வெறுமனே இடி விழுந்ததால் மட்டும் நெஃபிக்கு மரண தண்டனை விதிக்கவில்லை அரசன். நெஃபி தொடர்ந்து தன் கவிதைகளின் மூலம் அரசு நிர்வாகத்தைக் கிண்டல் செய்து கொண்டே இருந்தார். அதுதான் அவரது மரண தண்டனைக்குக் காரணமாக இருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவருடைய கிண்டல் அவரை விட்டுப் போகவில்லை. அதற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் சொல்லப்படுகிறது.
அரசனின் அறையை விட்டு வெளியே வந்த நெஃபி அங்கேயிருந்த அரண்மனை அதிகாரியிடம் அரசனுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டார். அதிகாரியும் எழுத அமர்ந்தார். அந்த அதிகாரி ஆஃப்ரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கறுப்பின மனிதர். அவர் நெஃபி கேட்டுக் கொண்டபடி விண்ணப்பத்தை எழுத ஆரம்பித்தார். அப்போது அவருடைய பேனாவிலிருந்து ஒரு துளி கறுப்பு மை கிழே சிந்தியது. உடனே நெஃபி, ஐயா உங்கள் வியர்வை கீழே சிந்துகிறது என்றாராம். அந்த அதிகாரி உடனடியாக விண்ணப்பப் படிவத்தைக் கிழித்துப் போட்டு விட்டு நெஃபியை மரண தண்டனையை நிறைவேற்றும் காவலனிடம் கொடுத்திருக்கிறார்.
ஹூசுன் பற்றி நண்பர் ரியாஸ் ஒரு கேள்வியை அனுப்பியிருந்தார். “அரபியில் ஹூசுன் (Husun) என்றால் அழகு என்றல்லவா பொருள்? துருக்கியில்தான் ஹுசுன் என்றால் துயரமா? அப்படியானால் குரானில் எப்படி துயரம் என்ற அர்த்தத்தில் ஹுசுன் பயன்படுத்தப்பட்டிருக்கும்?”
ரியாஸின் கேள்வியைக் கண்டு ஓரான் பாமுக்கின் இஸ்தாம்பூல் நூலை மீண்டும் புரட்டினேன். அதில் ஹூசுன் பற்றிய அத்தியாயத்தில் பாமுக் தெளிவாக எழுதியிருக்கிறார்.
“துயரம் என்பதற்கான துருக்கியச் சொல் ஹூசுனுக்கு ஒரு அராபிய மூலம் உண்டு. குரானில் இச்சொல் இடம்பெறும் போது இரண்டு செய்யுட்களில் ஹூஸ்ன் என்றும் மூன்றில் ஹசென் என்றும் தற்காலத் துருக்கியச் சொல் உணர்த்தும் அதே பொருளைத்தான் குறிப்பதாக உள்ளது. இறைத்தூதர் முகம்மது ஒரே வருடத்தில் தன் மனைவியையும் மாமாவையும் இழந்ததைக் குறிப்பிடும் போது ‘ஸெனத்துல் ஹூஸ்ன்’ – துயரார்ந்த வருடம் – என்கிறார். ஆழமான ஆன்மீக இழப்பு ஒன்றைக் குறிப்பிடும் சொல் என்பது இதன் மூலம் உறுதிப்படுகிறது.”
(இஸ்தாம்பூல் – ஓரான் பாமுக்: ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பு. பக்கம் 111)
பிறகு குரானில் பாண்டித்யம் கொண்ட அறிஞர்களைக் கேட்டு ரியாஸ் எழுதினார். Husun என்றால் அழகு (குரான் 41:33); Huzun என்றால் துயரம் (குரான் 9:40). ஆரம்பத்திலேயே நான் ஹூஸுன் என்று எழுதியிருக்க வேண்டும்.
ஆனால் பாமுக்கைப் போல் நான் ஹூசுனை இஸ்தாம்பூல் நகரில் மட்டும் உணரவில்லை. ஐரோப்பா முழுவதுமே உணர்ந்தேன். எப்படி என்று விவரிப்பதற்கு முன்பு நாம் இரண்டு துருக்கியக் கவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர், உலகப் புகழ் பெற்ற நஸீம் ஹிக்மத் (1902 – 1963). இப்போதைய ஓரான் பாமுக் அளவுக்கு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்ட கவிஞர் அவர். மார்க்ஸீயவாதி. பாமுக்கைப் போலவே துருக்கியரின் ஆர்மீனியப் படுகொலைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியவர். ”நஸீம் ஹிக்மத்தை உலகம் அறியும்; ஆனால் துருக்கி அறியாது” என்று எழுதினார் நஸீமின் வாரிசாகக் கருதப்படும் மற்றொரு துருக்கியக் கவி அத்தோல் பெராமோக்ளு Ataol Behramoğlu (பிறப்பு: 1942).
ஓரான் பாமுக் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு துருக்கி அரசு வழக்குத் தொடர்ந்த போது உலகமே அதை எதிர்த்ததையும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் துருக்கி அரசுக்குக் கொடுத்த நெருக்கடிக்குப் பிறகு பாமுக் மீதான வழக்கை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டதையும் நாம் அறிவோம். ஆனால் துருக்கியின் அரசியல் வரலாற்றில் இது ஒன்றும் புதிது அல்ல. எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் எதிரான துருக்கிய அரசு நடவடிக்கைகளுக்கு முதல்முதலில் ஆளானவர் நஸீம் ஹிக்மத்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நஸீம் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறைகளிலும் நாடுகடத்தப்பட்டவராகவுமே கழித்தார். 1920களில் அவர் ரஷ்யாவில் இருந்த போது மாயகாவ்ஸ்கியின் தாக்கம் அவரிடம் அதிகம் ஏற்பட்டது. அதன் விளைவாக உருவான நஸீம் ஹிக்மத்தின் கவிதைகள் அதுவரையிலான துருக்கியக் கவிதையின் போக்கையே மாற்றின. நவீன துருக்கியக் கவிதையின் பிதாமகர் எனப் போற்றப்படும் நஸீம் மார்க்ஸீயவாதியாக இருந்ததும் ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல. முப்பதுகளில் உலகம் முழுவதுமே கவிஞர்கள் மார்க்ஸீயத்தின்பால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தனர். உதாரணம், பாப்லோ நெரூதா.
ஜான் பால் சார்த்ர், ஸிமோன் தி போவா, பாப்லோ நெரூதா போன்றவர்களுக்கெல்லாம் நெருங்கிய நண்பராக இருந்த நஸீம் ஹிக்மத் ஒரு ஆட்டமன் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பாட்டனார் ஆட்டமன் அரண்மனையில் பாஷாவாக இருந்தவர். அதேபோல் தந்தையும் ஆட்டமன் அரசின் உயர் அதிகாரி. தாயார் ஓவியர். இப்படிப்பட்ட மேட்டுக்குடியில் பிறந்ததால் பாஷாக்களின் குடும்பத்தினர் படிக்கும் பள்ளியிலேயே படித்தார் நஸீம். ஆனால் மற்ற மேட்டுக்குடியினரைப் போல் அல்லாமல் மனிதனை மனிதன் சுரண்டுவதையும் மத அடிப்படைவாதத்தையும் சிறு வயதிலேயே வெறுத்தார். அதனாலேயே வாழ்வின் வசதி வாய்ப்புகளையும் அதிகாரத்தையும் புறக்கணித்து விட்டு புரட்சியின் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
ஆரம்பத்தில் கமால் அதாதுர்க்கின் நண்பராகவும் இருந்த நஸீம், அவரது கம்யூனிசச் சிந்தனைகளால் அதாதுர்க்கோடு ஒத்துப் போக முடியவில்லை. சோவியத் ரஷ்யாவின் புத்துலகக் கனவினால் ஈர்க்கப்பட்டு மாஸ்கோ சென்று உயர்படிப்பைத் தொடர்ந்தார். மாயகோவ்ஸ்கியைச் சந்தித்தார். அது அவருடைய கவிதையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. துருக்கியின் பாரம்பரிய செய்யுள் மற்றும் பாடல் வடிவத்தைக் கைவிட்டு வசன கவிதையிலும் புதுக் கவிதையிலும் ஈடுபட்டார். அந்த வகையில் நஸீம் ஹிக்மத் துருக்கிய நவகவிதையின் பிதா என்றே கருதப்படுகிறார்.
Lisa del Gioconda என்பவள் 1542-இல் இத்தாலியில் உள்ள ஃப்ளாரன்ஸ் என்ற ஊரில் பிறந்து ஒரு வணிகனைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்த ஒரு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண். அவளுடைய கணவன் அந்த ஊரின் புகழ்பெற்ற ஒரு ஓவியனை அழைத்துத் தன் மனைவியை ஓவியமாக வரையச் சொன்னான். ஓவியனும் வரைந்தான். ஆண்டுகள் கடந்தன. மங்கையும் மடிந்தாள். ஓவியனும் மடிந்தான். இன்று அந்த ஓவியத்தைப் பற்றித் தெரியாத ஒரு மனித உயிர் இந்த உலகில் கிடையாது. பாரிஸ் நகரில் உள்ள லூவ்ர் அருங்காட்சியகத்தில் உள்ள அந்த ஓவியம்தான் இந்த உலகிலேயே அதிக எண்ணிக்கையில் புகைப்படம் எடுக்கப்பட்ட ஓவியம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது. அந்த ஓவியத்தில் உள்ள மங்கையின் பெயரே லிஸா தெல் ஜியோகோண்டா. இன்னொரு பெயர் மோனா லிஸா. ஓவியனின் பெயரைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார். இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக் கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம்.
A CLAIM
to the memory of my friend SI-YA-U,
whose head was cut of in Shanghai.
Renowned Leonardo's
world-famous
"La Gioconda"
has disappeared.
And in the space
vacated by the fugitive
a copy has been placed.
The poet inscribing
the present treatise
knows more than a little
about the fate
of the real Gioconda.
She fell in love
with a seductive
graceful youth;
a honey-tongued
almond-eyed Chinese
named Si-Ya-U.
Gioconda ran off
after her lover;
Gioconda was burned
in a Chinese city.
I, Nazim Hikmet,
authority
on this matter,
thumbing my nose at friend and foe
five times a day,
undaunted
claim
I can prove it;
if I can't,
I'll be ruined and banished
forever from the realm of poesy.
(இந்தக் கவிதையை நண்பர்கள் யாரேனும் தமிழில் மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினால் நலம். charu.niviedita.india@gmail.com)
”மோனா லிஸாவின் டயரிக் குறிப்புகள்”
15, மார்ச், 1924, பாரிஸ், லூவ்ர் மியூசியம்.
ஆகக் கடைசியில்
எனக்கு
இந்த லூவ்ர் மியூசியம் அலுத்து விட்டது.
மியூசியத்தைப் பார்க்க வரலாம். பிரச்சினை இல்லை. ஆனால் மியூசியத்திலேயே
ஒரு பொருளாக வாழ்வது பயங்கரம்.
இந்த இடத்தில்
கடந்த காலத்தைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என் முகத்தில் உள்ள சாயம் கூட வெடித்துப் போகும் அளவுக்குக் கொடுமையான தனிமைச் சிறை இது. கொஞ்சம் கூட ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் எந்நேரமும் புன்னகை புரியக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறேன்.
ஏனென்றால்,
நான்தான் ஃப்ளாரன்ஸின் ஜியோகோண்டா.
எனக்கு இந்த லூவ்ர் மியூசியம் அலுத்து விட்டது.
கடந்த காலத்துடன் உரையாடுவது சீக்கிரமே
அலுத்து விடும் என்பதால்
நான் முடிவெடுத்து விட்டேன்
இந்த நிமிஷத்திலிருந்து
நான் டயரி எழுதப் போகிறேன்.
இன்றைய தினத்தை எழுதுவது
நேற்றைய தினத்தை மறப்பதற்குக் கொஞ்சம் உதவக் கூடும்.
இருந்தாலும் இந்த லூவ்ர் ஒரு அதிசயமான இடம்தான்.
மகா அலெக்ஸாண்டர் அணிந்திருந்த வாட்ச் எல்லாம் இருக்கிறது; ஆனால் எழுதுவதற்கு ஒரு நோட்டுப் புத்தகமோ காகிதமோ சல்லிக் காசு பெறாத ஒரு பென்ஸிலோ இங்கே கிடையாது.
நான் இந்த டயரியை என் ஓவியத்தின் பின்பகுதியில்தான் எழுதப் போகிறேன்;
எனவே,
என்னுடைய ஸ்கர்ட்டுக்குள் தன் சிவந்த முகத்தை வைத்துத் தேய்த்துக் கொண்டு எதையோ தேடும் ஒரு அமெரிக்கனின் பாக்கெட்டில் இருந்த பேனாவைத் திருடிக் கொண்டேன். சே, அவனுடைய தலைமுடியெல்லாம் ஒரே ஒயின் நாற்றம்.
சரி, என்னுடைய நாட்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விட்டேன். என் முதுகில்தான் எழுதுகிறேன் என்னுடைய உலகப் புகழ்பெற்ற புன்னகையின் துயரத்தை…
”18 மார்ச் இரவு”
லூவ்ர் உறங்கி விட்டது
இருளில், கை இல்லாத வீனஸ்
உலக யுத்தத்தில் கலந்து கொண்டு திரும்பிய போர் வீரனைப் போல் தோற்றமளிக்கிறது
-இப்படியாக நீண்டு செல்கிறது நஸீம் ஹிக்மத்தின் அந்த அற்புதமான கவிதை.
மேற்கண்ட A Claim என்ற கவிதை நஸீம் ஹிக்மத்தின் நண்பரான Hsiao San என்ற கவிஞருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. அடுத்த ’மோனா லிஸாவின் நாட்குறிப்புகள்’ கவிதையிலும் ஸியாவோ ஒரு கதாபாத்திரமாக வருகிறார். இந்த ஸியாவோ மா சே துங்கின் பள்ளிக்கூடத்து நண்பர். மாவோவை விட மூன்று வயது இளையவரானாலும் மாவோவின் பள்ளி நாட்களிலும் அதற்குப் பிறகான புரட்சிகரப் போராட்ட காலத்திலும் மாவோவின் நெருக்கமான நண்பராக இருந்தார். ஃப்ரெஞ்ச், ருஷ்யன், ஜெர்மன், ஆங்கிலம் போன்ற பல மொழிகள் தெரிந்தவராக இருந்ததால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில உலகத் தொடர்பாளராகவும், பிரபலமான கவிஞராகவும் விளங்கினார். சோவியத்துக்கு சென்று படித்த காலத்தில் அங்கே சக மாணவராக இருந்த நஸீம் ஹிக்மத்தின் நெருங்கிய நண்பரானார். பிறகு சீனா திரும்பியதும் ஷாங்காயில் நடந்த புரட்சியில் (1924) அவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவுக்கு செய்தி வந்ததால் அந்தத் துயரத்தில் நஸீம் A Claim கவிதையை எழுதினார். ஸியாவோ மோனா லிஸா ஓவியத்தின் மீது பைத்தியமாக இருந்தது நஸீமுக்குத் தெரியும்.
ஆனால் ஸியாவோ அந்தப் புரட்சியில் இறக்கவில்லை. பிறகு அவர் ஐம்பதுகளில் ரஷ்யா சென்ற போது நஸீம் ஹிக்மத்தைச் சந்தித்தார். அப்போது நஸீம் துருக்கியிலிருந்து தப்பி வந்து ரஷ்யாவில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஸியாவோவின் புனைப் பெயர் எமி. ஸியாவோவின் மண வாழ்க்கை ஒரு பெரிய நாவல் அளவுக்கு நீளக் கூடிய திருப்பங்களும் சுவாரசியமும் நிறைந்தது. 47 வயதில் 21 வயதான ஒரு சீனப் பெண்ணை மூன்றாவது மனைவியாக மணந்தார். பிறகு அவரை ரத்து செய்து விட்டு ஈவா என்ற முன்னாள் மனைவியுடனேயே வாழத் தொடங்கினார். எல்லா மனைவிகளோடும் அவருக்கு இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தன. ஸியாவோ எழுதிய மாவோவின் இளமைக்காலம் பற்றிய புத்தகம் மாவோ பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு வெகு சுவாரசியமாக இருக்கும். 1967-ஆம் ஆண்டு ஸியாவோவும் அவர் மனைவி ஈவாவும் மாவோவின் உத்தரவின் பேரில் செஞ்சேனைப் படையினரால் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் ஏழு ஆண்டுகள் அடைக்கப்பட்டார்கள். பின்னர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். ஸியாவோ செய்த குற்றம், சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் பகை மூண்டு விட்ட நிலையிலும் அவரது ரஷ்ய நண்பர்களின் (எல்லோரும் இலக்கியவாதிகள், கவிஞர்கள்) தொடர்பை விடாமல் வைத்திருந்தார் என்பதுதான். 1983-இல் தன்னுடைய 86-ஆவது வயதில் இறந்தார் எமி ஸியாவோ. உலகின் மிகப் புகழ்பெற்ற கவிஞனால் உயிரோடு இருக்கும் போதே இரங்கற்பா எழுதப்பட்ட கவிஞன் என்ற அரிதான புகழைப் பெற்றவர் ஸியாவோ.
ஸியாவோ, ஈவா
1928-ஆம் ஆண்டு நஸீம் இஸ்தாம்பூல் திரும்பினார். துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. நஸீமின் கம்யூனிஸக் கருத்துக்களுக்காகக் கைது செய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகள் சிறை வாழ்க்கை. ஆனால் அப்போதும் விடாமல் எழுதினார். அந்தக் காலக்கட்டத்தில் அவருடைய ஒன்பது கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன.
அவர் எழுதிய ஒரு கவிதையின் காரணமாக 1933-ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்தக் கவிதை பதினைந்தாம் நூற்றாண்டில் மேற்கு அனடோலியாவில் நடந்த ஒரு விவசாயிகள் புரட்சி பற்றியும் அந்த விவசாயிகள் எப்படி ஆட்டமன் அரசு எந்திரத்தினால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் பேசியது. அந்தக் கவிதை: The Epic of Sheik Bedreddin. இந்தக் கவிதை ராணுவ வீரர்களிடையேயும் பிரபலமாக இருந்ததால் அரசாங்கம் இதை வேறு விதமாகப் பார்த்தது. ராணுவப் புரட்சியைத் தூண்டுவதற்காகவும் அரசுக்கு எதிரான ஆயுதப் புரட்சியைத் தூண்டுவதாகவும் நினைத்தது அரசு. நஸீம் ஹிக்மத்துக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ராணுவ நீதிமன்றம்.
சிறையில் இருந்த போது அவர் எழுதிய கவிதைகள் உலக இலக்கியத்தில் மிக மேன்மையான இடத்தில் இடம் பெறத் தக்கவை; பாப்லோ நெரூதா போன்றவர்களுக்கு நிகரானவை. ஆனாலும் இஸ்லாமியப் பின்னணி காரணமாக நஸீம் ஹிக்மத் பாப்லோ நெரூதா அளவுக்குப் பேசப்படவில்லை. 1945 செப்டம்பர் 23-ஆம் தேதி (அதற்குள் அவர் சிறையில் பத்தாண்டுகளைக் கழித்திருந்தார்) தன் மனைவியை நினைத்து சிறையில் எழுதிய ஒரு கவிதையிலிருந்து:
What is she doing now, at this very moment?
Is she at home, or outside,
working or resting on her feet?
She might be lifting her arm,
O, my rose, that movement of your white, firm wrist
Strips you so naked
On Living என்ற கவிதையிலிருந்து:
Life’s no joke,
You must live it in earnest like a squirrel,
for example,
expecting nothing outside your life or beyond,
you must concentrate wholly on living.
மற்றொரு கவிதையிலிருந்து:
She kissed me.
’These lips are as real as the universe, she said.‘
This musky perfume flying from my hair is no invention,’ she said.
’Look into the skies or into my eyes:
even if the blind cannot see them, still there are stars,’
she said.
நஸீம் ஹிக்மத் சிறையில் அடைக்கப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அவரை வெளியில் கொண்டு வருவதற்காக ஜான் பால் சார்த்தரும், பிக்காஸோவும் இணைந்து ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் துருக்கி அரசு அவரை வெளியே விடவில்லை. நஸீமுக்கு சிறையிலேயே மாரடைப்பு வந்தது. அதற்குப் பிறகு அவர் ஒரு பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார்…
(சாருநிவேதிதாவின் இத்தொடர் வெள்ளிதோறும் வெளிவரும்)
ஏப்ரல் 18 , 2016