ஏப்ரல் மாதக் கடைசியில் வெளியான 'கர' படம் பற்றிப் பார்த்துவிட்டு, மே வெளியீடுகளுக்குப் போவோம்.
'போர் தொழில்' மூலம் பெரும் கவனமீர்த்த விக்னேஷ் ராஜா இயக்கம். போர் தொழில் போலவே இதிலும், தன் நண்பர் ஆல்ஃப்ரட் பிரகாஷை தன் எழுத்துக்கு கூட்டு சேர்த்திருந்தார்.
திருட்டுத் தொழிலை விட்டு திருந்த நினைக்கும் கரசாமி, (தனுஷ்) சொந்த ஊரில் இருக்கும் நிலத்தைத் தேடிப் போகும்போது நடக்கும் திருப்பங்களும் சூழல் மீண்டும் தன்னை திருடனாகவே மாற்ற, அதன்பின் என்ன செய்தார் என்பதையும் விவரிக்கும் படமே 'கர.'
படத்தின் ஆரம்பம் ரசிகர்களை அப்படிக் கட்டிப்போட வைக்கிறது. போலவே இடைவேளைக் காட்சியும். படத்தின் பெரும் பலம் தனுஷ் நடிப்பும், மற்ற கதாபாத்திரத் தேர்வும்தான். சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெயராம், கே.எஸ்.ரவிகுமார் என்று நல்ல கதாபாத்திரத் தேர்வுகள். ஆனால் மேலே குறிப்பிட்ட காட்சிகளைத் தவிர பிற பெரிதாக ஒட்டவில்லை. இடைவேளைக்குப் பிறகு மேலும் தொய்வடையச் செய்கிற திரைக்கதை படத்தை 'ஹிட்' வகைமையிலிருந்து 'சுமார்' வகைக்குத் தள்ளுகிறது.பெரும்பாலான இளைஞர்கள் அடையாளச் சிக்கலை யோசிக்கும் வயதான 29 வயதில் நாயகனுக்கு நடக்கும் விஷயங்களைப் பேசுகிறது ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான '29.' சென்னைக்கு வரும் விது, உடன் பணிபுரியும் ப்ரீத்தியைக் காதலிக்கிறார். அதுவரை ஏதுமற்றவனாகத் தன்னை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் விதுவுக்கு அந்தக் காதல் புதிய திறப்பைத் தருகிறது. ஆனால், ஐஏஎஸ் கனவில் இருக்கும் ப்ரீத்தி ஒரு கட்டத்தில் காதலை உதறுகிறார். அதன்பின் பெரும் சிக்கலுக்குள் உழலும் விது, சமூகப் போராளியாக பொது விஷயங்களுக்காகக் களமாடுகிறார். அவரது காதல் ஜெயித்ததா, ப்ரீத்தியின் ஐஏஎஸ் கனவு என்னவானது என்பதைப் பேசுகிறது படம். மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமாரின் படம் என்பதாலும் அவரது எழுத்துக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உள்ளது என்பதாலும் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மேயாத மானில் அழகாக, நேர்கோட்டில் கையாண்டது போல இல்லாமல் இதில் எங்கெங்கோ அலையும் திரைக்கதையால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. விது, ப்ரீத்தி இருவரின் நடிப்பு படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.
ஜார்ஜ் குட்டி (மோகன்லால்)யின் சிக்கலைப் பேசும் திருஷ்யம் 3-ம் பாகமும் மே மாதம் வெளியானது. தன் மகளைத் தவறான நோக்கோடு அணுகியவன் கொலையாகிவிட, தன் குடும்பத்துக்காக அதை மறைத்து அதிர்ச்சியான க்ளைமாக்ஸோடு முடியும் முதல் பாகம். இரண்டாம் பாகமும் மோகன்லாலின் குற்ற உணர்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.இந்தப் பாகத்தில் ஒரு தயாரிப்பாளராக மாறிய ஜார்ஜ் குட்டி, ஊடக வெளிச்சத்துக்கு உள்ளாகிறார். அதனாலேயே அந்தக் கொலை பற்றிய கேள்விகளும் தொடர்கிறது. மறுபுறம் காவலர் சகாதேவனும் இவரைப் பின் தொடர்கிறார். இதனாலேயே மகளின் திருமணத்தில் தடைகள் விழ, அதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறார்; இவரை அம்பலப்படுத்த நினைப்பவர்களை எப்படிச் சமாளிக்கிறார் என்பதை மூன்றாம் பாகம் பேசுகிறது."போதும்யா ஜார்ஜ்குட்டி" என்று கெஞ்சாத குறையாகத்தான் படம் முடிகிறது. இதில் நான்காம் பாகத்துக்கு வேறு லீடு கொடுத்திருக்கிறார்கள்.. வேணாம் சாமி!
சூர்யா, இந்திரன்ஸ், திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, ஸ்வாசிகா, ஷிவதா நடிப்பில் ஆர்.ஜேபாலாஜி இயக்கத்தில் கருப்பு வெளியானது. சாய் அப்யங்கர் இசையமைத்த முதல் படம்.வக்கீல் பேபி கண்ணன் (ஆர்.ஜே.பாலாஜி) தான் ஏழுகிணறு நீதிமன்றத்தையே கட்டி ஆள்கிறார். திருட்டுப்போய் மீட்கப்பட்ட நகையை, நீதிமன்றத்திலிருந்து பெற நடையாய் நடக்கிறார் இந்திரன்ஸ். ஆனால் ஆர்.ஜே.பாலாஜியின் வில்லத்தனத்தால் அது நடக்காமல் போகவே, வெறுத்துப்போய் கருப்புசாமியை நாடுகிறார் இந்திரன்ஸ். கருப்புசாமி, சூர்யா வடிவில் சாதாரண மனிதனாக வந்து நீதிமன்ற நடவடிக்கைகளை மாற்ற முயல்கிறார். நடக்கிறதா இல்லையா என்பதே கதை. வேறு படங்களே இல்லாத நிலையில் மக்கள் கொண்டாட்டத்தில் நிறைகிறது தியேட்டர். போதாக்குறைக்கு சாய் அப்யங்கர், கொஞ்சநேரம் கூட அமைதியாய் இருக்கமாட்டேனே என்று அலற விடுகிறார். வைபுக்கு ஏங்கும் மக்களுக்கு ஜாக்பாட்டாய் அமைந்துவிட்டது.ஆனால் படத்தில் லாஜிக்கலாக ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் நீதித்துறையையும் சந்தேகத்துக்குள்ளாக்குகிற திரைக்கதை. இந்திரன்ஸ் நடிப்பு மட்டும் பெரிய ஆறுதல்.சண்டைக்காட்சிகள், துள்ளலான இசை, "யாராச்சும் நம்மைக் காப்பாத்த வரமாட்டாங்களா" டைப் மக்களின் ஏக்கம் போக்கும் சில காட்சிகள் என்று படம் பாஸாகி விட்டது.