இது தளபதி பொங்கல் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அது என்னமோ, ரசிகர்களின் ஆசைக்கு தணிக்கை வாரியம் பொங்கல் வைத்துவிட்டது.
ஆம், ஜனவரி 9ஆம்தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் ஜனநாயகன், இதோ இந்த நிமிடம் வரை வெளியாகவில்லை. இனிமேல் பிப்ரவரியா அல்லது தேர்தலுக்கு அப்புறம்தானா என்பதும் தெரியவில்லை.
சென்சார் சர்ட்டிபிகேட் கிடைக்காததே காரணம். அது தள்ளிப்போய், படத் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்குப் போக, தணிக்கை அமைப்பு, ‘நாங்கன்னா சும்மாவா?" என்று கோர்ட்ல பாத்துக்கலாம் என்று இழுக்க... ஜனநாயகன் வரவே இல்லை.
இதற்குப் பின்னால் உள்ள அரசியல், இன்னும் பல ஆண்டுகள் கடந்து ரோஷோமான் எஃபெக்டில் பலர் எழுத அல்லது பேசலாம். இப்போதைக்கு என்ன உண்மை என்பது விஜய்க்கு மட்டும்தான் தெரியும். அவருக்கு அதை அரசியல் கலக்காமல் / சினிமாத்தனமாக இல்லாமல் உள்ளது உள்ளபடி மக்களிடம் சொல்ல வராது என்பதால்.. நமக்குத் தெரியவே போவதில்லை!
ஜனநாயகன் வராததால் ஒற்றைக்கொம்பனாக பராசக்தி களமிறங்கியது.
1959ல் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடுகிற சிவகார்த்திகேயன் தன் தோழனை இழக்கிறார். அமைதியாகிவிட்டு குடும்பத்தை கவனிக்க ரயில்வேயில் பணிபுரிகிறார். 1964இல் மீண்டும் இந்தித்திணிப்பு தலைதூக்க, இம்முறை போராட களமிறங்குவது சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா. "நமக்கெதுக்கு இந்த வேலை?" என்று அறிவுரை சொல்லும் எஸ்கேவும் ஒரு கட்டத்தில் களத்தில் குதிக்க நேர்கிறது. ஏற்கனவே பல்லாண்டுகளாக தன்மீது வெறுப்பில் இருக்கும் மத்திய அரசு அதிகாரியான ரவிமோகனின் எதிர்ப்பு ஒருபுறம், இந்தித்திணிப்பை வலுவாக்க முயலும் அரசாங்கம் ஒருபுறம் இவற்றை சிவகார்த்திகேயன் எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை.
தமிழ்நாட்டில் உண்மையில் நடந்த மொழிப்போர் வரலாற்றை, ஒரு புனைவுலகத்துக்குள் செலுத்தி இந்தக்கால இளைஞர்களுக்கு அதைக் கொண்டு சேர்த்த முயற்சித்திருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான படம்தான் என்பதில் ஐயமில்லை.
சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஶ்ரீலீலா என்று யாருடைய நடிப்பிலும் குறையும் இல்லை. அரசியல் ரீதியாக இன்னும் ஆழமாக பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது குறை. ஆனால் எந்த வகையில் எந்த எதிர்ப்பு வருமோ என்று பலவற்றை மேலோட்டமாகவே டீல் செய்திருக்கிறார்கள். இந்தக் காலத்துக்கு இவ்வளவுதான் முடியும் என்பது போல இருக்கிறது. ஆனாலும் ஒரு கமர்ஷியல் பேக்கேஜில் முக்கியமானவொரு வரலாற்றை போரடிக்காமல் சொன்ன விதத்தில் பராசக்தி.. சபாஷ்! படம் வந்தபின் நிறைய இளைஞர்கள் சமூக ஊடகங்களில் இந்த மொழிப்போர் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததே, பராசக்தி பற்ற வைத்த நெருப்பு என்பதை உணர முடிந்தது.
விஜய் படம் வரவில்லை என்றதும் தலைவர் தம்பி தலைமையில், வா வாத்யார் இரண்டும் ஜனவரி ரிலீஸில் கலந்து கொண்டன.
தலைவர் தம்பி தலைமையில், ஜீவா நடிக்க மலையாள இயக்குநர் நித்திஷ் சகாதேவ் இயக்கியிருந்தார்.
தம்பி ராமையா - இளவரசு இருவரும் நண்பர்களாக இருந்து பகைவர்கள் ஆனவர்கள். இளவரசன் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு கிராமத்து பஞ்சாயத்துத் தலைவரான ஜீவா வந்து திருமண ஏற்பாடுகளை கவனிக்கிறார். அந்த நேரத்தில் தம்பி ராமையாவின் அப்பா காலமாகிறார். பகையை மனதில் வைத்துக்கொண்டு, கல்யாணம் நடக்கும் நேரத்தில் சவ ஊர்வலம் நடத்த திட்டமிடுகிறார் தம்பி ராமையா. இந்தச் சிக்கலை ஜீவா எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை.
தமிழில் ஒரு மலையாளப்படம் என்று சொல்லும்படி, எளிமையான கதை. அசலான கதாபாத்திரங்கள் என்று இயக்குநர் நித்திஷ் கவனிக்க வைக்கிறார். ஜீவாவின் நடிப்பும் அட்டகாசம். பராசக்தி வந்து ஐந்து நாள்களில் இதுவும் வர திடீரென்று தியேட்டர்கள் அதிக காட்சிகள் பெற்று மக்களின் ஆதரவைப் பெற்று ஓடியது படம். விடுமுறை மூடில் இருந்த ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக இப்படம் அமைந்துவிட்டது.
அந்தப்படத்துக்கு ஒருநாள் முன்னர் வந்த 'வா வாத்தியார்', ஏன் வந்தே வாத்யாரே என்று கேட்க வைத்தது.
எம்ஜியார் மறைந்த நாளில் பிறந்த கார்த்திக்கை நேர்மையாக வளர்க்க ஆசைப்படுகிறார் எம்ஜியார் ரசிகர் ராஜ்கிரண். ஆனால் காவல்துறை அதிகாரி ஆனபின் அதற்கு நேர்மாறாக ஊழல்வாதியாக மாறுகிறார். அதன்பின் மீண்டும் ஒரு கட்டத்தில் நேர்மையாக மாறுவதும் வில்லன்களைக் கையாள்வதுமே கதை.
கேட்கவும் சுவாரஸ்யமில்லாத இந்தக் கதையை எப்படி நலன் எழுதினார் என்பதைத்தான் நம்மால் நம்ப முடியவில்லை. படத்தின் திரைக்கதையும் ஏனோதானோவென்று இருந்தது. நல்லவனாக மாறும்வரை ஓரளவு பார்க்க வைத்த படம், அதன்பின் அலைபாய்ந்து நம்மையும் அலைக்கழித்ததே மிச்சம்.