ஜூலை முதல் வாரத்தில் வந்தது கட்டா குஸ்தி 2. முதல்பாகம் பேசப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
முதல் பாகத்தின் முடிவில் சொல்லப்பட்டபடி, ஐஸ்வர்யா லட்சுமியின் மல்யுத்தக் கனவுக்கு துணை நிற்கிறார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா லட்சுமி ரயில்வே பணி + மல்யுத்த விளையாட்டு எனப் பயணிக்க, குழந்தையைப் பார்த்துக்கொண்டு, வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். ஆனால் கோச் மூலம் ஐஸ்வர்யாவுக்கு சிக்கல்கள் வருகின்றன. வீட்டிலும் விஷ்ணு விஷாலுடன் கருத்து வேறுபாடுகள். எல்லாம் களைந்து சுபமாக எப்படி முடிகிறது என்பதே கதை.
மனைவியின் கனவுக்குத் துணை நிற்கும் கணவன் என்ற முற்போக்கு முகமூடி இருந்தாலும் ஸ்லீவ்லெஸ் டீச்சர், மலின நகைச்சுவையான 'மனைவி ஜோக்குகள்' என்று கொண்டையை மறைக்க மறந்து விட்ட நிகழ்வுகள் இப்படம் முழுவதும் விரவியிருக்கின்றன. கமர்ஷியலாக ஓகே. கருத்தியலாக.. ம்ஹூம்.
பத்தாம் தேதி, இதயம் முரளி வெளியானது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், காயாடு லோஹர், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், ரக்ஷன், தமன், நட்டி நடராஜ் என்று பலர் நடித்து வெளியானது.
அமெரிக்காவிலிருக்கும் அதர்வா, திருமணத்துக்கு முந்தைய நாள் சென்னைக்குப் பயணிக்கிறார். அவரது சொல்லாத காதல்களை உடன் பயணிக்கும் பஹத் ஃபாசிலிடம் சொல்லிக்கொண்டே வருகிறார். எதற்காக சென்னைப் பயணம், காதலை ஏன் அவர் சொல்லவில்லை என்பதையெல்லாம் விவரிக்கிறது படம்.
அதர்வாவுக்குப் பொருத்தமான வேடம். நிறைவான நடிப்பு. இயல்பான போக்கிலேயே போகும் படத்தில் நட்டி நடராஜின் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யம். பெரிதாக ட்விஸ்ட்கள் ஏதுமில்லை என்றாலும் வழக்கமாக விமர்சகர்கள் சொல்லும் 'ஒரு டைம் பார்க்கலாம்' டைப் படம்!
பதினேழாம் தேதி அன்பே டயானா வெளியானது. ஜமா' வில் கவனமீர்த்த பாரி இளவழகனின் இயக்கம் + நடிப்பில், ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி, சேத்தன், ரோஜா என்று பலர் நடித்திருந்தார்கள்.
ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ரம்யாவுடனான காதல் ஒரு பக்கம். கலாசாரப் பழமை பேசும் அம்மா ரோஜா மறுபக்கம் என்று தவிக்கும் நாயகன் பாரி, இந்தச் சிக்கல்களை மீறி நாயகியைக் கரம் பிடிக்கும் கதைதான் அன்பே டயானா.
சேத்தன் தன் சீனியாரிட்டியை நடிப்பின் மூலம் காட்டியிருக்கிரார் என்றால் ரோஜாவும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார். பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழில் கலக்கியிருக்கிறார். வெடித்துச் சிரிக்கும்படியோ, சட்டென்று கரைந்து அழும்படியோவான இன்னும் ஒன்றிரண்டு உணர்ச்சிமயமான காட்சிகள் படத்தில் இருந்திருந்தால், படம் மேலும் பேசப்பட்டிருந்திருக்கும்!
அதனோடே வெளியாக சிறு கவனத்தைப் பெற்றது அருள்வான் படம். மலைவாழ் மக்களான ஆரவ் - ரம்யா பாண்டியனின் மகளான கிருத்திகாவுக்கு படிக்க ஆசை. வனத்துறை அதிகாரியான ஜான் விஜய் இவர்கள் இடத்தை அபகரிக்க நினைக்கிறார். கலெக்டராக வரும் அருள்நிதி இவர்களுக்கு உதவினாரா, கிருத்திகா கல்வி பயின்றாரா என்பதே கதை.
ஆரவ்வுக்குச் சொல்லிக்கொள்ளும் படியான படம். அத்தனை நேர்த்தி படம். மகள் குறிஞ்சியாக நடித்த கிருத்திகாவுக்கும்தான். அருள்நிதி, கொஞ்சம் பெரிய - கெஸ்ட் ரோல் என்று சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் யூகிக்க முடிகிற காட்சிகள், வழக்கமான டெம்ப்ளேட் என்பதால் படம் சுமார் என்ற கட்டத்துக்குள் சுருங்கி விடுகிறது.
23ஆம்தேதி வெளியானது ஜனநாயகன். கதாபாத்திரமான கௌதம் வாசுதேவ் மகள் மமிதா பைஜு பயந்த சுபாவக்காரராக இருக்கிறார். அவரது பயத்துக்குக் காரணமான வில்லன் நாட்டுக்கே ஆபத்தானவனாக இருக்கிறான். அவனை அழிப்பதன் மூலம் மமிதாவின் பயத்தைப் போக்குவதோடு, நாட்டையும் காப்பாற்றலாம். அதைச் செய்கிறார் விஜய்.
பகவந்த் கேசரிதான். விஜய்க்கான கேசரியில் உப்பு, புளி எல்லாம் சேர்த்திருந்தார்கள். கேசரியில் அவற்றைச் சேர்த்தால் என்ன ஆகுமோ அப்படித்தான் இருந்தது. போதாக்குறைக்கு கடைசிப் படம் என்பதால், அரசியலுக்குப் பயன்படும் பல திட்டமிட்ட காட்சிகள் சலிப்பாக உணரவைத்தன.
இனி திரையில் நடிக்க மாட்டார் என்று கலவையாக விஷுவல்ஸ் காண்பித்து படத்தை முடித்திருக்கிறார்கள்.
ரைட்!