ஜெயிலருக்குப் பிறகு, அதீத எதிர்பார்ப்புடன் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன், அமீர்கான் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி, அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது.
Spoilers alert. படத்தின் ஒன் லைன் இதுதான், சென்னையில் மேன்ஷன் நடத்திக்கொண்டிருக்கும் ரஜினி, தன்னுடைய நண்பன் சத்யராஜ் இறந்த செய்தி கேட்டு, விசாகப்பட்டினம் வருகிறார். அங்கே அவருக்கு சத்யராஜ் மரணத்தில் சந்தேகம் வருகிறது, என்னவென்று விசாரிக்கத் தொடங்குகிறார். அப்போது விசாகப்பட்டினம் துறைமுகத்தில் மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் ஒன்று இயங்குகிறது, அதற்கு தளபதியாக சௌபின் சாஹிர் இருக்கிறார், அதற்கு தலைவன் நாகார்ஜூனா என்று கண்டுபிடிக்கிறார். அவர்கள் வெளியில் வாட்ச் கடத்தும் கும்பல் போல காட்டிக்கொண்டு, உள்ளே பெரிதாக ஏதோ செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறார். அதன்பிறகு சத்யராஜுக்கு கடத்தல் கும்பலுக்கும் என்ன சம்மந்தம்? உண்மையில் யார் சத்யராஜை கொலை செய்தார்கள்? அதற்கான காரணம் என்ன? உண்மையான வில்லன் யார்? ரஜினிக்கும் சத்யராஜுக்கும் என்ன உறவு? ரஜினி 30 வருடங்களுக்கு முன் என்ன சம்பவம் செய்தார்? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கும் படம்தான் கூலி.
ரஜினி படம் முழுக்க இளமையாக, அருமையாக நடித்துள்ளார், அவருடைய ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு கொண்டாட்டம்தான். குறிப்பாக De Aging செய்யப்பட்ட சில காட்சில் மிக அருமையாக, சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
நாகார்ஜுனா இளமையான, துள்ளலான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார், ஆனாலும் பெரிதாக வேலையில்லை. சௌபின் சாஹிர் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரது கேரக்டர் மிகவும் சிக்கலான அதே சமயம் பல திருப்பங்களுடன் உள்ளது.
ஸ்ருதிஹாசன் அவரது இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு காட்சியில் அருமையாக நடித்துள்ளார், சத்யராஜுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை.
அமீர்கான், உபேந்திரா இருவரும் கேமியோவாக 5 நிமிடங்கள் வருகிறார்கள், அவ்வளவே.
அனிருத் பின்னணி இசை சில இடங்களில் சிறப்பாகவும், சில இடங்களில் இரைச்சலாகவும் இருக்கிறது.
லோகேஷ் முதல் பாதி படத்தில் சொல்லவந்த கதையை முடிந்த அளவுக்கு நேர்த்தியுடனும் சஸ்பென்ஸுடனும் கொண்டுசெல்கிறார், ஆனால் இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விடுகிறாரே.
ஜெயிலர் போல வந்திருக்க வேண்டிய படம், ஒரு சுமாரான ஒரு திரைப்படமாகவே வந்திருக்கிறது. ஆனாலும் மோசமில்லை, தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp