தொடர்கள்

ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2

தொடர்- 11

பாமரன்

ந்தக் கருமத்துக்குத்தான் நான் டீ.வீ பக்கமே ஒதுங்கறதில்ல...

ஒரு சேனலத் திறந்தா...

“2G.... 4G ன்னு ஏன் வெச்சான் ?

எப்படியாவது எம்பெருமானை நெனைக்கறதுக்காகத்தான்.

ஏன் 2Y.... 4K...

2D…. 4Z…. ன்னு வெச்சிருக்கலாமில்ல ?

ஆனா…. வைக்கல.

ஏன்னா....

G ன்னா..... G for Garuda  கருடா

G ன்னா..... G for Gayathri காயத்ரி

G ன்னா..... G for Ganga கங்கா

அதுக்காகத்தான் 2G.... 4G…ன்னு வெச்சிருக்கா.

பகவான் ஒவ்வொரு விதமாகவும் நமக்குள்ள பூந்து காரியம் சாதிக்கிறான்.

எம்பெருமான் இவாளுக்கு வேண்டிய வஸ்துகளுக்குள்ளே நுழைஞ்சு கொண்டு ஞாபகப்படுத்திகிட்டே இருக்கான்...

அதேமாதிரி நம்ம ஒடம்புல உள்ள ஒவ்வொரு பார்ட்டுக்குள்ளயும் பூந்துண்டு பல விநோதங்களப் பண்றான். உதாரணத்துக்கு…. நம்ம முழங்காலுக்கு முப்பது இஞ்ச் மேல...” ன்னு மேலே மேலே உளறிக் கொண்டே போனது அது.

யப்பா சாமிகளா...!

உங்க கண்டுபிடிப்புகளை எல்லாம் கேள்விப்பட்டா...

ஆராய்ச்சியாளர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும்.

போங்கடா…. நீங்களும்... உங்க மூளைகளும்...

சரி.... இதுதான் தொலையட்டும்…. அடுத்த சேனலையாவது பார்த்துத் தொலைப்போம்ன்னு சேனலை மாத்தினா....

அங்கோ....

ஒரு ஜடாமுடி பெருசு எதிரில்  ஒரு இளைஞனை  அமரவைத்து தாளித்துக் கொண்டிருந்தது.

“நல்லா கவனிங்க....

ஆவியானவர் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் வரமாட்டார்.

அவர் காற்றைப் போல வருவார்....”

இளைஞன்: ஓகே  ஃபாதர்.

“ஆவி....

ஆஸ்த்துமா...ச்சே ஆத்மா....

சரீரம்....

என தேவன் மூவராக இருக்கிறார்....

ஆனா ஒன்னுதான்.

ஆமா....Triple ACT.”

இளைஞன்: ஓ...

“1983 வருசத்துல ஒரு நாள்....”

இளைஞன்: என்னாச்சுங்க  ஃபாதர்?

“நான் பெட்ல படுத்திருக்கேன்...”

இளைஞன்: தனியாவா........ ஃபாதர்?

“தனியாத்தான். குறுக்க பேசாத. ஒபீடியன்ஸ் ஃபர்ஸ்ட்...”

இளைஞன்: ஓகேங்க ஃபாதர்.

“நான் பெட்ல படுத்திருக்கிறத நானே பார்க்கிறேன்.

கண்ணு கொஞ்சம் கொஞ்சமா தெறக்குது.”

இளைஞன்: கண்ணுதானே ஃபாதர்.

“ஆமாம்.

ஏன்னா ஆத்மா அங்கில்ல....”

இளைஞன்:....... ஓ.

“ஆத்மா பார்க்கும்.... ஆனா உணரத் தெரியாது.”

இளைஞன்: அப்படீங்களா ஃபாதர்.

“ஆமாம்.

நான் சொன்னனில்ல அதே 1983 ஆம் வருசம் ஏப்ரல் மாதத்தில...

முதல் நாள்.....

என் இடது கால்  சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அப்படியே மேலே எழும்புது.”

இளைஞன்: அய்யோ ஃபாதர்.

“வெயிட்....

ஆனா என் மாம்ச கால் அப்படியே இருக்குது.

எழும்புனது  உண்மையில் என் காலல்ல ஆவியின் கால்.”

“இரண்டாவது நாள்.....

என் வலது கால் அதேமாதிரி  சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அப்படியே மேலே எழும்புது.”

இளைஞன்: ம்ம்ம்ம்ம்ம்

“மூணாவது நாள்.....”

இளைஞன் : ம்

“என்னோட ரெண்டுகாலும்   சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அப்படியே மேலே எழும்புது. அது இன்னா....?”

இளைஞன் : ஆவியின் கால் ஃபாதர்

“Good.  இனித்தான் நல்லா கவனிக்கனும்.

முதல் நாள் இடது கால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மேலே எழும்புது....

இரண்டாவது நாள் வலது கால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மேலே எழும்புது....

மூணாவது நாள் ரெண்டு   காலும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு மேலே எழும்புது....

சரியா..... நாலாவது நாள்.....

........

........

.........”

வேணாம்.....

நாலாவது நாள் என்ன எழும்புச்சுன்னு சொன்னா நீங்க என்னை அடிக்க வருவீங்க....  நம்முளுக்கு எதுக்கு வீண் வம்பு…?

ஒருவேளை இதைத்தான் காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது....

ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராதுன்னு சொல்றாங்களோ....?

**********

ப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.

அல்லது அத்தாள்களில் கண்டவற்றையெல்லாம் அப்படியே சொல்லிவிட முடியுமா என்றும் புரியவில்லை.

தம்பி நேசமித்ரன் அனுப்பி வைத்த "துடிக்கூத்து" என்கிற கவிதை நூல்தான் என்னை இப்படிப் பாடாய்ப்படுத்தி விட்டது.

சக மனிதரது வாழ்வை... அவர்களது அவலங்களை… அப்படியே அப்பட்டமாய்ச் சுமந்து வந்த இத்தகைய கவிதைகளை நான் எண்பதுகளின் மத்தியிலும் அதன் பின்னர் வந்த பொழுதுகளிலும் வாசித்திருக்கிறேன்.

அன்றைய பூவுலகின் நண்பர்களது "மெளனம் உனது எதிரி"....

வெளிச்சம் வெளியீடாக வந்த "ஆப்பிரிக்க விடுதலைக் கவிதைகள்"..

விடியலின் "மரணத்துள் வாழ்வோம்"…. என எண்ணற்றவை  இப்போது என்னுள் வந்து போகின்றன .

அத்தகைய அச்சு அசலான கவிதைகளைக் கொடுத்திருக்கிறார் நேசமித்ரன். 

இம்மண்ணில் பசுமை பொங்க வாழ்ந்த மனிதர்களது வாழ்வு எவ்விதம் இப்படி அலங்கோலமாகிப் போனது...

அது யாரால் இவ்விதம் அவலத்துக்கு உள்ளாகித் தவிக்கிறது என இரக்கமேயின்றி அம்பலப்படுத்துகிறது “துடிக்கூத்து”. அதுவும் கோபம் கொப்பளிக்கும் வரிகளோடு.

நகருக்கு வரும் பேரரசருக்கு நல்வரவு கூறித் தொடங்கும் இந்நூல்.... பயணிக்கும் ஒவ்வொரு பக்கங்களிலும் "பேரரசரின்" "பராக்கிரமங்களை"ப் புட்டுப்புட்டு வைக்கிறது.

யார் கோயிலையும் இடிக்காத...

எவர் வீட்டு உலைத் தீயும் திருடாத...

குழந்தைகள் மீதான வன்புணர்வுக்குத் துணைபோகாத...

எளிய பெற்றோர்களை நோக்கி…

" ஏன் எம் சுவாசக் காற்று பேரம் பேசப்பட்டது?

யாருடைய சோதனைக்கூட எலிகள் யாம்?

ஏன் எம்மை இவர்களிடம் ஒப்படைத்தீர்?” என ஆற்றாமை பொங்கி வழியும் எண்ணற்ற கேள்விகளை  எழுப்புகிறது "செக் லிஸ்ட்" கவிதை.

“அறிவிக்கப்படாத

தற்காலிகக் கல்லறைகளில்

உறைந்து கிடக்கும் உடல்கள்

இன்னும் அழுகத் துவங்கவில்லை.

ஒரு காலை இழந்தவன்

இன்னும் தன் இன்னொரு காலுக்கு

முழு உடலின் பாரத்தை

ஏற்கப் பழக்கவில்லை.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தை

இதோ ! வீடு திரும்பி விடுவார் என்றே

நம்பிக் காத்திருக்கின்றன குழந்தைகள்.

புகைப்படத்தின் முன்

விளக்கு அணையாமல்

எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

இன்னும் எரிக்கப்படாத மகனின் தாய்.

ஆம் !

மற்றபடி சகலமும்

இயல்புக்குத் திரும்பி விட்டதாய்ச் சொல்கிறார்கள்.”

மனதைப் பெரும் பாரமாக்கிய வரிகள் இவை.

கரடியின் கணைய நீர் சூப்...

புறாவின் எடைக்குச் சமமாய் தொடைக்கறி...

நொதிக்க வைக்கப்பட்ட பாம்புகளால் வந்த ஒயின்...

"ஆண்மை" விருத்திக்காய் புலியின் எலும்புகள்....

என மன்னரின்  மேசை நிரம்பி வழிய… விருந்து முடிவதற்காய் காத்திருக்கிறது தற்கொலைத்த விவசாயியின் பிணம்... ஏனெனில் மாமன்னரின் தர்பாரைத் தாண்டித்தான் இருக்கிறது இடுகாடு என்கிறார் நேசமித்ரன்.

இவையன்றி.... இக்கவிதையினுள் பொதிந்திருக்கும் அரசுகளின் திட்டமிட்ட மானியம் ஒழிப்பு... குடும்ப அட்டை அழிப்பு.... என்கிற ஏராள விஷயங்களைத் தவிர்த்திருக்கிறேன் நான் இங்கு.

கொத்துக் கொத்தாய் மனிதர்கள் குதறி எறியப்பட்ட ஈழத்தின் இனப்படுகொலை காலத்தை....

"வெள்ளைக்காடாத் துணி போர்த்தப்பட்ட

உடல்களில்

இன்னும் சிவப்பு கசிந்து கொண்டிருக்கிறது.

பெளர்ணமி மழையில்

நனைந்தாடப் பழக்கிய

தகப்பனின்

அங்க அடையாளங்கள் சொல்லத் தெரியாத

குழந்தைக்கு

வானிலிருந்து வந்த ஆயுதம்

எந்தத் தெய்வத்தினுடையது

என்று தெரியவில்லை."

என வரும் வரிகளை மேலும் வாசிக்க விடாது இதயத்தைக் குமுற வைக்கின்றன ரணமாய் நிலைத்துவிட்ட அந்நாளைய கணங்கள்.

இந்நூலில் நெருடக்கூடிய வரிகளாக நான் உணர்வது "செக் லிஸ்ட்" கவிதையில்  வரும்  சில வரிகள்தான். அக்கவிதையில் வரும் குற்றப் பட்டியலில்  "அப்பா மாட்டிறைச்சி விற்பதையும்" ஒன்றாகச் சேர்த்திருப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது.

"தற்காலிகமாகவும்"

"தற்செயலாகவும்"

நாட்டில்  நடந்தேறும் நாடகங்களில் பொதிந்திருக்கும் வார்த்தை விளையாட்டுக்களை சுட்டுகிறது "இரண்டு சொற்களின் கதை."

பூர்வகுடிகளைக் குப்பையில் தூக்கிவீசும் பிரம்மாண்ட நகரின் புதிய வரைபடம்....

ஆதார்... ரெய்டு.... நீட்.... என ஆளாளுக்குத் தக்கவாறு அரசாங்கம் பயன்படுத்தும் அங்குசங்கள்...

ஆசிபா.... அனிதாக்களின் துயரமுடிவுகள்.... என எல்லாவற்றையுமே தொட்டுச் செல்கிறது இத் "துடிக்கூத்து."

ஆம்… அவ்வளவு அர்த்தங்கள் பொதிந்திருக்கிற இக்கவிதை நூலை அவசியம் வாங்கச் சொல்லி  உங்களை உரிமையோடே வலியுறுத்தலாம் நான்…..

(அதற்குத் தேவை உங்களது ஒரே ஒரு தொலைபேசி அழைப்புத்தான்... அதுவும் இந்த நம்பருக்கு : "எழுத்து பிரசுரம்" : 98400 65000 )

தம்பி நேசமித்ரன் இலக்கிய உலகை மட்டுமல்ல...

தான் வாழும் ஊரும் உலகும் எத்தகைய அபாயங்களால் சூழப்பட்டிருக்கிறது....

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் ?

அவர்கள் எந்தெந்த விதங்களில் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள்...

என சகலத்தையும் மிக மிகத் துல்லியமாக உணர்ந்திருக்கிறார் .

அதை நாமும் உணர்வோம் இந்த நூலை வாசிக்கும்போது.