04.1.2005
அன்பார்ந்த சாந்திக்கு நலம். உன்னுடைய 29.11.05 தேதிய கடிதம்; கவரைப் பிரிக்க முடியாமல் பசை கடிதத்துடன் ஒட்டி இருந்ததால் சில வார்த்தைகள் கவரோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நம்ம போஸ்டாபிஸ்காரனுக்கு மட்டும் தான் இப்படி கவரையும் இன்லேண்டு லெட்டரையும் வடிவமைக்கத் தெரியும். நாம் கவரை பிரிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும்போது அவன் நமக்குத் தெரியாமல் பின் புறம் வந்து இருந்துகொண்டு கை தட்டிச் சிரிப்பான். அந்த சிரிப்பும் கை தட்டும் ஓசை நம் காதில் விழ உருவம் தெரிந்தால்த்தானே! இப்படிக் கவர்களை வடிவமைக்கவே கைதேர்ந்த ஆட்களை உயர்ந்த சம்பளத்தில் வைத்துக்கொண்டிருப்பான் போலிருக்கு.
இப்படியான் கவர்களை ஒட்டும்போது எனது நண்பர் தீப.நடராஜன் என்ன செய்வார் என்றால், நாம் தினசரிக் காலண்டரில் கிழித்துப்போடும் தாளை எடுத்து வைத்திருப்பார். அந்தத் தாளை உள்ளே வைத்து ஒட்டிவிடுவார். பசையிலிருந்து அந்தத் தாள் கடிதத்தை காப்பாற்றி விடும். ரசின்மணி தனது பேரன் பேத்திமார்களுக்கு இப்படி கடிதத்தை எப்படி ஒட்டுவது, ஸ்டாபை எப்படி – கோணல்மாணலாக வைத்து ஒட்டாமல் – அழகாக பசையை குளுகுளு என்றூ – பறவை எச்சம் போவது போல் வைத்து ஒட்டாமல் – அம்சமாய் ஒட்டுவது, கடிதங்களை எப்படி மடிப்பது, வீட்டினுள் வந்து செருப்புகளை தாறுமாறாக கழற்றிப் போடாமல் ஜோடி சேர்த்து வைப்பது, துணிகளுக்கு நோகாமல் அதே சமயம் அழுக்கும் போகும்படி எப்படி துவைப்பது, துணிகளை காயப் போடும் சித்திரம் இப்படி எத்தனையோ வாழ்வியல் விஷயங்களை சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
தாடி சித்தப்பாவின் கோபம் வருத்தம் இவைகளை புரிந்து கொள்ள முடியும். அது கோபமோ வருத்தமோ கிடையாது அந்த வினாடியில் தோன்றுகிற ஒரு உணர்ச்சிவயப்படல், அவ்வளவுதான். எதையும் நாம் இப்படித்தான் பார்க்கணும். அவர் சுமக்க முடியாமல் பாராங்களைச் சுமக்கிறார். எதை எதை குறைத்துக்கொள்ள வேணும் என்று யோசிக்கக்கூட அவருக்கு நேரமில்லை. ரொம்ப பாவம் அவர். திடீரென்று ஒரு நாள் ( தீபாவளிக்கு மறுநாள்) சித்தப்பா ஸ்ரீசந்த், பாரதியுடன் நம்ம வீட்டுக்கு வந்தார். எங்களுக்கு முதல் நாள் அலுப்பு காரணமாக அவர்களை முழுசாக உபசரிக்க முடியவில்லை. பிறகு அவர்களுக்கே தெரிந்தது. பாரதி வேலைகளை கணவதியுடன் பகிர்ந்து கொண்டாள். “ சமைத்து எங்களுக்கும் போட்டு நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டேன்! அப்படித்தான் நடந்தது.
ஆறு மாசமாக ஸ்ரீசந்துக்குப் பொண்ணு பார்க்கிறார்களாம். எங்கும் குதிரவே மாட்டேன் என்கிறதாம். அரே நிமிஷத்தில் தட்டிப் போய்விடுகிறதாம். அதுக்கான காரணம் கண்டுபிடிக்க சிரமமே இல்லை. எனக்குத் தோன்றுவது, ஏற்பாட்டுக் கல்யாணம் ஒத்து வராது; பையன் எங்கே காண்பிக்கிறானோ அங்கே முடிப்பதுதான் சரி என்றும் சொன்னேன். அவர்களுக்கு இது சரி என்று தோன்றவில்லை. கொஞ்சம் யோசித்தால் சித்தப்பாவுக்கு விடை கிடைத்துவிடும்; அவர் ஏன் ரெண்டாந்தரம் செய்து கொண்டார் என்று தானே தன் முதுகைப் பார்ப்பதென்று சிரமம்தானெ.
வேர்கள் ராமலிங்கத்தின் அப்பாவின் சாவு – 97 வயதில் நடந்த விதம் படிக்க “ ஆனந்தமாக” இருந்தது. எல்லோம் இப்படி சாகத்தான் விரும்புகிறார்கள்; யோகம் வேணுமே. இப்படியா சாவுகளை “ கல்யாணச் சாவு ” என்பார்கள். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டமாக எடுத்துச் செல்வார்கள். மயான பூமிக்கு, பேரன் பேத்திகள் நெய்ப்பந்தயம் பிடிப்பார்கள். காசுகளை சில்லரைகளா மாற்றி வைத்துக்கொண்டு அள்ளி அள்ளி சூரை போடுவார்கள். அழுவதென்பது கிடையாது. அதனால்த்தான் ஆனந்தம் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்தில் “மரணம் மதுரம்” என்கிறார்.
உனது விருப்பப்படி “கிரா.கதைகள்” தொகுதியை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். இந்தத் தொகுதியிலும் கூட சாவு என்று ஒரு கதை இருக்கிறது. ( மரணத்தினால் மனித சங்கிலி அறுந்து போவதில்லை. ராமாநுஜநாயக்கரின் விந்து அணு பத்தாவது மாதம் குழந்தை பிறப்பாகித் தொடர்கிறது என்று சொல்கிறது கதை.
இக்கடிதத்துடன் நீண்ட நாட்களாக என்னிடமே தேங்கிவிட்ட கேள்விகள் – பதில்கள் (27-09-05) நூலை அனுப்புகிறேன்;( கணேசனுக்கு அரசியல், மன சுபீட்சத்தை அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்பது சரியான வார்த்தை இல்லை; எனக்கு பிராத்தனையில் நம்பிக்கையும் கிடையாது. வேற எப்படிச் சொல்ல என்றும் தெரியலை. இந்தக் கேள்விகளில் மிகப்பலது அவருடைய மன பாதிப்பு கொண்டவை என்பதைத் தெரிந்தே இதைச் சொன்னேன்! அவரைச் சோர்வடைய வைப்பதற்காக அல்லவே அல்ல.
வார்த்தைகள் ஒரு பட்டாம்பூச்சியைப் போலத்தான் சுலபமாக யாருக்கும் எந்தக் குழந்தைக்கும் பிடிபடாது.பழியாய் ஏய்ச்சும் காட்டும். கணேசன் என்ற குழந்தைக்கும், ஏன் எனக்கும் கூட இந்தக்கேள்வி பதில்களில் நிகழ்ந்துள்ளதை இப்போது மீண்டும் படித்துப் பார்க்கிறபோது ‘அய்யே’ என்றிருக்கிறது.
எனது இக்கடிதத்தை கணேசன் – படித்துப்பார்த்தால் – நோகாத மனசோடு ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். அனுபவம் சில சமயம் இப்படித்தான் கராராகப் பேசும்; அதன் குணம் அப்படி விட்டுத்தள்ளுவது தான் சரி.
எப்போதும் போல் நாம் அனைவரும்.
அன்புடன்,
கி.ரா.