தொடர்கள்

பிரியங்களுடன் கி.ரா – 16

புதுவை இளவேனில்

16.09.92

புதுவை - 08

அன்பார்ந்த பேத்தியாளுக்கு,

 நலமே விளைக..

கடிதஇலக்கியம் பற்றியும் பெண்டுகளைப் பற்றியும் ரசிகமணியின் அபிப்ராயத்தை இந்த ஆண்டு ரசிகமணி விழா அழைப்பிதழில் “டி.கே.சி.வாக்கு” என்று அச்சிட்டிருந்தார்கள்.

அதை நகல் பண்ணி உனக்கு அனுப்பத் தோன்றியது.

எனது தம்பி மகனுக்குத் திருமண விசயமாக நாங்கள் ஊருக்குப்போய் இருந்தோம்.

அங்கேயே சின்னமாசத்துக்கு ஒரு மாசம் தங்க வேண்டியதாகி விட்டது.  இந்த 9 ஆம் தேதி தான் புதுவை வந்து சேர்ந்தோம்.

வந்திருந்த கடிதங்களில் திலகத்தின் திருமண அழைப்பிதழும் இருந்தது.

விசாரித்து அப்பாவுக்கு – கடலூருக்கு – ஒரு காயிதம் எழுதத்தான் முடிந்தது.

எப்படியோ திலகத்துக்கு மாலை பூத்துவிட்டது. ரொம்ப சந்தோசம்.

உனக்கும் ஒரு சட்டையைப் பார்த்துப் போட்டுவிட்டால், இலக்கியம் அது இது என்று இல்லாமல் ஒழுங்காய் குடும்ப பாரத்தை தலையில் வைத்து சுமக்க ஆரம்பித்துவிடுவாய்.

ஒரு தடி “மீன்காரன்” கிடைப்பானா என்று பார்க்கணும். கிடைப்பான் கிடைப்பான்.

அம்மி செய்த கல்லாசாரி குழவியையும் செய்துதான் போட்டிருப்பான்.

எங்கே அது என்று தான் கண்டுபிடிக்கணும். கண்ணாடி போட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கார் பாவாடை பசுபதி அவர்கள்

அன்புடன் ராஜ் தாத்தா.