தொடர்கள்

வகுப்பறை வாசனை - 5

ந.முருகேசபாண்டியன்

தொடக்கப் பள்ளியில் பயிலும்போது நான்காம் வகுப்பில் இருந்து தேர்ச்சியடைந்து ஐந்தாம் வகுப்புக்குச் செல்வது, உண்மையில் உற்சாகம் அளிக்கிற விஷயம்தான். இதுவரை சின்னப் பையன் என ஒதுக்கப்பட்ட சூழல் மாறி, பள்ளிக்கூடத்தில் பெரிய ஆள் என்ற நினைப்பு, எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இனிமேல் சின்ன வகுப்புகளில் படிக்கிற வாண்டுகள், ’அண்ணே’ என்று என்னைக் கூப்பிடுவார்கள் என்ற மகிழ்ச்சியுடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். ஐந்தாம் வகுப்பில் சமூக அறிவியல், அறிவியல், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களைப் படிக்க வேண்டும். எல்லாப் பாடங்களுக்கும் புத்தகங்களும் கோடு போட்ட நோட்டுகளும் பள்ளிப் பைக்கட்டில் இருந்தன. பென்சில்தான் எழுதுவதற்குப் பயன்பட்டது. அடிக்கடி பென்சிலின் ஊக்கு அல்லது எழுதுகிற கார்பன் நுனி தேய்ந்து விடுவதால், சீவ வேண்டியது இருந்தது. சில வேளையில் பென்சிலுக்குப் பதிலாக விரலின் நுனி சீவப்பட்டு, ரத்தம் கொப்பளிக்கும். ரத்தம் கசிகிற விரலை வாயில் வைத்துச் சப்புவதால், மெல்ல ரத்தம் கசிவது நிற்கும். வீட்டுப் பாடம் என்றால், தினமும் கணக்குப் போட்டுவிட்டுப் பள்ளிக்குக் கொண்டுவர வேண்டும். பொதுவாக வீட்டுப் பாடம் பெரும்பாலான மாணவர்களுக்கு இம்சையாக இருந்தது. படிக்காத பெற்றோர் இருந்தால், யாரிடம் போய்,கணக்குப் பாடத்தில் சந்தேகம் கேட்க முடியும்?

எங்கள் வகுப்பு ஆசிரியர் முத்தையா சார். அடிக்கடி வெற்றிலை, பாக்கு போட்டு மென்று துப்புவதால், எப்பொழுதும் சிவந்த வாயுடன் காட்சியளிப்பார். கடைசி பிரீயடின்போது சுவராசியமாகக் கதைகள் சொல்லுவார். அவர் ஒவ்வொரு பாடத்தையும் விளக்கமாகப் பாடம் நடத்துவார். பாடம் நடத்தும்போது, சோர்வாக இருக்கிற மாணவனை எழுப்பி, கேள்வி கேட்பார். பதில் சொல்லாவிட்டால் அடி போடுவார்.  என்னைப் பொருத்தவரையில் வகுப்பில் ஆசிரியர் விளக்கமாகவும் புரியும்படியும் பாடம் நடத்தினால், அதைக் கவனமாகக் கேட்பேன். அப்புறம் தேர்வு நாளில் காலையிலும் முதல் நாள் இரவும் புத்தகத்தைப் புரட்டினால், பாடங்கள்  நினைவுக்கு வந்துவிடும். எனவே பரிட்சை எழுதுவது எனக்குப் பிரச்சினையாக இல்லை. என் பள்ளிப் பருவத்தில் தினசரி பாடம் படித்ததாக நினைவில்லை. வகுப்பில் பாடத்தை ஒழுங்காக நடத்திடாமல், ஏன் படிக்கவில்லை என்று மாணவர்களை அடித்து உதைக்கிற ஆசிரியரைப் பள்ளி மாணவனாக இருக்கும்போதிலே எனக்குப் பிடிக்கவில்லை. வகுப்பறையில் கவனத்துடனும் அக்கறையுடனும் பாடம் நடத்துகிற ஆசிரியர் எவ்வளவுதான் கண்டிப்பானவராக இருந்தாலும், அவர் எனக்குப் பிடித்தமானவராக இருந்தார். பொதுவாக அத்தகைய ஆசிரியர்மீது பெரும்பாலான மாணவர்கள் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர். 

பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் முன்னால் நீண்டிருக்கிற வராந்தவில் தொங்குகிற ரயில் தண்டவாளம், எப்பவும் கவர்ச்சிகரமாக விளங்கியது. பள்ளியில் பியூனாக வேலை பார்த்த அம்மாமுத்து அண்ணன், நீளமான இரும்புக் கம்பியினால், தண்டவாளத்தில் அடிக்கிறபோது, காற்றில் மிதக்கிற ஒலியைக் கேட்டவாறு, தள்ளிநின்று வேடிக்கை பார்ப்பேன். எப்பொழுதும் சாந்தமான முகத்துடன், எங்களுடன் அன்பாகப் பேசிய அம்மாமுத்து அண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும். அவர் இல்லாதபோது, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மணியடிப்பார்கள். இரண்டாம் வகுப்பு மாணவனாக இருக்கும்போது தொடங்கி என்றாவது ஒருநாள் மணியடித்திட வாய்ப்புக் கிடைக்காதா என நானும் எனது நண்பர்களும் ஏக்கத்துடன் இருந்தோம். அது ஒரு கனவாக இருந்தது. ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது, ஒருநாள் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு ஓவர் பெல் அடிக்கச் சொன்னார். என்னுடைய கையில் இருந்த கம்பியினால் கிளம்பிய ஒலி, எங்கும் பரவிட, என மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. அன்று என் வகுப்பறைத் தோழர்களிடம் நான்தான் இன்று மணியடித்தேன் என்று உற்சாகத்துடன் சொன்னேன்; பெருமை பீற்றினேன். அவர்களின் கண்களில் பொறாமை கொப்பளித்தது.

ஐந்தாம் வகுப்பில் எங்கள் வகுப்பு ஆசிரியர் வராத நாட்களில் ஏ வகுப்பு ஆசிரியர் டானியல் சார் தான், இரண்டு வகுப்புகளையும் பார்த்துக்கொள்வார். மதிய வேளையில், ’ம்…படிங்கட’ என்று சொல்லிவிட்டு, வாயோரத்தில் எச்சில் ஒழுக, உட்கார்ந்தவாறு, தூங்குவது, அவருடைய வழக்கம். முதலில் கண்களால் பேசிடும் மாணவர்கள், பின்னர் குசுகுசுவெனப் பேசத் தொடங்கி, ஒரு கட்டத்தில் பேச்சுச் சத்தம் அதிகரித்திடும். அதனால் தூக்கம் கலைந்த ஆசிரியர் திடீரென விழித்து எழுந்தவர், கண்ணெதிரே சிக்குகிற மாணவர்களைப் பிரம்பினால் விளாசி விடுவார். இதில் என்னைப் போன்று பேசாமல் புத்தகத்தை வாசித்த மாணவர்களும் அவ்வப்போது அடி வாங்கிட நேரிடும். டேனியல் சாருக்கு மாணவர்கள் வைத்த பட்டப் பெயர் ’வழுக்கை’. அவருடைய தலை, வழுக்கையினால் பளபளத்தது. டேனியல் சார், எப்பொழுதும் கையில் வைத்திருந்த நுனியில் உருண்டிருந்த மஞ்சளான பிரம்பினை எல்லோரும் வெறுத்தோம். நானும் எனது வகுப்பறை நண்பர்களும் ஒன்றுகூடி அந்தப் பிரம்பை ஒழித்துவிடத் திட்டமிட்டோம். ஞாயிற்றுக்கிழமையன்று வகுப்பறைச் சுவருக்கு மேலிருந்த தப்பையை விலக்கிக்கொண்டு உள்ளே குதித்தோம். டேனியல் சாரின் மேசை டிராயரின் பூட்டைக் கல்லினால் உடைத்துப் பிரம்பை மட்டும் எடுத்து, அதைச் சட்டைக்குள் வைத்துக்கொண்டு, வந்த வழியில் ரகசியமாக வெளியேறினோம். எங்கள் ஊரிலிருந்த திருமகள் திரையரங்கினுக்குப் பின்னர் ஆளரவமற்ற இடத்தில் இருந்த சிறிய உறைக் கிணறு அருகில் ஒன்று சேர்ந்தோம். டேனியல் சாரின் பிரம்பின் மீது கருங்கல்லைத் தூக்கிப் போட்டு, தூள்தூளாக்கி அதைப் பாழடைந்த கிணற்றுக்குள் வீசினோம். எந்தச் சூழலிலும் யார் அடித்தாலும் யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாதென்று ‘அம்மா’ மேல் சத்தியம் செய்துகொண்டு பிரிந்தோம். அதிகாரத்தின் குறியீடாகவும், வன்முறையின் வெளிப்பாடாகவும் விளங்கிய பிரம்பினை நொறுக்கியது இப்பவும் சரியெனத் தோன்றுகிறது. அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் டேனியல் சாரின் மேசை டிராயர் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பானதும், நாங்கள் பயத்துடன் ஒருவரையொருவர் பார்த்தவாறு இருந்ததும் தனிக்கதை. கடைசிவரையிலும் யார் மேசையின் இழுப்பறையை உடைத்தது என்ற விஷயம் வெளி வரவேயில்லை.

டேனியல் சாரின்  முகம் எப்பொழுதும் கடுகடுவென இருக்கும். ஒருநாள்  எனது அண்ணன் தமிழ் இரண்டாம் தாளில், படித்த துணைப்பாடமாக இருந்த நாவலின் சுருக்கத்தைப் பையில் வைத்துப் பள்ளிக்குக் கொண்டு போயிருந்தேன். அன்று ஆசிரியர் வராத காரணத்தினால் மாணவர்கள் கிசுகிசுப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நான் புத்தகத்தை எடுத்துப் பக்கங்களை விரித்துப் பார்த்தேன். அதைப் பார்த்த டேனியல் சார் என்னை அழைத்துக் கையில் வைத்திருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இந்தப் புத்த்கத்தை ஏன் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்தே என்று காதைப் பிடித்துத் திருகினார். புத்தகத்தைப்  பறிமுதல் செய்துவிட்டு, எனது கையில் பிரம்பினால் இரண்டு அடிகள் அடித்தார். எனது உள்ளங்கையில் பதிந்திருந்த தடங்களைத் தலைமுடியில் தடவினேன். பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகத்தை வாசிக்கக்கூடாது என்று கருதிய டேனியல் சார் போல பலர் அந்தக் காலத்தில்  ஆசிரியர்களாக இருந்தனர். 

என்னுடன்  ஐந்தாம் வகுப்பில் படித்த மாணவன் ஒருவன், புத்தகப் பையினுள் சிறிய தகர டப்பாவில் ஒரு பைசா கடலை மிட்டாய் அல்லது கொக்கோ மிட்டாய் வைத்திருப்பான். ரீசர்ஸ் என அழைக்கப்பட்ட இடைவேளையிலும், பள்ளி தொடங்குவதற்கு முன்னரும் வகுப்பில் மிட்டாய் வியாபாரம் செய்வான். 24 மிட்டாய்கள் அடங்கிய பாக்கெட்டை 20 காசுகளுக்கு வாங்கி, சில்லறையில் ஒரு மிட்டாய் ஒரு காசு என விற்றால் நான்கு பைசாகள் லாபம் கிடைக்கும். மாணவர்கள் அவனிடம் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவார்கள். எனக்கு அவன் எப்படி ஒரு மிட்டாய்கூட தின்னாமல், வியாபாரம் செய்கிறான் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

என்னுடன் படித்த ஜோதி வெங்கிடாசலம் என்ற நண்பன், ஊரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிற தென்னந்தோப்பிற்குள் இருக்கிற வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவான். ஒரு நாள் தென்னை ஓலையில் செய்த கிளி பொம்மையுடன் வகுப்புக்கு வந்தான். அது அழகாக இருந்தது. அவன் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமாக சொல்வதை வியப்புடன் கேட்பேன். அவனிடம் இருந்துதான் வெற்றிலைப் பணிக்கம் என்ற சொல்லை அறிந்துகொண்டேன். ஊணாங் கொடியை வெட்டி, அதைக் கொஞ்ச நேரம் காயவிட்டு, அந்தக் கொடியினால் மரக்கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் என்று சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. அப்புறம் அந்த வாரக் கடைசியில் மரங்களுக்கு நடுவில் இருந்த அவனுடைய வீட்டிற்குச் சென்றபோது, அந்தச் சூழல் விசித்திரமாக இருந்தது. கால்வாய்க் கரையோரத்தில் முளைத்திருந்த செடிகளின் பெயர்களை அவன் அறிமுகப்படுத்தியவுடன் அடேயப்பா என்று தோன்றியது. அவன் வீட்டில் வளர்க்கப்பட்ட கின்னிக் கோழியைப் பார்க்க அழகாக இருந்தது. 

என்னுடன் படித்த மாணவர்கள் ஒவ்வொருவரும் என்ன சாதி என்பது தெரிந்திருந்தாலும், அதை நண்பர்கள் பொருட்படுத்துவது இல்லை. ஏன் இப்படி சாதியினால் ஒருவனை கீழானவனாகக் கருதுகிறார்கள் என்று அவ்வப்போது யோசிப்பேன். எங்கள் நண்பர்களுக்குள் ஒரு மாங்காய் இருந்தால், துணியினால் மூடி, காக்கா கடி கடித்து, எல்லோரும் பகிர்ந்து உண்போம். விளிம்புநிலைச் சாதியினர் என்று இழிவாக நடத்தப்பட்ட பள்ளர், பறையர் வீட்டுப் பையன்களில் எனக்கு நெருக்கமான நண்பர்கள் இருந்தனர். அவர்களுடைய குடிசை வீட்டுக்குப் போய், தீயில் சுட்ட பனம் பழம் சாப்பிட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் எங்கும் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் சாதிய உணர்வு எதுவுமில்லை. ’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று குழந்தைகளைப் பார்த்துப் பாரதியார் பாடிய பாடல் வரி, பொருத்தமன்று.

தொடக்கப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாமல், இடையில் விலகிடும் மாணவர்கள் அன்றைய காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். அதிலும் ஐந்தாம் வகுப்புவரையிலும் தொடர்கிற மாணவிகளின் எண்ணிக்கை, கணிசமாகக் குறைந்தது. ’பொட்டப் பிள்ளை படிச்சு என்னா ஆகப் போகுது? சீக்கிரம் குத்த வச்சிட்டால், எங்காவது கட்டிக் கொடுத்திட்டால், கடமை முடிந்திடும்’ எனப் பேசுகிற பேச்சுகள் கிராமத்தில் சாதாரணம். என்னுடன் ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்த ஒரு மாணவி, ஐந்தாம் வகுப்புடன் நின்று விட்டாள். அந்தப் பெண்ணை அவளுடைய மாமன் மகனுக்கு நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறப்பக் கட்டிக்கொடுத்து விட்டார்கள். அதாவது பதின்மூன்று வயதில் அவளுக்குத் திருமணம் நடந்தது. ”வீட்டில் பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. அதான் அது கண்ணை மூடுறதுகுள்ளே பேத்தியின் கல்யாணத்தைப் பார்க்க விரும்புதுன்னு கட்டி வைச்சிட்டோம்.” இப்படி  ஏதாவது ஒரு காரணத்துடன் பெரிய பிள்ளையான சிறுமிக்கு உடன் அடுத்த மாதமே திருமணம் நடந்த சம்பவம், எங்கள் ஊரில் நடந்திருக்கு.

ஆம்பளைப் பசங்களைப் பொருத்தவரையில் வறுமையின் காரணமாகத் தொடர்ந்து பள்ளிக்கு வராதவர்கள் இருப்பார்கள். இன்னும் சிலர் எம்புட்டு படிச்சாலும் மண்டையில் ஒன்னும் ஏற மாட்டேங்குது என்று ஆடு, மாடு மேய்க்கப் போய் விடுவார்கள். படிக்கிறது மிகவும் முக்கியம் என்ற புரிதல் இல்லாமல், பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிற மாணவர்களைச் சரி போ என்று விட்டு விடுகிற படிக்காத பெற்றோர் இருந்தனர். அறுபதுகளில் எங்கள் ஊரில் சுமார் 75% பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாத சூழலில், படிப்பின் முக்கியத்துவம் எப்படி இருந்திருக்கும்? கல்வியினால் என்ன பயன்? படிப்பு வராத பையனுக்கு எப்படி பாடம் சொல்லிக்கொடுப்பது? இப்படி யோசிக்கிற பெற்றோர், பள்ளிக்கூட படிப்பைத் தொடர விரும்பாத சிறுவர்களை வற்புறுத்தவில்லை. இத்தகைய சிறுவர்கள், பெரும்பாலும் தந்தையாருடன் வயல் வேலை, மாடு மேய்த்தல், பிள்ளை தூக்குதல் என வேலை செய்தனர். அன்றைய காலகட்டத்தில் வீட்டிற்கு ஏழெட்டுக் குழந்தைகள் இருந்ததனால், பிள்ளைகள் தொடக்கப் பள்ளிக்கூடப் படிப்பை முடிக்கவில்லையே என்று பெற்றோர் ஆதங்கப்படவில்லை. என்னுடன் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாகச் சேர்ந்து படித்தவர்களில் பத்து மாணவர்கள்தான் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் பதினொன்றாம்  வகுப்பு வரையிலும் வந்தனர். என்னையும் சேர்த்து நால்வர் பட்டம் பெற்றனர். மாணவி, யாரும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லை.

எங்கள் பள்ளியில் பெரிய அரசமரத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் வட்ட மேடையில் பிள்ளையார் சிலை, நாகர் சிலைகள் இருக்கும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பள்ளிக்கு அருகில் இருக்கிற பெண்கள் யாராவது குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து, சிலைகளைக் கழுவிவிட்டு, பூப் போட்டுக் கும்பிடுவார்கள். மாணவர்கள் கால் பரிட்சை, அரைப் பரிட்சை, முழுப் பரிட்சைகளின்போது, முதல் நாளில் பத்தியைப் பொருத்தி வைத்துப் பயபக்தியுடன் வணங்குவார்கள். மற்றபடி சிறுவர்கள் விடுமுறை நாட்களில், பிள்ளையாரின் தோளின்மீது காலை வைத்து அரச மரத்தில் ஏறிட முயலுவார்கள். பொதுவாகப் பள்ளிக்கூட இடைவேளைகளில் தாராளமாகப் பேய், முனிக் கதைகள் மாணவர்களிடையில் உலாவும். அந்தக் கதைகளைக் கேட்காமல் இருக்க முடியாது. அதேவேளையில் கேட்டாலும் பயமாக இருக்கும். ஆம்பளை முனிகள் அம்மணக்கட்டையாகவும், பொம்பளை முனிகள் வெள்ளைச் சேலை கட்டியிருக்கும் என்று அமானுட சக்திகள் பற்றிய பேச்சுகள், மாணவர்களுக்குப் பீதியைத் தரும். முனி, பேய் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள் சிலர் என்னுடன் பள்ளியில் படித்தனர். ஊரின் மூலை முடுக்கு, மேடு, ஊறணி, கண்மாய், புளிய மரம், வெட்டுக் கிடங்கு, ஆறு, வைக்கோல் படப்பு, சந்துகள் என எங்கும் நீக்கமற நிரம்பியிருந்த பேய், முனிகளின் சாம்ராஜ்யத்தில் என்னைப் போன்ற பள்ளி மாணவர்கள், தினமும்  இருட்டத் தொடங்கியதும் நடுக்கத்துடன் இருந்தோம்.