தொடர்கள்

நீல.பத்மநாபன்

Staff Writer

கோபியின் கொஞ்சல்

கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
உனை மீண்டும் அடைந்திட
ஆசை கொண்டு
பிறவிகள் பல
வேண்டிப் பெற்று
யுகாந்திரங்கள் பல
நீந்திக் கடந்து
கலியுகம் தாண்டியிந்த
கனி யுகத்தில்
தனிப்பட்டுப் போன
தற்கால கோபியின்
குமுறல் இது;

மானிடப் பிறவியின்
இடையறா இன்னல்களை
மறந்திட
ஆயர்பாடியில்
ஆடிக்களித்த
ஆனந்த நாட்களை
கனவதில் காண்கின்றேன்
கனிவுடன் கரைகின்றேன்
அந்த நாளும் வந்திடாதா என
ஆறாத பிரிவுத் துயரால்
வாடி வதங்கின்றேன்

உள்ளம் உருகிட
கண்இர் வடிந்திட
உனை நாடிய ராதையின்
விழிநீர் நீ
துடைக்கலையோ
செயலிழந்த பார்த்தனுக்கு
பாதை நீ காட்டலையோ
பிஞ்சுநாள் ஏழைத்தோழனை
கை கொடுத்து தூக்கலையோ
நாரயஇயம் பாடியவரின்
கொடும் நோய் அகற்றலையோ

கர்ம யோகத்தின்
கரடுமுரடான பாதைகள்
கடந்து
உற்றம் சுற்றம்
மாயையெனப் புரிந்து
புருஷாயுசின்
கடைக்கோடியில்
மீண்டும் உனை நாடி
வந்து நிற்கும்
இவன் முன்

அசுரர் முன் மோகினியாய்


இன்னுமொரு
ரமயின் கோலம் கொண்டு
வந்திடலாகாதோ
நெஞ்சத்து சுமையெல்லாம்
கண்இராய் கரைந்துருக
உன் திருமடியில் தலைவைத்து
அழுது தந்திடும்
அருட்பேற்றை
தந்தருளும் பெரும் தயையை
வாரிவழங்கிடலாகாதோ
என்னருமை ராதையின்
கிருஷ்ணாகார்முகில் கண்ணா


*** *** ***

மிரட்டல்

கண்ணே
தலையும்
முலையும்
யோனியும்
ஒன்றிணைந்து
இருந்தால்
அதுவும்
ஒரு
அழகுதான்
அதுக்காக
ஒவ்வொன்றாய்
முழுசாய்
மொண்ணையாய்
தூக்கிக்காட்டி
மிரட்டலாமா

*** *** ***

இலை உதிர் காலம்

பஞ்சு போன்ற கால் பதித்து
மெல்ல அணுகிடும்
சரத்கால கொழுந்துகள்
தளிர்த்திட
இதயமெனும் இகலோக
விருட்சத்தின்
இலைகள்
கருகிச்சருகாகி
உதிரச்செய்திடவும்
மீண்டும்
தளிரிட்டு தழைக்கவும்
செய்திடும்
விந்தைகள் வினைகள்
காலம் காலமாய்
களைக்காமல் றுத்தாமல்
செய்துகொண்டிருக்கும்
நாயகனே உன் பாதம்
சரண்

*** *** ***

வந்த சுவடு தெரியாமல்

ஆர்ப்பரித்து வந்த
எதிர் காற்றினில்
அடிபதறாதிருக்க
அழுத்திக்காலூன்றிய
கட்டங்கள் கணங்கள்
இல்லையென்பதில்லை
இருப்பினும்
இப்போதெல்லாம்
வந்த சுவடு தெரியாமல்
போய்விடவே ஆசை

*** *** ***

பிரம்மத்தை அடைந்திட

ராக துவேஷம்
பேத சிந்தை
அகற்ற
நசிகேதசின் கதையில்
சிரத்தைச்
செலுத்திச்
செலுத்தி
முயன்று
முயன்று
தோற்று
தோற்று
நாட்கள் நகர்ந்திட
திடுதிப்பென்றொரு நாள்
வருகை தந்து
காத்தருளினான்
கால பைரவன்

*** *** ***

ஒரே பால் மணம்

இவ்வுலகில் இருக்கையில்
பரஸ்பரம் குதறிக்கிழித்துக்
கொண்டிருந்தவர்கள்
சாவூர் சென்றதும்
ஒன்றாய் இணைந்தனர்
முறைப்படி
ஒரேபால் மணத்திற்கு
தடையுத்தரவு இல்லையாம்
அங்கே

- நீல.பத்மநாபன்

*** *** ***

"தமிழ் நாவல்கள் பற்றிய எந்த ஒரு விமரிசனத்திலும் , எந்த பட்டியலிலும் அவரது இரு நாவல்கள் 'தலைமுறைகள் ' , 'பள்ளிகொண்ட புரம் ' இடம் பெற்றிருப்பதையும் அவன் காண்பான்.மிகப் பெரும்பாலான விமரிசகர்களுக்கு அவர்களுடைய மிகச்சிறிய பட்டியலில்கூட கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அப்படைப்புகளை தவிர்க்க முடியவில்லை என்பது ஓர் எளிய விஷயமல்ல .
நீல.பத்மநாபனின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன .அவை நிதரிசனப் பாங்கு உடையவை .அழகியல் ரீதியாக சொல்லப்போனால் அவை இயல்புவாதப் படைப்புகள் . அவை 'உள்ளது உள்ளபடி ' , ' அப்பட்டமாக ' சொல்ல முயலக்கூடிய படைப்புகள் என்று சொல்லலாம்" என்று ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில் நீல.பத்மநாபனைப் பற்றி குறிப்பிடுகிறார்.

24 . 6 . 1938 இல் திருவனந்தபுரத்தில் நீல.பத்மநாபன் பிறந்தார்.இன்று (புதனன்று ) சாகித்ய அகதமி விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்.

"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில் , ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும் , சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது.இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான் , என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன் " என்று நீல.பத்மநாபன் தன்னைப்பற்றி குறிப்பிட்டதுண்டு.

அதிகம் பேசப்படும் எழுத்தாளனாக திகழ்வதற்கு ஒருவர் நல்ல படைப்புகளை மட்டும் படைத்தால் போதாது , கொஞ்சம் அரசியல்வாதியின் செயல்பாடுகளும் அவசியம். அப்படிப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடாதவர்.

முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' நாவல்
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

நீல.பத்மநாபன் . அவரின் படைப்புகள் :

நாவல்கள்


தலைமுறைகள் - 1968
பள்ளிகொண்டபுரம் - 1970
பைல்கள் - 1973
உறவுகள் - 1975
மின் உலகம் - 1976
நேற்று வந்தவன் - 1978
உதய தாரகை - 1980
பகவதி கோயில் தெரு - 1981
போதையில் கரைந்தவர்கள் - 1985


சிறுகதைகள்

மோகம் முப்பது ஆண்டு - 1969
சண்டையும் சமாதானமும் - 1972
மூன்றாவது நாள் - 1974
இரண்டாவது முகம் - 1978
நாகம்மா - 1978
சத்தியத்தின் சந்நிதியில் - 1985
வான வீதியில் - 1988

கவிதைகள்

நீலபத்மநாபன் கவிதைகள் - 1975
நா காக்க - 1984

கட்டுரைகள்

சிதறிய சிந்தனைகள் - 1978

இலக்கிய பார்வைகள்

திரட்டு நூல் - குரு சேத்திரம் - 1976
தற்கால மலையாள இலக்கியம் தமிழ் - 1985

மலையாளம்

பந்தங்கள் - 1979
மின் உலகம் - 1980
தலைமுறைகள் - 1981
பள்ளிக்கொண்டபுரம் - 1982
கதைகள் இருபது - 1980
எறும்புகள் - 1987

 டிசம்பர்   27, 2007