தொடர்கள்

வகுப்பறை வாசனை - 7

ந.முருகேசபாண்டியன்

இன்றைக்குக் குழந்தைகளை இரண்டரை வயதிலே ப்ரீகே.ஜி., என்ற வகுப்பிற்கு அனுப்பி, படாத பாடு படுத்துகிற நிலையைப் பார்க்கும்போது, அறுபதுகளில் தமிழகத்தில் நிலவிய கல்விச்சூழல் ஆரோக்கியமானது. எவ்விதமான நெருக்கடியும், பதற்றமும் இல்லாமல் குழந்தைகள், தங்களுடைய இயல்பில் பிற குழந்தைகளுடன் சேர்ந்து தெருக்களில் ஓடிப்பிடித்து விளையாடிய சூழல், அற்புதமானது.  இன்று எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் கற்றல் அவசியம் என்ற நிலை உருவானது ஒருபுறம் என்றால், எல்கேஜி குட்டிப்பிள்ளைகளைத் தினமும் மாலைவேளையில் டியூஷன் அனுப்புகிற கொடூரமும் இன்னொருபுறம் நடைபெறுகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் அடுக்ககத்தில் பெற்றோருடன் வசிக்கிற குழந்தைகள் நாய், பூனை, மாடு, கன்றுக்குட்டி, குருவி போன்ற சக உயிரினங்கள் தொடர்பு இல்லாமலும், அவற்றுடன் விளையாடாமலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சரி, போகட்டும்.

 அறுபதுகளில் தொடக்கப்பள்ளியில் கற்றது மட்டும் முக்கியமாக எனக்குத் தோன்றவில்லை.  பள்ளிக்கு வெளியே விளையாட்டும், பாட்டும், கேலியும், கிண்டலும் என எங்களின் அன்றாட உலகம் விரிந்துகொண்டிருந்தது. அங்குப் பெரியவர்களுக்கு ஒருபோதும் இடமில்லை. பொதுவாகக் குழந்தைகளாக இருந்த எங்களுக்கு எல்லாம் விளையாட்டுகள்தான். மூன்று வயதில் வீட்டைவிட்டு வெளியே வந்து தெருவில் விளையாடும்போது தொடங்குகிற கற்றல், முடிவற்றது. ஐந்து வயதில் பள்ளிக்குச் சென்றாலும் விளையாட்டுகள் தொடர்கின்றன. விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கிறது. குழந்தைகள், ஒவ்வொரு ஆண்டிலும் புதிதுபுதியதான விளையாட்டுகளை விளையாடுகின்றனர். இதனால் விளையாடுகிற விளையாட்டுகளும், மாற்றமடைகின்றன. பம்பரம், கிட்டிப்புள், கோலிக்குண்டு, சில்லாக்கு, பச்சைக்குதிரை, ஓடிப்பிடித்து விளையாடுதல், திருடன்- போலீஸ்  விளையாட்டு, குலைகுலையா முந்திரிக்கா, காலாட்டு மணி கையாட்டு மணி என நாங்கள் விளையாண்ட விளையாட்டுகள் முடிவற்றவை.

நாங்கள் விளையாடுவதில் உற்சாகத்துடன் செயல்பட்டாலும், பாடல்கள் பாடுவது, விடுகதை சொல்வதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டோம். வகுப்பறையில் மாணவமாணவியர் எல்லோரும் சேர்ந்து, ’பாட்டியின் வீட்டுப் பழம்பானையில் ஒருபுறம் ஓட்டையடா” , ’பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே!’ , ‘தோ.. தோ நாய்க்குட்டி துள்ளி வா நாய்க்குட்டி’ எனப் பாடுவோம். அதேநேரத்தில் வகுப்பறைக்கு வெளியிலும் நாங்கள் பாடல்களைப் பாடினோம். அந்தப் பாடல்கள் நண்பர்கள் மூலம் எங்களிடம் வந்து சேர்ந்தன. காலங்காலமாக வாய்மொழியில் தலைமுறைகளைத் தாண்டி, கிராமத்துத் தெருக்களின் வெளிகளில் மிதந்துகொண்டிருந்தன பாடல்கள். நினைவாற்றல், உச்சரிப்பு பயிற்சி எனப் பாடல்கள் பாடுவதன் பின்புலத்தைக் குறித்தாலும், அவற்றையும்  தாண்டி அவை எங்களுக்குக் கொண்டாடத்தை அள்ளி வழங்கின.  

நாங்கள் விளையாடும்போது, வானத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் பறந்து செல்வதைப் பார்த்தவுடன், எல்லோரும் எழுந்துநின்று, கைவிரல் நகங்களை ஒன்றோடு உரசியவாறு, ‘கொக்கே! கொக்கே! வெள்ளை போடு! கொக்கே! கொக்கே! கைக்குப் பூப்போடு!’ என்று ஒரே குரலில் கத்தியவாறு குதிப்போம். கைநகங்களில் ஏற்கனவே இருக்கிற வெள்ளைப் புள்ளிகளைப் பிறரிடம் காட்டிப் பீற்றிக்கொள்வோம்.  வலசை போகிற பறவைகள் கூட்டத்தைப் பார்த்து அவற்றிடம் வேண்டுதல் வைக்கிற மனநிலைதான், காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியின் வரிக்கு அடிப்படையாகும்.

தெருவில் மணல் புழுதியில் விளையாடுவதுதான் எங்களுடைய முதன்மையான பொழுதுபோக்கு. வீட்டோரத்தில் மணலைச் சுவராக வைத்து, வீடு கட்டி விளையாடுவதில் பொம்பளைப் பிள்ளைகளும் சேர்ந்துகொள்ளும். ஆம்பளைப் பசங்களை எப்பவும் அதிகாரம் பண்ணுகிற சகவயது பெண் குழந்தைகளுக்குப் பணிந்துபோகிற சிறுவர்கள், திடீரென மணலில் கட்டிய வீட்டைக் காலால் அழித்துவிட்டுக் கிறுகிறுவெனச் சுற்றியவாறு பாடுவார்கள்.

    கிறுகிறு வானம்

    கிட்ட வந்தால் கிள்ளுவேன்.

கையில் சிக்குகிறவர்களைக் கிள்ளுவார்கள்; பாடியவாறு தலை கிர்ரெனச் சுற்றிடச் சிலர் கீழே விழுவார்கள்.

ஒருவயதுக் குழந்தைகூடத் தாயின் முந்தானையில் முகத்தை மறைத்துக்கொண்டு, ’பிடிச்சா என்று சிரித்தவாறு  மறைந்து விளையாடுவது இயல்பானது. பள்ளிப் பருவத்தில் நாங்கள் தெருவில்  கண்ணாமூச்சி விளையாட்டை’ உற்சாகமாக விளையாடினோம். எங்காவது மறைந்ந்திருப்பவரைத் தேடிக் கண்டுபிடிப்பது, சுவராசியமானது. விளையாடுகிறவர்களில் சற்றுப் பெரிய குழந்தை, ’பட்டு’ வருகிற குழந்தையின் கண்களை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு கேட்கத்தொடங்கும்.

கண்ணாமூச்சா ரேய்

காதடைச்சா ரேய் 

எத்தனை  முட்டை தின்னே?

நாலு முட்டை தின்னேன்

மிச்சமிருக்கிற ரோசக்கார முட்டையப் பிடிச்சிட்டு வா 

கண்ணைப் பொத்தியவுடன்  எல்லோரும் எங்காவது ஓடி ஓளிந்து விடுவோம். ’பட்டு’ வருகிற பையன் அல்லது பெண்ணின் கையில் சிக்காமல், கண்ணைப் பொத்தியவரைத் தொட்டுவிட வேண்டும்.

எங்கள் நண்பர்களில் ஒருவனின் பல், திடீரென விழுந்துவிடும். அவன் உதட்டினால், பல் வரிசையில் விழுந்த ஓட்டையை மறைக்க முயலுவான். என்றாலும்  ஓட்டைப் பல்லுக்காரனைக் கேலிசெய்து நாங்கள் பாடிய பாடல் பின்வருமாறு:

ஓட்டைப் பல்லு சங்கரா

ஒரு வீட்டுக்கும் போகாதே

ஆப்பம் வாங்கித் திங்காதே

அடி பெத்துச் சாகாதே

குழந்தைகளாகிய  நாங்கள் வேடிக்கையாகக் கூட்டாகச் சேர்ந்து பாடிய பாடல்களை இப்பொழுது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. இந்த மாதிரி பாடல் மட்டுமல்ல, சற்று பாலியல்  கலந்த பாடல்கள்கூட எங்கள் நண்பர்களுக்கு இடையில் வழக்கில் இருந்தன.

மொட்டைப் பாப்பாத்தி ரொட்டி சுட்டாளாம்

எண்ணெய் பத்தலையாம்

கடைக்குப் போனாளாம்

காசு பத்தலையாம்

கடைக்காரனைப் பாத்துக் கண்ணடிச்சாளாம்

கடைக்காரனைப் பார்த்துக் கண்ணடிச்சாளாம் என்று கடைசிவரியைப் பாடும்போது, என்னுடைய சிநேகிதிகள் சப்தமாகச் சிரிப்பார்கள். நானும்தான்.

கோவிலுக்குப் போய் தலைமுடியை மழித்துவிட்டு, மொட்டைத் தலையுடன் வருகிற சேக்காளியைப் பார்த்துக் கிண்டலாகப் பாடும்போது, சிலர் அடிக்க வருவார்கள்.

மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம் 

முருங்கை  மரத்தில் ஏறுச்சாம்

கட்டை எறும்பு கடிச்சிச்சாம்

காள்காள்ன்னு கத்துச்சாம்

மொட்டையான நன்பனைக்கேலி செய்திட பாடல் உதவியது, வேடிக்கையானதுதான்.

விளையாட்டு இடைவேளையில் உற்சாகமாக நாங்கள் பாடிய பாடல்:

டப்பா டப்பா வீரப்பா

எப்படா கல்யாணம்

மாசம் பிறக்கட்டும்

மல்லிகைப்பூ பூக்கட்டும்

எம்ஜிஆர் சண்டை

பானுமதி கொண்டை

குளத்துல கொக்கு

கோழிப்பீயை நக்கு

கடைசி வரியைச் சொல்லும்போது, எதிராளியைப் பார்த்துச் சபதமாகச் சொல்லுவோம்.

எதிரெதிராக இருவர் கைகளை மாற்றிப்போட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, வேகம்வேகமாகச் சுற்றும்போது, பாடல்களைப் பாடினோம்.  அந்த நேரத்தில் பாடலை வேகமான தொனியில் ஏன் பாடினோம் என்பது புலப்படவில்லை. அவை:

  ஈச்சு இலுமிச்சை

  சந்தனக் கொட்டாச்சி

நாலு கரண்டி நல்ல எண்ணெய்

நாப்பத்தாறு தீப்பெட்டி

வர்றாரய்யா சுப்பய்யா

வழிவிடம்மா மீனாட்சி

தெப்பக்குளத்துள நீராடி

தேவடியா வீட்டுல சிங்காரிச்சு

மானத்துல ரோடு போட்டு

மச்சான் வர்றார் பாருங்கடி

நண்பனுடன் தொடர்ந்து கேள்வி-பதில் முறையில் விரிந்திடும் பேச்சு, நினைவாற்றலை வளர்க்கிறது என்பதை அறியாமல் நாங்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு;

ஓடு ஓடு 

என்ன ஓடு?

நண்டு ஓடு

என்ன நண்டு?

பால் நண்டு

என்ன பால்?

சதுரப் பால்

என்ன சதுர?

நாய்ச் சதுர

என்ன நாய்?

வேட்டை நாய்

என்ன வேட்டை?

பன்னி வேட்டை

என்ன பன்னி?

கூர் பன்னி

என்ன கூர்?

மாங்காக் கூர்

என்ன மாங்கா?

பொன் மாங்கா

என்ன பொன்?

காக்காப் பொன்

என்ன காக்கா?

அண்டங் காக்கா?

என்ன அண்டம்?

சோத்து அண்டம்?

என்ன சோறு?

பழச் சோறு

என்ன பழம்? 

வாழைப் பழம்

என்ன வாழை?

திரி வாழை

என்ன திரி?

விளக்குத் திரி

என்ன விளக்கு? 

குத்து விளக்கு

என்ன குத்து?

கும்மாங்குத்து.

கடைசி வரியைச் சொல்லும்போது, எதிரே இருக்கிற நண்பனின் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்திக்கொள்ளலாம், விளையாட்டாக.

கபடி அல்லது சடுகுடு என்று அழைக்கப்படுகிற விளையாட்டின்போது, பாடலைப் பாடியவாறு எதிரணிக்குள் செல்லும்  வழக்கமிருந்தது. அந்தப் பாடல்:

சடுகுடு மலெயில ரெண்டானெ

தவறி விழுந்தது கௌட்டானெ

தூக்கி விட்டது இளவட்டம்

இளவட்டம் இளவட்டம்

இரவுவேளையில் தெருவில் விளையாடும்போது, யாராவது வயதில் மூத்த பிள்ளை,  மலையிலே தீப்பிடிக்குது/பிள்ளைகா ஓடுங்க! என்றவுடன் மற்ற பிள்ளகள் மலையிலே தீப்பிடிக்குது/பிள்ளைகா ஓடுங்க! என்று பதிலுக்குப் பாடி ஆடுவார்கள்.

 மலையிலே தீப்பிடிக்குது

பிள்ளைகா ஓடுங்க!

மலையிலே தீப்பிடிக்குது

பிள்ளைகா ஓடுங்க!

 கைதட்டியவாறு உற்சாகமாகப் பாடுவதில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

உச்சி வெயில் நேரத்தில் தெருவில் விளையாட முடியாத சூழலில், வீட்டுக்குள் இருந்து விளையாடுவதற்குச் சொட்டாங்கல், பல்லாங்குழி, தாயக்கட்டம் போன்ற விளையாட்டுகள் உதவின. ஆறு சிறிய கூழாங்கற்களைத் தூக்கிப்போட்டு, விளையாடுகிற சொட்டாங்கல் விளையாட்டு, பொதுவாகப் பெண்கள் ஆடுகிற விளையாட்டு எனக் கருதப்பட்டாலும் சிறுவர்களாகிய நாங்கள் சிறுமிகளுடனும் பெண்களுடன் சேர்ந்து விளையாடினோம். 

பல்லாங்குழி என்பது 50X25 செ.மீ. அளவிலான மரப்பலகை அல்லது உலோகத்தில் 16 குழிகளுடன் இருக்கும், குழிக்கு ஐந்து புளியமுத்துகள் அல்லது சிறிய சோளிகளை நிரப்பி விளையாடும் பல்லாங்குழி விளையாட்டை வீட்டில் இருந்து பெண்கள் உற்சாகத்துடன் விளையாடுவார்கள். என்றாலும் சிறுவர்களாகிய நாங்களும் ஆர்வமாக விளையாடினோம். பாட்டிகளில் சிலர் எந்தக் குழியில் இருந்து தொடங்கினால், ஆட்டத்தின் முடிவில் என்ன கிடைக்கும் என்பதைத் துல்லியமாகச் சொல்வதில் கைதேர்ந்தவர்களாக இருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும்.

சிறுவர்கள், பெரியவர்களுடன் சேர்ந்து  சோளிகளைக் குலுக்கிப்போட்டு விளையாடுகிற தாயக்கட்டம், ஒருவகையில் அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது. என்றாலும், சொல்லி வைத்துத் தாயம் போடுகிறவர்களும் இருந்தனர்.  மணிக்கணக்கில் வீட்டுக்குள்ளே அல்லது திண்ணையில் அமர்ந்து விளையாடிய சொட்டாங்கல், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள், தோழமையையும், விட்டுக்கொடுத்தலையும், வெற்றிதோல்வியையும்  எங்களுக்குக் கற்றுக்கொடுத்தன.

கிராமத்தில் கோடை காலத்தில் இரவு எட்டு மணி வரையிலும்கூட  தெருவில் விளையாடிக்கிட்டு இருப்போம். வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கப்பட்ட தெருவில், பாட்டி அல்லது தாத்தா என யாராவது தங்களுடைய பேரப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லத் தொடங்கினால், எங்களுடைய விளையாட்டு நின்றுவிடும். எல்லோரும் கதையைக் கேட்பதற்காகக்  கதைசொல்லியின் முன்னால் அமைதியாக உட்கார்ந்து விடுவோம். எங்கள் ஊரிலிருந்து எட்டு மைல் தொலைவில் இருக்கிற மதுரை நகருக்குக்கூட சித்திரைத் திருவிழாவின்போது மட்டும் செல்கிற பாட்டி சொல்கிற கதை, ஏழு கடல், ஏழு மலை தாண்டி, பெரிய அருவி கொட்டுகிற கரையில் இருக்கிற பத்துப் பேர் கட்டி அணைச்சாலும் அடங்காத ஆலமரம்… என்று போகும். நாங்கள் வாயைத் திறந்தவாறு கேட்டுக்கொண்டிருப்போம். மன்னனை ஏமாற்றிய சாகசகாரனான திருடன், ஆறு தலைகள் கொண்ட ஆறுமுகப் பன்றி, சூரியனையே சிறகினால் மறைக்கிற அண்டரண்டப் பட்சி என்று விவரிக்கிற தாத்தாகள் அல்லது பாட்டிகள் பெரும்பாலும் பள்ளிக்குப் போகாதவர்கள். எல்லாம் செவிவழிக் கதைகள். சில வேளைகளில்  அம்மாகள் வந்து, சாப்பிட வா என்று பிள்ளைகளை அழைப்பார்கள். எழுந்து போக மனமில்லாமல் வீட்டுக்குப் போவோம். 

’கல்லா மண்ணா’ தொடங்கி, தெருக்களில்  ஏதோவொரு விதிகளின்படி பிள்ளைகள் விளையாடுகிற விளையாட்டுகள் பெரிதும் சுவராசியமானவை. இரவில் விளையாடும் விளையாட்டுகளைக் குழந்தைகள் பெரும்பாலும் பகலில் விளையாடுவதில்லை. எதிரெதிரெ கால்களை நீட்டிக்கொண்டு சிறுவர்களும் சிறுமியர்களும் உட்கார்ந்துகொண்டு, விளையாடும்  விளையாட்டின்  முடிவில் ’காலாட்டு மணி, கையாட்டு மணி’ என்று சொல்லும்போது எல்லோர் மனதிலும் உற்சாகம் பிறக்கும்.  எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொண்டு விளையாடும் குலைகுலையா முந்திரிக்காவில், மறைத்து வைக்கப்பட்ட துணியினால் எங்களில் ஒருவர் அடிபடும்போது, காற்றில் சிரிப்பொலி பரவும். வெற்றிலை வண்டி போகுது, பாக்கு வண்டி போகுது சுண்ணாம்பு வண்டி போகுது என்று சொல்லியவாறு பிள்ளைகள் வரிசையாகப் போகையில், எதிரணியினரிடம் மாட்டிக்கொள்ளுதல் என இரவுவேளையில் விளையாடுகிற விளையாட்டுகள், தனித்துவமானவை.  தினமும் விளையாட்டுகள் முடிந்து கிளம்பும்போது, நாங்கள்

அவரவரு வீட்டுக்கு

அவரக்காயும் சோத்துக்கு

பிள்ளை பெத்த வீட்டுக்கு

புளியங்காயும் சோத்துக்கு

நான் போறேன் வீட்டுக்கு

நாளைக்கு வாறேன் விளையாட்டுக்கு

 என்ற பாடலைக் கோரஸாகப் பாடியவாறு பிரிந்து வீட்டுக்குப் போவோம். 

தெரு மண்ணில் விளையாடுவது உடல் நலத்திற்குக் கேடானது என்ற கருத்து, குளியல் சோப், திரவ சோப் கம்பெனியினரால் எங்கும் பரப்பப்பட்ட சூழலில், ஞாயிற்றுக்கிழமைகளில்கூட தெருக்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை. பத்து வயது வரையிலும் தெருக்களில் விளையாடிய எங்களுடைய உலகம், வேறுவகைப்பட்டது. சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் எங்களுடைய தேடல் முடிவற்று, நீண்டது. அன்றைய சமூகச் சூழல், குழந்தைகளாகிய எங்களுக்குத் தந்திருந்த சுதந்திரம், கடலைப்போலப் பரந்து விரிந்திருந்தது.