03.01.95
புதுவை - 08
நலம்.
உன்னுடைய 29.12.95 கடிதம், மகிழ்ச்சி.
புதுவைக்கு நீங்கள் எப்ப வேணுமாலும் வரலாம்; அழைக்க வேணுமென்று நினைக்க வேண்டாம், நம்ம வீடு இது.
தாடி சித்தப்பா இங்கேயும் வந்திருந்தார், இன்னும் வருவார். இந்த 20 ஜனவரி சனிக்கிழமை அவருடைய எருதும் ஓநாய்களும் புத்தகத்துக்கு, சிறிய அளவில் ஒரு அறிமுகக் கூட்டம் இங்கே அபிமானிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அன்று மாலையில்,
உனது பெற்றோர்கள் சமாதானமாக மாட்டார்கள். அது பற்றி கவலைப்படாதே, எல்லாப் பெண்ணுக்கும் ஏற்படுகிற ஒருவகைப் பிரிவு, துக்கம் உனக்கும் இருக்கும். பெற்ற வீட்டுக்குப் போய், அதை புதிப்பித்துக் கொள்வார்கள்; அது உனக்கு இல்லை!
ஆத்துமா பிரிவதற்குக் கொஞ்சம் முன்னால் “ நெய்வேலிக்கு ஆள் அனுப்புங்கோ; நா சாந்தியப் பாக்கணும்” என்று உன் பெற்றோர் சொன்னாலும் ஆச்சிரியப்பட வேண்டியதில்லை.கோபம், ஆத்திரம், ஊடல் எல்லாம் அதீத பிரியத்தினால்தான் வருகிறது. ஆனால் காலம் பொல்லாதது. வயோதிக நீரிழிவு நோயளிகளை காலன் தூண்டிலை எப்போது சுண்டுவான் என்று சொல்லமுடியாது.
எத்தனை நாள் வாழ்ந்தாலும் உலகத்தின் பாடத்தைக் கற்றுத் தெளிபவர் மிகச் சிலரே. .
பிள்ளைகளுக்கு ஞானப்பல் முளைத்தப் பிறகும் கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெற்றோர், மூடர்கள்.
“விட்டு விடுதலை ஆகு – அந்த
சிட்டுக்குருவியைப் போலே”
என்றும் அன்புடன்,
கி.ரா.