தீப்ஸ் நகரம் ப்ளேக் நோயினால் தாக்கப்படுகிறது. அப்போது நிமித்திகர்கள் லாயியஸ் மன்னனைக் கொன்றவனைக் கண்டு பிடித்துத் தண்டித்து விட்டால் பிளேக் நீங்கி விடும் என்கிறார்கள். கண் தெரியாத ஞானி தெரேஸியாஸை அழைக்கிறான் மன்னன் ஈடிபஸ். என்னிடம் எதுவும் கேட்காதே என்று சொல்லும் தெரேஸியாஸிடம் உண்மையைக் கூறுமாறு வேண்டுகிறான் ஈடிபஸ். தெரேஸியாஸ் சொல்கிறார். லாயியஸ் மன்னனைக் கொன்றது ஈடிபஸ்தான். ஈடிபஸ் மணம் செய்து கொண்டிருக்கும் லாயியஸின் மனைவியான ஜகோஸ்தா தான் ஈடிபஸின் தாய்.
பூர்வீகக் கதை என்னவென்றால், லாயியஸ் மன்னனுக்கும் அவன் மனைவி ஜகோஸ்தாவுக்கும் ஒரு ஆண் மகவு பிறக்கிறது. அந்தக் குழந்தை தந்தையைக் கொன்று விட்டுத் தன் தாயை மணந்து கொள்ளும் என்று நிமித்திகர்கள் சொல்ல, குழந்தையைக் கொன்று விடுமாறு சொல்லி ஒரு சேவகனிடம் கொடுக்கிறான் லாயியஸ். ஆனால் அந்தக் குழந்தை வேறொரு மன்னனிடம் போய்ச் சேர்ந்து விடுகிறது. அவன் தான் ஈடிபஸ். இளைஞனாக வளர்ந்த பிறகு ஈடிபஸ் ஒரு சண்டையின் போது ஒருவனைக் கொன்று விடுகிறான். அவன் தான் லாயியஸ் என்று பிறகுதான் தெரிகிறது. மகனையே மணந்தேனா என்ற அதிர்ச்சியில் தூக்குப் போட்டுக் கொள்கிறாள் ஜகோஸ்தா. இப்படி ஒரு பாவத்தைச் செய்த நான் இனி இந்த உலகைப் பார்க்கக் கூடாது என்று தன் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறான் ஈடிபஸ்.
கி.மு. 429-ஆம் ஆண்டு கிரேக்கத்தில் ஸோஃபாக்ளிஸ் எழுதிய இந்த நாடகத்தை கான்ஸ்டாண்டிநோப்பிள் நகரில் தன் இளம் வயதில் பார்த்ததாக எழுதுகிறார் ஸேனாப். இது மட்டும் அல்ல; பல்வேறு ஃப்ரெஞ்ச் நாடகங்களும் அந்நாளில் துருக்கியின் தலைநகரில் மேடையேறி இருக்கின்றன.
அவை பற்றியெல்லாம் விரிவாகத் தன் கடிதங்களில் எழுதும் ஸேனாப் அவற்றோடு ஒப்பிட்டால் ஃப்ரெஞ்ச் நாடக மேடை மிகச் சாதாரணம் என்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த காளைச் சண்டை பற்றியும் தன் வெறுப்பை எழுதுகிறார். ”ஒரு மாட்டைக் கொல்வது கேளிக்கையா? அந்த மாடு ஒரு மனிதனின் குடலை உருவிப் போடுவது கேளிக்கையா? இதையெல்லாம் நாகரீகமடைந்த சமூகம் என்று எப்படி நான் சொல்ல முடியும்? ‘எவ்வளவு பிரமாதமான நிகழ்ச்சி’ என்று வேறு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள்! ஆனால் என்னால் இந்தக் காட்டுமிராண்டி நிகழ்ச்சியைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.”
ஒரு ஐரோப்பிய நாட்டின் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரி ஸேனாபிடம் கேட்கிறார்: ”Have you anything to declare?” அதற்கு ஸேனாபின் பதில்: “Yes”, I hate your western ‘customs’ and my delight at being alive.”
1908-ஆம் ஆண்டு லண்டனுக்குச் செல்கிறார் ஸேனாப். லண்டன் போலீஸ்காரர்கள் துருக்கியைப் போல் லஞ்சம் வாங்குவதில்லை என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார். துருக்கியில் அவருக்குப் போலீஸைப் பார்த்தாலே அச்சமாக இருக்கும். லஞ்சமாக இல்லாவிட்டாலும் பக்ஷீஸாக (இனாம்) வாங்காமல் நகர மாட்டார்கள்.
“மற்றபடி லண்டன் வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டுகிறது. யாரும் யாருடனும் பேசிக் கொள்வதில்லை. எங்கு பார்த்தாலும் அமைதி. அது ஒன்றும் ஆரோக்கியமான அமைதியாகத் தெரியவில்லை. மயான அமைதி என்றே சொல்ல வேண்டும். சராசரிகள் மட்டுமே இங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மட்டுமே நதியின் போக்கோடு நீச்சலடிக்கத் தெரிகிறது.
நேற்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு முக்கியமான இரவு விருந்துக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பேச்சை எழுதிக் கொண்டு வந்து பேசினார்கள். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அதை விட ஆச்சரியம் என்னவென்றால், இந்த தேசத்தையே மாற்றப் போவதாக சபதம் எடுத்திருந்த பெண்கள் சிகரெட் குடிப்பதற்கு மற்றவர்களின் அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். துருக்கி எவ்வளவோ தேவலாம். நாங்கள் முகத்திரை அணிந்திருந்தாலும் நாங்கள் புகைப்பதற்கு அங்கே யாருடைய அனுமதியும் தேவையில்லை.
ஒரு பெண், பெண்களின் வாக்குரிமை பற்றிப் பேசினார். உடனே என் பக்கத்தில் இருந்தவர் ”இவள் முதலில் இன்று குளித்தாளா என்று தெரியவில்லையே, ஒரே நாற்றம் எடுக்கிறதே?” என்று கிண்டல் செய்தார். எப்பேர்ப்பட்ட போக்கிரிகள் பாருங்கள்.”
பிறகு அதிகார வர்க்கத்தின் போக்கு பற்றி பல பக்கங்கள் வர்ணிக்கிறார் ஸேனாப். எல்லாம் இன்றைய இந்தியா போல் இருக்கின்றன. மேலும் எழுதுகிறார்:
”இங்குள்ள தேவாலயங்களுக்குப் போனால் அதற்கும் ஆன்மீகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஒருவர் எளிதில் கண்டு கொள்ளலாம். கல்லூரி விரிவுரையாளரைப் போல் ஒரு பாதிரியார் விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்பதாக பாவனை செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அவர் ஏ பாவிகளே ஏ பாவிகளே என்று கத்த ஆரம்பித்தார். அதுவரை பொம்மை போல் நின்று கொண்டிருந்த அனைவரும் நடுக்கத்துடன் அவரைப் பார்த்தார்கள். ’ஏ பாவிகளே! ஏ பாவிகளே!’
நாம் என்ன பாவம் செய்தோம் என்று அவர் இப்படி நம்மைப் பார்த்து பாவிகளே பாவிகளே என்று கூவுகிறார்? நாம் ஏன் நம்மைப் படைத்தவன் முன்னே நின்று நடுங்கிக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் நம்மை நாமே பார்த்து அவமானம் அடைய வேண்டும்? ஏன் இந்தப் பொய்யான அடக்கம்? ஏன் இந்த நிரந்தர பயம்?
பிறகு நான் தேவாலயத்திலிருந்து கிளம்பிய போது அங்கே வந்திருந்த ஒரு பெண்ணும் என்னோடு கிளம்பினார். இரண்டு பேரும் தெருவில் நடக்க ஆரம்பித்தோம். சிறிது நேரத்தில் நான் அவருடைய மதத்தைச் சேர்ந்தவள் அல்ல என்ற விஷயம் தெரிந்தவுடன் அவருடைய தெய்வத்தின் மகிமைகளையும் அவருடைய மதம் வழங்கும் அனுகூலங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டார். இயேசு கிறிஸ்து பற்றி எனக்குத் தெரியாததையா அந்தப் பெண் சொல்லப் போகிறார்? ஆனால் அந்தப் பெண்ணுக்கு முகம்மது பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
லண்டனில் உள்ள லேடீஸ் கிளப்! என்ன சொல்ல? இதை விட எங்களுடைய ஹேரமே தேவலாம் என்று தோன்றுகிறது. இந்தப் பெண்களா விடுதலை அடைந்தவர்கள்? இன்னொரு முக்கியமான அதிர்ச்சி, மேலைநாட்டினராகிய நீங்கள் எவ்வளவு வேகமாகத் திருமணம் செய்து கொள்கிறீர்களோ அதை விட வேகமாக விவாகரத்தும் செய்து கொள்கிறீர்கள். அதிலும், ரத்து செய்து கொள்ளும் போது கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் குற்றச்சாட்டுகளைப் பார்க்கும் போது இது ஒரு நாகரீகமான தேசம்தானா என்றே எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.
”துருக்கி பற்றிய உங்கள் பயணக் கட்டுரையில் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண் 120 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளைப் பற்றி எழுதிய பயணக் குறிப்புகளைச் சேர்க்க வேண்டியதன் அவசியம் என்ன? இந்தப் பயணக் குறிப்புகள் இணையத்திலேயே ஆங்கிலத்தில் கிடைக்கிறதே?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். நான் துருக்கி சென்றது ஊர் சுற்றிப் பார்க்க மட்டும் அல்ல. ஊர் சுற்றிப் பார்ப்பதும் – முக்கியமாக கலாட்டா பாலத்தையும் அதை விட முக்கியமாக நீல மசூதியையும் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசை கொண்டிருந்தேன் – என் பயணத்துக்கான காரணங்களில் ஒன்று என்றாலும் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பாலமாக இருக்கும் அந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதில்தான் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் கயாவைப் பார்க்க எவ்வளவு ஆர்வம் கொண்டிருப்பாரோ அதே போன்றதுதான் துருக்கி பற்றிய என்னுடைய ஆர்வமும். மேலும், கீழை நாடுகள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மேலை நாட்டினரின் அபிப்பிராயங்கள் யாவும் கற்பிதமானவை என்ற என்னுடைய கருத்துக்கு ஸேனாபின் பயணக் குறிப்புகள் யாவும் ஆதாரமாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் அக்குறிப்புகளைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். ’இவையெல்லாம் இணையத்திலேயே கிடைக்கின்றன’ என்றால் உண்மைதான். இணையம் என்பது இதுவரை நாம் பார்த்து வந்த நூலகங்களையெல்லாம் விட பெரிய, பிரம்மாண்டமான நூலகம். பல முக்கியமான நூலகங்களெல்லாம் இணைய நூலகத்தில் இணைந்து விட்டன. இதில் நமக்குத் தேவையான நூலை எளிதில் எடுத்து விடலாம். ஆனால் ஸேனாப் என்ற பெயரைத் தெரிந்து கொள்ள நான் துருக்கிக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. அந்தப் பெயரை இணையம் என் செவிகளில் வந்து ஓதாது.
இங்கிலாந்தைச் சேர்ந்த W.T. Stead (1849-1912) என்பவர் புலனாய்வுப் பத்திரிகைகளின் தந்தையாகக் கருதப்படுபவர். இவர் ஸேனாபின் தந்தையின் நண்பர். ஸேனாபும் ஸ்டீடின் நூல்களைப் படித்திருக்கிறார். லண்டனில் இருந்த போது ஒருநாள் ஸேனாப் ஸ்டீடைப் பார்த்து வரலாம் என்று கிளம்புகிறார். ஸ்டீடுக்கு ஒரே ஆச்சரியம். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ஸேனாப் தான் தங்கியிருந்த லேடீஸ் கிளப்புக்குக் கிளம்புகிறார். அப்போது ஸ்டீட் ”வேறு எதுவும் உங்களுக்கு நான் செய்ய வேண்டுமா?” என்று கேட்கிறார்.
“இல்லையே…” என்று நட்பான குரலில் சொல்கிறார் ஸேனாப்.
”இல்லையா? சும்மா வெறுமனே என்னைப் பார்ப்பதற்காகவா வந்தீர்கள்?”
“ஆமாம். சும்மா உங்களைப் பார்த்துப் பேசி விட்டுப் போகத்தான் வந்தேன்” என்கிறார் ஸேனாப் சிரித்துக் கொண்டே.
“உங்களுக்கு ஒன்று தெரியுமா? இப்படி ஒருவர் என்னைப் பார்த்துப் பேசுவதற்காக மட்டுமே வருவது என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை.”
பிறகு ஸ்டீட் தன் பயணங்களின் போது சேகரித்த ஒரு பொருளில் ”துருக்கியைச் சேர்ந்த என்னுடைய ஒரே ஒரு தோழிக்கு…” என்று எழுதி அதில் தன் கையெழுத்தைப் போட்டு ஸேனாபிடம் கொடுக்கிறார்.
மேலைநாட்டினரின் வாழ்க்கை எந்த அளவுக்கு லௌகீகம் சார்ந்ததாக இருந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரே சம்பவம் போதும். சொந்தக் காரியம் இல்லாமல் நட்பு ரீதியாகத் தன்னைப் பார்க்க வந்த ஒரே நபர் ஸேனாப் தான்; இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடந்ததே இல்லை என்கிறார் ஸ்டீட். இன்றும் கூட மேலைநாட்டினரின் வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்கிறது.
வெனிஸுக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது ’பெண்களுக்கு மட்டும்’ என்று எழுதப்பட்ட பெட்டியில் ஏறுகிறார் ஸேனாப். அவர் ஒன்றும் இந்த ‘ஹேரம்’ கம்பார்ட்மெண்ட்டில் பிரியப்பட்டு ஏறவில்லை; மற்ற பெட்டிகளில் இடம் கிடைக்கவில்லை என்பதால் ஏறினார். ஏறியதிலிருந்தே அந்தப் பெட்டியில் இருந்த மத்திய வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ஸேனாபுடன் வளவள என்று பேசிக் கொண்டிருந்தார். திருமணம் ஆகாத பெண் என்று தெரிகிறது. ஒரு சராசரி ஐரோப்பிய ஃபிலிஸ்டைன். அவ்வளவுதான். ரயில் வெனிஸை நெருங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பெட்டிக்குள் நுழைந்த இரண்டு இத்தாலிய அதிகாரிகள் மிலனிலிருந்து தாங்கள் நின்று கொண்டே வருவதாகவும் வெனிஸில் இறங்கும் வரை கால் மணி நேரம் மட்டும் அமர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்கிறார்கள். உடனே அந்த ஆங்கிலேய மாது மிக மோசமாகத் திட்ட ஆரம்பித்து விடுகிறார். அதோடு மட்டும் இல்லாமல் தான் சொல்வதை அந்த இத்தாலிய அதிகாரிகளிடம் ஸேனாப் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும் என்றும் சொல்கிறார். ”இவ்வளவு இரக்கமற்ற வார்த்தைகளையெல்லாம் நான் மொழிபெயர்க்க மாட்டேன்” என்கிறார் ஸேனாப்.
அதிகாரிகளில் ஒருவர் ஸேனாபைப் பார்த்து “நீங்களும் ஆங்கிலேயர் தான் என்று நினைக்கிறேன். தயவுசெய்து அந்தப் பெண்மணியிடம் சொல்லுங்கள். வெறும் கால் மணி நேரம்தான். அதற்குள் வெனிஸ் வந்து விடும். எங்களால் அந்தப் பெண்மணிக்கு எந்த ஆபத்தும் நேராது” என்கிறார். அதற்குள்ளாகவே அந்தப் பெண் எழுந்து போய் அபாயச் சங்கிலி இருக்கிறதா என்று தேடுகிறார். பிறகு ரயில்வே அதிகாரி யாராவது இருக்கிறார்களா என்று அங்குமிங்கும் போய்த் தேடுகிறார். அதற்குள் வெனிஸ் வந்து விடுகிறது. அதிகாரிகள் “கால் மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டோம். அந்தப் பெண்மணியிடம் எங்கள் நன்றியைத் தெரிவித்து விடுங்கள்” என்று ஸேனாபிடம் சொல்லி விட்டு இறங்குகிறார்கள்.
***
Strabo என்பவர் ஒரு கிரேக்கத் தத்துவ ஞானி. ஆனால் தத்துவத்தை விடவும் அவர் வரலாறு மற்றும் நிலவியலில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். ரோமாபுரிப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் வாழ்ந்தவர். பிறப்பு கி.மு. 63. இறப்பு கி.பி. 24. அவர் Geographika என்ற தலைப்பில் 12 தொகுதிகளாலான புத்தகம் ஒன்றை எழுதினார். அந்த அரிய புத்தகமும் இப்போது இணையத்தில் பிடிஎஃப் வடிவத்தில் கிடைக்கிறது. அதில் அவர் கப்படோச்சியா (Cappadocia) பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவர் காலத்தில் கப்படோச்சியா இன்னும் பெரிதாக விரிந்திருந்தது. நூறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள மலைகள் எரிமலைகளாக இருந்தன. அதன் வெடிப்புகளே (லாவா) இப்போது காளான் குன்றுகளாக வடிவம் எடுத்துள்ளன.
மேலே உள்ள புகைப்படங்கள் நானும் என் பயணக்குழுவினரும் எடுத்தவை. கீழே உள்ளது இணையத்தில் கிடைக்கிறது.
கைஸேரி என்ற ஒரு பெரிய மாவட்டமே மேலே கண்ட குன்றுகளாக நிரம்பியுள்ளது. ஒரு கோடி இருக்கலாம்; பத்து கோடி இருக்கலாம். எனக்கு சரியாகத் தெரியவில்லை.
மேலே ஒரு புகைப்படத்தில் வீடு போல் தெரிகிறது அல்லவா? எரிமலைக் குழம்பு லட்சக் கணக்கில் கோடிக் கணக்கில் காளான்களைப் போல் வடிந்து விட்டன. மனிதர்கள் அதையெல்லாம் குகை வீடுகளாக மாற்றி விட்டார்கள். கைஸேரியில் அப்படிப்பட்ட ஒரு குகை வீட்டில்தான் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். குகையின் உள்ளேயே மேல் அடுக்குக்குச் செல்ல படிக்கட்டுகளை வெட்டிக் குடைந்திருந்தார்கள். சில இடங்களில் தவழ்ந்துதான் ஏற வேண்டியிருந்தது. அறையும் அந்தக் காலத்து குகை மனிதன் வாழ்ந்த குகை தான். அதிலேயே வெஸ்டர்ன் டாய்லட் போன்ற வசதிகளை வைத்திருக்கிறார்கள். நின்றால் மேலே தளம் இடிக்கும். நூறு குகைகளைக் கொண்டிருந்தது நான் தங்கியிருந்த ‘ஓட்டல்’.
ஒருநாள் சூடான காற்றினால் இயங்கும் பலூனில் ஏறினேன். ஹார்ட் அட்டாக் வந்து ஐந்து மாதங்களே ஆகியிருந்தன. ஒரு மாடி ஏறினாலே நெஞ்சு வலி. ஆனாலும் கைஸேரியில் நான்கு மாடிகளை செங்குத்துப் படிகளில் ஏறினாலும் நெஞ்சு வலி வரவில்லை. இதில் எந்த சைக்காலஜியும் இல்லை. நெஞ்சு நிறைய பயம் இருந்தது. துருக்கியில் இருந்த மிதமான குளிரும் அதற்கும் மேல் அந்த ஆரோக்கியமான உணவும்தான் நான் சுறுசுறுப்பாக இயங்கியதற்கும் நெஞ்சு வலி வராமல் இருந்ததற்கும் காரணம் என்று நினைக்கிறேன்.
நாங்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த ஹாட் ஏர் பலூன் ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறினால் தரை இறங்கும் போது பிரச்சினை ஆகி விட்டது. பிறகு அதைச் செலுத்தியவர் – விமானி என்று சொல்லக் கூடாது; வேறு என்ன வார்த்தையால் சொல்ல? – சமயோஜிதமாகச் செயல்பட்டு பலூனை ஒரு மரத்தில் இறக்கினார்.
(சாருநிவேதிதா எழுதும் இத்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும். தொடர் பற்றிய கருத்துக்களை editorial@andhimazhai.com -க்கு அனுப்பலாம்)
டிசம்பர் 25 , 2015