பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை. ஆனால் வித் லவ், மை லார்ட் இரண்டு படங்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தின.
டூரிஸ்ட் பேமலி படத்தின் உதவி இயக்குநராக இருந்த மதன் இயக்கத்தில், அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிக்க வெளியானது வித் லவ்.
ஒரு காபி ஷாப்பில் நடக்கிறது நாயகனின் பெண் பார்க்கும் படலம். அசுவாரஸ்யமாக அவன் செல்ல, வந்த பெண் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர். பேச்சுவாக்கில் இருவரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் என்பது தெரிகிறது. இருவருக்கும் பள்ளிக்காலத்தில் ஒரு காதல் இருந்திருக்கிறது. ஆனால் இருவருமே தத்தம் காதலை வெளிப்படுத்தாமலே இருந்திருக்கிறார்கள்.
ஆகவே, "நீ என் லவ்வரத் தேடு, நான் உன் லவ்வரத் தேடறேன். உன் ஆளுகிட்ட நீ லவ் சொல்லு, என் ஆளுகிட்ட நான் லவ்வ சொல்றேன். இப்டி லவ் பண்ணினோம்னாச்சும் தெரிஞ்சுக்கட்டும், அவங்க அப்பதான் அதுக்கு ஒரு closure கிடைக்கும்" என்கிறார் நாயகி. தேடி, என்னவானது என்பதே கதை.
சுவாரஸ்யமான ஒன்லைன். அதை சோர்வில்லாமல் கொண்டு செல்லும் திரைக்கதை. நடிகர்களிம் நிறைவான நடிப்பு என்று ஃபில் குட் படமாக வந்திருந்தது. நாயக பிம்பத்தை பாஸிடிவாக, உயர்வாகவே காட்டும் வழமையிலிருந்து மாறி ஆவரேஜ் நாயகன், வலிமையான/திறமையான நாயகி என்று எழுதியிருந்ததும் சிறப்பு.
மை லார்ட் என்ற படைப்புடன் களமிறங்கியிருந்தார் ராஜூ முருகன். தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிகிறார்கள் சசிகுமாரும் சைத்ராவும். மருத்துவச் செலவுக்காக கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங்குகிறார் சசிகுமார். அதனால் ஏற்படும் சூழலால் அடையாளமற்றுப் போகிறார்கள் இருவரும். அரசு ஆவணங்கள் உட்பட எதிலும் இவர்கள் பெயரே இல்லாமல் மறைக்கப்படுகிறது. இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார்கள்.
இன்னொரு புறம் பணக்காரப் பெண்மணியான ஆஷா சரத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயம். சட்டவிரோதமான தேடலில் சசிகுமாரின் கிட்னி அவருக்குப் பொருந்திப்போவதை அறிகிறார்கள்.
சட்டப்படி இறந்தேவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவனை அதிகாரம் எப்படியெல்லாம் பயன்படுத்தும் என்பதை துணிச்சலோடும் நேர்மையான முறையிலும் திரைமொழியாகத் தந்திருக்கிறார் ராஜு முருகன்.
ராஜு முருகனின் பலம் அவரது வசனங்கள். இந்தப் படத்திலும் பல வசனங்கள் சிறப்பாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தன. கொஞ்சம் நாடகத்தன்மை இருப்பது காட்சி சொல்ல வரும் தாக்கத்தை முழுமையாக நமக்குள் கடத்தத் தவறுகிறது என்பது மட்டுமே குறை.
பாலு மகேந்திரா பட்டறையிலிருந்து வந்த அஜயன் பாலாவின் முதல் இயக்கத்தில் மைலாஞ்சி இந்த மாதம் வெளியானது.
ஊட்டியில் வசிக்கும் நாயகி, கிருஷா குரூப். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் விருப்பமில்லாமல் வீட்டின் அருகில் ஒருவரைக் காதலிக்கத்தொடங்குகிறார். காதலித்து அவரோடு வெளியூர் போய் செட்டிலாவது அவரது திட்டம். ஆனால் அதற்குள் அந்த நபர் சென்னைக்குப் போய்விடுகிறார்.
இப்போது ஊட்டிக்கு வரும் கானுயிர் புகைப்படக்கலைஞனான ஶ்ரீராம் கார்த்திக்குக்கு கிருஷாவுடன் பழக்கமாகி காதலாக மாறுகிறது. கிருஷாவிடம் இவர் காதலைச் சொல்லும் முன், கிருஷா அந்த முந்தைய காதலைச் சொல்லி, அதற்கு உதவுமாறு கேட்கிறார். என்ன ஆகிறது என்பதே கதை.
முக்கோணக் காதல் கதைதான். ஆனால் கொஞ்சம் புதிய களத்தில் சொல்லியிருக்கிறார் அஜயன் பாலா. பல காட்சிகளில் பழைய படங்களின் பாணி தெரிவது மைனஸ். முதல் படமாக, நல்ல முயற்சி!
ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் படம் 'பூக்கி'. அஜய் திஷான், தனுஷா நடிப்பில் வெளியான இப்படம் இக்கால இளைஞர்களின் ப்ரேக்கப் கதையைப் பேசியது.
முன்கோபக்காரனான அஜய், தன் தந்தையை அடித்துவிட ப்ரேக்கப் செய்து கொள்கிறார் தனுஷா. அந்த ப்ரேக்கப்பிலிருந்து அவர்கள் விடுபட என்னென்ன செய்கிறார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.
கேமரா மேனாக பேசப்பட்ட கணேஷ் சந்திரா, இயக்கத்திலும் குறை வைக்கவில்லை. புதிய பரிதியின் எழுத்து படத்துக்கு பெரும் பலம். பல காட்சிகள் சிரிப்பை அள்ளி வழங்குகிறது. இன்னும் கொஞ்சம் ஓடவும் பேசபப்டவும் தகுதியுள்ள ஒரு படம்!