வாழ்க்கை எதிர்பாராத தருணங்களில் தன் குரூரத்தைக் காட்டி விடுகிறது.
மொத்த தமிழகமுமே சிறுவன் சுர்ஜித்தின் கரங்கள் எப்படியாவது மேலெழுமா என காத்துக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் எங்கள் நேசமிகு தோழன் திருநாவுக்கரசின் உடலை எரியூட்டிக் கொண்டிருந்தோம்.
இருபதாண்டுகளுக்கும் மேலான நட்பில் தோழன் திருவுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட காலங்கள்…
கண்ணீரைப் பகிர்ந்து கொண்ட காலங்கள்…
எண்ணற்ற சமூகப்பணிகளைப் பகிர்ந்து கொண்ட காலங்கள்… குறித்தெல்லாம் எழுத ஏராளம் உண்டு.
ஆனாலும் அவற்றை எழுதும் தெம்போ… திராணியோ… மனவலிமையோ இப்போது இல்லை என்னிடம்.
திருநாவுக்கரசின் தோழமை அவன் தினமணியில் பணியாற்றத் தொடங்கிய காலம் தொடங்கி நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரிந்த இறுதிநொடி வரை நேசமிகு உறவாகவே நீடித்தது.
தோழன் குணசேகரனும், தோழன் அவினாசிலிங்கமும், நானும், எமது தோழர்களும், எமது குடும்பங்களும் அவனோடு பகிர்ந்து கொண்ட பசுமைமிகு பொழுதுகள் நினைவுக்கு வந்து கையறு நிலையில் மனதைக் குமுற வைத்தது.
அவனோடு மகிழ்ச்சி பொங்க திரிந்த கணங்கள் மின் மயானத்தின் புகைபோக்கியின் வழியே வெளியேறி எம்மைப் பார்த்துச் சிரிக்க…
"சிரிப்புப் பாதி… அழுகை பாதி… சேர்ந்ததல்லவோ மனித ஜாதி " எனும் பாடல் வரிகள் ஏனோ நினைவில் வந்து போனது.
எவருடைய அலைபேசி அழைப்பையும் எடுக்க இயலவில்லை. உடல் ஒத்துழைத்தாலும் மனம் வெறுமையில் உழன்றது.
ஊருக்குத் திரும்பியதும் கோவையில் நிகழ்வொன்றுக்கு அரங்கம் ஏற்பாடு செய்வதற்காக தம்பி ஒருவர் அழைத்தார்...
பாரதியார் பல்கலையில் முனைவர் படிப்புக்கான ஆய்வினை செய்துவரும் திவ்யா போனில் அழைத்துச் சலித்துப்போய் அலுவலகத்துக்கு நேரிலேயே வந்துவிட்டார். பேசிவிட்டுப் புறப்படும்போது "தோழர் மன உளைச்சலில் இருக்கும்போது கூப்பிட்டா கொஞ்சம் போனை எடுங்க…” என்றார்.
என் மன உளைச்சலுக்கு யாரை அழைப்பது என யோசித்துக் கொண்டிருந்தேன் திவ்யா... சாரி… என்றேன்.
“எங்களது தெருவில் உள்ளோருக்காக நிலவேம்புக் கஷாயம் காய்ச்சிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்…” என்றது அடுத்து வந்த நேசமணியின் அலைபேசி.
தோழனின் பிரிவென்பது பெருந்துயர்தான் எனினும் அத்தோழன் பாதியில் விட்டுச்சென்றிருக்கிற கனவுகளையும்…
சமூகத்திற்கான பணிகளையும்…
நாம்தான் நிறைவேற்றியாக வேண்டும் என்கிற எதார்த்தம் உறைக்க கணினியைத் திறந்தேன் நான்…
காலம் மட்டுமே காயங்களுக்கான ஒரே மருந்து என்கிற உணர்வோடு.
*********
கடந்த மாதம் ”தமிழ் ஸ்டுடியோ" அருண் ஏற்பாடு செய்திருந்த “தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்” என்கிற கருத்தரங்கில் அனல் பறந்தது. பயர் சர்வீஸ் வராதது ஒன்றுதான் குறைச்சல்.
வழக்குரைஞர் அருள்மொழி… நக்கீரன் லெனின்… போன்றோர் இருந்தால் சொல்லவா வேண்டும்?.
அதில் “பாரதி”... “பெரியார்” படங்களை இயக்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் பேசிய பேச்சு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
ஒரு படத்தை எடுப்பவரது கோணம்…
அப்படத்தை பார்த்து விமர்சிப்பவரது கோணம்…
என்பதைத் தாண்டி அதே படத்தை சென்சார் செய்தவரது கோணம் எப்படி இருக்கும் என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன்.
மணிரத்னம் “இருவர்” படத்தை எடுத்ததும்....
அதை நான் குமுதம் ஸ்பெஷலில் கொத்து புரோட்டா போட்டதும் 1998 லேயே நடந்து முடிந்த சமாசாரங்கள்.
ஆனால் அதே “இருவர்” சென்சாருக்குப் போனபோது இயக்குநர் ஞானராஜசேகரன்தான் சென்சார் போர்டு அதிகாரி.
அப்போது மணிரத்னம் எப்படி நடந்து கொண்டார்...
இது இதெல்லாம் அபத்தமாக இருக்கிறது...
இதையிதை எல்லாம் நீக்க வேண்டும் என சென்சார் போர்டு அதிகாரியாக இருந்த ஞானராஜசேகரன் சொன்னபோது எப்படி மெளனம் சாதித்தார்....
அங்கு ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல் இருந்துவிட்டு வெளியில் வந்து ஆனந்த விகடனில் "சென்சாருக்கு முதுகெலும்பு இல்லை" என ஸ்பைனல் கார்டு ஸ்பெஷலிஸ்ட்டாக மாறி எப்படி பேட்டி கொடுத்தார்...
என்பதையெல்லாம் புட்டுப்புட்டு வைத்தார்.
அவர் பேசுவதையே நான் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் அவர் நம்ம “தமிழ்நாட்டின் ஸ்பீல்பெர்க்கிற்கு” அரை மணி நேரம் கிளாஸ் எடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு கட்டும்(Cut) சொல்லும்போது ஏதாவது மறுப்பு சொல்வார்....
“என் சுதந்திரத்தில் எப்படித் தலையிடலாம் நீங்கள்…?” என கட்டபொம்மனாய் கர்ஜிப்பார்... என்றெல்லாம் ஞான ராஜசேகரன் எதிர்பார்த்துக் காத்திருக்க...
கர்ஜிக்க வேண்டிய “நம்மவரோ” திருவிளையாடல் தருமியாய் உருமாறி..."சார் அப்படி ஏதாவது பிராப்ளம் இருந்தா அதையெல்லாம் வெட்டீட்டு... அதுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம்..." என்று கூற ஆடிப்போய் விட்டார் .
“நான் சொன்னபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு வெளியில் வந்து சென்சார் போர்டுக்கு முதுகெலும்பு இல்லைன்னு பேட்டி குடுக்கறீங்களே...
முதுகெலும்பு யாருக்கு இல்லை…?
உங்களுக்கா…?
எனக்கா…?” என பெரிய கோடாலியாய்த் தூக்கிப் போட.... அரங்கமே ஆர்ப்பரித்தது.
ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம்.
அந்தக் கூட்டத்தில் நான் அவருக்கு முன்னால் அந்த ஆனந்த விகடன் பேட்டியை நினைவு படுத்தியிருக்கக் கூடாதுதான். பாவம் நம்ம மணி ஷார்….
இதைக் கேள்விப்பட்டா அவர் மனசு என்ன பாடுபடும்.
ஆனாலும் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான்.
**********
(இத்தொடர் வாரம்தோறும் வெளியாகும் )