ஆரோமலே. காதலித்தே ஆகவேண்டுமென்ற லட்சியத்துடன் இருக்கும் கிஷன் தாஸ். பள்ளி கல்லூரி இரண்டு கட்டங்களிலும் காதல் சொதப்ப, ஒரு மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கே ஸ்டிரிக்ட் மேலதிகாரியாக ஷிவாத்மிகா ராஜசேகர். கடமையும் காதலும் மோதிக்கொள்ளும்போது என்ன ஆகிறது என்பதே கதை.
மூன்று பருவங்களிலுமான உடல்மொழி மாற்றத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் கிஷன் தாஸ். ஷிவாத்மிகா, நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டி ஸ்கோர் செய்கிறார். ஹர்ஷன் கான், நகைச்சுவை உடல்மொழியும் ஒன்லைனர்களும் என, ஒரு ரவுண்டு வருவதற்கான அறிகுறி பலமாகத் தெரிகிறது. விடிவி கணேஷ், துளசி, சந்தானபாரதி என்று பிற கதாபாத்திரங்களும் நிறைவு.
யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ், அழுத்தமில்லாத இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் என்று சில குறைகள் இருந்தாலும் அறிமுக இயக்குநர் சாரங் தியாகி, ஆரோமலே-வில் பாஸாகியிருக்கிறார்.
இரண்டாம் வாரத்தில் வெளியானது காந்தா. துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்ய போஸ், ராணா டகுபதி ஆகியோர் நடித்திருக்க செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். ஐம்பதுகளில் நடக்கிற கதை. இயக்குநர் ‘அய்யா' என்றழைக்கப்படும் டிபிகே-வுக்கும் நாயகன் டி.கே.மகாதேவனுக்குமான பனிப்போர்தான் கதை. சாந்தா என்ற அவரது கனவுப்படத்தை எடுக்க நினைக்கிற இயக்குநருக்கு நாயகன் டி.கே.மகாதேவன் மூலம் சிலபல சிக்கல்கள் வருகின்றன. க்ளைமேக்ஸையே மாற்ற வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறார் டி.கே.மகாதேவன். தன்னால் வளர்ந்த நடிகனை நம்பி தானில்லை என்ற ஈகோவில் இயக்குநரும் மல்லுக்கட்டுகிறார். அதற்கான பின்னணி என்ன, க்ளைமாக்ஸ் என்ன ஆனது என்பதே கதை.
அருமையான கதை. படமாக்கப்பட்ட விதமும் வெரிகுட் சொல்ல வைக்கிறது. கலை இயக்குநர் டி.ராமலிங்கத்தின் உழைப்பு படம் நெடுகத் தெரிகிறது. இடைவேளைக்குப் பின் கதை மர்டர் மிஸ்டிரி என்ற பாதையில் பயணிக்கிறபோது சற்றே தொய்வு. செல்வராஜ் செல்வமணி, தமிழ்பிரபா இணையின் வசனங்களுக்கு திரையரங்கில் கைதட்டல்கள். இருவருக்குமான ஈகோ என்ற கோட்டில் மட்டும் பயணித்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கிறது படத்தின் நீளம்.
பலத்த ப்ரமோஷன்களுக்கு மத்தியில் வெளியானது ‘மாஸ்க்'. கவின், ஆண்ட்ரியா, பவன் நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார். எம்.ஆர்.ராதாவின் முகமூடி அணிந்து 466 கோடி ரூபாயை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கொள்ளையடிக்கிறது ஒரு கூட்டம். என்.ஜி.ஓ வைத்திருக்கும் ஆண்ட்ரியா, டிடக்டிவ் கவின், அரசியல்வாதி பவன் இவர்கள் மூவருக்கும் இந்தக் கொள்ளைக்கும் என்ன சம்பந்தம் நிஜ கொள்ளையர்கள் யார் என்று சொல்கிறது படம்.
நக்கலும் கெத்தும் கலந்த உடல்மொழியில் கவின் கவனிக்க வைக்கிறார். அர்ச்சனா சீனியாரிட்டியை நிரூபித்திருக்கிறார். ருஹானி ஷர்மாவும் சார்லியும் படத்துக்கு பலம், இவர்கள் போக, ரமேஷ் திலக், ஜார்ஜ் மரியன், சுப்ரமணியம் சிவா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி என்று எக்கச்சக்க கதாபாத்திரங்கள். படத்தின் ஆரம்பக் காட்சியே ஆறாவது கியரில் பறக்கும் ரேஸ் கார் போல சுண்டி இழுத்துவிட்டதால், அதற்குப் பிறகு அந்த வேகத்தைத் தக்க வைக்கத் திணறுகிறது திரைக்கதை. மூன்று டிராக்குகளில் போகும் கதைக்கு இன்னும் அழுத்தமான திரைக்கதை அமைத்திருந்தால் மாஸ்க் இன்னும் பேசப்பட்டிருந்திருக்கும்.
அதனுடனே வெளிவந்தது கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் மிடில் க்ளாஸ். முனிஷ் காந்த், விஜயலட்சுமி, குரேஷி, கோடங்கி வடிவேலு ஆகியோர் நடிக்க கைநழுவிப் போகிற கனவைத் துரத்துகிற நடுத்தர வர்க்கக் கதையைப் பேசுகிறது படம்.
சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் கரைசேர்க்கப் போராடும் முனிஷ் காந்துக்கு மறைந்த தந்தையால் ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் அடிக்கிறது. ஆனால் அது கைகூடும் வேளையில் கையை விட்டுப் போகவும் செய்கிறது. அது கைகூடியதா, கனவு நிறைவேறியதா என்பதைச் சொல்கிறது மிடில் க்ளாஸ்.
முனிஷ் காந்த், விஜயலட்சுமி இருவருமே படத்துக்கு சரியான தேர்வு, சிறப்பாகவே நடித்து பலன் சேர்க்கிறார்கள். கோடங்கி வடிவேலு, குரேஷி இருவரின் காமெடியும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. ஆனால் அழுத்தமான கதைக்களம் இல்லாமல், நகைச்சுவையா எமோஷனா என்று தடுமாறுகிறது திரைக்கதை. இதனாலேயே பார்டர் வரை வந்து சுமார் சொல்ல வைக்கிறது படம்!
மொத்தத்தில் நவம்பர் மாதம் ஒன்றும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. டிசம்பரிலும் ஒன்றிரண்டு வந்தால்தான் கொஞ்சம் பேசும்படியாக இருக்கும்... பார்க்கலாம்!