தொடர்கள்

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -05

மரு.அகிலாண்டபாரதி

ஜூபியின் சேட்டைகள் தொடர்ந்தன அடிக்கடி செருப்புகளைக் கடித்தான், வாசலில் கிடக்கும் மிதியடிகளை பிய்த்துப் போட்டான். குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களையும் விட்டுவைக்கவில்லை. ஒரு முறை காரின் அருகில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தான். அதற்கு சில நாட்கள் முன்புதான் கார் சாவியை கடித்திருந்தான். நான் வேறு வேலையாக வாசற்புறம் போன நான், அதற்கு முன் கார் சாவி சேதமடைந்த நினைவில், "ஜுபி இங்கே வா!" என்று கூப்பிட்டேன். வேறு பணிகள் அழைக்கவே ஓரிரு முறை குரல் கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும், அப்போது யாரோ அழைப்பு மணி ஒலித்த சத்தத்தில் வெளியே வாசலில் போய் பார்க்க, அப்போதும் அதே நிலையில் தான் நின்றான் ஜூபி. அருகில் போய் பார்த்தால், கார் டயருக்கும் மட் கார்டுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் தலையை நுழைத்து எடுக்க முடியாமல் சிக்கி, தலை மாட்டிக்கொண்டிருந்தது.

அவன் தலையை ஒருவர் பிடித்துக் கொள்ள, ஒருவர் மட் கார்டையும் மற்றவர் டயரை நகர்த்த முயன்று என்று ஒரு பத்து நிமிடப் போராட்டத்திற்குப் பின் அவனை மீட்டோம். 'இருக்கிற வேலையில இது வேற' என்ற சலிப்பை அடிக்கடி அவனது செயல்கள் கொடுத்தன. அதன் விளைவாக எப்போதும் கட்டிப் போட வேண்டியிருந்தது.

'கட்டிப்போட்டு வளர்க்கும் நாய்களுக்கு கால் வளைந்து விடும்' என்பது என் கணவர் அடிக்கடி கூறும் விஷயம். அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்த்ததால் ஜூபிக்கும் கால் வளைய ஆரம்பிக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வந்தது. அதனால் பின்புறம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு பாத்ரூமில் ப்ளூட்டோ, ஜூபி இருவரையும் போட்டு அடைத்தோம்.

ஜூபி செய்யும் சேட்டைகளுக்கும் சேர்த்துப் ப்ளூட்டோ திட்டு வாங்கினான், 'இந்த நாய்கள் தொல்லை தாங்கலை' என்பதாக. அதனால் அவனும் அடிக்கடி பாத்ரூமில் அடைபட்டிருக்க நேர்ந்தது. பசி வரும் நேரம் அல்லது சிறுநீர் மலம் கழிக்க வேண்டிய நேரங்களில் கதவைப் போட்டு இரண்டு பேரும் பிறாண்டினார்கள். ஜூபியை வெளியில் கூட்டிச் செல்ல நாங்கள் முயல்வதே இல்லை. கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. அந்த தெருவில் ஒரு சிறுவனை இலேசாக அவன் கடிக்க, பின் அதனால் சிறு உரசல்கள் ஏற்பட என்று நாட்கள் நகர்ந்தன.

இரண்டு நாய்களை வளர்க்கும் அனுபவத்தில் எனக்கு நாய்களைப் பற்றி பல விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன. வேற்று நாய்களைப் பார்த்து பயப்படும் பழக்கம் சற்று குறைந்திருந்தது. எந்த நாய் சாதுவானது, எது கோபக்கார நாய் என்று பிரித்தறிய முடிந்தது. நாயைப் பார்த்து அதன் வயது என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கவும் முடிந்தது. அந்த நேரத்தில் அடிக்கடி என்  வீட்டினர் டாலி என்ற நாயைப் பற்றி தங்கள் பேச்சில் குறிப்பிட்டு கேட்டிருக்கிறேன். பாபநாசம் கீழணையில் மின்சாரத் துறையில் என் மாமனார் பணிபுரிந்தபோது அவர்கள் வளர்த்த நாய் டாலி. கருப்புக் கலர் பெண் பொமரேனியன் என்பார்கள். கிட்டத்தட்ட ஐம்பது குட்டிகளுக்கு மேல் அது தன் வாழ்நாளில் ஈன்றது என்று கூறுவார்கள். பன்னிரெண்டு வயதுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருக்கிறது. சர்வ சாதாரணமாக மலையில் ஏறும்,எட்டு கிலோமீட்டர் வரைக்கும்கூட அயராமல் நடக்கும், டாலியுடன் நாங்கள் மலையில் சுற்றாத இடமே இல்லை என்று டாலியைப் பற்றி கதை கதையாகக் கேட்டிருக்கிறேன்.

என் கணவர் கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் அது காணாமல் போய்விட்டதாம். விடுமுறையில் வந்த போது நாய் காணாமல் போன செய்தியை அறிந்து அதைத் தேடிப் போயிருக்கிறார். நீண்ட தேடலுக்குப் பின் இன்னொரு வீட்டில் டாலி அடைக்கலம் புகுந்திருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த வீட்டிலிருந்த சிறுவன் அதை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டதாகவும் இவரைப் பார்த்தவுடன் டாலி வாலை  மட்டுமே ஆடியதாகவும் எழுந்து வரவில்லை என்றும் கூறுவார். அதற்கு புதிய இடம், புதிய மனிதர்கள் கிடைத்து விட்டார்கள், நானும் அடிக்கடி வரமுடியாது அதனால் அங்கேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன் என்று கனத்த மனதுடன் கூறுவார். நாங்கள் அவ்வப்போது பாபநாசத்திற்குச் செல்கையில் அங்குள்ள நண்பர்கள் சிலரின் வீட்டில் இருந்த சார்லி, டாமி போன்ற நாய்களைக் காட்டி இவையெல்லாம் டாலியின் குழந்தைகள் என்று கூறுவார். அவை அனைத்தும் வெள்ளைநிற பொமெரேனியன் நாய்களாகவே இருந்தன. இப்போதும் பாபநாசம் மலையில் நாங்கள் வகையில் ஏதாவது பொமரேனியன் அல்லது அதன் கலப்பின நாய் எதுவும் சுற்றிக் கொண்டிருந்தால் இது டாலி உடைய குட்டியாக இருக்கலாம் என்று கூறுவார். இன்றுவரை நான் கருப்பு நிற பொமரேனியனைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவே இல்லை.

குழந்தைகள் வளர்ந்து வர, சசி சைக்கிள் பின்புற கேரியரிலும் என் மகள் சைக்கிளின் முன் பொறுத்தப்பட்ட சிறிய இருக்கையிலும் அமர்ந்துகொள்ள எங்கள் வீதி உலாக்கள் மறுபடி தொடர்ந்தன. வீட்டிற்கு அருகில் ஒரு மனையில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருந்தன. அந்த மனையின் தெருவை ஒட்டிய பகுதியில்  செப்டிக்டேங்க் தோண்டுவதற்காக 7 அடி ஆழம் 12 அடி நீளத்தில் மிகப்பெரிய குழி வெட்டினார்கள். திடீரென்று பத்து பேர், இருபது பேர் வந்து கடகடவென்று வேலைகளைப் பார்ப்பதும், பின் அப்படியே விட்டுவிட்டு போவதுமாக இருந்தனர்.

அந்தப் பகுதியில் பலர், 'இப்படித் தெருவோரமா குழி தோண்டி இருக்காங்களே.. யாராவது இருட்டுல உள்ளே விழுந்தா என்ன செய்றது' என்று வருத்தப்பட்டனர். ஒருநாள் நாங்கள் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கையில் எங்களுடன் வந்து கொண்டிருந்த ப்ளூட்டோவை திடீரென்று காணோம். அடுத்த ரவுண்டின்போது பார்த்தால் அவன் அந்த குழிக்கு அருகில் நின்று  கொண்டிருந்தான். 'ப்ளூட்டோ! இங்கே வா!' என்று கூப்பிட்டு விட்டு அடுத்த ரவுண்டுக்கு போய்விட்டேன். அடுத்தடுத்த ரவுண்டுகளின் போதும் அவன் வரவே இல்லை.

அந்த குழிக்கு அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தான். என்னதான் இருக்கிறது அந்த குழிக்குள் என்று சைக்கிளை நிறுத்திவிட்டு நான் பார்க்க, அப்போதுதான் ஒரு பெரிய பன்றி நின்று குழிக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது என் கண்களுக்குத் தெரிந்தது. குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு நானும் சென்று குழிக்குள் எட்டிப் பார்த்தேன். குட்டிக் குட்டியாக பத்து பன்றிக்குட்டிகள் உள்ளே இருந்தன.  மிஞ்சிப்போனால் அவை பிறந்து ஒரு வாரத்திற்குள்ளாகத்தான் இருக்கும்.

தெருவோரமாக சென்று கொண்டிருந்த பன்றிக் குடும்பம், ஏதோ ஒரு வாகனத்தில் சத்தத்தில் ஒதுங்க, பன்றிக்குட்டிகள் மொத்தமாக உள்ளே விழுந்து விட்டிருக்கின்றன. தாய்ப பன்றி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. கட்டிட வேலை செய்பவர்கள் யாரேனும் தென்படுகிறார்களா என்று பார்த்தேன். யாரையும் காணோம். வேறுவழியின்றி என் கணவருக்கு அழைத்தேன். 'அங்கேயே காவலுக்கு இரு, இதோ வந்துடறேன்' என்று அவர் தன் வேலைக்கு நடுவில் வந்து சேர்ந்தார்.

ஒரு ஏணியை உள்ளே இறக்கி குழியில் இறங்கினார். பன்றிக் குட்டிகளைக் கையால் தூக்க முயல, அவை அகப்படவில்லை. குழிக்கு உள்ளாகவே பீதியில் வீல் வீல் என்று கத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி ஓடின. நான் என் மூளையை கசக்கி ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். வீட்டிலிருந்து ஒரு பெரிய வாளியை எடுத்துவந்து அவர் கையில் கொடுத்தேன். ஒவ்வொன்றாக பத்து குட்டிகளையும் எடுத்து அவர் என்னிடம் தர அதை தண்ணீர் கொட்டுவது போல் வெளியே கொட்டி விட்டேன். தன் குட்டிகள் ஒவ்வொன்றாக மீண்டு வர வர தாய் பன்றி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஐந்தாறு குட்டிகள் வந்தவுடன் புறப்படுவதற்குத் தயாராக சற்று தள்ளி நின்றது. கடைசிக் குட்டியை நாங்கள் காப்பாற்றி மேலே விட்ட சமயம் மகிழ்ச்சிப் பெருக்கில் குதித்துக்கொண்டு வாலை ஆட்டிக் கொண்டே போனது. எப்படித்தான் மிகச்சரியாக எண்ணிக்கை தெரியுமோ என்று வியந்தோம். தாய்க்குத் தெரியாதா பிள்ளைகள் எண்ணிக்கை என்றார் என் மாமியார். பின்னாளில் இந்த 'பன்றிக்குட்டி காப்பாற்றிய சாகசத்தை' மையமாக வைத்து ஒரு சிறுகதை கூட எழுதி இருக்கிறேன்!

ஜூபி இந்த சாகசங்கள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவனுக்கு அந்த அளவு சூட்டிப்பு போதாது என்பார் என் மாமியார். 'அந்த அளவு' என்பதில் ப்ளூட்டோவின் சூட்டிப்புதான் அளவுகோலாக எடுத்தாளப் படுகிறது என்பதை இங்கு கருத்தில் கொள்ள கண்டதைக்கடிக்கும்பழக்கம்ஒருவயதானபின்குறையும், ஒன்றரை வயதான பின் குறையும் என்றெல்லாம் நாங்கள் நினைத்திருக்க, அதுகுறையவே இல்லை.

காய்கறி வாங்கும் நெகிழிப்பைகள், குப்பைத் தொட்டியில் கிடக்கும் சானிட்டரி நாப்கின்கள் என்று பலபிளாஸ்டிக் பொருட்களை அவன் சாப்பிட்டான். ஒருவாரத்திற்கு மலம் கழிக்கையில் ரத்தமும் சேர்ந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக அவனது நான்கு கால்களும் வீங்கிக்கொண்டன. மூச்சிரைப்பும் ஏற்பட்டது. எங்கள் கால்நடை மருத்துவர் அப்போது ஊரில் இல்லை. தெரிந்த வேறு சிலமருத்துவர்களிடம் கேட்டு அவர்கள் சொன்ன சிகிச்சையையும் செய்து பார்த்தோம். சரிவரவில்லை. மூச்சடைப்பு கால்வீக்கம் இரண்டும் இதயநோயாக இருக்கலாம் என்று நினைத்து நீர் வெளியேறுவதற்கான சில மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தோம். வீக்கம் வற்றியது ஆனால் உடல்நலம் தேறவில்லை. நான்கு நாள் தொடர் போராட்டத்திற்கு பின் ஜூபி உயிரிழந்துவிட்டான்.

ப்ளூட்டோவிற்கு துணைக்கு வேறு நாய் இல்லை. ஜூபி எங்கே என்று கேட்டால் அதுவழக்கமாக படுத்து இருக்கும் இடத்தை போய் பார்த்துவிட்டு வந்து வாலாட்டினான். ஒருகுறிப்பிடத்தகுந்த வெற்றிடம் உருவாகிவிட்டது.