திரைவலம்

ஆச்சரியம் தந்த லோகேஷ்!

காதம்பரி

மாதவன், சத்யராஜ், ப்ரியா மணி, துஷாரா விஜயன், ஜெயராம் முதலானோர் நடிப்பில் வெளியானது ஜி.டி.நாயுடு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே பல சோதனை முயற்சிகளைச் செய்து இயந்திரங்கள் பல கண்டுபிடித்தது, பேருந்துகள் இயக்கி, எலக்ட்ரிக் ரேசரைக் கண்டுபிடித்தது என ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை பல சுவாரஸ்யங்கள் நிறைந்தது. அவற்றை ஒரு திரை மொழிக்கு ஏற்ற வகையில் எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

எழுத்தாளர் முகிலின் வசனத்தில் வெளியான இந்தப் படம் ஜி.டி.நாயுடுவை இந்தத் தலைமுறைக்குக் கொண்டுசென்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மாதவன் அந்தக் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தி நியாயம் சேர்த்திருக்கிறார். அதிதி பாலன், கருணாகரன், தம்பி ராமையா என்று அவரவர் பாத்திரமும் சரியாகக் கையாளப்பட்டிருக்கிறது.

'ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டுமா?' என்ற விவாதத்தை முன்வைத்து ஆரம்பிக்கும் காட்சியில் இருந்தே திரைக்கதை சரியாகக் கையாளப்பட்டுகிறது. ஓடிடி-யில் இன்னும் இந்தப் படம் பேசப்படும்.

இரண்டாவது வாரம், விஷால் இயக்கத்தில் மகுடம் வெளியானது. விஷால், விஷால், (ஆமா, டபுள் ரோல்!) அஞ்சலி, துஷாரா விஜயன் மற்றும் பலர்.

ஒரு படத்தை எப்படியெல்லாம் எடுக்கவே கூடாது என்பதற்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம். திரைக்கதை, காட்சிக் கோணங்கள், காட்சி அமைப்புகள், நகைச்சுவை என்று எதுவுமே கை கொடுக்க வில்லை. இயக்கம் தெரிந்த எத்தனையோ பேர் இருக்க, 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்று அதைக் கையில் எடுத்துக்கொண்டு கூறு போட்டிருக்கிறார் விஷால். இதில் பல காட்சிகளை க்விண்டின் டொராண்டினோ ஸ்டைல் என்று நினைத்துகொண்டு நீ...........ளமாக வேறு எடுத்துத் தொலைத்து சோதித்திருக்கிறார். முடியல!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு நடித்து வெளியானது விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். இரண்டு வருடங்களுக்கு முன் லக்கி பாஸ்கர் என்ற ஹிட்டைக் கொடுத்தவர் வெங்கி அட்லூரி. சமீபத்தில் 'கருப்பு' என்றொரு ஹிட் கொடுத்த நாயகன் சூர்யா. இருவரின் கூட்டணி எனும்போது எதிர்பார்ப்பு இருந்தது.

தெலுங்குப் படங்களுக்கே உண்டான அதீத ஃபேமிலி செண்டிமெண்ட்களோடு அமைக்கப்பட்ட படம். ராதிகா, மமிதா பைஜூ இருவரின் நடிப்பும் நிறைவாக இருந்தது. முதல் பாதி தொய்வில்லாமல் போய், இரண்டாம் பாதி சறுக்கிவிட்டது. தவிரவும் தமிழில் இந்த ஓவர் செண்டிமெண்ட் பெரிதாக எடுபடவும் இல்லை. வன்முறை, ஆபாச வசனங்கள் என்று எதுவுமின்றி நேர்த்தியாக ஒரே நேர்கோட்டில் செல்லும் படமாக ஓரளவு கவர்கிறது விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.

மூன்றாவது வாரம் வெளியான இன்னொரு படம் மொத ராத்திரி. ராஜா கருப்பசாமி இயக்கம். ரிஷி காந்த், அனிஷ்மா, சேத்தன், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஏ வெங்கடேஷ் உள்ளிட்ட பலரோடு இயக்குநர் ராஜா கருப்பசாமியும் நடித்திருக்கிறார்.

படம் முழுவதும் கலாட்டாகவே செல்கிறது. கிராமத்து திருமணத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களையும், கிராமத்தில் ஊறிப்போயிருக்கும் சாதியத்தையும்கூட படம் நெடுகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ரிஷி காந்த், அனிஷ்மா இருவரின் நடிப்பும் கச்சிதம், என்றாலும் அனிஷ்மா ஒரு படி மேலே அருமையாக தன் கதாபாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். ஏற்கெனவே ‘சிறை' படத்திலும் கனமான கதாபாத்திரத்தில் பேசப்பட்டவர் என்பதால் இவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. சேத்தன் கதாபாத்திரமும் நடிப்பும் படத்துக்கு மேலும் ஒரு ப்ளஸ். பகவதி பெருமாள், அப்துல் என்று யாருமே குறைவைக்கவில்லை. நல்லதொரு கலகல படம்!

இம்மாதம் முதல் வாரத்தில் வெளியாகி இம்மாதத்தின் ‘செம' படமாக நிற்கிறது DC. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா, சஞ்சனா உட்பட பலர் நடித்து வெளியானது DC.

சிறு வயதிலேயே குற்றம் செய்துவிட்டு கேங்ஸ்டர் ஆகிப்போன லோகேஷ். பாலியல் தொழிலில் மாட்டிக்கொண்டிருக்கும் வாமிகா கபி. இவர்களைத் துரத்தும் போலீஸாக கிருஷ்ண தயாள். இவர்களுக்குள் நடக்கும் பூனை எலி விளையாட்டுக்கு நடுவே குடும்பம், பகை, வாழ்க்கை என்று பலவற்றை அருண் மாதேஸ்வரன் லேயராகப் பின்னியிருக்கிறார்.

படத்தின் நாயகன் அனிருத். பின்னணி இசையில் மிரட்டி படத்தோடு ஒன்ற வைக்கிறார். காட்சிகளின் கோணங்கள், காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் என்று அருண் மாதேஸ்வரன் தன்னை அழுத்தமான வெளிப்படுத்தியிருக்கிறார். லோகேஷின் நடிப்பு ஆச்சர்யம் என்றால், வாமிகா போகிற போக்கில் தனது கேரக்டரில் அசால்ட் காட்டியிருக்கிறார்.

இதற்குப் பிறகு லோகேஷுக்கு நிறைய கேங்ஸ்டர் பட வாய்ப்புகள் வரலாம். அதை அவர் தவிர்ப்பது இந்தப் படத்தையும் அவரையும் இன்னும் பேசவைக்கும்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram