மணிரத்னம் ஆரம்பித்து வைத்தார் ஜூன் மாதத்தை. கமலுடன் அவர் பல வருடங்களுக்குப் பிறகு கைகோக்கும் தக் லைஃப். சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி என்று நட்சத்திரக்கூட்டணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்று எதிர்பார்க்கவைக்கிற கூட்டணி.
பழைய டெல்லியின் முக்கியமான கேங்ஸ்டரான கமல், ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்கும்போது கவசமாக சிம்புவையும் - சிறுவயது சிம்பு - தூக்கிக்கொண்டு வருகிறார். கூடவே வளர்க்கிறார். தம்பிபோல, மகன் போல (படத்தில் இரண்டும் வருகிறது!) வளரும் சிம்புவே, கமலை நெஞ்சிலேயே சுட்டு வீழ்த்துகிறார். வீழும் கமல் மீண்டு வந்து சிம்புவைப் பழி வாங்கத் தேடுகிறார். க்ளைமாக்ஸில்...
சிம்பு சிறப்பான நடிப்பு; கமல் சிறப்பான நடிப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் கதாபாத்திரங்களின் தன்மை.. ம்ஹூம். பக்ஸ், கமலைப் பற்றி புறங்கூறும்போதெல்லாம் திட்டும் ஜோஜூ ஜார்ஜ் ஏன் அணி மாறுகிறார் என்று புரியவில்லை. கமலை அவ்வளவு மதிக்கும் சிம்பு, யாரோ சொன்னதை சரி கூடப் பார்க்காமல் கமலை எதிர்ப்பது ஏன் என்று புரியவில்லை; திரிஷாவை அவ்வளவு காதலிப்பதாகச் சொல்லும் சிம்பு, திரிஷாவை அடிமையாக வைத்திருந்தவரைக் காட்டி மிரட்டியா உடனழைத்துச் செல்வார் என்ற கேள்விக்கு பதில் இல்லை; பாடல்கள் சில ஹிட் என்றாலும் படத்தில் அவை இல்லை.. இப்படி நிறைய போதாமைகளால் படம் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை.
தக் லைஃபுக்கு அடுத்தநாள் ரிலீஸானது மெட்ராஸ் மேட்னி. எழுத்தாளரான சத்யராஜ் சொல்வதைப் போல அமைந்த ஒரு சென்னைக் குடும்பத்தின் கதை.
காளி வெங்கட் ஒரு ஆட்டோ டிரைவர். மகளுக்கு பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி சேரக் காத்திருக்கும் இளைய மகன். மகனைக் கல்லூரி சேர்க்க.. ஏன், மகளைப் பெண் பார்க்க வரும் குடும்பத்தை சந்திக்க பெங்களூர் செல்லக்கூட காசில்லாத எளிய... வறிய சூழல். 'நம்ம அப்பா வேஸ்ட்' என்று மகன் நினைக்கிறான். பெங்களூரில் தன்னைப் பெண் பார்க்க வந்த பையனின் சித்தி சாதி குறித்துப் பேசி அவமானப்படுத்த, காளி வெங்கட்டின் மகளும் அப்பாவிடம் வேதனையாகப் பேசிவிடுகிறார். 'ஆமா புள்ளைங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்ச்சுக் குடுக்க முடியல.. நானென்ன அப்பா?' என்று காளி வெங்கட்டுமே நினைக்கிறார். மகளுக்கு வேலையில் ஒரு நல்ல திருப்பம் நிகழ்கிறது என்பதோடு முடிகிற படம்.
பெரிய ட்விட்ஸ்களும், நிறைய ஸ்டார்களும் ஒரு நல்ல படத்துக்குத் தேவையில்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிற படம். அனைவரின் நடிப்புமே பாராட்டத்தக்கது என்றாலும் காளி வெங்கட்.... ஆஸம்! அதே போல காளிவெங்கட்டின் நண்பனாக வரும், கெய்ல். நல்ல பாத்திரப்படைப்பு. கடைசி காட்சியில் மகளை ஏர்போர்ட்டில் விட அவரும் தன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு வருவார். காளிவெங்கட் 'குடிச்சிருக்கியா?' என்று கேட்க 'புள்ளைய விட வந்திருக்கேன். குடிச்சுட்டு வருவேனா?' என்று யதார்த்தமாக சொல்லுமிடம்.. க்ளாஸ். தேடியதில் இவர்தான் வால்மிகி என்ற தமிழ்ப்படத்தை இயக்கிய இயக்குநர் என்று தெரியவந்தது! காலம்!
நடுவில் படைத்தலைவன். சண்முகபாண்டியன் டிப்பில் இளையராஜா இசையில் வெளிவந்தது. அப்பாவின் கடனை அடைக்க தாங்கள் வளர்க்கும் யானையை வைத்து பணம் சேர்க்க நினைக்கிறார் சண்முகபாண்டியன். இதனால் எழும் சிக்கலில் யானை வனத்துறையிடம் செல்ல, அதை மீட்பதே படம். சுவாரஸ்யமான காட்சிகளோ, கதாபாத்திர வடிவமைப்போ இல்லாமல் திணறுவதால் படம், வந்த வேகத்தில் போனது.
மூன்றாவது வாரத்தில் தனுஷின் குபேராவும் அதர்வாவின் DNAவும் மோதிக்கொண்டன.
பிச்சைக்காரர்களை பினாமிகளாக மாற்றி அவர்கள் மூலம் பல்லாயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கைமாற்ற நினைக்கிறார் கோடீஸ்வர தொழிலதிபர் 'ஜிம் சர்ப்". இந்த ஐடியாவைக் கொடுத்தது முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜூனா. அப்படித் தேர்வு செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் ஒருவர் தனுஷ். பணம் கைமாறியதும் அந்தப் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுவார்கள். தனுஷ் தப்பிக்கிறாரா, சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்பதே கதை.
களம் கொஞ்சம் புதுசு. எளிய மனிதர்களை இந்த அதிராக பண வர்க்கம் என்னென்ன செய்கிறது என்பதைக் காண நமக்கும் பதைபதைப்பாகவே இருக்கிறது. ஆனால் அதைத்தாண்டிதிரைக்கதையிலோ, காட்சி அமைப்பிலோ பெரிதாக நம்மைக் கவரவில்லை. படம் விறுவிறுவெனச் செல்லவேண்டிய இடங்களில் எல்லாம் மெதுவாகவே நகர்கிறது. மூன்று மணிநேரம் என்பது ரொம்பவே அதிகம். அரை மணிநேரம் குறைத்து, காட்சியமைப்பில் கவனம் செலுத்தியிருந்தால் தமிழிலும் நன்றாகப் பேசப்பட்டிருக்கும். (தெலுங்கில் ஹிட் என்று அவர்களே சொன்னார்கள்)
இதனுடன் வெளியான DNA குழந்தைக் கடத்தலைப் பேசியது. அதர்வா - நிமிஷாவுக்குப் பிறந்தகுழந்தையை சில நொடிகள் அணைத்துக்கொள்கிறார் நிமிஷா. பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் குழந்தை கைக்கு வர, அது தன் குழந்தை இல்லை என்று உறுதியாகச் சொல்கிறார். எங்கே குழந்தை மாற்றப்பட்டது; ஏன் மாற்றப்பட்டது என்பதை அதர்வாவும் போலீஸ்காரர் பாலாஜி சக்திவேலும் கண்டுபிடிப்பதுதான் கதை.
நெல்சன் வெங்கடேசன், தன் படங்களில் கதாபாத்திரங்களின் பின்னணியை மிக ஆழமாக நமக்குக் கடத்துவார். இதிலும் அதுபோல, காதல் தோல்வியால் போதைக்கு அடிமையாகி மீண்டு வரும் நாயகன். Borderline Personality Disorder பிரச்னையில் இருக்கும் நிமிஷா. இருவருக்கும் திருமணம் நடக்கும் அந்த மண்டபக் காட்சியின் குழப்பமும் அது தீரும் இடமும் கவிதை.
ஆரம்பத்தில் பார் டான்ஸ், வில்லன் வரும் இடத்தில் ஒரு பார் டான்ஸ், போலீஸின் வேலையை ஹீரோ செய்வது என்று சிலபல சமரங்கள் செய்துகொண்டிருக்கிறார் இயக்குநர். நிமிஷாவின் மனநலப் பிரச்னையை எழுத்தில் கையாண்டவிதத்தில் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறது நெல்சன் - அதிஷா எழுத்துக்கூட்டணி. பின்னணி இசை கவனமீர்க்கிறது. க்ளைமாக்ஸில் அம்மன், தாலி செண்டிமெண்ட் என்று போனாலும் விறுவிறுப்பைக் குறைக்காமல் பார்வையாளர்களிடம் கைதட்டல் வாங்கியிருக்கிறது DNA.