ஏனோ தெரியவில்லை , சில நாட்களாக யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டும் போல் இருக்கின்றது. யாருக்கு எழுதுவது என்று தான் தெரியவில்லை. என் வாழ்வில் மறக்க முடியாத கடிதங்கள் பல உண்டு.
நான் எழுதிய முதல் கடிதம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது , எங்கள் வீட்டில் பட்டுப்புடவைகள் திருடு போனது குறித்து , என் அம்மாவின் அப்பாவிற்கு , என் அம்மா சொல்ல , சொல்ல , தபால் கார்டில் எழுதியது தான், நான் எழுதிய முதல் கடிதம் . என் தாத்தா , ஊரில் எல்லோரிடமும் அதை பெருமையாக காட்டினாராம் . நான் ஊருக்கு போனபோது என் அத்தை எனக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார்.
எனக்கு வந்த முதல் கடிதமும் நன்றாக நினைவிருக்கிறது , நான் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக வந்த கடிதமே , எனக்கு வந்த முதல் கடிதம் , அதில் “ PROMOTED” என்று இருந்ததற்கு அர்த்தம் தெரியாமல் பக்கத்து வீட்டு ரீட்டா அக்காவிடம் , “ இதுல என்னக்கா போட்டிருக்கு? என்றேன் . “ஐயையோ …நீ பெயில் ஆகிட்டடி “ என்றதும் , ஓ வென அழுதேன் . நான் அழுது நீங்கள் பார்த்ததில்லையே… அடடா… ஆனந்த கண்ணீர் , அழுகை கண்ணீர் , ஏமாளி கண்ணீர் , கோபக்கண்ணீர் , பொறாமைக்கண்ணீர் , விரக்தி கண்ணீர் என என் கண்கள் ஒரு கண்ணீர் பண்ணை.
“எங்க அப்பாகிட்ட சொல்லிடாதீங்கக்கா… “ என்று அழுதேன் . சொல்லமட்டேன் என்று அவர் சொன்னாலும் , சொல்லி விடுவாரோ என பயந்து கொண்டே இருந்தேன் . இரண்டு நாட்கள் கழித்து , எங்கள் வீட்டிற்கு வந்திருந்த என் சித்தப்பா , என் புத்தகத்திலிருந்த அக்கடிதத்தைப் பார்த்து விட்டு, “பாஸானதுக்கு எங்க சாக்லேட் ?” என்றார் . “ என்னது பாஸா… இதுல நான் பாஸுன்னு தான் போட்டிருக்கா ? என்றேன் புரியாமல் . ஆமா.. ஏன் உனக்கு தெரியலயா…” என சிரித்தார். கோபமாக ரீட்டா அக்கா வீட்டுக்குப் போய் “ ஏன்க்கா , என்னை ஏமாத்துனீங்க ? என சண்டை போட்டேன் , “சும்மா விளையாட்டுத் தாண்டி என அவர் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நான் அவரிடம் பேசவே இல்லை. அதன் பின் என்னைப் பார்க்கும் போதெல்லாம் , “விளையாட்டுக்குத் தாண்டி சொன்னேன் . என்கிட்ட பேசுடி என்பார். அவரை முறைத்துப் பார்த்து வாயால் பழிப்பு காட்டுவேன் .
அந்த வருடம் ரீட்டா அக்கா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் விஷம் குடித்து இறந்த போது , நான் என் தாத்தா வீட்டிற்குப் போயிருந்தேன் . ஊருக்கு வந்த என் அம்மா “பத்தாவதுல பெயில்னு ரீட்டா மருந்தைக் குடிச்சுட்டு செத்துப் போச்சு “ என்று அழுதார். அதன் பின் பல நாட்கள் , தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து கொண்டு “ ரீட்டாக்கா என்கிட்ட பேசுடின்னு கெஞ்சுராங்கம்மா ..” என அழுவேன் . இன்றும் பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததால் , தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் புகைப்படங்களைப் பார்க்கையில் , அம்மாணவிகள் எல்லோருக்கும் ரீட்டா அக்காவின் சாயல் இருப்பதாகப்படுகிறது . அவரிடம் சமாதானமாக ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தினமலர் சிறுவர்மலரில் என் பேட்டி வெளியானது , என் தமிழாசிரியை சரோஜா , என் மாணவி சுமதி எதிர்காலத்தில் சிறந்து விளங்குவாள் என்று அப்பேட்டியில் என்னைக் குறித்துக் கூறியிருந்தார். அப்பேட்டி வெளியானதில் இருந்து , எனக்கு பாராட்டு தெரிவித்து , தினமும் குறைந்தது பத்து கடிதங்கள் என் பள்ளி முகவரிக்கு வரும். இப்போது என் புத்தகங்களை படித்து விட்டு நிறைய பேர் கடிதம் எழுதுகிறார்கள் . ஆனால் என் பதினாறு வயதில் என் பத்திரிக்கைப் பேட்டியை படித்துவிட்டு நூற்றுகணக்கில் எனக்கு கடிதங்கள் வந்தது , இன்று நினைக்கையில் வியப்பாக இருக்கிறது , விடுதி மாணவிகளுக்கு மட்டுமே , பள்ளிக்கு கடிதம் வரும், ஆகையால் , எல்லா கடிதங்களும் விடுதிக்கு அனுப்பப்பட்டு , வார்டன் சிஸ்டர் பிரித்து படித்தபிறகே மாணவிகள் கைக்கு கடிதங்கள் வரும் , அடிக்கடி பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வாங்கிவரும் மாணவி என்பதால் , வார்டன் சிஸ்டருக்கு என்னை நன்றாகத் தெரியும் . என்ன சுமதி … பெரிய ஸ்டார் ஆகிட்டியே …யப்பா… எவ்வளவு லெட்டர் வருது உனக்கு ..” என என்னை உச்சி முகர்ந்து வாழ்த்தினார். அத்தனைக் கடிதங்களையும் தினமும் எடுத்து படித்துப் பார்ப்பேன் . ஒரு நாள் பள்ளி முடிந்து , வீட்டிற்கு வந்து கடிதங்களைத் தேடிய போது அவற்றைக் காணவில்லை , பதறிப்போய் என் அம்மாவிடம் விசாரித்தால் , “எதுக்கு தேவையில்லாம இத்தனை லெட்டர் ….அதான் எரிச்சிட்டேன் .. என்றார். என்னால் அதை தாங்கவே முடியவில்லை. மிகுந்த வாஞ்சையோடு என்னை வாழ்த்தி வந்த கடிதங்களை , தொலைத்து விட்ட வருத்தம் இப்போதும் இருக்கிறது.
பனிரெண்டாம் வகுப்பில் , என் நெருங்கிய தோழி ஒருத்தி இருந்தாள் , அவள் பெயர் பூஜா என்று இருக்கட்டும் , இயற்பியல் செய்முறைத்தேர்வு முடிந்ததும் என்னிடம் நான்காக மடிக்கபட்ட காகிதத்தை நீட்டினாள். அதன் ஒரு பக்கத்தில் VIJAY என்று இரத்தத்தால் எழுதியிருந்தது.
என்னடி இது.
காஜாப்பேட்டை தண்ணி டேங்க் கிட்ட ஒருத்தன் தினமும் நிப்பான்ல . அவன் கொடுத்தான்… கொடுத்தா ..வாங்கிடுவியா…கோபத்தில் கத்தினேன் என்ன பண்ண சொல்ற. வாங்கிட்டேன் , ஆனா படிக்கல.
ஏன் படிக்கல…
பயமா இருக்குடி ..மதியானம் இதே இடத்துலநிப்பேன்னு சொன்னாண்டி …
அந்த கடிதத்தைக் கிழித்தெறிந்தேன்
ஏண்டி கிழிச்ச …அதுல என்ன எழுதியிருக்குன்னு படிச்சிட்டு கிழிச்சிருக்கலாம்ல…
ரொம்ப முக்கியம்.
என்ன தான் எழுதியிருக்கான்னு தெரிஞ்சிருக்கும்ல…
வாயை மூடுடி…
காஜாப்பேட்டை தண்ணீர் டேங்க் அருகே வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை . அவன் அங்குதான் நின்று கொண்டிருந்தான். நான் வேகமாக அவனிடம் போய் “இதோ பார்… இவ அப்பா தான் பாலக்கரை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் . உன் லெட்டர் இப்ப அவர்கிட்ட தான் இருக்கு . உள்ள போக ரெடியா இரு…” என்று சொல்லிவிட்டு பூஜாவை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தேன் . சிறிது தூரம் நடந்ததும் பெரிதாக சிரித்தவள் . “எங்க அப்பா இன்ஸ்பெக்டர்னு நீ சொன்னப்ப எனக்கே சிரிப்பு வந்துடுச்சு , எப்பிடிடி இவ்வளவு தைரியமா பேசுன… ” என என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள் . வாட்டுகிற கடுந்தாகமே உப்புநீரை குடிக்க பயிற்றுவிக்கும், தானே? இருவரும் மாறி மாறி சிரித்தோம் . செய்திகளை முந்தித்தருவது தினத்தந்தியோ , மாலைமுரசோ , அந்திமழை டாட் காமோ இல்லை, பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் . நாங்கள் இருவரும் ஒரு பையனிடம் பேசிக்கொண்டிருந்த செய்தி , நாங்கள் பூஜாவின் வீட்டிற்கு போகும் முன்னே அவளின் அப்பாவிற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் தெரிந்துவிட்டது.
யார் அது ? என அடிக்காத குறையாக அவளின் பெற்றோர் விசாரிக்க “ சுமதி கூட பேச்சுப் போட்டிக்கு வர்ற பையனாம் …அவதான் பேசினா.” என்றாள் அதை சற்றும் எதிர்பார்க்காத எனக்கு அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை. “வயசுப் பொண்ணு , நடு ரோட்டுல ஒரு பையன் கூட நின்னு பேசுறது நல்லதில்லை” என்று அவளின் பெற்றோர் எனக்கு ஒரே அட்வைஸ் . பூஜா மீது எனக்கு கோபம், கோபமாக வந்தது , தேர்வு முடியும் வரை அவளிடம் நான் பேசவில்லை .பள்ளிக் கடைசி நாள் அன்று என்னிடம் ஏதோ பேச வந்தாள் , “நான் உன்கிட்ட பேச விரும்பல .. போயிடு .. “ என உக்கிரமாக கத்தினேன் , ஒரு பெரிய பிரச்சனைடி என்று அழ ஆரம்பித்தாள் . அவள் கண்ணில் கண்ணீரைக் கண்டதும் , தணல் குறைந்ததும் தணியும் கொதி உலையானேன்…
என்ன ..
இதை பாரு…
அவள் நீட்டிய இன்லேண்ட் லெட்டரை வாங்கினேன் , தோழியின் பெயருக்கு வந்த கடிதம் , அனுப்புனர் முகவரி இல்லை. கடிதத்தில் , “ ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே..” என்று இருந்தது.
வீட்டுக்கே மொட்டைக் கடுதாசி போட்டுடாண்டி. நல்ல வேளை , நான் தான் வாங்கினேன், அம்மா அப்பாவிற்கு தெரிஞ்சா என்ன உரிச்சு , உப்புக்கண்டம் போட்டுடுவாங்க…
இது அவன் கையெழுத்துதானா… தெரியலயே … நீ தான் அந்த லெட்டரை படிக்கறதுக்கு முன்னாடியே கிழிச்சிட்டியே… இது அவனா… வேற யார்னு தெரியலயே… சிறுது நேரம் யோசித்த நான் , இது நிச்சயமா அவன் தான்டி என்றேன் .
எப்படி சொல்ற ..
அந்த லெட்டர்ல, அவன் பேர் VIJAY ன்னு தானே இருந்துச்சு… “ ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கமாகுமே “ விஜய் நடிச்ச பூவே உனக்காக படப்பாட்டு . ஆக , இது அவனே தான்…
நீல மேகத்தின் கையக்கப் பதிப்பென , கையில் இருந்த கடிதத்தை கண்ணீரால் வெளுத்தால் பூஜா. நீண்ட நேர யோசனைக்குப் பின் சாமியை சரணடைவது என முடிவு செய்தோம். அந்த நாள் இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது , அது , புனித வெள்ளியும் , பங்குனி உத்தரமும் சேர்ந்து வந்த நாள் . முதலில் , திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடுவேல் முருகன் கோவிலுக்குப் போய் , ” இனிமேல் அவன்கிட்ட இருந்து லெட்டர் வராம பாத்துக்கோ “ … என வேண்டினோம் . பின் மேலப்புதூரில் உள்ள மரியன்னை பேராலயத்திற்கு சென்று , மாதாவிடமும் , இயேசுவிடமும்., சூசையப்பரிடமும் வேண்டிக்கொண்டோம். அல்லாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுவோம் என அவரையும் வேண்டினோம் , எங்களின் முப்பரிமான வேண்டுதலுக்கு எந்த தெய்வம் செவி சாய்த்ததோ .. அதன் பிறகு அவனிடம் இருந்து , கடிதம் வரவேயில்லை.
ப்ளஸ் டூ விற்கு பிறகு , பூஜா படிப்பைத் தொடரவில்லை . நான் ஹோலி கிராஸ் கல்லூரியில் , பி.எஸ்.சி சேர்ந்தேன் . ஒரு நாள் என் வீட்டிற்கு வந்தவள் , நீ காலேஜ்க்கு போகும் போது பஸ் காஜாபேட்டை தண்ணீ டேங்க் வழியா தானே போகும் … என்னிக்காவது அந்த விஜயை பார்த்தியா…
என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தேன் . “ ம்ப்ச் … என்ன இருந்தாலும் நீ அந்த லெட்டரை கிழிச்சிருக்க கூடாதுடி… என்ன எழுதியிருந்தான்னு தெரியாமலே போயிடுச்சே ..” எனப் புலம்பினாள். படித்திருந்தாள் அத்தோடு மறந்து போயிருக்கும் . படிக்காத கடிதத்தில் வார்த்தைகள் , வருடங்கள் பல கடந்தும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
என் உறவினர் அக்கா ஒருவர் , கணவரைப் பிரிந்து வாழ்கிறார் , அவர் கற்பமாக இருக்கும் போதே அவரின் கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அந்த அக்காவின் மகன் சங்கருக்கு , தன் அப்பா எப்படி இருப்பாரென்று தெரியாது. புகைப்படத்தில் கூட பார்த்தது இல்லை ஒரு நாள் , நான் வேணும்னா.., அப்பாவுக்கு ஒரு லெட்டர் எழுதவாம்மா … “ எனக் கேட்டவன் , இப்படி ஒரு கடிதம் எழுதினான். “டாடி … எனக்கு உங்களை பாக்கணும் போல் இருக்கு … நீங்க எப்படி இருப்பீங்கன்னு தெரியல… நான் அப்படியே உங்க ஜாடைன்னு அம்மா சொன்னாங்க. நான் பெருசா வளந்ததுக்கு அப்புறம் , என் முகத்தை பார்த்து தான் , நீங்க எப்படி இருப்பீங்கனு தெருஞ்சுக்க போறேன். இந்த லெட்டருக்கு நீங்க பதில் போட்டா ரொம்ப சந்தோஷப் படுவேன் டாடி.. பதில் போடுவீங்களா…” இன்று வரை தந்தையின் பதில் கடிதத்திற்காக சங்கர் காத்துக்கொண்டே தான் இருக்கிறான்.
அய்க்கஃப் இயக்கத்தின் மூலம் , பத்து மாணவ மாணவிகள் கொடைக்கானலில் உள்ள தாமரைக் குளம் என்ற ஊருக்கு , கல்வி , சுகாதார விழிப்புணர்வு முகாமிற்கு சென்றிருந்தோம் . செண்பகனூரில் இருந்து , பல கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதையில் நடந்தால் , தாமரைக் குளம் வரும் . மின்சார வசதி, பேருந்து வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை , ஏதுமற்ற நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட தீவு அது. அந்த ஊரில் மொத்தமே இருபது குடும்பங்கள் தான் இருந்தன . எல்லோரும் காலையில் காபி தோட்டத்திற்கு வேலைக்குப் போய் விட்டு, மாலையில் தான் வருவார்கள். அதன் பிறகு நாங்கள் அவர்களுக்கு, கல்வி கற்றுக் கொடுப்போம். சுகாதாரத்தை வலியுறுத்துவோம். கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். அறியாமையும், வெகுளித்தனமுமான மக்கள் அவர்கள். அந்த ஊரில் தபால்காரராக இருந்த முருகன் அண்ணன் மட்டுமே கொஞ்சம் விபரமானவர்.
ஒரு நாள் எங்களோடு முகாமில் இருந்த மாணவன் அமலன், “ நாளைக்கு ஒரு நாள் நான் கொடைக்கானல் போகனும் , ஒரு ஒர்க் இருக்கு “ என்றான். “ நீ பாட்டுக்கு கொடைக்கானல் போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் ? ஃபாதர் எங்களை தான் திட்டுவார். கேம்ப் ல பர்சனல் வேலைக்கு இடமில்லைனு தெரியுமில்ல? என மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் , யார் சொல்வதையும் கேட்காமல் கொடைக்கானல் கிளம்பிவிட்டான். அன்று மழை வேறு , ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் , ஆரஞ்சு மரங்களுக்கு நடுவே கொடைக்கானல் கிளம்பி போனான். அன்று இரவு , சோர்ந்து போய் வீடு திரும்பிய அவனை ஆளாளுக்கு திட்டி தீர்த்தோம் , எங்களுக்கு பதில் சொல்லவும் சக்தியற்று மயங்கி கிடந்தான். முகாமின் நிறைவு நாள் , காபி தோட்டத்தில் இருந்து திரும்பிய ஊர் மக்களிடம் , விடை பெற்றுக் கொண்டிருந்தோம் . அப்போது , பதட்டமாய் ஓடி வந்த தபால்காரர் முருகன் அண்ணன் , “ எல்லோருக்கும் லெட்டர் வந்திருக்கு என்றபடி , ஊரில் இருந்த அத்தனை பேருக்கும்… ஆண்கள் , பெண்கள், குழந்தைகள் என எல்லோருக்கும் வந்த கடிதங்களைக் கொடுத்தார். எழுதப் படிக்கத் தெரியாத அம்மக்கள் எங்களிடம் கடிதத்தை கொடுத்துப் படிக்க சொன்னார்கள் . “ இங்கே தங்கியிருந்த நாட்களில் எங்களை மிக நன்றாகக் கவனித்துக் கொண்டீர்கள், உங்கள் அன்பையும் , உபசரிப்பையும் எங்களால் மறக்கவே முடியாது , மிக்க நன்றி , “ என்று எழுதி , இப்படிக்கு … என்று , எங்கள் பத்து பேரின் பெயரும் இருந்தது. அது அமலனின் கையெழுத்து. எல்லோரும் அவனை நெகிழ்ச்சியாக பார்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன் தபால்காரர் முருகன் அண்ணன் , “ இந்த ஊரில் இது வரை ஒருவருக்கு கூட கடிதம் வந்ததேயில்லை.” என எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அதனால்தான் அமலன் அவ்வளவு அவசரமாக கொடைக்கானலுக்குப் போய், ஊரில் உள்ள அத்தனை பேருக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளான். அந்த மனசு நமக்கு இல்லாமல் போய்விட்டதே என பல நாட்கள் வருந்தி இருக்கிறேன்.
ஒரு பாட்டி , “ மொத மொத எனக்கு வந்த கடிதாசி , இதுதேன் .” எனச் சந்தோஷமாக, என் முகவாயைக் கொஞ்சினார். ஊரில் அத்தனை பேரும் தங்களுக்கு வந்த கடிதத்தை , கைகளில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் துள்ளினார்கள், நெகிழ்வதும், நெகிழ்த்துவதும் தான் வாழ்வின் அடிப்படை சூத்திரமென நான் உணர்ந்த நாள் அது.
தாமரைக்குளம் மக்களுக்கு வந்த முதல் கடிதமே , இறுதிக் கடிதமாக ஆகிவிடக் கூடாது, திருச்சிக்குப் போனதும், எல்லோருக்கும் தொடர்ந்து கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன். நினைப்பதையெல்லாம் செய்துவிடுகிறோமா என்ன ?
கடிதம் எழுதியவர்களை நிரந்தரமாகப் பிரிந்தாலும், எழுத்தின் வழி எப்போதும் அவர்கள் நம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இல்லையா?
ஏனோ தெரியவில்லை… சில நாட்களாக , யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டும் போல் இருக்கிறது… அகாலமாய் செத்துப்போன ரீட்டா அக்காவிற்கோ… என் அம்மா எரித்த கடிதங்களின் சாம்பலில் இருக்கும் முகவரிகளுக்கோ … படிக்காமல் கிழித்த கடிதத்தின் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கும் பூஜாவிற்கோ … தந்தையின் கடிதத்திற்காக… வாசலில் கரண்ட்டு கம்பம் போல் கால் கடுக்க காத்திருக்கும் சங்கருக்கோ … இரண்டாவது கடிதமும் எங்களிடம் இருந்து வரும் என காத்திருக்கும் தாமரைக்குள மக்களுக்கோ … சீக்கிரமே ஒரு கடிதம் எழுத வேண்டும்.
(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )