29-06-2004
புதுவை - 08
தீப.நடராஜன் அவர்களுக்கு நலம்.
கூரியர் பார்சலைக் கையில் வாங்கியதும் இதனுள் என்ன புத்தகம் இருக்கமுடியும் யோசித்துப்பார்த்தும் தீர்மானிக்க முடியவில்லை. பிரித்ததும் ஆச்சரியமும் சந்தோசமும்.
நல்ல விசயம் ரொம்ப நல்ல விசயம். 50 ஆண்டுகள் கழித்து ரசிகமணியின் நூல்கள் வரிசையாக வரவேண்டும் என்று இருந்திருக்கும் போலும். அமைப்பாக வந்திருக்கிறது புத்தகம்;
இன்னுங்கொஞ்சம் நல்ல தாளில் போட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. அட்டை திருப்தியாக அமைந்திருக்கிறது.
புதுவைக்கு இப்போது வந்துபோனதைக் குறிப்பிட்டு உள்கடிதத்தில் எழுதி இருப்பது சரிதான். அந்தக் கிராவும் நடராஜனும் இப்போது இல்லை; கிரகணத்தில் ராகு கேதுகள் விழுங்குவது போல காலம் நம்மை முக்காலே அரைக்கால்வாசி விழுங்கிவிட்டது. வெளியில் நம்முடைய தலை மட்டும் தெரிந்துகொண்டிருக்கிறது.
உங்கள் கடிதங்கள் புத்தகமாகி வெளிவந்தால் பெயர் சொல்லும். அய்ம்பது ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டது காலம்.
7-6-2004 தேதிய குமுதத்தில் (பக்கம்: 89) ரசிகமணி டி.கே.சி பற்றி 4 பக்கங்கள் வந்திருக்கிறது. நீங்கள் பார்க்கவில்லை என்றால் அந்தக் குமுதம் அல்லது அந்தப் பக்கங்கள் உங்களுக்கு இப்போது அனுப்பிவைக்கிறேன்.