திரைவலம்

அசத்திய குட்டிக் களவாணி!

காதம்பரி

சக்கடைசி ஆச்சு. ஃபார்ம் முடிக்கணும். அனுப்பறியா இல்லையாம்மா? என்று மாசா மாசம் அந்திமழை ஆசிரியர் மிரட்டுவதால் கடைசி வாரப் படங்களை அடுத்த மாதத்தில்தான் எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் படங்கள் ‘சரி.. விட்ரலாம்' எனும் வகையில் இல்லாமல் அசத்தல் ஆச்சர்யம் தருகிற படங்களாகவே இருப்பது அந்திமழை ராசி போல. ஜனவரி 26 - ல் வெளியான அதே கண்கள் நிச்சயம் பார்க்கணும்பா வகை. #Must Watch புதுமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் இது. இன்ஸ்வெஸ்டிகேடிவ் ஜானர்தான். ஆனால் குறைகள் தேடித்தான் எழுதவேண்டும் என்பதுபோன்ற ஒரு படம். கண் தெரியாத நடிப்பில் டீட்டெய்லிங் அற்புதம்.

ஜனனி கேரக்டர், தனிக்கட்டுரையே எழுதவேண்டிய கதாபாத்திரம். எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் ஷிவதா. எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது பெரும் சவால். திரையில் அவரைப் பிடிக்கக்கூடாது. ஆனால் ரசிகனுக்கு அவரைப் பிடிக்க வேண்டும். இதை அநாயாசமாகக் கையாண்டார் ஷிவதா. காதல் காட்டி ஏமாற்றுவதாகட்டும், நாயகனின் நெஞ்சில் கால் வைத்து உதைப்பதாகட்டும் குட்டிக்களவாணி ஷிவதா.. கலக்கிட்டம்மா! லவ் யூ! இசை: ஜிப்ரான். ‘தந்திரா' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் ரகம். மூன்று பாடல்களையுமே பெண் கவிஞர்களைக் கொண்டு எழுதவைத்ததுக்கும் பாராட்டுகள். ஃபிப்ரவரி 2 அன்றே ரிலீஸானது போகன் & எனக்கு வாய்த்த அடிமைகள். போகன் கூடு விட்டுக் கூடு பாயும் ஒன்லைன். சிறப்பாகவே படமாக்கியிருந்தார் லக்ஷ்மண். ஒரு எண்டர்டெய்னராக நல்ல படமாகவே இருந்தது. லாஜிக்கெல்லாம்கூட ஓகே.. இயக்குநர் வேறுபடச் சாயல்கள் இல்லாமல் காட்சிகள் அமைக்க முயன்றிருக்கலாம். அரவிந்த்சாமி, ஜெயம் ரவி என்று இரட்டைக்குழல் துப்பாக்கி. இருவருக்குமே சவாலான வேடம்.

‘கேரக்டர் ஸ்டடி' என்றொரு விஷயம் இருக்கிறது அல்லவா? இந்தப் படத்தில் இவர்கள் இருவருமே, இரண்டு கேரக்டரையுமே ஸ்டடி பண்ண வேண்டி இருந்திருக்கும். அதைச் சிறப்பாகவும் செய்திருந்தார்கள். செந்தூரா பாடல், ஒரு வாரம் தொடர்ந்து காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. இமான், ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு விதத்தில் அசத்தி விடுகிறார். பின்னணி இசை மட்டும்.. ம்ஹும் ரகம். எ.வா.அ. இளசுகள் மட்டும் கொஞ்சம் போலக் கொண்டாடிய இரட்டை அர்த்தப் படமாகவே அமைந்தது. அடுத்தவாரம் வந்தது சி3. அப்படித்தான் டைட்டிலே போடுகிறார்கள். சிங்கம் களமிறங்கிடுச்சேய் என்று கொண்டாடப் போனால், அதே ஸ்டீரியோ டைப் கதை. ஒரு மாற்றமும் இல்லை. ஆனாலும் என்ன வெற்றி என்றால், உட்காருகிற இரண்டரை மணிநேரத்தில் ஒரு செகண்ட்கூட நீங்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் பரபரவென்றிருக்கிறது. வழக்கமாக இடைவேளைக்கு வெளியே செல்கிற ரசிகன்கூட, இந்தப் படத்தின் இடைவேளையின்போது விறுவிறுவென்று போய்விட்டு அதே வேகத்தில் வந்து உட்கார்ந்து விடுகிறான். தமிழ்நாட்டு சூப்பர் போலீஸான துரைசிங்கம், விசாகபட்டினத்துக்கு சிறப்பு அழைப்பில் சென்று, கமிஷனர் கொலையைத் துப்புத்துலக்கி, அங்கேயே துணை கமிஷனராகி, அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்று, அங்கிருந்து திரும்ப விசாகபட்டினம் வந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த வில்லனை அரெஸ்ட் செய்யும் அதிசாகசக் கதைதான் சி3. சி4ம் இருக்கு என்று முடிக்கிறார்கள். ‘நான் இந்தியன்டா' என்று சூர்யா முழங்கும்போது நமக்குள்ளும் தேசப்பற்று கிளர்ந்தெழுகிறது. ஆனால் ‘ஏன் துரைசிங்கம் மும்பைக்கெல்லாம் டெபுடேஷன்ல போகலை?' என்று யோசித்து டோலிவுட் மார்க்கெட்ல சூர்யாவுக்கு ஏறுமுகம் என்பதால்தான் என்ற காரணத்தை உணரும்போது சன்னமாக கைதட்டிவிட்டு அமைதியாகத் தோன்றுகிறது. என்னோடு விளையாடு, பகடி ஆட்டம், ரம், காதல் கண்கட்டுதே என்று அடுத்த வாரம் ரிலீஸான படங்களெல்லாமே, ‘ரிலீஸாகிடுச்சுப்பா... வாழ்த்துகள்' என்று சொல்லி முடித்துவிடுகிற ரகங்கள். விமர்சனமெல்லாம் பண்ணி அவர்களின் குறையைச் சொல்லி சங்கடப்படுத்தக்கூடாது. அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் கவனம் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோமாக.

மார்ச், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram