தொடர்கள்

பிள்ளை நிலா

நெஞ்சம் மறப்பதில்லை -16

சுமதிஸ்ரீ

இந்த வருடம் பெண்கள் தினத்தன்று கோவை பி.எஸ்.ஜி.கல்லூரியில் பேசினேன். நிகழ்ச்சி முடிந்ததும் ஹரிபவனம் உணவு விடுதிக்கு பென்னி, பாப்பாவோடு சாப்பிட சென்றேன்.எங்களுக்கு பக்கத்து டேபிளில் ,ஒரு வயதான அம்மாவும், ஒரு இளைஞனும் அமர்ந்து இருந்தார்கள். அந்த அம்மா, முதுமை சுமந்து, மெலிந்த தேகத்தோடு இருந்தார். அந்த இளைஞன் காத்திரமான உடம்போடு, கொஞ்சம் முரட்டுத் தோற்றத்தோடு இருந்தார். அந்த அம்மாவின் கழுத்தில் ஜெபமாலை மட்டும் இருந்தது. காலில் அணிந்திருந்த ரப்பர் செருப்பு கொஞ்சம் தேய்ந்திருந்தது.முடியை கொண்டையாக முடிந்திருந்தார் .ஏறக்குறைய எல்லா வகை உணவுகளும் அவர்கள் முன்னால் இருந்தன.இருவருக்கு ஏன் இத்தனை வகை என்று கொஞ்சம் நேயமற்று நினைத்தேன். குல்சா, பாலக் பனீர்,பிரியாணியோடு நிறைய அசைவ உணவுகளை "சாப்பிடும்மா ....நல்லா சாப்பிடும்மா...."என்று அந்த இளைஞன், அந்த அம்மாவை சாப்பிட வைத்தார்.காலம் காலமாக, அம்மாக்களே பிள்ளைகளிடம் "நல்லா சாப்பிடு"என்று சாப்பிட வைப்பதையும், நிலாவைக் காட்டி சோறூட்டுவதையும் பார்த்த நான், முதன் முதலாக, ஒரு பிள்ளை,தாயைக் குழந்தையாக்கி,நிலாவைக் காட்டி சோறூட்டாமல்,தானே நிலவாகி சோறூட்டியதை வியப்பபுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.அவர்கள் பேசியதை கவனித்ததில் இருந்து.....சரி....சரி....அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டதில் இருந்து,அந்த இளைஞருக்கு வேலை கிடைத்த பின் முதல் மாத சம்பளத்தில், தன் தாயை அந்த உணவு விடுதிக்கு அழைத்து வந்திருப்பது தெரிந்தது. அந்த அம்மாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ஐஸ்கிரீம் மிதக்கும் மில்க் ஷேக்கை,தன் அம்மாவிடம் கொடுத்தார்."இதெல்லாம் வேணாம் தம்பி" என்று அவர் மறுத்தார்."குடிம்மா...நல்லாயிருக்கும் ...."என்றார் அந்த இளைஞர் .தேவாலயத்தில்  கடவுளுக்கு முன்னால், மற்றவர்களின் பிரார்த்தனைகளை சுமந்து,தன் உடலை கண்ணீரால் நனைக்கும் மெழுகுவர்த்தியைப் போல்,எந்நேரமும் பிள்ளையின் நலனுக்காக கடவுளிடம் கண்ணீரோடு ஜெபித்த அந்த தாய்,மகன் தலையெடுத்ததும்,வாதை அணுகாத கூடாரத்துள் குடிபெயர்ந்த மகிழ்ச்சியோடு,அந்த மில்க் ஷேக்கை குடித்துக் கொண்டிருந்தார். உலகின் அத்தனை கடவுள்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட அந்த முது தேவதையை நெகிழ்வோடு, பார்த்தேன்.கணவன் இறந்த நிலையில்,அல்லது கைவிட்ட நிலையில், இட்லி பாத்திரத்தையும், தையல் மிஷினையும் வைத்துக்கொண்டு, பிள்ளைகளை வளர்க்க பாடுபடும் எண்ணற்ற வைராக்கிய தாய்மார்களில் அவரும் ஒருவர். அன்று இரவு வெகு நேரம் அந்த தாயையும் ,மகனையுமே நினைத்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் காலை, புரூக் ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலுக்கு சென்றோம். முதல் நாள் இரவு பார்த்த அந்த தாயையும்,மகனையும் இப்போது ஷாப்பிங் மாலில் பார்த்ததும் ஏதோ, நெருங்கிய நட்பை பார்த்தது போல்,மனம் குதூகலித்தது. எஸ்கலேட்டரில் "பயப்படாதம்மா..." என்றபடி, அம்மாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போன, அந்த முரட்டு இளைஞனை பார்க்கும் போது, கையில், அருவாளுக்கு பதில், அருகம்புல்லை பிடித்துக் கொண்டிருக்கும் அய்யனாரைப் பார்ப்பது போல் இருந்தது.தன் தாயை திரும்ப ,திரும்ப எஸ்கலேட்டரில் அழைத்துக்கொண்டு போனார்.அம்மாவிற்கு எஸ்கலேட்டரில் போக,பயத்தை விடவும் ஆசையே அதிகம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட மகத்தான மகன் அவர்.

சிறிது நேரம் கழித்து,இருவரையும் ஆர்.எம்.கே.வி.வாசலில் பார்த்தேன்.கையில் துணிப்பை இருந்தது.அவர்களைக் கடந்து செல்கையில் அந்த இளைஞர் யாரிடமோ போனில்,"எனக்கு அம்மாவையும் ,உன்னையும் விட்டா யாருக்கா  இருக்கா....உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்"என்றார்

"எனக்கு எதுக்கு பட்டுப்புடவை "என்று கேட்ட அக்காவிற்கான பதில் அது என்று புரிந்தது.உண்மையில் அந்த இளைஞர் மிகவும் ஆசிர்வதிக்கப் பட்டவர்.அம்மா இறக்கும் வரை வேலை கிடைக்காமல்,அம்மா இறந்த பிறகே சம்பாதிக்க ஆரம்பித்த எத்தனையோ நண்பர்கள்,தன் சம்பாத்தியத்தில் அம்மாவிற்கு ஒரு வேளை சோறு போடவில்லையே என அழுவதை நான் அறிவேன் .ஒருமுறை ஒரு தொழிலதிபர் ,"என் அம்மா சாகுற வரைக்கும் அவங்க உழைப்புல தான் சாப்பிட்டேன்.இன்னிக்கு எனக்கு நிறைய சொத்து இருக்கு.ஆனா,என் உழைப்புல,என் அம்மாவுக்கு ஒரு வேளை சோறு போட,ஒரு புடவை வாங்கி கொடுக்க  எனக்கு கொடுத்து வைக்கல" என்று வருந்தினார்.அம்மாவின் மனதை குளிர்விக்கும் கொடுப்பினை எல்லா பிள்ளைகளுக்கும் வாய்ப்பதில்லை.அன்றைக்கு அந்த தாய்,அன்று தான் முதன்முறையாக சில உணவுகளை சாப்பிட்டிருப்பார்.மகனின் வாழ்வில் நிரந்தர வெளிச்சத்தை நிரப்ப,பல நாட்கள் தன் வயிற்றை காலியாக வைத்த தன் தாய்க்கு,மேட்டுக்குடி மக்களுக்கென இச்சமூகம் விதித்திருக்கும் உணவுகளை,உண்ண வைத்து மகிழ்ந்த மகனை மனதார வாழ்த்தினேன் .

எல்லா மகன்களும் அப்படி இருப்பதில்லையே ....முதியோர் இல்லங்களுக்கு போய் இருக்கிறீர்களா....இதயம் பலவீனமானவர்கள் போக கூடாத இடம்.இதயமற்றவர்களை பிள்ளைகளாகப் பெற்றவர்கள் உயிரோடு சமாதியான இடம்.மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு,பெற்ற தாயை,பேருந்து நிலையத்தில் அமர்த்தி விட்டு, தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன் என தாயை பேருந்து நிலையத்திலேயே ,விட்டு விட்டு,குற்ற உணர்வின்றி வீட்டுக்குப் போகிற மகனை பெற்ற வயிறு,எப்படியெல்லாம் துடிக்கும்.....நிலவற்ற இரவில்,எங்கோ மலைப் பாதையில் பயணிக்கும் யாரோ ஒருவனுக்கு,தன்னாலான சிறு வெளிச்சத்தைத் தரும் நட்சத்திரமென , பேருந்து நிலையத்தில் தனியே காத்துக் கிடந்து,பின்,இனி மகன் வரவே மாட்டான் என உணர்கிற நொடியில்,அந்த தாயின் மனநிலை என்னவாக இருக்கும்?

 மும்பை -கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் தான் கஸ்தூரி அம்மாவை சந்தித்தேன்.கணவர் இறந்த பின்,இன்ஜினியர்களாக இருக்கும் இரண்டு மகன் வீட்டிலும் மாறி,மாறி தங்க வேண்டிய நிர்பந்தம். ஒரு மாதம் மூத்த மகன் வீட்டில் என்றால்,அடுத்த மாதம் இளைய மகன் வீட்டில்.அப்படி இளைய மகன் வீட்டில் தங்கி விட்டு மூத்த மகன் வீட்டுக்கு வந்த போது,அவர் சொன்னராம் ...."நான் ஜனவரி மாசம் முப்பத்தியோரு நாள் சோறு போட்டேன்.அவன் பிப்ரவரி மாசம், இருபத்தியெட்டு நாள் தானே சோறு போட்டிருக்கான்....இன்னும் மூணு நாள் அவன் வீட்ல இருந்துட்டு வா...அப்ப தான் கணக்கு சரியாகும்"...அதைக் கேட்டதும் மனம் உடைந்து அந்த அம்மா ஏதோ பேச,இரண்டு மகன்களும் மும்பையில் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் இருந்தால் அடிக்கடி வீட்டுக்கு வந்து விடுவார் என நினைத்தார்களோ என்னவோ....இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பையன்கள் வீட்டிற்கு வந்து போவதாக சொன்னார்.அதுவும் கூட என் பேரப் புள்ளைய பார்க்க தான்...அவனைப் பார்த்தா,என் வீட்டுக்கார்ரை பாக்குற மாதிரியே இருக்கு....தாத்தா மாதிரியே பொறந்துருக்கான்...என்றார்.பேரன் நல்லா பேசுவானா....என கேட்டேன்."எங்க....?.அப்பனை மாதிரி தான் இருக்கு....பேசுனா தான் ஆச்சா ....பார்த்தா போதும்...."என்று கண் கலங்கினார்.முதியோர் இல்லம் கூட அருகில் இருக்கக்கூடாது என நினைக்கும் மகன்களை என்ன சொல்வது....முன்பெல்லாம் வீடுகளில் பெற்றோர்கள் attached ஆகவும், கழிவறைகள் detached ஆகவும் இருக்கும்.இப்போது கழிவறைகள் attached ஆகவும் பெற்றோர்கள் detached ஆகவும் உள்ளனர்.வீட்டிற்குள் கழிவறையை அனுமதிப்பவர்கள், பெற்றோரை அனுமதிப்பதில்லை .ஓரறிவுடைய முள்ளாலான கள்ளிக்கும் கூட,ஈரம் பால் வடிவில் இருக்கிறது.மனிதர்களுக்கோ ,ஈரமான மனம் மரத்துப் போய் விட்டது.

 ஆனால்,ஒட்டு மொத்தமாக எல்லோரையும் அப்படி குறை சொல்லி விட முடியாது .ஒருமுறை வகுப்பில்,பி.காம் மாணவிகளிடம் , உங்களின் ஆசைகளை,லட்சியங்களை எழுதி கொடுங்கள் என்றேன்.ஓரிருவரைத் தவிர ,ஏறக்குறைய எல்லா மாணவிகளும் ,ஒற்றை நூலின் முடிச்சுகளில் ,வரிசை பிறழாத பூச்சரம் போல்,"எங்க அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கணும்" என்றே எழுதியிருந்தனர்.அவை வெறும் வார்த்தைக்கானவை அல்ல என்பதை நான் அறிவேன்.முதலாமாண்டு மாணவி ஒருத்தி,அடிக்கடி அழுது கொண்டிருப்பதை மற்ற மாணவிகள் மூலம் அறிந்து அவளை அழைத்துப் பேசினேன்."ஆரம்பத்துல அம்மா,அப்பாவை விட்டு பிரிஞ்சு இருக்குறது கஷ்டமா தான் இருக்கும்.படிக்க தானே வந்த.அதை பண்ணு.தேவையில்லாம ஒப்பாரி வைக்காத"என்றேன்.அவள் சொன்னாள்..."அம்மாவை பிரிஞ்சு இருக்குறதுக்கு அழல மேம்.அம்மாக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியிருக்கு.தினமும் நான் தான் தண்ணி தூக்கி கொடுப்பேன் .இப்ப அம்மாவே தண்ணி தூக்குவாங்க.அவங்களுக்கு வலிக்கும்ல .அதை நினைச்சு தான் அழுறேன் ..

"..இப்போது நான் அழ ஆரம்பித்திருந்தேன்.என் இருபத்திநான்கு வயதில் ,என் வாழ்வில் இரண்டு குறிஞ்சி யுகம் முடிந்த பின்,என்னையையும் ,என் தாயையும் பிரித்த தொப்புள் கொடியை கண்ணீரால் தடவிப் பார்த்த தருணம் அது.

உலகில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்வது,முன்னறி தெய்வங்களில் முதல் தெய்வமான தாயிடமிருந்து தானே ....மது,மாது,மாமிசம் கூடாதென சத்தியம் வாங்கிய தாய் தானே,சாதாரண ஆத்மா,மகாத்மாவாக காரணம்.சிம்மகாட் கோட்டையில் உன் கொடி பறக்க வேண்டும் என்ற தாய் தானே,வீர சிவாஜியின் விளைநிலம்.சிக்கிமுக்கி தீயை,சித்தகத்தி பூவாக்கும் மென்மையையும் ,தன் மீது களரி வீசிய கைகளையே ,தனக்கு கவரி வீச வைக்கும் வன்மையையும் தாய் தானே நமக்கு போதிக்கிறாள்.

அந்த ஆசிர்வதிக்கப் பட்ட மகனையும்,அன்பின் ஆதி தாயையும் பார்க்கையில் எனக்கு,என் மாணவி ராதாவின் நினைப்பு வந்தது.எம்.சி.ஏ.கடைசி செமஸ்டர் அன்று,"படிப்பு முடிஞ்சுடுச்சு.கல்யாணம் பண்ணிக்க சொன்னா மாட்டேங்குறா...கொஞ்சம் எடுத்து சொல்லுங்க டீச்சர் "என்றார் அவளின் அம்மா.சின்னப் பொண்ணு தானேம்மா....அதுக்குள்ள ஏன் கல்யாணம் பண்றீங்க ....என்றதும்"எங்க ஊர்ல பொம்பள புள்ளங்களை படிக்க வைக்க மாட்டாங்க...புள்ள ஆசைப்பட்டுச்சுன்னு படிக்க வைச்சோம் ...சீக்கிரமே கல்யாணம் பண்ணினா தான் நல்லது" என அவர் சொல்லும் போது,ஆங்...கடன் வாங்கி படிக்க வச்சீங்கள்ல...நான் கல்யாணம் பண்ணிகிட்டுப் போயிட்டா,யாரு அந்த கடனை அடைக்கிறது ...நான் வேலைக்கு போய்,கடனை அடைச்சிட்டு தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்ற ராதாவின் கை பற்றி ,"உனக்கு கல்யாணம் முடிச்சிட்டா எங்க கடமை முடியும் பாப்பா"என அந்த தாய் சொல்ல,",உங்க கடமை முடியும் .....என் கடமை முடியணும்ல ..."என்ற ராதாவை வாஞ்சையோடு பார்த்தேன்.எல்லோருமே நம் தாய்க்கு கடமைப் பட்டவர்கள் தானே....

கோவையிலிருந்து கிளம்பியதும் ,விமான நிலையத்தைக் கடக்கையில்  என்னையும் அறியாமல், சட்டென அந்த தாயையும் ,மகனையும் தேடினேன் .எல்லா மகன்களுக்கும் , ஒருமுறையாவது தன் அம்மாவை விமானத்தில் அழைத்துப் போக வேண்டும் என்பது தானே அதிக பட்ச லட்சியம்.அவர்களைக் காணவில்லை .அதனாலென்ன....இவன் தாய் என்னோற்றான் கொல் எனும் சொல்லின் வடிவத்தானாகிய,தன் மகனின் அன்பில் அந்த தாயின் மனம் விமானத்தை விடவும் உயரமாக பறந்து கொண்டிருக்கும் இல்லையா ...

(இத்தொடரை எழுதும் சுமதிஸ்ரீ, ஒரு சொற்பொழிவாளர், கவிஞர். புதன்கிழமை தோறும் இந்த தொடர் வெளியாகும் )