தொடர்கள்

நிழலுக்கு கூலி பிம்ப்

செவக்காட்டு சொல்கதைகள் -4

கழனியூரன்

சின்ன வயதில் இருந்து பழகிய ஒரு விசயத்தை நம்மால் எளிதில் கைவிட்டு விட முடியாது. சரியோ தவறோ ஒரு விசயத்தில் நம் உடல் அல்லது மனம் பழகி விட்டால் லேசில் அதிலிருந்து விடுபட முடியாது.

     கிராமத்தில் கஷ்ட ஜீவனத்தில் இருப்பார் தாத்தா. பேரப்பிள்ளைகள் நகரத்தில் வசதியாக வாழ்வார்கள்.’ ஏன் தாத்தா இங்கே கிராமத்தில் கிடந்து கஷ்டப் படுகிறீர்கள் என்னுடன் நகரத்திற்கு வாருங்கள்’ என்று அழைத்து கொண்டு போனான் தாத்தாவை.

       நகரத்தில் வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் கிராமத்து தாத்தாவால் ஒரு வாரத்திற்கு மேல் நகரத்தை தாக்குப் பிடிக்க முடியாது என்னை விட்டு விடு, நான் கிராமத்திற்கே போய் வருகிறேன்’ என்பார்.

தாத்தாவை வருத்தத்துடன் பார்த்து ஏசுவான் பேரன். இது உளவியல் சார்ந்த விசயம். தாத்தா கிராமத்தில் காத்தாட இருந்து பழக்க பட்டவர் அவரை, அடுக்கு மாடி குடியிருப்புக்குள் அடைத்து வைத்தால் இருப்பாரா தாத்தாவை ஆட்டிப் படைப்பது பழக்க தோசம் தான்.

     என்று பீடிகை போட்ட தாத்தா பழக்க தோசம் பற்றி நிறைய நாட்டுப்புறக் கதைகள் பேசுகின்றன. அதில் ஒரு கதையை இப்ப நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன் என்று சொன்ன தாத்தா தன் நரைத்த மீசையை ஒரு முறை தடவிக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தார்.

     ஒரு ஊர்ல ஒரு கருவாட்டு வியாபாரி இருந்தான். அவன் ஓலைப் பெட்டிக்குள் வித,விதமான  கருவாடுகளை வைத்து கருவாட்டுப் பெட்டியை தலைமேல் தூக்கிக் கொண்டு , ஊர் ஊராக சென்று `கருவாடு வேணுமா கருவாடு’ என்று கூவிக் கூவி வித்துக் கொண்டிருந்தான்.

     ஒரு நாள், கருவாடு விற்று விட்டு ஊர் திரும்ப நினைத்த போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அது அப்பிய (ஐப்பசி) கார்த்திகை மாசம். அப்பிய மாதம் அடைமழை பெய்யும் கார்த்திகை மாசம் கன மழை பெய்யும் என்பது பழமொழி. அதுவும் அந்தி மழை அழுதாலும் விடாது என்பார்கள்.

     கருவாட்டுப் பெட்டியில் கொண்டு போன , கருவாட்டில் பாதி விற்பனை ஆகியிருந்தது மீதி கருவாடுகள் மூடியுடன் கூடிய ஓலைப் பெட்டியில் பந்தோபஸ்தாக இருந்தது.

கருவாட்டு வியாபாரி மழைக்காக ஒரு வீட்டுத்தாவத்தில் ஒதுங்கினார், மழை விடுவதாய் இல்லை, நேரம் ஆக, ஆக மழை வலுத்தது , நேரமும் இருட்டிவிட்டது . தாவரத்தில் ஆங்காங்கே பூ மாலைகள் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தது . தாவரம் எங்கும் விதவிதமான பூக்கள் சிதறிக்கிடந்தன.

அதையெல்லாம் பார்த்து இந்த வீடு பூ கட்டும் பண்டாரம் ஒருத்தருடைய வீடாகத்தான் இருக்க வேண்டும் என்று கருவாட்டு வியாபாரி யூகித்துக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அந்த வீட்டிற்குள் இருந்த மூதாட்டி ஒருத்தி தலையில் மழைத்தண்ணீர் விழாமல் இருக்க சுளகு ஒன்றை தலையில் கவிழ்த்துக்கொண்டு, கையில் சிம்ளி விளக்கு ஒன்றையும் வைத்துக்கொண்டு , வெளியே தாழ்வாரத்திற்கு வந்து எட்டிப்பார்த்தாள்.

எட்டிப்பார்க்கும் முன்பே கருவாட்டு வீச்சம் அவள் நாசியைத் துளைத்தது , தாவரத்தில் உக்கார்ந்திருக்கிறவன் கருவாட்டு வியாபாரிதான் என்பதை புரிந்து கொண்டாள் என்றாலும் நேரங்கெட்ட நேரத்தில் , பொழுது இருட்டிய பின்னால் , வெளியூர்காரனிடம் எதையாவது பேசி , “ இன்னார் “ என்று விபரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் , ஐயா நீங்கள் யார் ? உம் பேர் என்ன ? வண்ணம் (ஜாதி) என்ன ? எந்த ஊர் ? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டாள்.

கருவாட்டு வியாபாரி கிழவி கேள்வி மேல் கேள்வியை கேட்கும் தோரணையை பார்த்து “ கிழவி பெரிய ஆளாகத்தான் இருப்பாள் போல இருக்கிறதே. “ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ,அவள்  கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒன்று விடாமல் பதில் சொன்னான்.

இவன் களவானி பெயல் இல்லை, காதில் கிடக்கும் பாமடத்திற்கு ஆபத்து இல்லை என்பது தெளிந்த பின்பு ஐயா பசியாறியாச்சா? என்று தமிழ்ப் பண்பாடு மாறாமல் கேட்டாள்.

ராச்சாப்பாட்டிற்குத்தான் வழி தெரியவில்லை, மழை வேறு வெளுத்துக் கட்டுகிறது, இன்னைய பொழுதை இங்கேதான் கழிக்க வேண்டும் போல் இருக்கிறது , என்று தன் நிலையைக் கிழவியிடம் தயங்காமல் சொன்னான் கருவாட்டு வியாபாரி.

பாட்டி , அவனிடம் , தம்பி என் மகன் வெளியூருக்கு பூ விற்க போனான் , எந்த ஊருக்குப் போனானோ .? கொண்டு போன மாலைகளையும் , பூச்சரங்களையும் விற்றானோ , இல்லையோ , இன்று வீடு திரும்புவானோ, மாட்டானோ .. என் பிள்ளை போன இடத்தில் ராச்சாப்பாட்டிற்கு என்ன செய்வானோ ..? மழை வேறு அடைச்ச கதவு திறக்காமல் பெய்கிறது என்று கிழவியும் தன் மகனை நினைத்து புலம்பினாள்.

மழை விடாது பெய்து கொண்டே இருந்தது, வெரிக்கவில்லை , இரவு வெகு நேரம் ஆகிவிட்டது , பூவிற்கப் போனவனும் திரும்பி வரக்காணோம்.

முதல் ஜாமம் முடியும் வேளையில் தம்பி இனிமேல் என் மகன் வரமாட்டான் அவனுக்காக நான் பொங்கி வச்ச சாப்பாடு வீணாப் போகும் , நீயும் என் மகன் மாதிரி தான். என் மகனுக்குப்பதிலாக , அவன் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை நீ சாப்பிடு அந்தச் சோத்தின் மீது உன் பெயர் தான் எழுதி இருக்கிறது. என்று சொல்லிக் கொண்டே முதியவள் , நடு வீட்டில் மனையைப் போட்டு அதில் கருவாட்டு வியாபாரியை உக்காரச் சொல்லி இலை போட்டு சாதம் பறிமாறினாள் .

கருவாட்டு வியாபாரி ராப்பட்டினி கிடக்க வேண்டாமே “ என்று நினைத்து பாட்டி பிரியமுடன் கொடுத்த சாப்பாட்டைச் சாப்பிட்டான். படுக்கப் போகும் முன் பாட்டி என் கருவாட்டுப் பெட்டியை உங்கள் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்டான்.

‘அதுக் கென்னப்பா தாராளமா வச்சிக்கோ என்று பாட்டியும் அனுமதி கொடுத்தாள் .

வியாபாரி படுத்துக் கொள்ள ஒரு பாயும் தலையணையும் , போர்வையும் , கைக்காவலுக்கு ஒரு தடிக் கம்பையும் கொடுத்து ‘ யப்பா நான் கதவை உட்புறமாகத் தாப்பா போட்டு கொண்டு வீட்டிற்குள் படுத்துக்கொள்கிறேன் , நீ காவல்காரனைப் போல வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள் என்று சொன்ன பாட்டி , வியாபாரியின் கருவாட்டுப் பெட்டியை வீட்டிற்குள் வைத்த பின்பு , தலைவாசல் கதவை அடைத்து உள் புறமாக தாளிட்டு கொண்டாள்.

மறு நாள் காலையில் கோழி கூப்பிட்ட பின்பு , தலைவாசல் கதவைத்திறந்து வெளியே வந்த பாட்டியின் கண்களை கருவாட்டு வியாபாரி கூர்ந்து பார்த்தான். இரவெல்லாம் தூங்காததால் அவள் கண்கள் சிவந்து போய் இருந்தது , அது போலவே கருவாட்டு வியாபாரியும் இரவெல்லாம் தூங்காமல் களைப்பாக இருந்தான்.

கருவாட்டு வியாபாரி , “ என்ன பாட்டி ராவெல்லாம் தூங்கலியா? என்று கேட்டான் . முதியவள் “ எப்பவும் பூ வாசனையோடு படுத்து உறங்கும் என்னை , உன் கருவாட்டு வீச்சம் தூங்க விட வில்லை “ என்றாள்.

நான் தான் கருவாட்டு வீச்சத்தால் சரியாகத் தூங்க வில்லை. நீ ஏனப்பா தூங்கவில்லை ? “ என்று கருவாட்டு வியாபாரியை பார்த்துக் கேட்டாள் .

அதற்கு அந்த கருவாட்டு வியாபாரி சொன்னானாம், பாட்டி தினமும் கருவாட்டு மணத்துடன் தூங்கும் என்னை , உன் வீட்டு பூ நாத்தம் தூங்க விட வில்லை !” என்று மனுஷப் பெயல் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் , பின் அவனை அதில் இருந்து லேசில் மீட்டெடுக்க முடியாது. அதனால் தான் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் , முதலில் தன் தயாரிப்புகளை , இலவசமாக  மக்களுக்கு கொடுக்கிறது , மனுஷப்பெயல் அப்பொருளை உபயோகித்து பழகி விட்டால் , பிறகு என்ன விலை கொடுத்தும் அதை வாங்கி உபயோகிப்பான் . இந்த சூட்சுமத்தை தெரிந்து கொண்டுதான் , சில பொருளை ஏற்கனவே விற்பனையாகிக் கொண்டிருக்கும் பிரபல பொருளோடு சேர்த்து இலவசமாக புதிய பொருளைக் கொடுத்து மக்களை பழக்கப் படுத்துகிறார்கள். இதுவும் ஒருவித வியாபார தந்திரம் தான் என்று ஒரு வித பிரசங்கத்தோடு கதையை முடித்தார் தாத்தா                    

-(இன்னும் சொல்வார்)