தொடர்கள்

நிலவு தேயாத தேசம் - 5

சாரு நிவேதிதா

ஆட்டமன் சாம்ராஜ்யத்தின் தலைநகர் இஸ்தாம்பூல்.  காலைத் தொழுகையை முடித்து தந்தையை அரண்மனைக்கு அனுப்பி விட்டு அந்த மாபெரும் ’கொனாக்’கின்* சாளரத்தின் அருகே வருகிறாள் தில்ரூபா.  தந்தை, சுல்தான் அப்துல் அஸீஸின் பாஷா*க்களில் ஒருவர்.  கண்ணெதிரே மனதைக் கொள்ளை கொண்டு போகும் பாஸ்ஃபரஸ் கடல்.  ஒரே ஒரு மார்த்தி* பறவை மேலே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.  "மார்த்தி தான் என்ன அழகு!” என்று பக்கத்தில் அமர்ந்து எம்ப்ராய்ட்ரி வேலையில் மூழ்கியிருந்த தன் தாயிடம் சொல்கிறாள் தில்ரூபா.  ஒருக்கணம் தலையை உயர்த்திப் பார்த்து விட்டு சிறு புன்னகையுடன் மீண்டும் பின்ன ஆரம்பிக்கிறாள் பாஷாவின் மனைவி.    


கொஞ்ச நேரம் தக்விம்-இ வெகாயி (Takvim-i Vekayi) செய்தித்தாளை எடுத்துப் புரட்டுகிறாள் தில்ரூபா.  அரபி, கிரேக்கம், ஃப்ரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் வந்து கொண்டிருந்தாலும் அவள் படிப்பது ஃப்ரெஞ்ச் தான்.  சுல்தான் பாரிஸ் போய் வந்ததிலிருந்து அவளையொத்த மேட்டுக்குடியினர் ஃப்ரெஞ்ச்சில் பேசுவதை ஒரு அந்தஸ்தாக நினைக்க ஆரம்பித்திருந்தனர்.   

    
தந்தை அரண்மனைக்குக் கிளம்பியவுடன் அவளுக்குப் பிடித்த சுல்தான் அப்துல் அஸீஸ்* உருவாக்கிய பாடல்களைப் பியானோவில் வாசிக்க ஆரம்பித்து விடுவாள் தில்ரூபா.  அப்துல் அஸீஸ் தான் ஆட்டமன் சுல்தான்களில் மேற்கு ஐரோப்பாவுக்குப் பயணம் செய்த முதல் சுல்தான்.  ஐரோப்பிய இலக்கியமும் ஐரோப்பிய சாஸ்த்ரீய சங்கீதமும் கற்ற முதல் சுல்தான்.  ஐரோப்பிய சங்கீதத்தின் ரசிகர் மட்டும் அல்லாமல் அவரே கம்போஸராகவும் இருந்தார்.*  
தில்ரூபாவின் நாட்குறிப்பில் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் தக்விம்-இ வெகாயி.  1831-ஆம் ஆண்டு ஆட்டமன் சுல்தான் இரண்டாம் மெஹ்மூதினால் துவங்கப்பட்டது அந்த செய்தித்தாள்.  

கப்படோச்சியாவில்

2015 மே மாதம் 16-தேதி மதியம் ஹயா சோஃபியாவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு தெருவிலும் அதற்குப் பிறகு இஸ்தாம்பூலிலும் ஒரு செய்தித்தாளுக்காகச் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது எனக்கு  தில்ரூபாவின் அந்த நாட்குறிப்பு ஞாபகம் வந்தது.  ”அதோ அங்கே ஒரு பேப்பர் கடை உள்ளது” என்று கை காட்டுவார்கள்.  போய்ப் பார்த்தால் நியூயார்க் டைம்ஸும் சில ஆங்கில ஃபாஷன் பத்திரிகைகளும் தொங்கும்.  நான் எந்த ஊருக்குப் போனாலும் அங்கே உள்ள உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்து விடுவது வழக்கம்.  பாரிஸ் தமிழ் செய்தித்தாள்களில் செமத்தியான விஷயங்கள் கிடைக்கும். 1950-உம் 2015-உம் ஒரே காலத்தில் நம் கண் முன்னே இயங்கும் விபரீதக் காட்சியையெல்லாம் அங்கே காணலாம்.  ஜாதியிலேயே உபஜாதியெல்லாம் கொடுத்து அந்த உபஜாதிக்குள்ளேயே தான் பெண்ணோ பையனோ வேண்டும் என்பார்கள். உதாரணமாக பையன் செங்குந்த முதலியார் என்றால் பெண்ணும் செங்குந்த முதலியாராக இருக்க வேண்டும்.  வேறு முதலியாராக இருக்கக் கூடாது.  எங்கே? பாரிஸில்!  இதில் 2015 எங்கே வந்தது என்கிறீர்களா?  பெண், ஃபேஸ்புக் பயன்படுத்துபவராக இருக்கக் கூடாது!   அது ஒரு முக்கிய நிபந்தனை!


துருக்கியில் உள்ள செய்தித்தாள்கள் பற்றி ஏற்கனவே கொஞ்சம் குறிப்புகள் எடுத்து வைத்திருந்ததால் ”ஸமான் இருக்கிறதா?” என்று கேட்டேன்.  பல கடைகளிலும் ’ஸமான்’ பெயரைச் சொன்னால் மேலும் கீழும் பார்த்தார்கள்.  ’ஸமான்’ தான் இஸ்தாம்பூலிலிருந்து வரும் தினசரி.  சர்க்குலேஷன் 10 லட்சம்.  ஆனால் யாருக்கும் தெரியவில்லை.  யாருமே தினசரிகள் படிப்பதாகவும் தெரியவில்லை.  டீக்கடைகளிலும் தினசரிகளையே பார்க்க முடியவில்லை.   குறுக்குச் சந்துகளில் டீக்கடைகள் இருக்கின்றன.  வட இந்தியாவைப் போல் மோடா மாதிரியான குட்டை நாற்காலிகளைப் போட்டு டீ குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆப்பிள் டீ, டர்க்கிஷ் டீ இரண்டும்தான் ரொம்பப் பிரபலம்.  இரண்டிலுமே பால் இல்லை.  


இங்கே ஒரு விஷயம்.  இந்தியர்கள் மட்டுமே தேநீரில் பால் கலந்து குடிக்கிறார்கள்.  பெரியவர்கள் ’டீ காப்பி குடிப்பது கெட்ட பழக்கம்’ என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  தேநீரில் பால் கலந்து குடிப்பதுதான் கெடுதலே தவிர வெறும் தேநீர் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.  ஜப்பானியர்களும் சீனர்களும் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணமே அவர்கள் அதிக அளவில் க்ரீன் டீ குடிப்பதுதான்.  


எனக்கு இருதயத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் 50 சதவிகித அடைப்பு உள்ளது.  அதனால் மதியத்துக்கு மேல் ஐந்து நிமிடம் நடந்தால் கூட நெஞ்சு வலிக்கும்.  மாடிப்படி ஏறினாலும் வலிக்கும்.  மருத்துவரிடம் கேட்டேன்.  
காலையில் நடக்கிறீர்களா?   
நடக்கிறேன்.  
எவ்வளவு நேரம்?  
ஒரு மணி நேரம்.
வலிக்கிறதா?
இல்லை.   
உங்களைப் போல் அடைப்பு உள்ளவர்களுக்குக் காலையில் நடந்தாலே வலி வரும்.  உங்களுக்கு அப்படி இல்லை என்பதால் சந்தோஷமாக இருக்கலாம்.  மாலையில் நடக்காதீர்கள். எப்போதுமே மாடிப்படி ஏறாதீர்கள்.
இந்த உடல் உபாதையோடுதான் துருக்கி கிளம்பினேன்.  கப்படோச்சியாவில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட இயற்கையான குடவறை விடுதியில்தான் தங்கியிருந்தேன்.  மூன்றாவது தளம்.  கல்படிக்கட்டுகளில்தான் ஏற வேண்டும். ஆனால் நெஞ்சு வலிக்கவில்லை.  எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.  துருக்கியில் இருந்த பத்து நாட்களும் கடும் அலைச்சல்.  ஏகப்பட்ட நடை.  நெஞ்சு வலி என்ற பேச்சே இல்லை.  காரணம் என்ன என்று இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன்.  அங்கே உள்ள உணவு முறை ஒரு காரணமாக இருக்கலாம். அது பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.  இன்னொரு காரணம், சீதோஷ்ண நிலை.  அடுத்த முக்கியமான காரணம், தண்ணீருக்குப் பதிலாகக் குடிக்கும் டர்க்கிஷ் டீ.  உயர்ந்த ரக தேயிலையை வெந்நீரில் போட்டு அப்படியே குடிக்கிறார்கள்.  சர்க்கரை போடாமல் குடித்தால் தேயிலையின் ருசி இன்னும் நன்றாகத் தெரிகிறது. இப்படி ஒரு நாளில் பத்துப் பதினைந்து டீ குடிக்கிறார்கள்.   சொல்லி வைத்தாற்போல் எல்லா பெண்களும் ஆப்பிள் டீ தான் குடிக்கிறார்கள்.  அது டர்க்கிஷ் டீ அளவுக்குக் காட்டம் இல்லாமல் மிதமாகவும் ருசியாகவும் இருக்கிறது.   


கலாட்டா டவரிலிருந்து க்ராண்ட் ஹாலிஜ் ஹோட்டலை நோக்கி – அதாவது பாஸ்ஃபரஸ் கடலை நோக்கி வரும் போது இடதுகைப் பக்கத்தில் உள்ள சந்தில் ஒரு டீக்கடை உள்ளது.  இஸ்தாம்பூலில் இருந்த முதல்நாளும் இரண்டாம் நாளும் மாலை நேரத்தில் கலாட்டா டவருக்குப் போன போது திரும்பி வரும் வழியில் அபிநயாவும் நானும் அந்த டீக்கடைக்குப் போனோம்.  அங்கே நான் என்ன பார்த்தேனோ அதையேதான் துருக்கி முழுவதும் பார்த்தேன்.  துருக்கியில் பெண்களின் சமூகப் பங்கேற்பும் உழைப்பும் ஆண்களை விட அதிகமாக இருக்கிறது.   கிராமங்களில் கம்பளம் நெய்வது பூராவும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.  விவசாயமும் பெண்கள்தான்.  விற்பனை செய்வதுதான் ஆண்கள்.  நகரத் தெருக்களில் மூலைக்கு மூலை ஆண்கள் நாலைந்து பேராக எந்த வேலையும் செய்யாமல் சிகரெட்டும் டீயுமாக அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெண்கள் கடையை நடத்துகிறார்கள்.  


கலாட்டா டவர் தெருவின் குறுக்குச் சந்தில் உள்ள டீக்கடையிலும் அதே காட்சிதான்.  நாலைந்து பூனைகள் ஒரு மூலையில் விளையாடிக் கொண்டிருந்தன.  நம் நாட்டில் தெருவில் நாய்கள் அலைவது போல் துருக்கியில் பூனைகள்.  ஐரோப்பியர்கள் இதை படு ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.  ஏனென்றால் ஐரோப்பாவில் பூனை நாய் எல்லாம் வீட்டில் வளர்பவை.  இந்தியர்களாகிய நமக்கு மனிதர்களையே தெருவில் அனாதைகளாகப் பார்த்துப் பழக்கமாகி விட்டபடியால் பூனைகள் தெருவில் திரிவது ஆச்சரியமாக இல்லை. ஆனால் நம் தெரு நாய்களுக்கும் துருக்கியின் தெருப்பூனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவைகள் தெருவில் வாழ்ந்தாலும் அனாதை இல்லை.  ஒவ்வொரு பூனையையும் அந்தந்தத் தெருக்காரர்கள் உணவு கொடுத்து போஷிக்கிறார்கள்.  பூனைகள் கொழுகொழு என்று இருக்கின்றன.  

இரண்டு நாட்களிலும் அதே காட்சி.  35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் கடையை நிர்வகித்துக் கொண்டிருக்கிறாள்.  நாலைந்து ஆண்கள் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  கையில் தேன் நிற டர்க்கிஷ் டீ.  எல்லார் கையிலும் சிகரெட்.  இரண்டாவது நாள் சென்ற போது அப்படி அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஒருவனை கடையின் முதலாளியம்மாள் வார்த்தைகளால் பின்னியெடுத்துக் கொண்டிருந்தாள்.  அவன் வாயே திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தான்.  சத்தம் தெரு முழுக்கக் கேட்டது.  அவனைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் எதுவுமே நடக்காதது போல் புகையை விட்டுக் கொண்டிருந்தார்கள்.  கணவனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.    
இரண்டு நாட்களுமே அபிநயா ஆப்பிள் டீ குடித்ததை கவனித்தேன்.  கடையில் இருந்த பூனைகள் இரண்டும் என்னிடம் சௌஜன்யமாக வந்து ஒட்டிக் கொண்டன.  நீண்ட நேரம் அபிநயா அந்தப் பூனைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தார்.  விளையாடி முடித்து விட்டு என்னிடம் “பூனைகளை நேசிக்கத் தெரியாத பெண்ணால் எந்த ஆணையும் சந்தோஷப்படுத்த முடியாது” என்றார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ”பயந்து விட்டீர்களா?  Orhan Pamuk in The Museum of Innocence” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தார்.  ”ஜி. குப்புசாமி இன்னும் அதை மொழிபெயர்க்கவில்லை” என்றேன்.  அவருக்குப் புரியவில்லை.  பிறகுதான் பாமுக்கின் ஒவ்வொரு நாவலையும் சூட்டோடு சூடாக மொழிபெயர்ப்பவர் ஜி.குப்புசாமி என்று விளக்கினேன்.  "அவர் மொழிபெயர்த்ததும் படித்து விடுவேன்.  ஆங்கிலத்தை விட தமிழில் சீக்கிரம் படிக்க முடிகிறது.  அதற்கு குப்புசாமியின் சரளமான மொழியும் காரணம்” என்று இன்னும் விளக்கமாகச் சொன்னேன்.      


அங்கேயும் சரி, எங்கேயும் சரி, செய்தித்தாள் என்ற பேச்சே கிடையாது.   பிறகு ஒருநாள் இஸ்தாம்பூலில் ஒரு பேப்பர் கடையைப் பார்த்தேன்.  ஆவலுடன் சென்றால் அங்கேயும் ஆங்கில ஃபாஷன் பத்திரிகைகள் மற்றும் நியூயார்க் டைம்ஸ்.  ஒரு துருக்கி தினசரி கூடக் கிடைக்கவில்லை.  ’ஸமான்’ பெயரைச் சொன்னால் மேலும் கீழும் பார்க்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த இன்னொரு தினசரி, ’ஹுரியத்’.  சர்க்குலேஷன் மூன்று லட்சம்.  அதுவும் கிடைக்கவில்லை.  இரண்டும் துருக்கி மொழி செய்தித்தாள்கள்.  

இஸ்தாம்பூலில் ஒரு தெரு

 இருந்த இரண்டாம் நாள் நீல மசூதிக்குச் சென்ற போது பிலால் என்பவர் வழிகாட்டியாக வந்தார்.  அவர் நன்றாக ஆங்கிலம் பேசியதோடு நன்கு விபரம் தெரிந்தவராகவும் இருந்தார். அவரிடம் இஸ்தாம்பூலில் செய்தித்தாள் கிடைக்காததையும் ’ஸமான்’ பற்றியும் கேட்டேன்.  அவர் சொன்னது: ”துருக்கியில் இஸ்லாமியர் 98 சதவிகிதம். இருந்தாலும் இதை இஸ்லாமிய நாடு என்று சொல்வதில்லை.  கிட்டத்தட்ட ஒட்டு மொத்த மக்களுமே இஸ்லாமியராக இருந்தும் மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதே துருக்கியின் ஆகப் பெரிய சிறப்பு.  இதற்கு நாங்கள் கெமால் அதாதுர்க்குக்கே கடமைப்பட்டிருக்கிறோம்.  இதன் பயன் என்னவென்றால், எங்களால் இன்னமும் ஐரோப்பிய யூனியனுடன் சேர முடியாவிட்டாலும் நாங்கள் ஆசிய நாடு இல்லை.  ஒரே மதம் என்றாலும் பலவிதமான கலாச்சாரங்களை உள்ளடக்கியது துருக்கி.  இஸ்தாம்பூலும் அனடோலியாவும் ஒன்று அல்ல.  இந்தப் பன்முகத்தன்மையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அதாதுர்க் கட்டியமைத்த மதச்சார்பற்ற சமூக அமைப்பு எங்களுக்கு உதவுகிறது.   


பணம் ஒரு பெரிய பிரச்சினைதான்.  நகரத்துக்குள் வீடு கிடைக்கவில்லை.  நகரத்தில் வேலை செய்து கொண்டு நகரத்துக்கு வெளியேதான் வாழ வேண்டியிருக்கிறது.  கணவன் மனைவி இரண்டு பேருமே பெரிய வேலையில் இருந்தால்தான் நகரத்துக்குள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு சாத்தியம்.  ஒரு ஜெர்மானிய அல்லது ஃப்ரெஞ்சுக் குடிமகனுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் எங்களுக்கு இல்லைதான்.  மிகக் கடுமையாக உழைத்தால்தான் ஏதோ கொஞ்சம் சொகுசாக இருக்க முடிகிறது.  இதோ நான் என்னுடைய கேர்ள் ஃப்ரெண்டுடன் வாழ்வதால், அவளும் வேலைக்குப் போவதால் நகரத்துக்குள் வாழ்கிறோம்.  ஆனால் இன்னமும் எங்களுக்கு ஒரு குழந்தை என்பது கனவாகத்தான் இருக்கிறது.  தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறோம்.


அதாதுர்க்கின் காலத்துக்குப் பிறகு நாங்கள் மதச் சார்பின்மையிலிருந்து நகர்ந்திருந்தால் இப்போதைய வசதி எங்களுக்குக் கிடைத்திருக்காது;  இப்போதைய அமைதி எங்களுக்குக் கிடைத்திருக்காது.  இஸ்தாம்பூலில் ஒவ்வொரு அடுத்த மனிதனும் சுற்றுலாப் பயணியாகத்தான் இருக்கிறார் என்பதை இதற்குள் நீங்கள் கவனித்திருக்க முடியும்.  அதிலும் உங்கள் நாட்டிலிருந்து ஏராளமான பேர் இங்கே வருகிறார்கள்.  பாருங்கள்,  நம்முடைய குழுவிலேயே நான்கு பேர் இந்தியர்.   ஆனால் இஸ்லாமியவாதம் இதை ஒப்புக் கொள்வதில்லை.  அவர்களுடைய தினசரிதான் ’ஸமான்’…”
“பத்து லட்சம் சர்க்குலேஷன் இருக்கிறதே?” என்று குறுக்கிட்டேன்.


”ஃபெத்துல்லா குய்லென் என்று ஒருவர் இருக்கிறார்.  அவர் தீவிரவாதி அல்ல; மிதவாதி.  பல கட்சி ஜனநாயகம்தான் அவர் பேசுவதும்.  ஆனாலும் இப்போது இருக்கும் மதச் சார்பின்மை கூடாது என்கிறார் அவர்.  இப்போது துருக்கிக்கு வர விருப்பமில்லாமல் அமெரிக்காவில் இருக்கிறார்.  இங்கே அவருக்கு எக்கச்சக்கமான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுடைய பத்திரிகைதான் ’ஸமான்’.  அதனால்தான் அதன் சர்க்குலேஷன் 10 லட்சம்.  மற்றபடி ஹுரியத்தை எடுத்துக் கொண்டால் நாலு லட்சம்தான்.  தேசம் முழுவதற்கும் நாலு லட்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து இஸ்தாம்பூலில் பேப்பர் படிக்கும் ஒருவரைக் கூட உங்களால் பார்க்க முடியாது.  இவ்வளவுக்கும் துருக்கியின் பெரிய நகரம் இதுதான்…  அங்க்காராவில் பார்க்கலாம்.  அது குமாஸ்தாக்களின் நகரம்.”
அப்படி அவர் சொன்ன போதுதான் துருக்கியின் தலைநகர் அங்க்காரா என்பதே எனக்கு ஞாபகம் வந்தது.

***
1850களில் இஸ்தாம்பூலில் வாழ்ந்த ஒரு பாஷாவின் அழகிய மகளான தில்ரூபாவுக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் ஜெரார் தெ நெர்வால் (Gerard de Nerval).  அவர் ஒரு வித்தியாசமான ஆள்.  எல்லோரும் நாய் வளர்த்தார்கள் என்றால் அவர் ஒரு லாப்ஸ்டரை வளர்த்தார்.  வெறுமனே வீட்டில் வைத்து வளர்ப்பதோடு மட்டும் அல்லாமல் மற்றவர்கள் நாயை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவது போல் அவர் தன் லாப்ஸ்டரை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவார்.  இது பற்றி ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?  ”லாப்ஸ்டர் ஒரு சாதுப் பிராணி.  அதற்குக் கடலின் அத்தனை ரகசியங்களும் அத்துப்படி.  நாயைப் போல் யாரையும் பார்த்துக் குரைக்காது, கடிக்காது.  நம்முடைய அந்தரங்கத்தில் குறுக்கிடாது.  இன்னொரு முக்கியமான விஷயம், ஆனானப்பட்ட கதேவுக்கே நாய் பிடிக்காது தெரியுமா?”


தில்ரூபா தான் படித்துக் கொண்டிருந்த Le Voyage en Orient என்ற பயண நூல் பற்றித் தன்னுடைய நாட்குறிப்புகளில் எழுதியிருக்கிறாள்.  பரந்து விரிந்திருந்த ஆட்டமன் சாம்ராஜ்யத்தில் ஜெரார் தெ நெர்வால் செய்த பயணம் பற்றிய கட்டுரைத் தொகுப்பு அது.  கெய்ரோவுக்கு வரும் நெர்வால் அங்கே ஒரு பெண் துணையைத் தேடுகிறார்.   கெய்ரோவில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணை அறைக்கு அழைத்துச் செல்ல முடியாது.  ஆனால் அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.  அதனால் ஜாவாவிலிருந்து (”அது எங்கே இருக்கிறது ஜாவா?”  என்று தன் நாட்குறிப்பில் எழுதுகிறார் தில்ரூபா) கொண்டு வரப்பட்ட ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்குகிறார்.  


”அதிலேயே நான் கொண்டு போயிருந்த பணமெல்லாம் காலி.  என்னைப் போன்ற பயணிகளை நம்பித்தானே அடிமை வியாபாரமே நடைபெறுகிறது?  ஆனால் என்னதான் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கினாலும் ஒரு பெண்ணின் தோள் மீது கை போட்டு அணைத்தபடி சாலையில் நடக்க முடியாது என்று ஒரு நாடு இருக்கும் என்பதை இதுவரை நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. அது மட்டும் அல்ல.  இரவு உணவின் போது கூட அவளோடு மேஜையில் அமரும் போது அவள் தன் முகத்திரையை அணிந்திருக்க வேண்டியிருக்கிறது.  காரணம், என் வேலைக்காரன் முஸ்தஃபா அங்கே இருப்பான்!

அவளோடு எப்படிப் பேசுவது என்பதுதான் என்னுடைய முக்கியமான கவலையாக இருந்தது.  நான் சொல்வதை அவள் எப்படிப் புரிந்து கொள்வாள்?  மேஜையில் என்னோடு அமர்ந்து சாப்பிடு என்று சைகை காட்டுகிறேன்.  மாட்டேன் என்கிறாள்.  ”குழந்தாய், நீ பட்டினி கிடந்து சாகப் போகிறாயா?” என்று கேட்டேன்.  அவளுக்குப் புரியாது என்றாலும் கூடப் பேசி விட வேண்டியதுதான்.  நான் சொல்வது புரியவில்லை என்பது போல் தலையாட்டினாள்.  அரபியில் ”தய்யிப்” (ஓகே) என்றேன்.  லார்ட் பைரன் சொல்கிறார், ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கான ஆகச் சிறந்த வழி, அந்த மொழியைப் பேசும் பெண்ணோடு தனியாக வாழ்வதுதான்.
ஜாவா என்பதால் இவள் ஒரு இந்துவாகத்தான் இருக்க வேண்டும்.  இந்து என்றால் வெறும் பழங்களும் காய்களும்தானே உணவு?  ”ப்ரம்மா?” என்று கேட்டேன்.  அவளுக்கு நான் சொன்னது விளங்கவில்லை.  மேலும் நான் பிரபஞ்சத்தைக் குறிப்பிடும் பல வார்த்தைகளைச் சொன்னேன்.  அவளுக்கு விளங்கவே இல்லை.  ஒருவேளை என்னுடைய உச்சரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.  என்னிடம் இவளை விற்ற அடிமை வணிகனின் மீது கோபம் வந்தது.  இவளுக்கு நான் எந்த உணவைக் கொடுப்பது என்று ஏன்அவன் சொல்லவில்லை?  பிறகு நான் அவளுக்கு ஆகச் சிறந்த ஒரு ஃப்ரெஞ்ச் ப்ரெட்டைக் கொடுத்தேன்.  மஃபிஷ்ச் என்றாள்.  கடவுளே, இவள் என்ன சொல்கிறாள்?  சில ஆண்டுகளுக்கு முன் சாம்ப்ஸ் லீஸேவுக்கு (Champs-Elysees) வந்த சில இந்தியப் பெண்களைப் பார்த்தது ஞாபகம் வந்தது.  அவர்கள் தங்கள் உணவைத் தாங்களேதான் சமைத்து உண்பார்களாம்.


ஜெரார் தெ நெர்வால் அந்தப் பெண்ணை பிறகு என்ன செய்தார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

***      

நவம்பர்   14 , 2015