திரைவலம்

நாட் குட்! நாட் பேட்!

காதம்பரி

ஏப்ரல் மாதத்தை அஜித்துக்கு ஒதுக்கிவிட்டது தமிழ்த் திரையுலகம். ஏப்ரல் 10 அன்று ரிலீஸான குட் பேட் அக்லி-க்காக வேறு பெரிய படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை.

மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் Test என்றொரு படம் முதல் வாரத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. தியேட்டர்கள் இருந்தும் நேரடியாக ஓடிடியிலே வெளியானது, ஆனால் ப்ரமோஷன்கள் தியேட்டரில் வர இருக்கும் படங்களுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது.

தான் கண்டுபிடித்த தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் இயந்திரத்துக்கான அரசு அங்கீகாரம் பெறும் முயற்சியில் மாதவன். அணியில் தன் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர் சித்தார்த். தாய்மைக்கு ஏங்கும் மாதவன் மனைவி நயன்தாரா. இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் மேட்சில் சித்தார்த்தைப் பயன்படுத்த நினைக்கும் மேட்ச் ஃபிக்ஸிங் கும்பல் என்று கலவையான ஆனால் ரசனையான ஒன்லைன். தயாரிப்பாளர் சஷிகாந்த், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பலரும் சீனியர்கள் என்பதால் நடிப்புக்கும் குறைவொன்றுமில்லை. ஆரம்ப காட்சிகளில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யும் படலமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. பாதிக்கு மேல் பரபரப்பைத் தரவேண்டிய காட்சிகள், ரொம்பவுமே சோதிக்கிற பாங்கில் அமைந்துவிட்டன. கிரிக்கெட் போட்டி காட்டப்பட்ட விதம்கூட ஓகேதான் என்றாலும் ஏனோ, பார்வையாளனுக்குக் கடத்த வேண்டிய விதத்தில் எங்கோ மைனஸ்!

10ஆம் தேதி அஜித்குமாரின் குட் பேட் அக்லி. இந்த 'கேங்ஸ்டர் வேலைய எல்லாம் விட்டுட்டு புள்ளைய கொஞ்சு' என்று சொல்லும் திரிஷா. அதைக்கேட்டு திருந்தி சிறை செல்லும் அஜித். வெளியில் வரும்போது மகனுக்கு என்ன ஆகிறது, மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கிறாரா என்று சுவாரஸ்ய ஒன்லைன். அதை முடிந்த அளவு ஹீரோயிஸம் கொட்டக்கொட்ட எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக்.

எல்லாம் ஒரு அளவுக்குத்தான் என்பார்களல்லவா? எனக்கு அதெல்லாம் இல்லை என்று சொல்கிறார் ஆதிக். அந்த அளவுக்கு அஜித் புராணம். படத்தில் பழைய படங்கள் ரெஃப்ரன்ஸ் கன்னாபின்னாவென்று வந்துகொண்டே இருக்கிறது. ஸ்பூஃப் படமா என்று ஒரு கட்டத்தில் தோன்றுகிறது. ஆனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்குமளவு அவர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணியாகவே வந்திருக்கிறது படம். மற்றவர்களுக்கு, மற்றுமொரு படம் அவ்வளவுதான்.

டென் ஹவர்ஸ். சிபிராஜ் நடிக்க, இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் மூன்றாவது வாரத்தில் வெளியானது. மகளைக் காணவில்லை என்று புகார் கொடுக்கும் தாய். விசாரிக்கக் களமிறங்குகிறார் சிபிராஜ். அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் என்று பத்து மணிநேரத்தில் என்னென்ன நடக்கிறது என்று போகும் கதை.

லாஜிக் என்பதை ஒரு பேப்பரில் எழுதி, அதைக் கிழித்துப்போட்டுவிட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. சரி, லாஜிக்கெல்லாம் பார்க்கக்கூடாது என்று நம்மைத் தயார்ப்்படுத்திக்கொண்டாலும் படத்தின் காட்சிகளோ, வசனங்களோ பெரிதாகக் கவரவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ.

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் 'நாங்கள்' என்றொரு படமும் அதே வாரம் வெளிவந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால், படம் பரவாயில்லாமல் இருந்தது.

மனைவியைப் பிரிந்து மூன்று மகன்களோடு வாழும் அப்துல் ரஃபே. தொழில் பாதிப்பதால் மிகவும் வறுமைச்சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள் மூன்று சிறுவர்களுமே. அந்தத் துயரிலும் தந்தையும் கண்டிப்பு வேறு. இதிலிருந்து அச்சிறுவர்கள் எப்படி மீண்டனர் என்பதுதான் படம்.

மூன்று சிறுவர்களிடமும் கண்டிப்பு காட்டும் தந்தையாக அப்துல் மிக அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தாயின் பிரிவு, தந்தையின் கண்டிப்பு இவற்றுக்கிடையே உழலும் சிறுவர்களை தங்கள் நடிப்பில் அசலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்த பாத்திரங்களைச் செய்தவர்கள்.

இடைவேளைக்குப் பிறகான காட்சிகளின் நீளமும், முந்தைய விஷயங்களே மீண்டும் காட்டப்பட்டிருப்பது ஆகியவை கொஞ்சம் சோர்வடையச் செய்கின்றன. முடிவைச் சொன்ன விதத்திலும் கொஞ்சம் குழப்பம் தருகிற வகையில் ஆழம் குறைவாக இருந்தது. கொஞ்சம் திரைக்கதையை செதுக்கியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் படமாக அமைந்திருக்கும்.

கடைசி வாரத்தில் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ். பள்ளி மாணவி காணாமல் போகிறார். ஆசிரியை கேத்தரின் தெரசா முதலமைச்சரின் தனிப்பிரிவில், அது குறித்தும் அவ்வூரில் இருக்கும் சமூக விரோதச் செயல்கள் செய்யும் மைம் கோபி, அருள்தாஸ் குறித்தும் புகாரளிக்க, அண்டர்கவர் போலீஸை பள்ளியில் பணியமர்த்துகிறது காவல்துறை. பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் சுந்தர்.சி, தன்னுடன் சுஜிதா, வடிவேலு, பகவதி பெருமாள் ஆகியோரைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு அவரும் இவர்களுக்கு எதிராகக் களமிறங்குகிறார். அண்டர்கவர் போலீஸ் யார், இவர்கள் வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார்கள் என்று ஒரு புத்தம்புதிய கதையுடன் வந்திருக்கிறார் சுந்தர்.சி.

முதல்பாதி பயங்கர இழுவை. இரண்டாம் பாதியில் வடிவேலு -சுந்தர்.சி கூட்டணியின் அதகளக் காமெடிகள் படத்தைத் தாங்குகின்றன. முனீஸ் காந்த், பக்ஸ், காளையன் ஆகியோரும் காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார்கள். ஒரு மாதிரி ஏனாதானோவென்று படம் போகும்போது சுந்தர்.சியின் பட ரெஃபரென்ஸுகள், வடிவேலுவின் முந்தைய கெட் அப் ரெஃபரென்ஸுகள் என்று வர ஆரம்பித்ததும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூடுகிறது.

ஆனாலும் இரட்டை அர்த்த வசனங்கள், உருவகேலி, சிறார்களைக் குற்றவாளியாகக் காட்டும்போது பொறுப்பின்மையாக அதைக் கையாள்வது, மலின ஜோக்குகள் என்று ஏகத்துக்கும் மைனஸ் பாய்ண்ட்டுகள்.

லாஜிக்கும் வேண்டாம், இந்த மாதிரி பொலிடிகல் கரெக்ட்னஸும் வேண்டாம் என்று தன்பாட்டுக்கு ஒரு ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறார் சுந்தர்.சி!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram