ல.  கே. வி. மகாதேவனின் திரை உலக வாழ்வுக்கு வித்திட்ட பழம்பெரும் இசை அமைப்பாளர் திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்கள் தான்.

அந்த பாராட்டுவிழாக் கூட்டத்தில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த எஸ்.வி. வெங்கட்ராமனை அவர் கண்டுகொள்ளாமலே கூடப் போயிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை.

ஆனாலும் தனது குரு என்ற ஸ்தானத்தில் அவரை வைத்து வணங்கிப் பணிந்து பிறகு மேடைக்குச் சென்றாரே அந்தப் பணிவும் பண்பும் தான் கே.வி. மகாதேவன் அவர்களின் தனித்துவமான அடையாளம்.

அந்த மாமேதையின் வாழ்க்கைப் பயணத்தை தனித்துவமான வகையில் எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்று எனக்கு தணியாத ஆசை உண்டு.

ஒருவகையில் இதனை எனது வாழ்நாள் குறிக்கோள் (Lifetime ambition) என்று கூடச் சொல்லலாம்.

மகாதேவன் போன்ற மாமேதைகளைப் பற்றி இன்றைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.  அவரது வாழ்க்கை வரலாறு முன்னேறத்துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்.  

மனிதர்களில் எல்லாம் இருந்தும் "எனக்கு எதுவுமே சரியில்லை" என்று புலம்பிக்கொண்டு திரிபவர்கள் ஒரு ரகம்.

எதுவுமே இல்லாத நிலையில் "எனக்கு இரண்டு கைகளும் கால்களும் மனதில் உறுதியும் இருக்கிறது.  அதனால் வெற்றி வானம் எனக்கு தொட்டுவிடும் தூரம்தான்" என்று துடிப்புடன் எதுவந்தாலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறத் துடிப்பவர்கள் ஒரு ரகம்.

இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் கே.வி. மகாதேவன் அவர்கள்.

ஒன்றை எதிர்பார்த்து முயன்று தோல்விகண்டால் அப்போதும் நம்பிக்கை இழக்காமல் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வை ஆரம்பித்து அதே சமயம் தனது இலக்கைக் கைவிடாமல் குறிவைத்து காத்திருந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது அதை சட்டென்று பற்றிக்கொண்டு முன்னேறி வருவது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியவர் கே.வி. மகாதேவன் அவர்கள்.

அந்த மாமேதையின் சாதனைச் சரித்திரத்தை என்னால் இயன்ற அளவுக்கு - எவ்வளவு சுவாரசியமாக முடியுமோ அவ்வளவு சுவாரசியமாக எழுத்தில் பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்.

நிறைகள் இருந்தால் அவை அந்த மாமனிதருக்கே சேரும்.

குறைகள் இருந்தால் - அவற்றை சுட்டிக்காட்டுங்கள்.  திருத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட எனக்கு பேருதவியாக இருக்கும்.

என்ன சரிதானே?

இனி ..  திரைஇசைத் திலகம் திரு. கே.வி. மகாதேவன் அவர்களின் வாழ்க்கைப் பாதையில் ..

( தொடர்ந்து பயணிப்போம்)

 (பி ஜி எஸ். மணியன் கோவையில் வாழும் இசை ஆர்வலர் மற்றும் ஆய்வாளர். இத்தொடர் திங்கள் தோறும் வெளியாகும். இது பற்றிய உங்கள் கருத்துகளை  editorial@andhimazhai.com -க்கு எழுதலாம்)

ஏப்ரல்   14 , 2014