டிராகன் 
திரைவலம்

ப்ரதீப்பின் ஹாட்ரிக்!

காதம்பரி

முதல் வாரமே ஏகே ரசிகர்களுக்கு டிரீட். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் வெளியானது விடாமுயற்சி.

ப்ரேக் டவுன் ஆங்கிலப்படத்தின் கதையை தமிழுக்குக் கடத்தியிருந்தார்கள். அஜர்பைஜானில் வசிக்கிறார்கள் அஜித்தும் திரிஷாவும். 12 வருட திருமண பந்தத்தில் ஒரு விலகல். விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிற திரிஷா, 'டைவர்ஸ் கெடைக்கற வரை நான் அப்பாம்மா வீட்ல இருக்கேன்' என்கிறார். அவரைக் கொண்டுபோய் விட காரில் ஒரு லாங் டிராவல் செல்ல, வழியில் திரிஷா அர்ஜூன் - ரெஜினாவால் கடத்தப்படுகிறார்.

போலீஸுக்குப் போய் சொல்லி, பிறகு தானாகவும் விசாரிக்க இறங்குகிற அஜித், பல்வேறு குழப்பங்களுக்கும் தாக்குதலுக்கு ஆட்பட்டு இறுதியில் மனைவி திரிஷாவை பத்திரமாக மீட்கிறார் என்பதே கதை.

முதல் பாதி க்ளாஸ் + மாஸ். இடைவேளை வரை ஃபார்மூலா ரேஸ் கார் போல விறுவிறுப்பாகச் செல்லும் கதை, ஒரு மாதிரி இந்தக் கடத்தல் நாடகம் நமக்குப் பிடிபட்டதும் எங்கெங்கோ அலைகிறது. அஜித், முழுக்க மழித்த முகத்தோடு வெகு இளமையாகவும் சால்ட் & பெப்பரில் மெச்சூர்டாகவும் வலம் வருகிறார். திரிஷா அதே இளமை. அர்ஜுனும் ரெஜினாவும் தேவையான பங்களிப்பு. ஆரவ்-வுக்கும் நல்லவேடம். பின்பாதிக்கு கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் ஹிட்டடித்திருக்கலாம்.

இரண்டாம் வாரத்தில் 2K லவ் ஸ்டோரியும் காதல் என்பது பொதுவுடமை-யும் வெளியானது.

2k லவ் ஸ்டோரி

2K லவ் ஸ்டோரி சுசீந்திரன் இயக்கம். ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் இருவரும் நண்பர்கள். பிறந்தநாள் தொட்டு நண்பர்கள். நடுவில் ஜெகவீரை ஒரு பெண் காதலிக்கிறாள். அதனால் மீனாட்சிக்கு ‘பொசசிவ்’ உணர்வு வருகிறது. அதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை. ‘அதெப்படி ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக மட்டும் இருக்கமுடியும்?' என்கிற ஒன்லைன், அதெல்லாம் இருக்க முடியும் என்று முடிகிறது. கதாபாத்திர தேர்வு உட்பட பல ப்ளஸ்கள். ஆனாலும் ஏதோ மிஸ்ஸிங் என்கிற ரீதியிலேயே ஒவ்வொரு காட்சியும் இழு..க்..கி..ற..து. முடித்த ஸ்கிரிப்டை யாரிடமாவது கொடுத்து ரீவொர்க் செய்திருக்கலாமே என்று தோன்றுகிற நல்ல ஒன்லைன்!

காதல் என்பது பொதுவுடமை. கொஞ்சம் முற்போக்குத்தனமான பெற்றோர் இருக்கும் வீட்டிலேயே தன்பாலின ஈர்ப்பென்றால் என்னென்ன சிக்கல்களை சந்திக்க நேரும் என்று பேசும் படம். நேரடியாக கதைக்குள் சென்று முதல்பாதியை நமக்குப் புரியவைத்து, இரண்டாம் பாதியில் பால்புதுமையினர் சந்திக்கும் சிக்கல்களை அலசுகிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். ஆனால் லேசான செயற்கைத்தனமும், பால்புதுமையினரில் ஆண் சார்பைப் பற்றிப் பேசாமல் - ஆண்களைக் குற்றவாளியாக்கி பெண்கள் தங்கள் தரப்பை சொல்வதும் வழமையான தன்மையைத் தருவது படத்தின் மைனஸ். மற்றபடி வரவேற்க வேண்டிய படம்.

மூன்றாம் வாரம் தனுஷ் இயக்கத்தில் நீக்... இருங்க வரேன்... நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK - இப்படித்தான் சொல்றாங்க யுவர் ஹானர்) படமும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் படமும் மோதின. இரண்டுமே ஒரு வகையில் தனுஷ் படம்தான் என்பது... இ்ருங்க பாய்...

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: ப்ரேக்கப் சோகத்தில் இருப்பவனுக்குக் கல்யாணப் பேச்சு. கல்யாணம் ஆச்சா, பழைய காதலி என்ன ஆகிறார் என்கிற - டிரெய்லரில் தனுஷே சொன்ன - வழக்கமான கதை.

கதை வழக்கமானதென்றாலும் டிரீட்மெண்டில் கொஞ்சம் இளைய வயதினைக் கவர முயன்றிருக்கிறார் இயக்குநர் தனுஷ். நாயகன் பவிஷ், பழைய தனுஷை நினைவுபடுத்துகிறார். காமெடி கொஞ்சம் வொர்க் ஆகியும் ஆகாமலும் தள்ளாடுகிறது. பாடல்களில் ஏ.ஆர்.ரஹ்மான் தன் முத்திரை இசையால் கவர்கிறார். இன்னும் கொஞ்சம் பின்பாதிக் காட்சிகளுக்கு மெனக்கட்டிருக்கலாம் என்று தோன்றியது.

டிராகன் - இதுவும் தனுஷின் ஆரம்ப காலப்படம்போன்றே ஆரம்பித்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தும் கல்லூரியில் 48 அரியர்ஸ் வைத்திருக்கும் நாயகன். காதல் டாடா சொல்கிறது. வைராக்கியமாக என்னென்னமோ செய்து அபரிமித வளர்ச்சி அடைகிறான். நல்ல சம்பளம். அசத்தலான வாழ்க்கை. நம்பமுடியாத இடத்திலிருந்து வரன் என்று எல்லாமுமாய் வாழ்க்கை சந்திராயன் வேகத்தில் பறக்க 'உனக்குத்தான் 48 அரியராச்சே.. எப்டி இந்த லைஃப்?' என்று ஆட்டோவைக் குறுக்கே விடுகிறார் பிரின்சிபல் மிஷ்கின்.

அதன்பின் என்ன ஆனது என்பதை வெள்ளித்திரையில் காண்க.

இக்கால இளைஞர்களுக்குத் தேவையான படம். படம் பார்த்தாலும் மனதில் பதியாது என்பதெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். சரியான காட்சி அமைப்புகள், சிறந்த ரைட்டிங் என்று உழைத்திருக்கிறார்கள். நாயகி கயாடு லோஹர் எல்லார் மனதையும் அள்ளிக்கொண்டு செல்கிறார். இறுதி முடிவும் ஆஹா ரகம், அஸ்வத் மாரிமுத்து... ஓ மை கடவுளே.. ஜெயிச்சுட்டப்பா என்றால் அவரோடு இணைந்து எழுதி ஹாட்ரிக் அடித்த ப்ரதீப் ரங்கநாதனுக்கும் வாழ்த்துகள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram