தொடர்கள்

பங்குச்சந்தை - மந்திரச்சாவி 1

டாக்டர் சங்கர் குமார்

"அப்பா! இந்த நிறுவனப் பங்கின் விலை எதனால் இப்படி ஒரே நாளில் 8 சதவிகிதம் குறைந்து போனது?"

அன்றைய தினசரிப் பத்திரிகையின் பங்குச் சந்தைப் பக்கங்களில் மூழ்கியிருந்த அந்த 'அப்பா' நிமிர்ந்து கேள்வி கேட்ட மகனைப் பார்த்தார். இது போன்ற கேள்விகள் அவருக்கு ஒன்றும் புதியனவல்ல. தினமும் இப்படி மகன் ஏதாவது கேள்விகள் எழுப்புவதும் அதற்கு அவர் பொறுமையாக பதில் சொல்வதும் தினசரி வாடிக்கையான ஒன்றுதான். கேள்வி கேட்ட மகனை அருகே வரும்படி அழைத்தார். அவனது தலையை மெதுவாகக் கோதியவாறே " எல்லாக் கேள்விகளுக்கும் நானே பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட, நீயாகவே தெரிந்து கொள்ள முயற்சி செய்யேன்" என்றார். இது நடந்தது 1975ஆம் ஆண்டு மும்பையில் (அன்றைய பம்பாயில்). அப்போது அந்த சிறுவனின் வயது 15. அவனது சக வயது நண்பர்களை மொஹிந்தர் அமர்நாத் மற்றும் சுனில் கவாஸ்கரின் கிரிக்கெட் ஸ்கோர் எண்கள் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்த போது ,இந்த சிறுவனை ஈர்த்தது என்னமோ ஒரு நிறுவனத்தின் 'பேலன்ஷ் சீட்' எண்கள் .

அவனது தந்தை இந்திய வருமான வரித்துறையின் ஒரு கடமை தவறாத அதிகாரி. அத்துடன் பங்குச் சந்தையிலும் சிறிய அளவில் முதலீடு செய்து கொண்டிருந்தார். தனது மகன் பங்குச் சந்தை குறித்து கேள்விகள் எழுப்பும் போதெல்லாம் மற்ற அப்பாக்களைப் போல காதைத் திருகி "அல்ஜீப்ரா படி" என்று அதட்டாமல் பொறுமையாக எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சில சமயம் அவன் கேட்கும் கேள்விகள் அவனது அப்பாவுக்கும் விடை தெரியாத அறிவுபூர்வமான கேள்விகளாயிருக்கும். அப்போதெல்லாம் "நீயாகவே தெரிந்து கொள்ளேன்" போன்ற பதில்களைச் சொல்லி சமாளித்து விடுவார். அவருக்கு நன்றாகத் தெரியும்.தனது மகன் எங்கேயாவது தேடி, அலசி ஆராய்ந்து தனது கேள்விக்கான விடையைத் தானே கண்டுபிடித்துக் விடுவான் என்பது.

இப்படிச் சின்ன வயது முதலே பங்குச் சந்தையின் மீது பைத்தியமாகத் திரிந்த அந்த சிறுவன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் 2007ஆம் ஆண்டில் இந்தியாவின் 51ஆவது பணக்காரராகவும் உலகின் 1062ஆவது பணக்காரராகவும் 5000 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாகவும் "forbes " பத்திரிக்கையால் பட்டியலிடப்பட்டான்.

அந்த சிறுவனின் பெயர் "ராகேஷ் ஜுஞ்சன்வாலா ".

எண்களுடனான அவரது காதல் அவரது கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தது. ஆம். அவர் படித்தது மும்பையின் புகழ் வாய்ந்த சைடன்ஹாம் (Sydenhamm) கல்லூரியில் "Chartered Accountancy ". கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தபோது, வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி இவருக்கு முன்னே விஸ்வரூபமெடுத்து நின்றது. "அடுத்து என்ன செய்வது?" என்று தீர்மானிக்க வேண்டிய வாழ்வின் மிக முக்கிய தருணம். எண்பதுகளில் Chartered Accountancy படித்தவர்களைக் கொத்திக் கொண்டு போக எத்தனையோ உள்நாட்டு , வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த காலகட்டம். இவரது கதவையும் பல வாய்ப்புகள் தட்டத்தான் செய்தன. இவருக்கு காதல் இருந்தது என்னமோ பங்குச் சந்தையின் மீதுதான். காதல் ஓரிடம், கல்யாணம் ஓரிடம் என்பதை அவரது உள்மனம் என்னமோ ஒத்துக் கொள்ளவில்லை. தனது வாழ்வின் போக்கை நிர்மாணிக்கக் கூடிய மிக முக்கிய முடிவை அவர் எடுத்தார்.

ஆம். பங்குச் சந்தைதான் தன் வாழ்க்கை என்று உறுதியாகத் தீர்மானித்தார். தனது முடிவைத் தந்தையிடமும் தெரிவித்தார்.

"கல்லூரிப் படிப்பு முடிந்தது. அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"

"அப்பா . பங்கு வர்த்தகத்தை முழு நேரத் தொழிலாக செய்யலாம் என்றிருக்கிறேன். ஒரு நல்ல பங்குத் தரகராக வரவேண்டும் என்பதே என் விருப்பம்".

கண்ணெதிரே சார்ட்டர்டு அக்கவுண்டன்சி படித்தவர்களுக்கான 'கார்ப்பரேட்' (Corporate) சொகுசு வாழக்கை ரத்தினக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும்போது, தனது மகன் எடுத்த இந்த முடிவு அந்த தந்தைக்கு கொஞ்சம் கூட ஆச்சர்யம் அளிக்கவில்லை. கிட்டத்தட்ட இது அவர் எதிர் பார்த்த ஒன்றுதான். மகனைப் பக்கத்தில் அழைத்து, " உனக்கு எந்தத் துறையில் விருப்பமோ, அந்தத் துறையை முழு ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொள். அதில் பலருக்கும் தெரியாத விஷயங்களைக் கற்று தெரிந்து கொள். பின்னர் அந்தத் துறையில் மிகச் சிறந்த நிபுணன் ஆகு. வெற்றி பெற வாழ்த்துகள்" என்று வாழ்த்தினார். கிட்டத்தட்ட நண்பன் பட 'பஞ்சவன் பாரிவேந்தன்' பாணியில் அவர் சொன்ன இந்த ஒரு அறிவுரை மட்டும் அல்ல,பல சமயங்களில் தனக்கு கிடைத்த தந்தையின் அறிவுரைகளும் ஊக்குவிப்புமே தனது பங்குச் சந்தை வெற்றிக்குக் காரணங்கள் என்று பின்னாளில் பல நேர்காணல்களில் "திரு.ராகேஷ் ஜூஞ்சன்வாலா" வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

பங்குத் தரகராவது (Share Broker) என்று தீர்மானித்தாகி விட்டது. பங்குத் தரகம் செய்யும் நிறுவனம் ஆரம்பிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. நிறைய முதலீடு தேவைப்படும். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் என்ன பணம் இருந்திருக்க முடியும். யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் ராகேஷ். தனது பங்குத் தரகர் கனவைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடுவது என்று முடிவு செய்தார். முதலில் பங்கு வர்த்தகம் (Share Trading ) செய்யலாம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தனது கனவைத் துரத்திக் கொள்ளளலாம் என்று தீர்மானித்தார். பங்கு வர்த்தகம் செய்வதற்கும் கொஞ்சமாவது பணம் வேண்டுமே என்று யோசித்தபோது மறுபடியும் உதவிக்கு வந்தார் அப்பா. மகனின் வங்கிக் கணக்கில் தன்னால் முடிந்த ஒரு தொகையாக 5000 ரூபாய் டெபாசிட் செய்தார். இது நடந்தபோது ராகேஷின் வயது 25. ஆண்டு 1985. 20000 என்ற எல்லையை 2008ல் கடந்து சென்ற சென்செக்ஸ் குறியீட்டின் அப்போதைய மதிப்பு வெறும் 150.

ஐயாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு பங்குச் சந்தையில் பணம் பண்ண நுழைந்து விட்டார். சில சமயங்களில் லாபம், சில சமயங்களில் நஷ்டம், எது எப்படியோ மொத்தத்தில் பங்கு வர்த்தகம் லாபகரமாகவே இருந்தது. ஆனால் அதில் வரும் லாபம் அதிகமாக இருந்தாலும் அந்த வருமானம் மிகவும் சொற்பமாகவே இருந்தது. வெறும் ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் என்ன பெரிய வருமானம் வந்து விட முடியும்? மாதத்திற்கு 5 சதவிகிதம் லாபம் என்று வைத்துக் கொண்டாலும் அது வெறும் 250 ரூபாய்தானே. ராகேஷ் இந்த வருமானத்தில் திருப்தி அடையவில்லை. வருமானம் அதிகரிக்க ஒரே வழி முதலீட்டை அதிகரிப்பதுதான் என்று முடிவு செய்தார். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது?

நமது இலக்கு எது என்பதை நாம் சந்தேகமே இன்றி தீர்மானித்து விட்டால் அதனை அடையும் பாதையைக் கடவுள் காட்டுவதோடு மட்டும் இல்லாமல் வழியில் எதிர்கொள்ளும் மூடப்பட்ட கதவுகளையும் ஒவ்வொன்றாகத் திறப்பார். பல வெற்றியாளர்களின் சரித்திரங்களைப் படிக்கும்போது இது உண்மை என்பது நிரூபணமாகும்.வாழ்வில் வெற்றி பெற்ற அனைவருமே தனது இலக்கு என்ன என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்கள். ஒரே இலக்கோடு, நம்பிக்கையோடு தனது பயணத்தைத் தொடர்கையில் வழியில் எதிர்ப்படும் தடைகள் எல்லாம் ஏதோ ஒரு சக்தியால் தவிடு பொடியாகி புதிய வழிகள் பல உருவாவதையும் கண்டிருக்கிறார்கள். ராகேஷ் ஜூஞ்சன்வாலா தனது இலக்கு எது என்பதில் உறுதியாக இருந்தார். அதனை அடைவதற்கான வழிகள் என்ன என்பதையும் அறிந்திருந்தார்

பணத்திற்கு என்ன செய்தார் என்பதும் சரியாக 3 ஆண்டுகளில் இந்த 5000 ரூபாய் 5 லட்சம் ஆனதும், 30 ஆண்டுகளில் 5000 கோடி ஆனதும்

 அடுத்த வாரம்...

 டாக்டர் சங்கர் குமார் எழுதும் பங்குச்சந்தை தொடர்பான இத்தொடர் வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று அந்திமழையில் வெளிவரும்.