ஆர்த்தமிஸ் ஒரு புராதன கிரேக்கக் கடவுள். ஸீயஸின் (Zeus) மகள். ரோமப் பழங்கதைகளில் அவள் பெயர் டயானா. அப்பல்லோவின் சகோதரி. வேட்டையின் கடவுள். ஓவியங்களிலும் சிற்பங்களிலும் இவள் வில்லும் அம்புமாகவும், வேட்டையாடப் பட்ட விலங்குகளோடும் சித்தரிக்கப்படுகிறாள். ஆர்த்தமிஸை இந்தியாவில் வணங்கப்படும் காளிக்குச் சமமாக சொல்லலாம். கிரேக்க, ரோம புராணங்களில், மக்களின் வழிபாடுகளில் ஆதித்தாய்க் கடவுளாகக் கருதப்படுபவள் ஆர்த்தமிஸ். இன்று அர்த்தமிஸ் கோவிலின் ஒரே ஒரு தூண் தான் காணக் கிடைக்கிறது. அவளுடைய மார்பில் தொங்கும் முலைகள் கருவுறுதல் மற்றும் செழிப்பின் குறியீடாகக் கருதப்படுகிறது.
உலக சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றவளும் சராசரி மனிதர்களுக்கும் கூட பரிச்சயமான ஓர் அரசி கிளியோபாட்ரா. எகிப்தில் ஃபேரோக்களின் ஆட்சியில் டாலமி வம்சத்தின் கடைசியாக வந்த அரசி. கி.மு. 51-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது அவள் வயது 18 தான். ஆட்சியை அவளது தகப்பன் 12-ஆம் டாலமியோடு பகிர்ந்து கொண்டாள். தந்தை இறந்த பிறகு 13-ஆம் டாலமி, 14-ஆம் டாலமி என்று அழைக்கப்பட்ட தனது சகோதரர்களுடன் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டாள். இதற்காக அப்போதைய எகிப்திய வழக்கப்படி அவர்களை மணமும் செய்து கொண்டாள். இந்த சகோதரர்களுக்கும் கிளியோபாட்ராவுக்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டி மிகவும் சுவாரசியமானது. இப்போது தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல அப்போதைய நிலை. கிளியோபாட்ரா தன் உருவத்தை நாணயத்தில் பதித்தாள். கணவனும் சகோதரனுமான டாலமியின் படம் அதில் இல்லை. சகோதரனை விட கிளியோபாட்ராவுக்கே மக்களிடையே செல்வாக்கு இருந்தது. காரணம், டாலமி அரசர்கள் தாங்கள் ஆளும் தேசத்தின் எகிப்திய மொழியை ஒதுக்கித் தள்ளி விட்டு கிரேக்க மொழியையே அரசு மொழியாக பாவித்து வந்தனர். கிளியோபாட்ராவுக்குப் பல மொழிகள் தெரியும். அவள் கிரேக்க, எகிப்திய மொழி இரண்டையும் அரச மொழியாக்கினாள். இப்படிப்பட்ட செயல்களால் எகிப்திய மக்கள் கிளியோபாட்ராவை கடவுளாகவே போற்ற ஆரம்பித்தனர்.
கிளியோபாட்ரா பல்வேறு முறைகளில் தன்னுடைய முக்கியத்துவத்தைக் குறைப்பதைப் பார்த்து 13-ஆம் டாலமி போத்தினஸ் என்ற திருநங்கையோடு சேர்ந்து கொண்டு அவளை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சி செய்தான். அதில் வெற்றி பெறவும் செய்தான். கிளியோபாட்ரா எகிப்திலிருந்து தப்பி சிரியாவுக்கு ஓடினாள். அங்கே ஒரு தனிப்படையையும் திரட்டினாள்.
Pompey என்பவன் ஒரு புகழ் பெற்ற ரோமானியத் தளபதி. ரோமின் ஆட்சிக்காக ஜூலியஸ் சீஸருடன் பாம்ப்பீயும் போட்டியிட்டு அதற்காக நடந்த போரில் தோற்று எகிப்து வந்து சேர்ந்தான். 13-ஆம் டாலமி முதலில் அடைக்கலம் கொடுப்பது போல் நடித்து ஜூலியஸ் சீஸர் எகிப்துக்கு வந்து சேர்ந்ததும் கிளியோபாட்ராவுக்கு எதிராக அவனுக்கு சீஸரின் ஆதரவு தேவைப்பட்டதால் சீஸரை சந்தோஷப்படுத்துவதற்காக பாம்ப்பீயைக் கொன்று அவனுடைய தலையைத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தான். ஆனால் சீஸர் இதைச் சற்றும் ரசிக்கவில்லை. பாம்ப்பீயின் உடலைத் தேடி எடுத்து அவனுக்கு ரோமானிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டான். இதற்கிடையில் சீஸருக்கும் கிளியோபாட்ராவுக்கும் காதல் ஏற்பட்டது. சீஸர் கிளியோபாட்ராவை மீண்டும் எகிப்தின் ராணியாக்கினான். அப்போது சீஸரின் படைகளுக்கும் 13-ஆம் டாலமியின் படைகளுக்கும் நடந்த போரின் போது டாலமி நைல் நதியில் மூழ்கி இறந்தான்.
கிளியோபாட்ராவைப் பற்றிப் படிக்கும் போதெல்லாம் அவள் கதை ஒரு பிரம்மாண்டமான நாவலுக்கான களனாக இருக்கும் என்று தோன்றும். ஏனென்றால், அவளுடைய சகோதரன் 13-ஆம் டாலமி போரில் இறந்ததும் அவள் தன்னுடைய இளைய சகோதரனான 14-ஆம் டாலமியைத் திருமணம் செய்து கொண்டாள். இது நடந்தது கி.மு. 47, ஜனவரி 13. (வரலாற்றை எவ்வளவு துல்லியமாக வைத்திருக்கிறார்கள்!) ஆனால் கிளியோபாட்ரா காதல் புரிந்ததெல்லாம் ஜூலியஸ் சீஸருடன். இரண்டையுமே அவள் பகிரங்கமாகச் செய்தாள். இந்த நிலையில் கி.மு. 44, மார்ச் 15-ஆம் தேதி சீஸர் கொல்லப்பட்டான். சீஸர் இறந்ததுமே கிளியோபாத்ரா தன் தம்பியும் கணவனுமான 14-ஆம் டாலமிக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டு, ஜூலியஸ் சீஸருக்கும் தனக்கும் பிறந்த புதல்வன் சிஸேரியனை அரசனாக்கினாள். அதோடு, மார்க் ஆண்டனியைக் காதலித்து அவனுக்கு மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவளுக்கும் அவளுடைய சகோதரர்களுக்கும் நடந்த திருமணத்தில் அவளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. சீஸருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆக்டேவியனோடு நடந்த சண்டையில் தோற்று மார்க் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான். அதைத் தொடர்ந்து கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டாள்.
கி.மு. 30-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இறந்தாள் கிளியோபாட்ரா. அதன் பிறகு எகிப்து ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக ஆனது.
கிளியோபாட்ரா என்ற பெயரில் 1963-இல் எலிஸபத் டெய்லரும் ரிச்சர்ட் பர்ட்டனும் நடித்த ஒரு பிரம்மாண்டமான திரைக்காவியம் வந்திருக்கிறது. மற்றொரு காவியம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா. அதன் முதல் காட்சியே நம் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கும். ஆண்டனி கிளியோபாட்ராவுடன் அலக்ஸாண்ட்ரியா நகரில் இருக்கிறான்.
கிளியோபாட்ரா கேட்கிறாள், நீ என் மீது கொண்டுள்ளது உண்மையிலேயே காதல் என்றால் அது எவ்வளவு ஆழமானது?
ஆண்டனி: அதை அளவிடுவது ரொம்பவும் கீழ்மைப்படுத்துவதாக இருக்கும்.
கிளி: எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது எவ்வளவு ஆழம்? எவ்வளவு நீளம்?
ஆண்டனி: அப்படி நீ அளந்துதான் பார்க்க விரும்பினால் பூமியையே தாண்டி, சொர்க்கத்தையும் தாண்டிப் போக வேண்டியிருக்கும்.
அப்போது ஒரு சேவகம் ரோமிலிருந்து கடிதம் கொண்டு வருகிறான். காதல் மயக்கத்தில் ஆண்டனிக்கு அதைப் படிக்க மனமில்லை. படித்துப் பார், ஏதாவது முக்கிய செய்தி இருக்கப் போகிறது என்கிறாள் கிளியோபாட்ரா.
”உன் மனைவி ஃபுல்வியா உன் மீது கோபமாக இருக்கப் போகிறாள்; அந்தப் பச்சைக் குழந்தை சீஸர், ‘அதைச் செய், இதைச் செய், அந்த நாட்டைப் பிடி, இந்த நாட்டை விடுதலை செய், உடனே போ, இல்லாவிட்டால் நீ அவ்வளவுதான்’ என்று ஏதாவது உத்தரவு அனுப்பியிருக்கப் போகிறான்; படித்துப் பார் ஆண்டனி.”
அதற்கு ஆண்டனி சொல்லும் பதில் - என் கல்லூரிப் பருவத்தில் படித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.
Let Rome be washed away in the Tiber and let the great empire fall. My place is here. Kingdoms are only dirt.
ரோம் திபர் நதியில் அடித்துக் கொண்டு போகட்டும்; ரோம் சாம்ராஜ்யம் வீழட்டும். எனக்குக் கவலையில்லை. என் இடம் இதுதான். சாம்ராஜ்யமெல்லாம் குப்பை. நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதுதான் இந்த உலகிலேயே உன்னதமான காரியம்.
எஃபெசூஸில் மேலும் சில சுவாரசியங்களைப் பார்த்தேன். நகரில் பிராத்தல் என்று ஒரு இடம் இருக்கிறது. விபச்சார விடுதி. அதன் நுழைவாயிலில் ஒரு காலடித் தடம் காணப்படுகிறது. அந்தக் காலடி அளவுக்குக் குறைந்த அளவுள்ள பாதத்தைக் கொண்டவர்கள் விடுதிக்குள்ளே செல்ல முடியாது. 2500 ஆண்டுகளுக்கு முன்னே எவ்வளவு தீர்க்கமாக யோசித்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்னொரு ஆச்சரியம். இதுவரை எந்தப் புராதன வரலாற்றுச் சின்னங்களிலும் கழிப்பறையைப் பார்த்ததில்லை. இந்தியாவில் பிரம்மாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆக்ராவின் ஃபதேபூர் சிக்ரியின் கோட்டையில் அரச குமாரிகள் சேடிகளோடு கண்ணாமூச்சி விளையாடும் இடமெல்லாம் இருக்கும். ஆனால் கழிப்பறை எங்கே இருந்தது என்பதற்கு எந்த அடையாளமும் தெரியாது. ஆனால் எஃபெசூஸ் நகரில் western closet என்று சொல்லப்படும் கழிப்பறைகள் கற்களால் வரிசையாகக் கட்டப்பட்டுள்ளன.
எஃபெசூஸில் கிளியோபாட்ரா குளித்த நீச்சல் குளம் உள்ளது. இங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து சென்றால் உலகின் பெரும் அதிசயங்களில் ஒன்றான ’பாமுக்கலே’யைப் பார்க்கலாம்.
மேலே உள்ள படங்களைப் பாருங்கள். மேலிருந்து கீழே அடுக்கு அடுக்காக இயற்கையாக உண்டாகியிருக்கும் குளங்களில் நீல நிறத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அந்த மண் கொழகொழவென்று மாவைப் போல் வெள்ளை வெளேரென்று பரவியிருக்கிறது. அதில் 17 வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவை அந்த ஸ்படிக மண்ணில் சிறு சிறு குளங்களாகத் தேங்கியிருக்கின்றன. இந்த மண்ணில் கால்ஷியம் கார்பொனேட் இருப்பதாக அறிந்தேன்.
இங்கே காலணி அணிந்து செல்ல அனுமதி இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நீரிலும் மண்ணிலும் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலே தெரிவதெல்லாம் வெண்ணிற உறை பனி அல்ல. கால்ஷியம் கார்பொனேட் கலந்த மண். பல நூறாண்டுகளாகப் படிந்த படிவுகள்.
மார்ச் 19 , 2016