மைக் டைசன் 
செய்திச்சாரல்

மீண்டும் டைசன்!

Staff Writer

புகழ்பெற்ற அமெரிக்க குத்துச் சண்டை வீரரான மைக் டைசனுக்கு வயது 58. இந்த வயதில் 27 வயதான ஜேக் பால் என்பவருடன் குத்துச்சண்டைக் களத்துக்குள் குதித்துவிட்டார். டைசன் கடைசியாகப் போட்டியிட்டது 2005-இல். அந்த கடைசி போட்டியில் கெவின் மெக் ப்ரைட் என்பவரிடம் தோற்றதுடன் அவர் ஓய்வு பெற்றிருந்தார். 50 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற சாதனை சரித்திரத்துக்கு சொந்தக்காரர் டைசன். அத்துடன் அதில் 44 நாக் அவுட்கள் செய்தவர்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாசில் நடந்த இப்போட்டி எட்டு சுற்றுகளைக் கொண்டது. ஒவ்வொரு சுற்றும் இரண்டு நிமிடம். எட்டு சுற்றுகள் கொண்ட விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 79-73 என்ற புள்ளிக்கணக்கில் டைசன் தோல்வியைத் தழுவினார்.

வெற்றி பெற்ற ஜேக் பாலுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களும் தோல்வி அடைந்த மைக் டைசனுக்கு 20 மில்லியன் டாலர்களும் கிடைக்கும்.

இந்த போட்டி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. போட்டியில் வென்ற ஜேக் பால் டைசனைக் கட்டித் தழுவி உணர்ச்சி வயப்பட்டார்.

அமலா மகனுக்கு கல்யாணம்

பல விவாகரத்து செய்திகளுக்கு இடையே ஒரு திருமண அறிவிப்பு. நாகார்ஜுனா- அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனிக்கு திருமணம். மும்பையைச் சேர்ந்த ஓவியரான ஜைனப் ரவ்ஜீ என்ற பெண்ணை காதலித்து மணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வு நடந்த தகவல்களை படங்களுடன் வெளியிட்டார் நடிகர் நாகார்ஜுனா. திருமண நாள் இன்னும் முடிவாகவில்லை. அடுத்த ஆண்டு இருக்கலாம் என்று பேச்சு. தம்பதியினரிடையே வயது வித்தியாசம் அதிகம் என்று சமூக வலைத் தளங்களில் அலசிக்கொண்டிருக்கிறரகள். அகில், தெலுங்குப் படமான மனம் படத்தில் நடித்து ஹிட் அடித்தவர். பேபிஸ் டே அவுட் படத்தை நாகார்ஜுனா தெலுங்கில் நடித்தபோது அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவரது அண்ணன் நாகசைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ஷோபிதாவை மணக்க இருக்கிறார் என்ற செய்தி தெரிந்ததே.

ஏன் பெண்ணேதான் தரவேண்டுமா?

உடலுறுப்பு தானம் செய்வது என்பது இப்போது அதிகரித்து வ்ருகிறது. மருத்துவத்துறை முன்னேற்றங்கள் இதற்குக் காரணம். இருப்பினும் இந்தியாவில் இப்படி உறுப்பு தானம் செய்கிறவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும் பெறுகிறவர்கள் ஆண்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1995-இல் இருந்து 2021 வரை உறுப்பு தானம்செய்தவர்களில் ஐவரில் நான்கு பேர் பெண்களாக இருப்பதாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை நிறுவனத்தின் கணக்கீடு கூறுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு கிட்னி பாதிக்கப் படுகையில் தாய்மார்களே முன்வந்து தானம் செய்கிறார்கள். பெண்களுக்கு இருக்கும் குற்ற உணர்ச்சி, தியாக உணர்ச்சி ஆகியவை ஒரு காரணமாக இருப்பினும் குடும்பத்தில் ஆண்களே பொருளீட்டுபவர்களாக இருப்பதால் பெண்கள் முன்வந்து தானம் செய்யவேண்டி இருக்கிறது என்பதும் இதில் முக்கிய அம்சம். பொதுவாக ஆண்களுக்கு கிட்னி தேவை என்னும்போதும் குடும்பங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன, பெண்களுக்குத் தேவை என்கிறபோது கவனம் அளிக்கப்படுவதில்லை. இதுதான் தானம் பெறுவோர் எண்ணிக்கை அதிகம் ஆண்களாக இருப்பதன் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. பெண்கள் சுயசார்புடன் வாழ்வது அதிகரிக்கும்போதே இந்தப் பாகுபாடு மறையும்.

2030-இல் முடியுமா?

பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்திய பால் பொருள் ஏற்றுமதியை அதிகரிக்கவும் நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் கால் நடை களுக்கு வரும் கோமாரி நோயை ஒழிக்கவேண்டும். 2030க்குள் இந்தியாவில் இந்த நோயே இல்லாமல் செய்வோம் என்று சொல்லி இருக்கிறார் மத்திய கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங். உலகில் அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். உலக உற்பத்தியில் கால்வாசி இங்குதான். ஆனால் மாடுகளின் உற்பத்தித் திறன் குறைவு. 2019-ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவில் ஒரு மாடு சராசரியாக ஆண்டுக்கு 1777 கிலோ பால் கொடுத்தது. அதே சமயம் இதன் உலக சராசரி 2,699 கிலோ. 2023-24 ஆண்டு கணக்கீட்டுப்படி உள்நாட்டு மாட்டினங்கள் சராசரியாக 4.01 கிலோ பால் கொடுத்தன. அதே சமயம் இங்குள்ள வெளிநாட்டு, கலப்பின பசுக்களின் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 8.12 கிலோ.

கால்நடைகளின் உற்பத்தித் திறனைக் குறைப்பதில் கோமாரி நோய்க்கு பங்கு இருக்கிறது எனவேதான் இந்த வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுகிறோம் என்கிறார் அமைச்சர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இதை ஒழித்து விட முடியுமா?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram