தொடர்கள்

நிலவு தேயாத தேசம் – 22

சாரு நிவேதிதா

ஆகஸ்ட் 13, 1822 அன்று காலை கண் விழித்ததும் காதரீன் எமரிச் என்ற ஜெர்மானிய கன்னிகாஸ்த்ரீக்கு முந்தின இரவில் கண்ட கனவு ஞாபகம் வந்தது.  அந்தக் கனவில் கன்னி மேரி ஏதோ ஒரு மலைப்பகுதியில் கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு சிறிய குடிசை போன்ற இடத்தில் வசிக்கிறார்.  கன்னி மேரியின் வயது அப்போது 64 வயதும் 23 தினங்களும் ஆகியிருக்கின்றன.  அன்றைய தினம் கன்னி மேரி இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு மேலுலகம் செல்கிறார்.

காதரீன் எமரிச் 1774-ஆம் ஆண்டு பிறந்து 50 ஆண்டுகள் வாழ்ந்து 1824-இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  எமரிச்சுக்கு சிறு வயதிலிருந்தே கனவில் பல காட்சிகள் தோன்றுவதுண்டு.  அவற்றின் தனித்தன்மை என்னவென்றால், அந்தக் கனவுலகத் தோற்றங்கள் யாவும் நிஜ வாழ்வில் சோதனை செய்து பார்க்கும் போது அப்படியே நிஜமாக இருக்கும்.  அப்படியாகத்தான் கன்னி மேரி முதுமையடைந்து மலைப்பாங்கான பகுதியில் ஒரு சிறிய கல்குடிலில் வசித்து வருவது இவர் கனவில் தோன்றியது.  அந்தக் காட்சிகளை Clemens Brentano என்ற ஜெர்மானியக் கவிஞரிடம் விவரித்தார் எமரிச். 

எமரிச் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது அவரைப் பார்ப்பதற்காகச் சென்ற நண்பர்கள் குழுவில் ஒருமுறை ப்ரெந்த்தானோவும் இருந்தார்.  அவரைப் பார்த்த

(காதரீன் எமரிச்)

மாத்திரத்தில் எமரிச், ”இவரையும் நான் கனவில் கண்டேன்; இவரிடம்தான் கன்னி மேரியின் பிற்கால வாழ்வைப் பற்றிச் சொல்லுமாறு நான் பணிக்கப்பட்டேன்” என்றார்.  அது நடந்தது 1819.  அதன் பிறகு அவர் உயிர் பிரியும் தருணம் வரை ஆறு ஆண்டுகள் அவர் சொல்லச் சொல்ல அவரது கனவுக் காட்சிகளை நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டார் ப்ரெந்த்தானோ.  அந்தக் குறிப்புகள் ப்ரெந்த்தானோவின் மரணத்துக்குப் பிறகு The Life of The Blessed Virgin Mary From the Visions of Anne Catherine Emmerich என்ற தலைப்பில் வெளிவந்தது.  அந்த நூலின் மின்நூல் வடிவம்:

கிறித்தவ வரலாற்றிலும் அது தவிர மதங்களின் வரலாற்றிலும் ஈடுபாடுள்ள நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. பைபிளிலும் யூதர்களின் புனித நூலான ’தோரா’விலும் வரும் நூற்றுக் கணக்கான கதைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 

’தோரா’வில் விவரிக்கப்படும் தீர்க்கதரிசி பலாம் கழுதையில் வருகிறான்.  அவன் முன்னே வரும் தேவதையிடம் பேசுகிறான்.  எமரிச்சின் கனவிலும் இந்தக் காட்சி சித்தரிக்கப்படுகிறது.

காதரீன் எமரிச்சின் இன்னொரு நூலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  The Dolorous Passion of Our Lord Jesus Christ என்ற அந்தப் புத்தகம்தான் தனது The Passion of The Christ படத்தின் ஆதாரம் என்று கூறுகிறார் மெல் கிப்ஸன்.

அந்த நூலின் மின்நூல் வடிவம்:

மேலே குறிப்பிட்ட இரண்டு நூல்களும் கிறித்தவ இலக்கியத்தின் பொக்கிஷங்கள் மட்டுமல்ல; காவிய வகை இலக்கியமாகவும் கருதத் தக்கவை.      

இன்று வரை மெல் கிப்ஸனின் படத்தை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்ததில்லை.   எமரிச்சின் நூலைப் படித்த பிறகு இன்னொரு முறை முயற்சித்த போதும் அது சாத்தியமாகவில்லை.  சினிமாவில் எத்தனையோ வன்முறைக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் இயேசு என்ற அந்த மகத்தான புருஷன் சாட்டையாலும் சங்கிலியாலும் இரும்பு ஆணிகள் பூட்டப்பட்ட வாரினாலும் அடிபட்டு சதை கிழிந்து தொங்கும் போது அதைப் பார்க்கும் அளவுக்கு மனதில் திடமில்லாமல் போகிறது.  காரணம், அந்தக் காட்சி நேராக என்னை கி.பி. 33-ஆம் ஆண்டுக்குக் கொண்டு சென்று விடுகிறது. 

*** 

இயேசுவின் மரணத்துக்குப் பிறகு கன்னி மேரி, சீயோன் மலையில் மூன்று ஆண்டுகளும் பெத்தானி மலையில் மூன்று ஆண்டுகளும் கடைசியாக எஃபசஸில் ஒன்பது ஆண்டுகளும் வாழ்ந்தார்.  பவுல்தான் கன்னி மேரியை எஃபசஸ் அழைத்து வந்தவர்.

“அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீடனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

பின்பு அந்தச் சீடனை நோக்கி, அதோ, உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்.”  யோவான் 19: 26,27.   

”அப்பல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எஃபசஸுக்கு வந்தான்.”

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு ஜெருசலேமில் நடந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து சிலர் மலைப்பாங்கான எஃபசஸுக்கு வந்தார்கள். அப்படியாகத்தான் பவுல் கன்னி மேரியையும் எஃபசஸ் அழைத்து வந்திருக்க வேண்டும்.   

கன்னி மேரி தன்னுடைய இறுதி நாள் வரை வசித்த  கல்வீடு இப்போது ஒரு புனித ஸ்தலமாக கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது.  ஏராளமான முஸ்லீம்களும் இங்கே வருகிறார்கள்.  சராசரியாக ஒரு ஆண்டில் பத்து லட்சம் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வருகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.  ஆனால் 1811 வரை - காதரீன் எமரிச்சின் கனவில் வரும் வரை - இப்படி ஒரு இடம் இருந்ததே யாருக்கும் தெரியாது.  இதுவரை மூன்று போப்பாண்டவர்கள் இங்கே வந்து போயிருக்கிறார்கள். 

என்னைப் பொறுத்தவரை பயணம் என்பது வரலாற்றின் முன்னும் பின்னுமாக ஊடாடுவதுதான்.  மேலே உள்ள படத்தில் தெரியும் கற்களால் ஆன கட்டிடம் வரலாறு தெரியாத ஒருவருக்கு ஒரு பழைய, இடிந்து போன வீடாகத்தான் தெரியும்.  அதனால்தான் அந்த அமெரிக்கக் கிழவர் எஃபெசஸை ’கல் குவியல்’ என்று வர்ணித்தார். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குடிலில்தான் மேரி மாதா தனது இறுதிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும் போது நம் மனக்கண்முன் தோன்றும் காட்சிகளும் வசனங்களும் அதி அற்புதமானவை. 

அந்தக் குடிலின் எதிரே நான் பல மணி நேரம் அமர்ந்திருந்தேன். 

யூதர்களுடைய பஸ்கா பண்டிகை சமீபத்திருந்த வேளையில் யேசு ஜெருசலேம் செல்கிறார்.  தேவாலயத்தில் ஆடுகளையும் மாடுகளையும் புறாக்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது கயிற்றினால் ஒரு சவுக்கை உண்டுபண்ணி அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு, காசுக்காரர்களின் காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி, இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள், என் பிதாவின் வீட்டை வியாபார ஸ்தலமாக்காதீர்கள் என்றார். 

நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

 சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.

 யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?

 யேசு தாமஸிடம் சொன்னார்: நீ என்னைக் கண்டதினாலே விசுவாசிக்கிறாய்.  காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து, உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, அநேக தூஷண வார்த்தைகளையும் சொன்னார்கள். 

 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு ஸ்த்ரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.

 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்.

 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்.  ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களை நேசியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.  உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 

 என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரரும் விசேஷித்தவைகள் அல்லவா?

 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பிதா பிழைப்பூட்டுகிறார்.  அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் இல்லையா?

 காட்டுப் புஷ்பங்களைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை; நூற்கிறதுமில்லை.

 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி, நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போட வகை பார்ப்பாய்.

 மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாகும். 

 இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இறை வசனங்களை தியானித்தபடி அன்னையின் ஆலயத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தேன். 

கன்னி மேரியின் வீட்டின் உட்புறம். 

அங்கிருந்து கிளம்பும் போது சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பார்த்தேன்.  ஒரு சுவரில் ஆயிரக் கணக்கான காகிதங்கள் கயிற்றில் கட்டப்பட்டிருந்தன.  அங்கே நம்முடைய பிரார்த்தனையை எழுதி வைத்தால் பலிக்கும் என்றார்கள்.  ஒன்றுதான் எழுதலாமா, நிறைய எழுதலாமா என்று பக்கத்திலிருந்து பெண்ணிடம் கேட்டேன்.  நிறைய எழுதுங்கள்; ஏதாவது ஒன்று நடக்கும் என்றார் சிரித்துக் கொண்டே.  கேளுங்கள், கொடுக்கப்படும் என்ற வசனம் வேறு நினைவு வந்தது.  ரெண்டு மூணு விஷயங்களை எழுதி வைத்தேன். 

மார்ச்   29 , 2016