தொடர்கள்

ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை -06

மரு.அகிலாண்டபாரதி

 "ஏதோ ஒரு ஃபீமேல் டாக் ஹீட்ஸ்ல இருக்குது போல.. ஏரியால ஒரே நாய்க் கூட்டம். அதுல அந்த கொலைகார நாய்ங்களும் இருக்கு.. பாதி நாய்களுக்கு மேல சொறி இருக்கு. அதனால ப்ளூட்டோவை வெளியே விடாதீங்க" என்பது அப்போது நிலுவையிலிருந்த என் கணவரின் 'ஸ்ட்ரிக்ட் ஆர்டர்'.

ஆனால் ப்ளூட்டோ அடிக்கடி ஊர் சுற்ற வேண்டும் என்று துடிதுடித்தான். அப்போது எங்கள் வீட்டு வாசலில் கார் போகும் அளவுக்கு ஒரே பெரிய கேட் தான் இருந்தது. யாரும் நடந்து போக வேண்டுமென்றாலும் அந்த கேட்டை லேசாகத் தள்ளிவிட்டுத் தான் வெளியேற வேண்டும். வாசலுக்கருகில் போகிறோம் என்றாலே கேட்டின் அருகில் வந்து நின்றுகொண்டு தலையை வெளியே விட்டு தயாராகக் காத்திருப்பான் ப்ளூட்டோ. நமக்கு முன்பாக வெளியே ஓடி விடுவான். பாத்ரூமுக்குள் அடைத்தாலும் கட்டிப் போட்டாலும் கத்திக் கத்தியே நம் நிம்மதியை கெடுத்து விடுவான் அதனால் கட்டாமல் வைத்திருந்தோம்.

'இதுக்குத்தான் கட்டிப்போட்டு பழக்கப் படுத்தணும்கிறது.. குழந்தையைத் தொட்டில்ல போடக் கூடாது, நாயைக் கட்டிப் போடக் கூடாதுன்னு நீங்க பண்ற அலப்பறை அதிகம்' என்று என் மாமியார் சலித்துக் கொள்வார்.

 எவ்வளவோ கவனமாக இருந்தும் ஒரு நாள் யாரோ ஒருவரின் கவனக்குறைவு காரணமாக வெளியில் ஓடி விட்டான் ப்ளூட்டோ. காலையில் சென்றவன் மாலை வரை வரவில்லை.

என் கணவர் எங்கள் காலனியை ஒரு முறை சுற்றிவந்து விட்டு, "ஆளைக் காணும்.. எங்கே போயிடப் போகுது.. வரும்.." என்று கூறிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். மனது கேட்காமல் நான் மதியம் ஒரு முறையும், மாலை ஒரு முறையும் போய்த் தேடிப் பார்த்தேன். என் கண்ணில் அகப்படவில்லை. அதனால் எலக்ட்ரீஷியன் கோபாலிடம் சொன்னேன். அவர் எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டு கடைசியாக நாய்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் சென்று பார்த்திருக்கிறார். அங்குதான் இருந்திருக்கிறான் ப்ளூட்டோ.

"ப்ளூட்டோ..இங்கே வா!" என்று அவர் கூப்பிட, அவரைப்பார்த்து கொடூரமாக பற்களைக் காட்டி ஆக்ரோஷமாகக் குரைத்திருக்கிறான். நேற்றுவரை பவ்யமாக வாலை ஆட்டிக்கொண்டு, தடவிக் கொடுப்பதற்காகத் தன் முன் தலையை நீட்டியவனா இவன் என்று ஆச்சரியப்பட்டுப் போனாராம்.

அவர் எனக்கு ஃபோன் செய்ய, நானும் அந்த இடத்திற்குப் போனேன். எனக்கு முற்றிலும் புதிதான காட்சி அது. ஒரு பெண் நாயின் கவனத்தைக் கவர்வதற்காக நடந்த போட்டியில் சுமார் பன்னிரண்டு நாய்கள் இருக்க, முன் வரிசையில் நின்று கொண்டிருந்தான் ப்ளூட்டோ. என் சிற்றறிவுக்கு அப்போதும் அந்தக் கூட்டம் எதற்காகக் கூடியிருக்கிறது என்பது புரியவில்லை.

 மற்ற நாய்களைப் பார்த்து பயந்த நான், டைசன் போல் ஏதேனும் ஆகி விடக்கூடாது என்ற எண்ணத்தில், "ப்ளூட்டோ! இங்கே வா!" என்றேன். காது கேட்காதது போல் திரும்பிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அழைத்தும் பலனில்லை. கோபமாக ஒருமுறை, "வரப் போறியா இல்லையா?!" என்று நான் உரக்கக் கூப்பிட, என்னை நோக்கியும் அதே ஆக்ரோஷமான குரைப்பு வந்து விழுந்தது. ஒரு வினாடி நடுங்கி விட்டேன்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த எலக்ட்ரீசியன் கோபால், "பார்த்தீங்களா அக்கா!  (சிறியவர் பெரியவர் எல்லாரையும் அக்கா என்று தான் அழைப்பார் அவர்) என்னையும் இதே மாதிரி தான் வள்ளுன்னுச்சு.. ஒரு நிமிஷம் பயமாயிடுச்சு" என்றார். என் கணவரை விட அதிகம் நாய்கள் வளர்த்தவர் அவர். அவரே பயந்து விட்டார் என்றால் என்ன செய்வது? அவ்வளவு தான் நம் ப்ளூட்டோ இனி நமக்கு இல்லையோ, தெரு நாய்களுடன் தெருநாயாகப் போய் விடுவானோ என்று பல்வேறு எண்ணங்கள் அலைமோத, வீட்டுக்கு வந்து என் கணவரை அலைபேசியில் அழைத்து நிலவரத்தைச் சொன்னேன்.

வேலைக்கு நடுவில் ஓடி வந்தவர், நேரே அந்த ஏரியாப் பக்கம் சென்றிருக்கிறார், ஆனால் கூப்பிடவில்லை. பத்தடி தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். தன் எஜமானனைக் கண்டுவிட்ட ப்ளூட்டோ, 'இரண்டு பேர் வந்து போயாயிற்று, இவன் என்ன செய்வான் பார்ப்போம்' என்பது போல் அளவிட்டிருக்கிறது. இவர் கூப்பிடவும் இல்லை, கம்பு கட்டையை கையில் தூக்கவுமில்லை. தள்ளி நின்று கைகட்டியவாறு பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ஐந்து நிமிடம் கடந்தபின் வீட்டில் எப்போதும் செய்வது போல் மண்டியிட்டு அமர்ந்து அதன் கண்களைப் பார்த்திருக்கிறார்.

அந்த நோக்கு வர்மத்தில் என்ன புரிந்து கொண்டதோ, தன் சுற்றுப்புறத்தை ஒரு முறை பார்த்த ப்ளூட்டோ, பின் ஒரே ஓட்டமாக வீட்டை நோக்கி ஓடியிருக்கிறது. அவர் மெதுவாக நடந்து வர, ப்ளூட்டோ நான்கு கால் பாய்ச்சலில் ஓடி வந்ததை வாசலில் நின்று பார்த்த நாங்கள், 'ஆஹா! அடி பலம் போல!' என்று நினைத்துக்கொண்டோம். அதன்பின்தான் நடந்ததைக் கூறினார் என் கணவர்.

"அந்த எல்லா நாயை விடவும் நான் தான் பலசாலின்னு நிரூபிச்சு போன வேலையை வெற்றிகரமா முடிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. அங்கே இருந்து கிளம்புறதுக்கு மனசே இல்லை ஆனாலும் நான் கூப்பிட்டேனேன்னு வந்திருக்கு" என்றார். அவர் கூறியதைக் கேட்டபோது, ஆசைக்கும் கடமைக்கும் நடுவே ப்ளூட்டோவுக்கு ஒரு சின்ன தடுமாற்றம் இருந்திருக்கலாம், கடைசியில் கடமை ஜெயித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

ரேடியோ ஸ்டேஷன்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு டெலிபதி நிச்சயம் இருக்கிறது. நமது சிச்சுவேஷனுக்குத் தகுந்தாற்போல் பாட்டு போடுவதை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். அன்று நாங்கள் வீட்டிற்கு வந்த நேரம், எங்கள் பக்கத்து வீட்டிலோ பின் வீட்டிலோ 'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது' என்ற பாடல் ஒலித்தது.

இயற்கையின் விதிகளின்படி ப்ளூட்டோ வயசுக்கு வந்துவிட்டதை ஏற்றாக வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. இதெல்லாம் ஒரு விஷயமா, ஒன்னரை வயசானா நடக்கிறது தானே என்றனர் பல நாய்களை வளர்க்க அனுபவமுள்ள என் வீட்டினர். "இதுக்கே இப்படி சொல்றியே.. நாங்க டாலியை அத்தனை வருஷமா வளர்த்தோம்.. ஆறு மாசத்துக்கு ஒரு முறை ஹீட்ஸுக்கு வரும். அப்பல்லாம் ஒரு மாசத்துக்கு பெரிய போராட்டமா இருக்கும். இப்ப மாதிரி தனி காம்பவுண்ட் வீடு கிடையாது.. அப்ப குவாட்டர்ஸ்ல இருந்தோம்… பாதுகாக்குறது ரொம்ப கஷ்டம்" என்று கதை கதையாகக் கூறுவார்கள். அன்று ஒற்றைப் பெண்நாயைச் சுற்றி சுமார் 12 நாய்கள் நின்ற காட்சியை பார்த்திருந்தேன் என்பதால் வீட்டினரின் கஷ்டத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. உணவு உறைவிடத்துக்கு அடுத்ததாக இன்னொரு முக்கிய தேவையும் உயிரினங்களுக்கு இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஜுபியின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்னொரு நாய்க்குட்டியை வாங்கி நிரப்ப முயல்வதற்குப் பதிலாக, ப்ளூட்டோவை மேட்டிங் விட்டு அழைத்து வருவதற்கு நல்ல ஃபீமேல் லேப்ரடார் இருக்கிறதா என்று விசாரிக்க ஆரம்பித்தோம்.

உள்ளூரில் லேப்ரடார் வகை நாய்களே இல்லை. இருந்தாலும் கலப்பினமாக இருந்தது. அதிலும் பெண் நாய் இல்லை. திருநெல்வேலியில் இருக்கிறது, தென்காசியில் இருக்கிறது என்றெல்லாம் எலக்ட்ரிஷியன் கோபால் வந்து சொன்னார். ஓரிருமுறை அவரே மேட்டிங் என்று அழைத்துச்சென்று பின் கூட்டிவந்தார்.

ஒவ்வொரு முறை பெண் நாய் பிரசவிக்கும் போதும் ஆண் (மேட்டிங்சென்ற) நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு குட்டி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அதை விற்பதோ, வளர்ப்பதோ, தெரிந்தவருக்கு இலவசமாகக் கொடுப்பதோ அந்த உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பம்.   ப்ளூட்டோவை இனப்பெருக்கத்திற்காக அழைத்துச் சென்ற போது சேர்க்கை நடந்த' நாளிலிருந்து 60 நாட்கள் கழித்து குட்டி பிறக்கும் என்பார்களே என்று அந்த நேரத்தை ஒட்டி விசாரித்தால் 'அப்ப சரியாவே மேட் ஆகல.. அதனால அந்த ஃபீமேல் கன்சீவ் ஆகலை' என்பதையே அடிக்கடி கூறி வந்தார்கள். எலக்ட்ரிஷியன் கோபால், "இப்படிதான் பொய் சொல்லுவாங்க.. நாம நேர்ல போய் பார்க்கப்போறது இல்லல்ல.. அதனால வேற எங்கேயாவது மாற வச்சு குட்டி போட வச்சிடுவாங்க.. அதுக்கப்புறம் எல்லா குட்டியையும் உடனே வித்துடுவாங்க.. இது வழக்கமா நடக்கிறதுதான்" என்றார். 'அடப்பாவிகளா.. இப்படி திட்டம்போட்டு ஏமாத்துறவங்க எப்படிடா நாய்களை நல்ல படியா வளர்க்க முடியும்' என்று மனதுக்குள் திட்டிக்கொண்டேன்.

ஓரிரு ஆண்டுகள் இப்படியே கழிய, புறா, லவ்பேர்ட்ஸ் போன்ற வளர்ப்புப் பிராணிகள் இனப்பெருக்கம் செய்ய வைத்து அதை விற்பதை உப தொழிலாக செய்து வந்ததால், எலக்ட்ரீஷியன் கோபால், ப்ளூட்டோவுக்கும் இணை கிடைத்தது போல் இருக்கும், தனக்கும் வருமானம் வந்தாற்போல் இருக்கும் என்ற எண்ணத்தில் பிரவுனி என்ற பிரவுன் கலர் பெண் லேப்ரடாரை தனக்காக வாங்கி வந்தார். எங்கள் மாலை வீதியுலாக்களின் போது அவர் வீட்டின் அருகில் நிறுத்தி சிறு குழந்தையாக இருந்த பிரவுனியைப் பார்த்து விட்டு வருவோம். பிரவுனிக்கு ஒன்றரை வயதானவுடன் ப்ளூட்டோவுக்கு சரியான ஜோடியாக அது அமைந்தது. அந்த இணை ஒன்றரை வருடகால கட்டத்தில் ஒருமுறை ஐந்து குட்டிகளையும், ஒருமுறை ஏழு குட்டிகளை ஈன்றது.

"இந்த தடவை பிரவுனி கிட்ட இருந்து பிளாக் குட்டி பிறக்கும்னு நினைக்கிறேன்.. வந்தா அந்த பிளாக்கை நீங்க எடுத்துக்கிட்டு ப்ளூட்டோவை குடுத்துடலாம்" என்று எங்கள் வீட்டின் முன்பு வைத்து என் கணவரிடம் ஒரு நாள் கூறிக்கொண்டு இருந்தார் கோபால். இந்த உரையாடல் என் காதில் விழுந்தவுடன் கோபம் வரவே ஆவேசமாகக் கிளம்பி வாசலுக்குப் போனேன். என்கணவர், "சேச்சே! ஃபான்கலரும், ப்ரவுன்கலரும் சேர்ந்தா பிளாக்வர்றது அபூர்வம். ஃபான் அல்லது பிரவுன்தான் வரும்" என்றார்.

"என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்?  கலரா முக்கியம்? உங்களுக்கு வேணும்னா ப்ளூட்டோவுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்சு வச்சுக்கலாம்.. ப்ளூட்டோவை குடுக்கிற பேச்சுக்கே இடமில்லை" என்றேன் கோபமாக.

"சார் அப்பவே கருப்புக்கு ஆசைப்பட்டார்.." என்று கோபால் சொல்ல, "ப்ளூட்டோவை வெளியேத்துறதைப் பத்தி பேசுறதா இருந்தா இனிமே இந்தப்பக்கமே வராதீங்க" என்று சத்தம் போட்டுவிட்டேன். உண்மையில் உள்ளார்ந்து நான் சொல்லவில்லை என்றாலும், நான் சொன்னவுடன் எலக்ட்ரீஷியன் கோபாலின் முகத்தில் ஒரு வருத்தத்தின் நிழல் படிந்துபோனது.

"ப்ளூட்டோவை கொடுக்கிற மாதிரி இல்லகோபால்" என்றார் என் கணவர் சாவதானமாக.

"இதை முதல்லேயே சொல்லி இருக்கலாம்ல.. தேவையில்லாமல் டயலாக் பேசிட்டேன். சாரி!" என்று கூறியபடி நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

அந்த முறை பிரவுனியின் எல்லா குட்டிகளும் பிரவுன் நிறமாக வந்தன. எங்களுக்குக் கிடைத்த ஒரு குட்டியை என் கணவர் அவரது நண்பருக்குக் கொடுத்து விட்டார். எலக்ட்ரிஷியன் கோபால் ஒரே ஒரு பெண் குட்டியை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்.  பெரிய பிரவுனியும் சின்னபிரவுனியும் அவர் வீட்டிலேயே வளர்ந்தன. அதன் பின்னர் சில காலம் கழித்து சின்ன பிரவுனி அருகில் இருந்த இன்னொரு காலனிக்குக் குடி பெயர்ந்தது.