பயணக் கட்டுரைகளை உடனுக்குடன் எழுதி விட வேண்டும். இல்லாவிட்டால் பல சிறிய, நுணுக்கமான விபரங்கள் மறந்து விடும். சென்ற அத்தியாயத்தில் அப்படி ஒரு நுணுக்கத்தைத் தவற விட்டுவிட்டேன். இப்போது ஞாபகம் வருகிறது. அதுவாவது பரவாயில்லை. வேறொரு தவறும் செய்து விட்டேன். ஆனந்த் எனக்குக் கொடுத்தது 200 திர்ஹாம் அல்ல; 1000 ரியால். சுமார் 18000 ரூ. அதை நான் 3500 ரூபாயாக எழுதி விட்டேன். எப்பேர்ப்பட்ட பிழை! நானாக இருந்தால், ‘அடப் பாவி, இதற்கு நான் பணமே கொடுத்திருக்க மாட்டேனே’ என்று நினைத்திருப்பேன். ஆனால் என் நண்பர்களிடம் உள்ள நல்ல குணம் என்னவென்றால், இது போன்ற என்னுடைய பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனந்த் சென்ற அத்தியாயத்தைப் பற்றி என்னிடம் பேசிய போது கூட அந்தப் பிழையைக் குறிப்பிடவில்லை.
இன்னொரு விடுபட்ட விஷயம், ஜூஸ். ஆனந்த் ”ஜூஸ் சாப்பிடுகிறீர்களா?” என்றார். சற்றும் யோசிக்காமல் சரி என்றேன். பக்கத்திலிருந்த அபிநயாவைக் கேட்டேன். அவரும் உடனேயே சரி என்றார். பொதுவாக அவ்வளவு பழக்கமில்லாத பெண்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் முகத்தில் அடித்தாற்போல் மறுத்து விடுவார்கள். அபிநயாவோ வெகு சகஜமாக சரி என்றதும் அவர் மீது எனக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. மட்டுமல்லாமல் என்ன ஜூஸ் என்று கேட்ட போதும் உடனே ஆரஞ்ச் என்றார்.
***
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் க்ராண்ட் ஹாலிஜுக்கு (Grand Haliç) எதிரே தான் Bosphorous கடல். C-க்குக் கீழே கமாவைப் போல் உள்ளதுக்குப் பெயர் செதில். அப்படி செதில் இருந்தால் அதை ’ச்’ என்றோ, ‘க்’ என்றோ உச்சரிக்கக் கூடாது; ‘ஜ்’ என்றே உச்சரிக்க வேண்டும்.
சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் – அதாவது, கி.மு. 18,000 இலிருந்து கி.மு. 16,000க்கு இடைப்பட்ட காலத்தில் உலகின் வடக்குப் பகுதி பனிக்கட்டிகளால் மூடியிருந்தது. மர்மரா கடலும் கருங்கடலும் அப்போது ஏரிகளாக இருந்தன. பாஸ்ஃபரஸ் ஒரு சமவெளியாக இருந்தது. கி.மு.14,000-இல் பனி உருக ஆரம்பித்து மர்மராவும் கருப்பு ஏரியும் கடல்களாயின. கி.மு.7500 வாக்கில் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் பாஸ்ஃபரஸ் ஜலசந்தி உருவானது.
சரி, பாஸ்ஃபரஸ் என்றால் என்ன? ஏன் அந்தப் பெயர் வந்தது? கிரேக்கக் கடவுள் ஸீயஸ் (Zeus) இயோ (Io) என்ற இளம்பெண்ணின் மீது காதல் கொண்டான். இதை அறிந்த ஸீயஸின் மனைவி ஹீரா கடும் கோபம் அடைந்தாள். அவளுடைய கோபத்திலிருந்து இயோவைக் காப்பாற்ற எண்ணிய ஸீயஸ் அவளை ஒரு பசுவாக மாற்றினான். இதை அறிந்து கொண்ட ஹீரா மாட்டைக் கடித்துக் கொல்லும் ஈக்களை அனுப்பினாள். அவற்றிலிருந்து தப்பிக்க இயோ வந்து சேர்ந்த இடமே பாஸ்ஃபரஸ். பாஸ்ஃபரஸ் என்றால் ’பசுவின் ஓடை’ என்று பொருள்.
ஓட்டலின் வாசலிலிருந்து பார்த்தால் பாஸ்ஃபரஸ் கடலின் எதிர்க் கரையில் இஸ்தாம்பூல் நகரின் ஐரோப்பியப் பகுதி. அழகான பிக்சர் கார்ட் போல் தோற்றமளித்த அந்தக் காட்சியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் தெரிந்தது. அதுதான் இஸ்தாம்பூலின் புகழ்பெற்ற ஹயா ஸோஃபியா (Hagia Sophia) மசூதி. (ஒரு காலத்தில் அது தேவாலயமாக இருந்தது). ஓட்டலிலிருந்து கலாட்டா டவர் ஒரு கிலோமீட்டர் இருக்கும். கிளம்பும் தருணத்தில் “எக்ஸ்க்யூஸ் மீ, மிஸ் அபிநாயா” என்று அழைத்தார் ஓட்டலின் வரவேற்பாளர்.
தென்னிந்தியாவைத் தவிர உலகில் வேறு எங்கே போனாலும் முதல் எழுத்தைக் குறுக்கியும் அடுத்த எழுத்தை நீட்டியும்தான் உச்சரிக்கிறார்கள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. நான் இங்கே மைலாப்பூரில் ஸ்பானிஷ் படித்த காலத்தில் எங்கள் ஸ்பானிஷ் ஆசிரியர் இப்படித்தான் எல்லா பெயர்களையும் அடித்துக் கிழித்துக் கொண்டிருப்பார். ராமன் – ரமான், ராமசாமி – ரமாசமி, ஆனந்த் – அனாந்த், ஜானகி – ஹனாகி (ஸ்பானிஷில் ’ஜ’வின் உச்சரிப்பு ’ஹ’)… ஐரோப்பாவில் மட்டுமல்ல; வட இந்தியாவிலும் இப்படித்தான். முதல் எழுத்து குறில்; இரண்டாம் எழுத்து நெடில்.
ஓட்டலை விட்டுக் கீழே இறங்கியவுடனேயே பசித்தது. மதியம் ஒரு மணிக்கு ஹயா சோஃபியாவில் சாப்பிட்ட மீன் உணவு ஐந்தே நிமிடத்தில் பஸ்பமாகி விட்டது. நாங்கள் எல்லோரும் ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். மூன்று வேளை உணவும் பயண நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. ஹயா சோஃபியாவைப் பார்த்து விட்டு அதற்கு வெளியே உள்ள ஒரு அருமையான உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் சுமார் 15 பேர் இருப்போம். அதில் ஒரு வட இந்தியக் குடும்பமும் இருந்தது. சாப்பிடுவதற்கு நான் சற்றுத் தாமதமாகச் சென்றதால் ஒரு வயதான அமெரிக்கத் தம்பதி அமர்ந்திருந்த மேஜையில் இடம் கொடுத்தார்கள். அவருக்கு வயது 80-க்கு மேல் இருக்கும் போலிருந்தது. பெண்மணிக்கு 80 இருக்கலாம். தோலெல்லாம் சுருங்கி, சூரிய வெப்பத்தில் கரும்புள்ளிகள் வந்த ஒரு உதாரண அமெரிக்கக் கிழவி. உடம்பில் துளி சதை இல்லை. கிழவர் அதற்கு நேர் எதிராக இருந்தார். வாட்டசாட்டமாக, தொந்தியும் தொப்பையுமாக ஹாலிவுட் படங்களில் பார்க்கக் கூடிய தாத்தாவைப் போல் இருந்தார்.
உணவு பயண நிறுவனத்தின் ஏற்பாடு. குடியெல்லாம் நம் காசு. நான் குடிப்பதை நிறுத்தி விட்டதால் அந்தச் செலவு இல்லை. இந்த இடத்தில் நான் ஏன் குடியை நிறுத்தினேன் என்று சொல்லியாக வேண்டும். தமிழர்களும் மலையாளிகளும் குடிக்கும் குடிக்கும் நான் குடித்த குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் குடித்த அனைத்தும் மூலிகை மதுவகைகள். சீனத்து Wenjun, ஃப்ரெஞ்ச் அனிஸ் (அனிஸ் என்றால் ஜீரகம்; ஜீரகத்தில் செய்யப்படுவதே அனிஸ் மது), 56 மூலிகைகளால் தயாரிக்கப்படும் ஹெகர்மீஸ்டர் (Jägermeister), மற்றும் விதவிதமான வைன் வகைகள் – இதில் ஹெகர்மீஸ்டரைத் தவிர வேறு எதுவும் எளிதில் கிடைக்கக் கூடியவை அல்ல. வெஞ்ஜுனை பல தேசத்து விமான நிலையங்களில் தேடியாகி விட்டது. சீனாவிலும் பாங்காக் விமான நிலையத்திலும் மட்டுமே கிடைக்கிறது. இது எதுவும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே ரெமி மார்ட்டின். இதற்கும் டாஸ்மாக்குகளில் விற்கும் விஷத்துக்கும் சம்பந்தமே இல்லை.
ஆனாலும் நான் குடியை நிறுத்தியதற்கு ஒரே காரணம், பயணத்தில் ஆர்வம் உள்ள எந்த இந்தியரும் குடிக்கக் கூடாது. ஏன் இந்தியர் மட்டும் என்றால், இந்தியர் அனைவருமே குடித்தால் மொடாக்குடிதான். இரண்டு பெக்கோடு நிறுத்துவோம் என்ற பேச்சே இல்லை. ஏழு எட்டுதான். மேலும், மேல்நாட்டினர் பொதுவாக உயர்தரமான வைன் தான் குடிக்கிறார்கள். நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது போல் அவர்கள் வைன் குடிக்கிறார்கள். நான் என்னதான் ஐரோப்பியனைப் போல் வாழ்கிறேன் என்று பீற்றிக் கொண்டாலும் வெளிநாடுகளுக்குப் போனால் இந்தியனாக மாறி விடுகிறேன். போடு எட்டு ரவுண்டு. மறுநாள் வெளியில் கிளம்பவே மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகி விடும். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தாய்லாந்து பயணத்திலும் அப்படியே நடந்தது. அங்கே இருந்த 15 நாட்களின் எல்லா இரவுகளுமே மதுபான இரவுகளாக மாறி மறுநாள் ஊர் சுற்றக் கிளம்பும்போது மதியமாகி விடும்.
இப்படி இருந்தால் தென்னமெரிக்கப் பயணம் போனால் என்ன ஆவது என்ற ஒரு கிலி பிடித்து ஆட்டியது. அந்த க்ஷணமே குடியை நிறுத்தினேன். எல்லாவற்றுக்கும் மன உறுதியே காரணம். மனம் மூளையை ஆட்டுவிக்கக் கூடாது. மூளை என்ன சொல்கிறதோ அதைக் கேட்க வேண்டும் மனம்.
குடியை விட்டதால் துருக்கியில் கழித்த பத்து நாட்களும் இருபது நாட்களுக்குச் சமமாக இருந்தன. காலையில் ஆறரை மணிக்குக் கூட வண்டி வந்து விடும். அதில் சக பயணிகளும் தயாராக இருப்பார்கள். ஒருநாள் கப்படோச்சியாவில் (Cappadocia) ஹாட் ஏர் பலூனில் ஏறுவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே கிளம்ப வேண்டியிருந்தது. படுத்தது பதினோரு மணி. நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளிக்காமல் கூட ஓடினேன். சொன்னது போல் சரியாக ஐந்து மணிக்கு ஓட்டல் வாசலில் வண்டி வந்து நின்றது. குடித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தால் இப்படியெல்லாம் முடியுமா? பயணங்களில் இரண்டு வகை உண்டு. ஜாலியாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் செல்லும் பயணம். அந்த உல்லாசப் பயணத்தை நிஜமான பயணிகள் யாரும் பயணமாகவே கருதுவதில்லை.
கிழவரின் பெயர் டேவிட். இரண்டு கிளாஸ் சிவப்பு வைன் அருந்தினார். 85 வயதில் அமெரிக்காவிலிருந்து துருக்கிப் பயணம். கையில் வைன். கிழவியின் பெயரில்தான் ஒரு மேஜிக் இருந்தது. லிண்டா ஸ்ட்ரீப். என்னது ஸ்ட்ரீப்பா? மை காட். எனக்கு ரொம்பப் பிடித்த அமெரிக்க நடிகை. Kramer vs Kramer (1979) என்ற புகழ் பெற்ற படத்தில் நடித்ததால் அல்ல; உண்மையில் ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான அவர் நடிப்பு பற்றிக் கூட எனக்கு மறந்தே விட்டது. ஆனால் அவருடைய இணையதளத்தை அடிக்கடி நான் எட்டிப் பார்ப்பது வழக்கம். அதன் முகப்பிலேயே José Micard Teixeira என்பவரின் மேற்கோள் ஒன்று இருக்கும். உலகம் முழுவதும் வைரஸைப் போல் பரவிய மேற்கோள் அது.
”இனிமேலும் சில விஷயங்களில் நான் பொறுமையாக இருக்கப் போவதில்லை. எனக்குப் பிடிக்காத, என்னைக் காயப்படுத்தும் விஷயங்களில் நான் நேரத்தை விரயம் செய்யப் போவதில்லை. திட்டுவது, விமர்சிப்பது போன்ற விஷயங்களின் பக்கமும் போகப் போவதில்லை. என்னைப் பிடிக்காதவர்கள், என்னை நேசிக்காதவர்கள் ஆகியோர் மீது பிரியமாக நடந்து கொள்ளும் மனப்பக்குவத்தையும் நான் இழந்து விட்டேன். என்னைக் கண்டு புன்முறுவல் செய்யாதவர்களிடம் நானும் இனிமேல் புன்முறுவல் செய்யப் போவதில்லை” என்று ஆரம்பித்து இன்னும் நிறைய போகும். இதை இந்த ஸ்ட்ரீப்பிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவர் திறந்த வாயை மூடவே இல்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை பேசிக் கொண்டே இருந்தார். தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி, ஐரோப்பாவில் வாழும் தன் குழந்தைகளைப் பற்றி, இப்போது டெக்ஸஸில் தன் கணவரோடு தனியாக வாழ்வது பற்றி, ஆண்டு தோறும் அவரும் கணவரும் செல்லும் உலகப் பயணங்கள் பற்றி… நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்தார். டேவிட் வாயே திறக்கவில்லை. இடையில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று மட்டும் கேட்டார். எழுத்தாளன் என்றதும் உங்களுக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் யார் யார் என்று ஒரு கேள்வி. டொனால்ட் பார்த்தெல்மே, வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் என்று நான் சொல்ல ஆரம்பித்ததுமே அதை அமுத்தி விட்டு வேறு ஏதோ பேச ஆரம்பித்தார் ஸ்ட்ரீப். செவிகளே இல்லாத பெண்மணி.
அப்போது அந்த மேஜையில் ஒரு சம்பவம் நடந்தது. சாப்பிடும் போது டேவிட்டுக்கு லேசாகப் புரை ஏறியது. அவ்வளவுதான். என்னோடு வாய் சலிக்காமல் பேசிக் கொண்டிருந்த ஸ்ட்ரீப் க்ஷணப் பொழுதில் இருக்கையை விட்டு எழுந்து டேவிட்டிடம் சென்று சிசுருக்ஷை செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனால் இங்கே இந்தியாவில் மேற்கத்தியக் குடும்பம், மேற்கத்திய வாழ்க்கை பற்றி என்னென்னவோ குப்பைக் கற்பனைகளைக் கொண்டிருக்கிறோம்.
நான் மீன் உணவு என்று சொன்னதும் கோலா மீன் அளவு உள்ள ஒரு மீனை முழுசாக வறுத்துக் கொண்டு வந்து வைத்தார்கள். அவ்வளவுதான் உணவு. சே, ஏமாந்து போனோமே, வேறு உணவு சொல்லியிருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரும் கிளம்பிய பிறகுதான் தெரிந்தது, நீள நீள ப்ரெட்டுகளும் சூப் வகைகளும் கூட இருந்தன என்பது.
டேவிட், ஸ்ட்ரீப் தம்பதியோடு உணவருந்திய அந்த மதிய நேரத்தில் நான் நினைத்துக் கொண்டேன், நம்முடைய இந்திய வாழ்க்கையில் 85 வயதில் இப்படி வெளிநாட்டுப் பயணம் செய்யவும் வைன் அருந்தவும் சாத்தியம் இருக்கிறதா என்று. ஏனென்றால், உண்டு முடித்து விட்டு டேவிட் மூன்றாவது கோப்பை சிவப்பு வைன் அருந்திய போது நான் இதயத்தின் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு (கொழுப்பு) நீங்குவதற்கான மாத்திரைகளை ரொம்பக் கடமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்திய வாழ்க்கை மாத்திரைகளையும் அமெரிக்க வாழ்க்கை வைனையும் தருகிறது என்று தோன்றியது. இவ்வளவுக்கும் நான் மிகவும் ராணுவ ஒழுங்கோடு வாழ்ந்து வருபவன். ஆனாலும் என்ன? சமீபத்தில் வந்த ஒரு செய்தி. ”மேட்டுக்குடியினர் பயணம் செய்யும் ராஜதானி ரயில்களில் கொடுக்கப்படும் ரயில்நீர் சுத்திகரிக்கப்பட்டது அல்ல; அதை காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் சாதாரண குழாய்த் தண்ணீரை எடுத்து ரொப்பி அனுப்பி விடுகிறார்கள்; இந்த விஷயத்தைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு ரயில்வே அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்கப்படுகிறது.” இப்படிப்பட்ட சமூகச் சூழலில் நாம் எவ்வளவு ஒழுங்காக இருந்துதான் என்ன பயன்?
பொதுவாக துருக்கி உணவில் நிறைய சூப், நறுக்கிய காய்கள் என்று இருப்பதாலும் குளிர் காரணமாகவும் அதிகம் பசிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். ”எல்லோரும் எப்போதும் எதையாவது தின்று கொண்டே இருக்கிறார்கள்” என்று சொல்லியிருந்தார் ராம். ஏப்ரல், மே, ஜூன் மூன்று மாதமும் துருக்கி செல்லத் தோதான சமயம். அதுதான் அங்கே வசந்த காலம். பகலில் 15 டிகிரி இருந்ததால் அதிகக் குளிரும் இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் பாந்தமாக இருந்தது. ஆனால் இரவில் கடும் குளிராக இருந்ததைப் போகப் போகத் தெரிந்து கொண்டேன்.
ஓட்டல் க்ராண்ட் ஹாலிஜை அடுத்து ஒரு பேக்கரி இருந்தது. ஆனால் எனக்கு கேக் பிடிக்காதாகையால் வழியில் வேறு உணவகங்கள் தென்பட்டால் சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன். கலாட்டா டவருக்குச் செல்லும் வழி ஒரு குறுகலான தெரு. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. ஆனாலும் பயம் இல்லை. துருக்கியைப் பற்றிக் கேள்விப்பட்ட கதைகள் எதுவுமே உண்மை இல்லை என்பதை அங்கே போன சில மணி நேரங்களிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மக்கள் அவ்வளவு சிநேகபூர்வமாகவும் வெகுளியாகவும் இருந்தார்கள். பொதுவாக உலகில் எந்தப் பெருநகரத்திலும் மக்களை வெகுளியாகப் பார்க்க முடியாது. நகர வாழ்வின் நெருக்கடிகள் மனிதர்கள் தங்களுடைய கிராமங்களிலிருந்து கொண்டு வந்த வெகுளித்தன்மையைப் பறித்து விடும். ஆனால் இஸ்தாம்பூல் அப்படி இல்லை.
அந்தத் தெருவில் எதுவும் பழக்கடைகளோ உணவகங்களோ இருப்பது போல் தெரியவில்லை. பசி அதிகமாக இருந்தது. “எனக்குமே பசிக்கிறது” என்றார் அபிநயா. ”மதியம் என்ன சாப்பிட்டீர்கள்?” என்று கேட்டேன். எனக்கு அவருடைய சாப்பாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அவர் நிச்சயம் சைவமாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம், சைவம்தான். ஆனால் அவர் சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியாவில்தான் சைவ உணவு சிரமம். ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சுலபம் என்றார்.
உண்மைதான். சீஸ் என்று எடுத்துக் கொண்டால் நம் ஊரில் பனீர் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் ஃப்ரான்ஸில் மட்டுமே 200 வகை சீஸ் உள்ளது. மொத்த ஐரோப்பாவிலும் ஆயிரத்துக்கும் அதிகமான சீஸ் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்; ஒவ்வொரு ருசி. துருக்கியிலும் சுமார் 50 வகை சீஸ் உள்ளது. அதில் எனக்குப் பிடித்தது கஸேரி என்றார் அபிநயா. அது ஆட்டுப் பாலில் செய்வதாம். “ஏற்கனவே துருக்கி வந்திருக்கிறீர்களா?” “இல்லை; கஸேரி க்ரீஸிலும் உண்டு. சென்ற ஆண்டு க்ரீஸ் வந்தேன்.”
மேலே நடந்து போனதில் ஒரு சிறிய உணவகம் இருக்கக் கண்டோம். இரண்டே பேர். ஒரு கிழவியும் கிழவரும். இரண்டு பேருக்கும் எழுபது வயதுக்கு மேல் இருக்கும். கிழவி சமையலில் நிற்க, கிழவர் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். உள்ளே ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சிறிய மேஜைகள்; இரண்டு சிறிய நாற்காலிகள். மொத்தம் நான்கு பேர் சாப்பிடலாம். இருவருக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரிந்தாலும் அது உலக அதிசயம். அதிசயம் நடக்கவில்லை. மென்யுவைப் பார்த்து ஓரளவு புரிந்து கொண்டு நான் சிக்கனும் அபிநயா க்ருவாஸோ(ங்)-உம் (croissant) கேட்டுச் சாப்பிட்டோம். கிழவன் கிழவி இருவரும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. பேசி அலுத்துப் போயிருக்கும்.
அந்தச் சிறிய உணவகத்தில் கலாட்டா டவருக்குச் செல்லும் அந்தத் தெருவின் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றம் ஒரு புகைப்படமாகக் காட்சியளித்தது.
கலாட்டா டவருக்குச் செல்லும் வழியில் ஒருவர் தள்ளுவண்டியில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார். இரவு உணவுக்குப் பழம் போதும்; திரும்பி வரும் போது இருக்கிறாரோ இல்லையோ, இப்போதே வாங்கி விடுகிறேன் என்று கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி வாங்கினார் அபிநயா. விலை எல்லாம் சைகை பாஷைதான். இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் மரியாதையை அந்தத் தெருவில் மீண்டும் ஒருமுறை கண்டேன். அந்தத் தள்ளுவண்டிக்காரர் அபிநயாவிடம் மீதிச் சில்லறையைக் கொடுக்கும் போது அபிநயாவின் கைகளுக்கு மேலே அரை அடி தன் கையைத் தூக்கி காசைக் கொடுத்தார். தவறுதலாகக் கூட தன் கை அந்நியப் பெண் மீது பட்டு விடக் கூடாது என்ற கவனம்.
1348-இல் கட்டப்பட்ட கலாட்டா டவரின் மேலே ஒரு நைட் க்ளப்பும் உணவு விடுதியும் உள்ளது. 219 அடி உயரமுள்ள இந்த டவரிலிருந்து இஸ்தாம்பூலைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். நைட் க்ளப்பில் அமர்ந்து குடித்தால் காசு அதிகம் என்பதால் கல்லூரி மாணவர்கள் டவரின் கீழே அமர்ந்து பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 30 ஜோடி இருக்கும். எல்லாம் உள்ளூர் மாணவர்கள். சரிசமமாகப் பெண்கள். ஒருத்தர் பாக்கி இல்லாமல் அத்தனை பேர் கையிலும் பியர் போத்தல்கள். இந்தியாவை விட கலாச்சார சுதந்திரம் அதிகம் உள்ள நாடாகத் தோன்றியது துருக்கி.
-வெள்ளிக்கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்
-வெள்ளிக்கிழமைதோறும் சாரு நிவேதிதா எழுதும் இத்தொடர் அந்திமழையில் வெளியாகும்(இந்த வாரம் இரண்டுநாள் தாமதம். மன்னிக்கவும்.) உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்
நவம்பர் 06 , 2015