தொடர்கள்

பிரியங்களுடன் கி.ரா – 2

புதுவை இளவேனில்

04.02.2003

பிரியம் நிறைந்த சாந்தி தம்பதியருக்கு நலம்.

24.01.03 தேதிய கடிதம் வந்தது.

பாடாமல் இருந்து ரொம்ப நாள் கழித்துப் பாடும் குரல் போல சாந்தியின் கடிதம் இருந்தது.

கடிதம் எழுதும் பேனாவை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேனும் போலிருக்கு. கைப்பழக்கம் இருந்து கொண்டேயிருந்தால் இரும்புச் சாவியும் வெள்ளிச்சாவி போல் மிளிரும்.

சங்கமிக்குப் பொழுது நகர்வது இங்கே சிரமமாக இருந்தது. நல்ல வேளையாகப் பூக்கள் அவளுக்குக் கை கொடுத்தது.

பையனுக்கு ரெண்டு தரம் கோவிக்க மட்டுமே முடிந்தது. அவன் கோபித்துக்கொண்டு இருப்பதும் ஒரு ’அளகு’ தாம்!

“வரப்போகும் காலங்களில் நண்பர்கள் மட்டுமே உறவுக்காரர்களாக இருப்பார்கள்” என்று நீ எழுதியிருப்பது சத்தியமான வார்த்தைகள்.

மனசுக்குப் பிடிக்காவிட்டால் நண்பர்கள் விலகிப் போய்விடுவார்களே தவிர பகையாளிகளாக ஆகமாட்டார்கள். ராமாயணத்தில் ராமனுக்கு உதவியவர்கள் எல்லாம் நண்பர்கள். மகாபாரதத்தில் உறவுக்காரர்களெல்லாம் பகையாளர்கள்! மொத்தத்தில் இரண்டிலும் நண்பர்களே உதவியாளர்கள். காலம் போய்க்கொண்டே இருக்கிறது.

யாருக்காகவும் எதுக்காகவும் அது நிற்பதில்லை. புதுவைக்கு நாங்கள் வந்து பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வியாழன் கிரகத்தில் இருப்பவனிடம் சொன்னால் ஒரு வருசமும் இரண்டு வாரந்தானே ஆகிறது என்பான்.

குளிர் விட்டுக்கொண்டே வருகிறது. கோடை வந்து கொண்டே இருக்கிறது. கோடையும் கடுமையாகவேதான் இருக்கும்.

பிரியங்களுடன்,

கி.ரா